உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு1
கொடி of ஐக்கிய பேரரசின்
கொடி
சின்னம் of ஐக்கிய பேரரசின்
சின்னம்
குறிக்கோள்: டியு எட் மொன் டிரொயிட்
பிரெஞ்சு: கடவுளும் எனது உரிமையும்3
நாட்டுப்பண்: கடவுளே எம் அரசரைக் காத்தருளும்4
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
இலண்டன்
ஆட்சி மொழி(கள்)இல்லை5
அரசாங்கம்அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
மூன்றாம் சார்லசு
கீர் இசுட்டார்மர்
Formation
மார்ச் 24, 1603
ஜனவரி 1, 1801
ஏப்ரல் 12, 1922
பரப்பு
• மொத்தம்
244,820 km2 (94,530 sq mi) (79வது)
• நீர் (%)
1.34%
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
60,209,500 6 (21வது)
• 2001 கணக்கெடுப்பு
58,789,194
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.833 டிரில்லியன் (6th)
• தலைவிகிதம்
$30,470 (18வது)
மமேசு (2003)0.939
அதியுயர் · 15வது
நாணயம்பிரித்தானிய பவுண்ட் (£) (GBP)
நேர வலயம்ஒ.அ.நே+0 (கீறின்விச் சீர்தர நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (பிரித்தானிய கோடை நேரம்)
அழைப்புக்குறி44
இணையக் குறி.uk7
முந்தையது
[[பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்]]
}
1ஐக்கிய பேரரசில் வேறு சில மொழிகளும் சட்டரீதியான autochthonous (பிரதேச) மொழிகளாக, பிரதேச அல்லது சிறுபான்மை மொழிகளுக்கான ஐரோபியப் பட்டயத்தின்கீழ் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வொன்றிலும், ஐக்கிய பேரரசின் அதிகாரபூர்வப் பெயர்கள் பின்வருமாறு: 2அதிகாரபூர்வமற்ற.
3 The Royal motto in Scotland is Nemo Me Impune Lacessit (இலத்தீன்: "No-one harms me with impunity").
4 அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதேச மொழிகள்:
வேல்ஸில்: வெல்ஷ்; மற்றும் ஸ்காட்லாந்தில்: ஸ்காட்டிஷ் கயேலிக் 2004 சட்டப்படி
5 பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு உருவானதிலிருந்து. 1927 ல் இப்பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு என மாற்றம் பெற்றது.
6 ஐக்கிய இராச்சிய தேசிய புள்ளியியல் பணிமனையினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வக் கணிப்பீடு. ஏப்ரல் 2005 நிலைவரப்படி, ஜூலை 2004க்குரிய கணிப்பீடு இன்னும் வெளியிடப்படவில்லை.
7 ISO 3166-1 is GB.

ஐக்கிய பேரரசு (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு ), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய பேரரசு என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய பேரரசானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய பேரரசின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய பேரரசின் ஒரே பன்னாட்டு நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]

பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக (வேல்ஸை உள்ளடக்கிய), இங்கிலாந்து பேரரசோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய பேரரசிலிருந்து விடுபட்டு ஒரு விடுுதலைபெற்ற நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய பேரரசின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய பேரரசுடனே தொடர்ந்தன.

ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது.

"பெரிய பிரித்தானியா" அல்லது "பிரித்தானியா" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய பேரரசின் ஏனைய பகுதிகள்). "பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய பேரரசு" ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்குப் பிரித்தானியா" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்குப் பிரித்தானியா" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் "பிரித்தானியா" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய பேரரசை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய பேரரசு என்பதற்கு "பெரிய பிரித்தானியா" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம்.

பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய பேரரசிற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.

வரலாறு

[தொகு]

கொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536–1543 வாயிலாக இங்கிலாந்து பேரரசுடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி பேரரசுகளான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பெரிய பிரித்தானியாவின் பேரரசாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து பேரரசு, ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாகப் பெரிய பிரித்தானிய பேரரசுடன் இணைந்ததால், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்குச் சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது (பார்க்க: ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கில - ஐரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிய சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்து என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய பேரரசுடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய பேரரசின் பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு என மாற்றப் பட்டது.

1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள்

தொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரித்தானிய ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது.

தற்போது ஐ.இ ஐரோப்பிய கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் ஐரோவை அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்னர், ஐரோப்பிய மத்திய வங்கி இங்கிலாந்தின் வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெற வேண்டும் என்பதே. ஜெர்மனி ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம்.

அரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். பிரபுக்களின் அவையில் சீர்திருத்தங்கள், கொட்லாந்து தனது ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தை 1999ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் அதிகாரப் பரவலாக்கங்கள் வேல்ஸிலும் வடக்கு அயர்லாந்திலும் நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் தகவல் ஆணையரின் 2004ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு பரவலான கண்காணிப்புடைய சமூகமாக ஐ. இ உருமாறும் வாய்ப்புள்ளது.

ஐ.இ காமன்வெல்த் நாடுகள் மற்றும் NATO ஆகியவற்றில் ஒரு அங்கமாகும். அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினர் ஆகவும் உள்ளது. அதனால் அதற்கு வெட்டு ஓட்டு அதிகாரமும் உண்டு. ஐ. இ, உலகிலுள்ள வெகு சில அணு ஆயுத சக்தியுடைய நாடுகளில் ஒன்றாகும்.

பார்க்கவும்: பிரித்தானிய அரச பரம்பரை; பிரித்தானிய வரலாறு; இங்கிலாந்து வரலாறு; அயர்லாந்து வரலாறு; கொட்லாந்து வரலாறு; வேல்ஸ் வரலாறு; ஐ.இ வட்டார வரலாற்றுச் சொற்கள்

அரசியல்

[தொகு]

ஐக்கிய பேரரசு ஓர் அரசியல்சட்ட முடியாட்சியாகும் (constitutional monarchy). அதை அரசாளும் அதிகாரம் பிரதமரின் தலைமையிலுள்ள அரசிடம் உள்ளது. பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் கொண்டது அமைச்சரவை. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆலோசனைக்குழுவில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட மன்னர், நாட்டின் தலைவராகத் திகழ்கிறார். எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான மக்களவைக்குக் (British House of Commons) கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய பேரரசின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே நாடாளுமன்ற அவையாகும். மரபுவழிப் படி, அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து (members of the Commons) தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான பிரபுக்களவையிலிருந்தும் (British House of Lords) நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம் செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு. பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசரால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார். 2022ஆம் ஆண்டு முதல் பதவியிலிருக்கிறார்.

ஐக்கிய பேரரசின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் நாடாளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.

தற்போதைய முடிக்குரியவர் மூன்றாம் சார்லசு (Charles III) ஆவார். இவர் 2022ஆம் ஆண்டு அரியணை ஏறினார். நவீன கால ஐக்கிய பேரரசில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள்குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் வால்டர் பேக்ஹாட் (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன — உதாரணம், "தொங்கு நாடாளுமன்றம்" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், அரசர் அவர்கள் நாடாளுமன்றத்தைத் துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள்குறித்த சிறப்புரையை வழங்குவார்.

அரசர் அவர்கள் நாடாளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். நாடாளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு அரசர் அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற சட்டவரைவு மேன்மைமிகு அரசர் அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை அரசி ஆன் (Queen Anne) 1708ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு அரசி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிப்பதாகும்.

முடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக மேன்மைமிகு அரசரின் ஐக்கிய பேரரசின் அரசு என்றே அழைக்கப் படுகிறது. அரசரால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் பிரதமரே, அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு அரசர் அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய பேரரசினடி முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன (அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). மேன்மைமிகு அரசரின் போர்ப்படை என்றழைக்கப்படும் பிரித்தானியப் போர்ப்படைக்கும் அவரே தலைமைத் தளபதியாவார்.

அண்மை காலத்திலேற்பட்ட இழுக்குகள் மற்றும் விவாதங்களையும் தாண்டி, முடிக்குரியவருக்கு மக்களிடையே வலுவான ஆதரவே இருந்து வந்துள்ளது. அரசியல் பின்புலமுள்ள சனாதிபதி முறையை விட, அரசியல் சார்பற்ற முடிக்குரியவரை (அவர் அத்தகுதியைப் பிறப்பால் அடைந்தவர் என்றாலும்) நாட்டின் தலைவராகக் கொள்வதே மேலானதாகக் கருதப் படுகிறது.

பிரித்தானிய முடிக்குரியவர் மற்றொரு 15 சுதந்திர நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறார். இந்நாடுகள் பொதுநலவாய நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. ஐக்கிய பேரரசிற்கு இந்நாடுகளின் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது ஆட்சி ரீதியாகவோ எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றாலும், நெடுங்காலத்திய, நெருக்கமான உறவுமுறைகளின் காரணமாக ஒரு செல்வாக்குண்டு. சில பொதுநலவாய நாடுகளுக்குப் பிரித்தானிய ஆலோசனைக்குழுவே உச்ச நீதிமன்றமாக விளங்குகிறது.

ஒப்பந்தச் சட்டத்தின்படி (Act of Settlement 1701) முடிக்குரியவர் ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களவையும் பிரபுக்களவையும் இலண்டன் மாநகரம் வெஸ்ட்மின்ஸ்டரில் தேம்ஸ் நதிக் கரையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் தான் உள்ளன.

நாடாளுமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட பிரபுக்களவை, ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விடக் கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய பேரரசின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் (nobility), மற்றும் இங்கிலாந்து தேவாலயத்தின் மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை உயர்குடிகளையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்குப் பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், பிரபுக்களவைச் சட்டம் 1999, வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் அல்லது Earl Marshal, Lord Great Chamberlain போன்ற பேரரசிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வாக்குரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது.

ஐக்கிய பேரரசு ஒரு நடுவண் ஆட்சி, அல்லது ஒற்றையாட்சி (unitary) அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள நாடாளுமன்றமே ஐக்கிய பேரரசின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய பேரரசு அயர்லாந்துக்குச் சுயாட்சி வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது 1972ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப் பட்டது. 1990களில் தன்னாட்சி மீண்டது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் நாடாளுமன்றங்கள் உருவான பொழுது. 1999இல் ஸ்காட்டியப் நாடாளுமன்றமும் வேல்ஸ் தேசிய அவையும் நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுவது என்னவென்றால், கார்னிஷ் மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய பேரரசின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. கார்ன்வாலில் ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய பேரரசி அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. மாகாண அவைகள் வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், "அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு அவையின் நிர்மாணிப்பு என்று வடக்கு அயர்லாந்தின் சமீபத்திய சுயாட்சி முயற்சியும் தூய வெள்ளி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் நாடாளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம்.

பிரிவுகளும் துணைப்பிரிவுகளும்

[தொகு]

ஐக்கிய பேரரசு நான்கு பிரிவுகளைக் கொண்டது:


 
ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்கள்
Flag of the United Kingdom
Flag of England இங்கிலாந்து | Flag Scotland ஸ்காட்லாந்து | Unofficial flag of Northern Ireland வட அயர்லாந்து | Flag of Wales வேல்ஸ்

ஐக்கிய பேரரசின் பிரிவுகள் கீழ்க்கண்டவாறு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன:

ஒன்றியச் சட்டம் 1536 இங்கிலாந்தையும் வேல்ஸையும் ஒருங்கிணைத்தது.

நான்கு பிரிவுகளும் பண்டைய நாட்களிலேயே வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்தின் மக்கள்தொகை மற்றதுகளை விட வெகு அதிகமாதலால், அண்மை காலத்தில் அது ஒன்பது பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை: வடகிழக்கு, வடமேற்கு, யார்க்-ஷையர் மற்றும் ஹம்பர், கிழக்கு மிட்லேண்ட்ஸ், மேற்கு மிட்லேண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, பாரிய இலண்டன், தென்கிழக்கு இங்கிலாந்து, தென்மேற்கு இங்கிலாந்து ஆகியவை. ஒவ்வொரு பிராந்தியமும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமயத்தில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு பிராந்திய அவையை அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தாலும், முதலில் முயற்சிக்கப்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தில் இதற்கு மக்களின் ஆதரவு கிட்டாததால், இத்திட்டத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

கொட்லாந்து 32 வட்டாரங்களையும், வேல்ஸ் 22 வட்டாரங்களையும், வடக்கு அயர்லாந்து 26 மாவட்டங்களையும் கொண்டுள்ளன.

அவ்வப்பொழுது சேர்த்துக் கூறப்பட்டாலும், சட்டப்படி ஐக்கிய பேரரசின் பிரிவாக இல்லாதவை அதன் மகுடச் சார்பு நாடுகளாகும். அவை தன்னாட்சி முறையில் இயங்கும் மகுடச் சொத்துக்களாகும். இத் தவிர ஐக்கிய பேரரசு பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

இராணுவம்

[தொகு]
மேன்மைமிகு இராஜாவின் முப்படைகளின் முத்திரை. நங்கூரம் கப்பற்படையையும், வாட்கள் நிலப்படையையும், கழுகு விமானப்படையையும் குறிக்கின்றன.

ஐக்கிய பேரரசின் போர்ப்படைகளாவன பிரித்தானிய போர்ப்படைகள் என்றோ மேன்மைமிகு அரசரின் போர்ப்படைகள் என்றோ அல்லது அதிகாரபூர்வமாக மகுடத்தின் போர்ப்படைகள் என்று வழங்கப்படுகின்றன. அவற்றின் தலைமைத் தளபதி மேன்மைமிகு அரசர் ஆவார். அவை பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன.

பிரித்தானிய போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய பேரரசையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, NATO மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும்.

2004ஆம் ஆண்டில், பிரித்தானிய நிலப்படை 112.700 வீரர்களையும் (இதில் 7.600 பெண் வீரர்களும் அடக்கம்), இராச விமானப்படை 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40.900 வீரர்களைக் கொண்ட இராசக் கப்பற்படை ஐக்கிய பேரரசின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக் கொண்டது. இராச கப்பற்படை வீரர்கள் நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் NATO நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும்.

பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த மற்றும் முழுமையானதொரு போர்ப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டனின் பரவலான செயல்திறன்களையும் தாண்டி, அண்மையில் நிலவும் பாதுகாப்புக் கொள்கையானது, பிரிட்டன் தனித்துப் போரிடாமல், தோழமை நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே பங்கு பெறுவது, என்பதே. பாஸ்னியா, கொசோவோ, ஆஃப்கானிஸ்தான், இராக் (கிரேன்பி நடவடிக்கை, விமானத்தடைப் பிராந்தியங்கள், டெசர்ட் பாக்ஸ் நடவடிக்கை, டெலிக் நடவடிக்கை) ஆகியவற்றை இக்கொள்கைக்கு உதாரணங்களாகக் கூறலாம். பிரித்தானிய படை கடைசியாகத் தனித்துப் போரிட்டது 1982ஆம் ஆண்டு நடந்த ஃபாக்லாண்ட்ஸ் போரில்தான்.

பிரித்தானிய படைகள் வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரங்களை ஒடுக்குவதிலும் பங்கு பெறுகின்றன. எனினும், அங்கு படைக் கலைப்பு படிப்படியாகச் செயல்படுத்தப் படுகிறது.

புவியியல்

[தொகு]
ஐக்கிய பேரரசின் வரைபடம்

இங்கிலாந்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசமாகும். கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் மலைப்பகுதிகள் வடமேற்கில் லேக் மாவட்டத்திலுள்ள கம்ப்ரயன் மலைகளும், வடக்கில் பெனைன்ஸ் மலைப்பிரதேசம் மற்றும் பீக் மாவட்டத்திலுள்ள சுண்ணாம்புக்கல் மலைகள் ஆகியன. மற்ற மலைப்பகுதிகள் பர்பெக் தீவிலுள்ள கீழ் சுண்ணாம்புக்கல் மலைகள், வடக்கு மலைச்சரிவுகளான காட்ஸ்வோல்ட்ஸ், லின்கன்ஷையர் மற்றும் சாக் சரிவுகள், தெற்கு மலைச்சரிவுகள் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில்டர்ன்ஸ் ஆகியவை. இங்கிலாந்தில் 1000 மிட்டர்களுக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட சிகரமெதுவுமில்லை. முக்கியமான ஆறுகளும் கயவாய்களும் (estuaries) இவையே: தேம்ஸ், செவெர்ன், ட்ரெண்ட், ஔஸ் மற்றும் ஹம்பர் ஆகியன. பெருநகரங்களாகியன இலண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், ஷெஃபீல்ட், லிவர்பூல், பிரிஸ்டொல், நாட்டிங்ஹம், லீசெஸ்டர் மற்றும் நியூ கேசில். டோவருக்கு அருகிலுள்ள கால்வாய் சுரங்கம் (Channel tunnel) ஐக்கிய பேரரசை பிரான்ஸுடன் இணைக்கிறது.

வேல்ஸ் பெரும்பாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பையுடையது. அதன் உயரமான சிகரம் 1085 மீட்டர் உயரமுள்ள ஸ்நோடௌன் ஆகும். வேல்ஸ் மையப்பகுதிக்கு வடக்கில் இருப்பது அங்க்லெசி தீவு. வேல்ஸின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் தெற்கிலுள்ள கார்டிஃப் ஆகும். இன்ன பிற மாநகரங்கள் ஸ்வேன்சீ, நியூ போர்ட் மற்றும் ரெக்ஸ்ஹம் ஆகியன.

ஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது. தெற்கிலும் கிழக்கிலும் சமவெளிகளாகவும் வடக்கிலும் மேற்கிலும் மலைப்பகுதிகளாகவும் உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து. அதன் 1343 மீட்டர் உயரமுள்ள பென் நெவிஸ் சிகரமே ஐக்கிய பேரரசின் மிகுந்த உயரமான சிகரமாகும். பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு. மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து. ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத ராக்கெல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. முக்கிய நகரங்கள் எடின்பரோ, கிளாஸ்கோ, அபர்தீன் மற்றும் டண்டீ ஆகியவை.

அயர்லாந்து தீவின் வடகிழக்கிலுள்ள வடக்கு அயர்லாந்து, பெரும்பாலும் மலைப்பகுதியே. பெல்ஃபாஸ்ட் மற்றும் லண்டண்டெர்ரி அதன் முக்கிய நகரங்களாகும்.

ஐக்கிய பேரரசு மொத்தமாக 1098 சிறிய தீவுகளைக் கொண்டது. இவற்றில் பல இயற்கையானவை. மற்றவை செயற்கையாக, கற்களையும் மரத்தையும் கொண்டு பண்டைய காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் இயற்கையான பாழ்பொருட்களும் அவற்றின் மேல் படிந்ததால் படிப்படியாக விரிவாக்கமடைந்த செயற்கைத் தீவுகளாகும்.

பொருளாதாரம்

[தொகு]

ஐக்கிய பேரரசு முன்னணியில் இருக்கும் ஒரு வணிக சக்தி மற்றும் நிதித்துறை மையமாகும். முதலாளித்துவத்தையே முதன்மையாகக் கொண்ட அதன் பொருளாதாரம், உலகில் நான்காவது இடத்தை வகிப்பதாகும். கடந்த இருபது வருடங்களாக அரசு, தனியார்மயமாக்கல்களை மேற்கொண்டு அரசுடைமையைப் பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளது. மக்கள்நல அரசமைப்பையும் (welfare state) வெகுவாகக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது.

உழவுத் தொழில், ஐரோப்பிய அளவில், அதீதமான, மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் உணவுத் தேவைகளின் 60 % பங்கு, மக்கள்தொகையில் 1 % அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது. ஐக்கிய பேரரசு பெரிய அளவில் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இது United Kingdom போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும்.

சேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, வங்கித் துறை, காப்புறுதித் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள், ஆகியன. தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், ஐ. இ இன்னும் சாலை வாகனங்கள், போராயுதங்கள், பெட்ரோலியப் பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. சுற்றுலாத் துறையும் இன்றியமையாததே. வருடத்துக்கு 23.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ.இ, உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது.

டோனி ப்ளேர் அரசு, ஐ.ஒ அமைப்புடன் இணைவது குறித்து பதிலளிக்கும் முகமாக, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை: ஐந்துப் பொருளாதாரப் பரிசோதனைகளில் வெற்றி, அதன் பிறகு மக்களிடம் வாக்கெடுப்பு, ஆகியன. இவையனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்த பிறகே ஐ.இ ஐ.ஒ-உடன் இணையும் வாய்ப்புள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

முதன்மையாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். மற்ற ஆதிகுடி மொழிகளாவன: செல்டிக், வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக், அதற்கு நெருங்கியத் தொடர்புடைய ஐரிஷ் கேலிக், கார்னிஷ், ஆங்கிலத்துடன் நெருங்கியத் தொடர்புடைய சமவெளி ஸ்காட்ஸ், ரோமனி, பிரித்தானிய சைகை மொழி, ஐரிஷ் சைகை மொழி ஆகியவை. பல நூற்றாண்டுகளாக வடக்கு இங்கிலாந்தில் செல்டிக் வட்டார மொழியான கம்ப்ரிக்கின் பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. இதற்குச் சிறந்தவொரு உதாரணம், அப்பகுதிகளில் செம்மறி ஆடுகளை எண்ணுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் கம்ப்ரிக் எண்கள் ஆகும்.

அண்மை காலத்தில் குடியேறிவர்கள், குறிப்பாகக் காமன்வெல்த் நாட்டவர்கள், வேறு பல மொழிகளையும் பேசுகிறார்கள். அவை (சீன நாட்டின்) கேன்டனியம், பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி, உருது மற்றும் ஜமேய்க்கக் கிரியோல் ஆகியவை.

பார்க்க: ஐக்கிய பேரரசின் மொழிகள்

பண்பாடு

[தொகு]
வில்லியம் ஷேக்ஸ்பியர்
(15641616)

உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய பேரரசு கொண்டுள்ளது. அவை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மைக்கேல் பரடே, பால் டிரக் மற்றும் ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல் ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: நீராவி இயந்திரம், உந்துபொறி (locomotive), 3-பீஸ் சூட், தடுப்பு ஊசி, ஈயப் படிகம், தொலைக்காட்சி வானொலி, தொலைபேசி, நீர்மூழ்கி, ஹோவர்கிராஃப்ட், உட் தகன இயந்திரம் (internal combustion engine) மற்றும் ஜெட் இயந்திரம் ஆகியன.

பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய பேரரசிலேயே உருவாகின. உதாரணம், கால்பந்து, கோல்ஃப், கிரிக்கெட், குத்துச் சண்டை, ரக்பி கால்பந்து, பில்லியர்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் பேஸ்பாலின் முன்னோடியான ரௌண்டர்ஸ் எனும் விளையாட்டு. இங்கிலாந்து உலக கால்பந்துக் கோப்பை 1966 மற்றும் 2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது. விம்பிள்டன் கோப்பை எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு இலண்டனிலுள்ள விம்பிள்டனில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.

நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர். மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் (சார்லோட், எமிலி மற்றும் அன்), ஜேன் ஆஸ்டின், ஜே. கே. ரௌலிங், அகதா கிரிஸ்டி, ஜே ஆர் ஆர் டோல்கியன் மற்றும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஆகியோர். முக்கியமான கவிஞர்கள் லார்ட் பைரன், இராபர்ட் பர்ன்சு, லார்ட் டென்னிசன், தாமஸ் ஹார்டி, வில்லியம் ப்ளேக் மற்றும் டிலன் தாமஸ் ஆகியோர் ஆவர். (பார்க்க: பிரித்தானிய இலக்கியம்)

ஐக்கிய பேரரசின் குறிப்பிடும்படியான இசைப் படைப்பாளர்கள் வில்லியம் பைர்ட், ஜான் டவர்னர், தாமஸ் டேலிஸ் மற்றும் ஹென்றி பர்செல் ஆகியோர் 16ஆம் நூற்றாண்டு மற்றும் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். அண்மை காலத்தில், சர் எட்வர்ட் எல்கர், சர் ஆர்தர் சல்லிவன், ரால்ஃப் வான் வில்லியம்ஸ், பெஞ்சமின் பிரிட்டென் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர்.

ராக் அண்ட் ரோல் இசை வகையின் வளர்ச்சிக்கு ஐக்கிய பேரரசும் அமெரிக்காவுமே பிரதான பங்களிப்பாளர்களாவர். ஐக்கிய பேரரசு பல பிரபலமான இசைக்குழுக்களை உலகுக்கு வழங்கியுள்ளது. அவை: பீட்டில்ஸ், க்வீன், ரோலிங் ஸ்டோன்ஸ், லெட் ஸெப்பிலின், பிளாக் ஸப்பாத், பிங்க் ஃப்ளாயிட், டீப் பர்பிள் மற்றும் பல. பங்க் ராக் இசையில் 1970களில் ஐ. இ முன்னணியில் இருந்தது. இவ்வகை இசையை வழங்கியவர்கள் செக்ஸ் பிஸ்டல்ஸ் மற்றும் த க்ளேஷ் குழுவினர். ஹெவி மெட்டல் வகை இசையில் புகழ்பெற்ற ஐ.இ குழுவினர் மோட்டர்ஹெட் மற்றும் அயர்ண் மெய்டன் ஆகியோர். அண்மைய வருடங்களில் பிரிட்பாப் வகை பிரபலமடைந்து ஒயாஸிஸ், ப்ளர் மற்றும் சூப்பர்கிராஸ் ஆகிய குழுக்கள் சர்வதேசப் புகழ் அடைந்தன. எலக்டிரானிகா வகை இசையிலும் ஐ. இ முன்னிடம் வகிக்கிறது. இவ்வகையில் வல்லமை பெற்ற இசைஞர்கள் அஃபெக்ஸ் ட்வின், தல்வின் சிங், நிதின் சாஹ்னி, மற்றும் லாம்ப் ஆகியோர் (பார்க்க: ஐக்கிய இராச்சியத்தின் இசை).

நிலைப்பாட்டு எண்கள் (Rankings):

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Berry, Ciara (15 January 2016). "National Anthem". The Royal Family. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  2. "List of declarations made with respect to treaty No. 148". Council of Europe. Archived from the original on 12 December 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
  3. "Welsh language on GOV.UK – Content design: planning, writing and managing content – Guidance". gov.uk. பார்க்கப்பட்ட நாள் 3 August 2018.; "Welsh language scheme". GOV.UK. https://www.gov.uk/government/organisations/department-for-transport/about/welsh-language-scheme. ; "Welsh language scheme". GOV.UK. https://www.gov.uk/government/organisations/home-office/about/welsh-language-scheme. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_இராச்சியம்&oldid=4082974" இலிருந்து மீள்விக்கப்பட்டது