புலிக்குன்னூ
புலிக்குன்னூ | |
---|---|
சிற்றறூர் | |
ஆள்கூறுகள்: 9°24′43″N 76°24′36″E / 9.412°N 76.41°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழா |
வட்டம் | குட்டநாடு |
அரசு | |
• நிர்வாகம் | கிராம பஞ்சாயத்து |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 16,795 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம், |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 688504 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL-04, KL-66 |
எழுத்தறிவு | 99% |
புலிக்குன்னு அல்லது புலிங்குன்னு (Pulincunnoo அல்லது Pulinkunnoo) என்பது இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டத்தின் குட்டநாடு பகுதியில் உள்ள ஒரு தீவு கிராமமாகும்.[1] புலின்குன்னூவில் பாயும் பம்பை ஆறானது குட்டநாட்டில் உள்ள சுற்றுலா படகு வீடு நடத்துநர்கள் மிகவும் விரும்பும் பாதைகளில் ஒன்றாகும். கேரளத்தின் புகழ்பெற்ற உப்பங்கழிகள், ஏரிகள், ஈரநிலங்கள், கால்வாய்கள் ஆகியவற்றறின் வலையமைப்போடு, பல தீவுகளின் ஒரு பகுதியாக இந்த கிராமம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் இராஜீவ் காந்தி கோப்பை பாம்பு படகுப் போட்டியில் புலின்குன்னு குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வி
[தொகு]இந்த கிராமத்தில் நூறாண்டுக்கும் மேற்பட்ட பழமையான பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளன. புலிங்கன்னூவில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி 118 ஆண்டுகளுக்கும் பழமையான முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தப் பள்ளி கூடைப்பந்து விளையாட்டில் பல ஆளுமைகளை உருவாக்கியதற்காக அறியப்படுகிறது, இவர்கள் மாநிலத்தின் சார்பாகவும் நாட்டின் சார்பாகவும் விளையாடியுள்ளனர். எம். வி. பைலி (கொச்சின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), பி டி மேத்யூ காஞ்சிகல் பழயாச்சிராயில் (முன்னாள் நீதிபதி), கேலிசித்திரக் கலைஞர் டாம்ஸ் (போபனம் மோலியம்), பி. டி. மேத்யூ சத்தம்பரம்பில் (பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர்) போன்றவர்கள் இந்த பள்ளியின் குறிப்பிடத்க்க முன்னாள் மாணவர்கள். கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள கொச்சின் பல்கலைக்கழக குட்டநாடு பொறியியல் கல்லூரி இந்தப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரி ஆகும். கிராமத்தின் புகழ்பெற்ற பிற கல்வி நிறுவனங்கள் சிறுமலர் மகளிர் உயர்நிலைப்பள்ளி புலின்குன்னூ, அமலோல்பாவா துவக்கபள்ளி, புனித மேரிஸ் ஐ.டி.சி, கே. இ. கார்மல் ஐ.சி.எஸ்.இ பள்ளி ஆகியவை ஆகும். இந்த கிராமத்திற்கு குட்டநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மாணவர்கள் படிக்க வருகிறார்கள்.
மக்களும் வாழ்க்கையும்
[தொகு]புலின்குன்னின் மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளும், மீனவர்களும் ஆவர். ஒரு சிலர் தங்கள் மூதாதையர் வீடுகளை சுற்றுலா இல்லங்களாக மாற்றியுள்ளனர். இந்த கிராமத்தில் அனைத்து சமய விழாக்களையும் கொண்டாடுகின்றன. புனித மேரி தேவாலயத்தின் ஆண்டு விழாவுக்கு தொலைதூரத்திலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்த தேவாலயம் தமிழ் திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த கிராமத்தின் பின்னணியில் பல மலையாளத் திரைப்படங்கள் எடுக்கபட்டுள்ளன.
இந்த கிராமத்தில் பல கள்ளுக் கடைகள் உள்ளன, மேலும் வாத்து வளர்ப்பு ஒரு இலாபகரமான தொழிலாக செய்யப்படுகிறது. இங்குள்ள கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த பலர் நகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இங்கு உள்ள கம்பீரமான பாரம்பரிய கேரள வீடுகளில் பெரும்பாலானவை 1800 களின் முற்பகுதியில் இருந்தன.
சுற்றுலா
[தொகு]திருவிதாங்கூர் மலையாளிகளின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியான உப்பங்கழிகள் நிறைந்த இப்பகுதியில், நீங்கள் ஓய்வுக்காக வந்தால் இந்த கிராமம் சிறந்த அனுபவமாக இருக்கும். ஒரு நாள் அல்லது பல நாட்களை இங்கு செலவிடலாம். உள்ளூர் மக்களுடன் அரட்டை அடிப்பது, உள்ளூர் சந்தையைப் பார்வையிடுவது, கிராம மையத்தில் பொழுது போக்குவது, அமைதியாக பாயும் ஆற்றில் கால்களை நனைத்து அமர்ந்திருப்பது, ஆழமற்ற பாதுகாப்பான நீரில் குளிப்பது, தேவாலயங்கள், கோயில்கள், கலாச்சார காட்சிகளைக் காணுதல். கொன்டியாடாவில் உள்ள உயர் தொழில்நுட்ப படகு துறை முக்கிய சுற்றுலா தலமாகும்.
எப்படி அடைவது
[தொகு]கோர்ஜியஸ் ஏசி சாலையில் இருந்து 2 கி.மீ தூரத்தில் ஆலப்புழாவுக்கும் சங்கனாச்சேரிக்கும் இடையில் புலிங்குன்னு அமைந்துள்ளது. பாலம் வழியாகவோ அல்லது கிராமத்தையும் ஏசி சாலையுடன் இணைக்கக்கூடியதாக உள்ள வாகனங்களையும் மக்களையும் கொண்டு செல்லும் படகு மூலம் கிராமத்துக்குச் செல்லலாம். கே.எஸ்.டபிள்யூ.டி.டி.சி நடத்தும் நீர்வழி படகு சேவையும் உள்ளது, இது கிராம சதுக்கத்திற்கு அருகில் ஒரு படகு துறையைக் கொண்டுள்ளது. கிராமம் ஆலப்பழையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், சங்கநாச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Census of India:Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.