பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம்
பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1976
அமைவிடம்ஈஸ்ட் ஹில், கோழிக்கோடு
வகைதொல்லியல் அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவுகி.மு. 1000 முதல் கி.பி. 200 வரையிலான காலத்தைச் சேர்ந்த வரலாற்று கலைப்பொருட்கள்
மேற்பார்வையாளர்கே.கிருஷ்ணராஜ்
உரிமையாளர்கேரள அரசு தொல்லியல் துறை

பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம் என்பது இந்தியாவில் கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஓவியக்கூடம் ஆகும். கி.மு. 1000 முதல் கி.பி. 200 வரையிலான காலத்தைச் சேர்ந்த வரலாற்று கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டடம் 1812 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது [1] அப்போது அது கிழக்கு மலை பங்களா என்று அழைக்கப்பட்டு வந்தது. 1976 ஆம் ஆண்டில் பங்களா ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், இந்த கட்டிடத்திற்கு பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம் என்று மறுபெயர் சூட்டப்பட்டது.

சேகரிப்புகள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் பெருங்கற்கால காலத்தைச் சேர்ந்த பொருள்களும், சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள காட்சிப்பொருள்களில் பண்டைய மட்பாண்டங்கள், பொம்மைகள், கல் மற்றும் பிற உலோக சிற்பங்கள் ஆகியவை அடங்கும். மேலும் நாணயங்கள், கோயில்களின் மாதிரிகள், தாழிகள், மற்றும் குடைக் கற்றகள் ஆகியவை அருங்காட்சியகத்தின் சேகரிப்புகளுடன் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் வீரர்கள் பயன்படுத்தும் போர் ஆயுதங்கள் மற்றும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வீரர்களின் அதிகாரபூர்வ தொப்பிகளும் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புத் தொகுப்புகளாக பஞ்சலோக சிலைகள் மற்றும் 'போர் வீரர்கள்' என்று கூறப்படுகின்ற கல் சிலைகள் காட்சியில் உள்ளன.

சிறப்புகள்[தொகு]

பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம் வரலாற்றாளர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் ஒரு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. கலைக்கூடத்தையும் கொண்டு அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ராஜா ரவி வர்மாவின் (1848 - 1906) ஓவியங்கள் உள்ளன. ராஜாரவி வர்மாவின் ஓவியங்களும், அவருடைய மாமாவான ராஜா ராஜா வர்மாவின் ஓவியங்களும் கேரளாவிற்கு உலக அளவிலான புகழைக் கொண்டு வந்தவையாகும். [2]

பழசிராஜா[தொகு]

இந்த கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு பழசிராஜாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பழசிராஜா, கோட்டயம் அரச குடும்பத்தில் பண்டின்ஜாரே கோவிலகத்தில் கேரள வர்மாவாகப் பிறந்தவர் ஆவார். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர் ஆவார். பழசிப் புரட்சியை 1700களில் அவர் மேற்கொண்டார். கேரளாவின் சிங்கம் என்று போற்றப்பட்ட அவர் வயநாடு பகுதியில், பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டபோது கொரில்லா முறையைப் பயன்படுத்தினார். பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தை அவர் முற்றிலும் எதிர்த்தார். இத்தகு புகழ் பெற்ற இந்த சுதந்திரப் போராட்ட வீரர் 30 நவம்பர் 1805இல் அவர்களுடன் போரிடும் போது சுட்டுக்கொல்லப்பட்டார். [2] பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது.

நிர்வாகம்[தொகு]

இந்த அருங்காட்சியகம் கேரள மாநிலத்தில் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. [1] [3] மேலும், கட்டிடத்தை புதுப்பிக்கும் நோக்கும் அதன் மேம்பாடுகளுக்காக கேரள மாநில அரசு ரூ.76 லட்சம் செலவிட்டுள்ளது.

பார்வையாளர் நேரம்[தொகு]

பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு திங்கட்கிழமை மற்ற அரசு விடுமுறை நாள்கள் விடுமுறை நாளாகும். பிற நாள்களில் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை மதிய இடைவேளை ஆகும். [2]

குறிப்புகள்[தொகு]