இந்தியக் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியக் கட்டிடக்கலையின் பற்றியான மிக முந்திய ஆதாரங்கள், சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே காணப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500-இலிருந்து கி.மு 2000 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் இருந்த மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து, அக்காலத்தின் கட்டிடக்கலையில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கி.மு 1500 அளவில் சிந்துவெளிப் பண்பாடு அழிந்த பின்னர், ஏறத்தாழ கி.மு. 500 வரைக்கும் நிலைத்திருக்கும் வகையில் எவ்வித கட்டிடங்களும், கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

வேதகாலக் கட்டிடக்கலை[தொகு]

கி.மு 15 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கு எல்லையூடாக இந்தியாவுக்குள் பெருமளவில் நுழைந்த ஆரிய இனத்தவர் நகர வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. இதனால் போர் வலிமையில் உயர் நிலையில் இருந்தது போலக் கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களைப்போல் சிறப்படைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இக்காலத்தில் மரம், மூங்கில் என்பவற்றைக் கொண்டே கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும். வேத காலம் என்று பொதுவாக அழைக்கப்படும் இக்காலத்தில் மரத்தினாலான பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஊர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களால் கட்டிடங்கள் அமைக்கப்பட்டபோதும், மரம், மூங்கில் முதலியவற்றால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் மாதிரிகளையும், அமைப்பு வேலைப்பாடுகளையும் அப்படியே படியெடுத்து அமைத்தார்கள். இதனால் இப்போது நிலைத்திருக்கும் பிற்காலக் கற்கட்டிடங்களை ஆராய்வதின் மூலம் வேத காலத்துக் கட்டிட அமைப்பு முறைகளை ஓரளவுக்கு உய்த்து அறியக்கூடியதாக உள்ளது.

பௌத்த கட்டிடக்கலை[தொகு]

கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் கங்கைக் கரையோரமாக மக்கள் குடியேற்றங்களும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் பிராமணீயத்துக்கு மாற்றாகப் பௌத்தம், சமணம் என்னும் மதங்கள் தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. அக்காலத்தில் பரந்த பலம் பொருந்திய மௌரியப் பேரரசன் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு மத்தியில் பௌத்தம் அரச சமயமாகி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அச்சமயம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்க முடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் பௌத்தக் கட்டிடக்கலை என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி.மு 250 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம்.

இந்துக் கட்டிடக்கலை[தொகு]

இந்து சமயம், பௌத்தம் தோன்றுவதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது எனினும், கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டிருக்கக் கூடிய இந்துக் கட்டிடங்கள் எதுவும் அறியப் படவில்லை. பௌத்த சமயம் இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னரே இந்துக் கட்டிடக்கலையின் வேகமான வளர்ச்சி ஆரம்பித்தது எனலாம். இந்துக் கட்டிடக்கலையின் கூறுகள் பலவும் பௌத்த கட்டிடக்கலையில் காணப்பட்டவையே. நிலைத்து நிற்கக்கூடியதாகக் கட்டப்பட்ட இந்துக் கட்டிடக்கலையின் ஆரம்பகாலச் சான்றாதாரங்கள் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குப்தப் பேரரசின் கீழும், ஏறத்தாழ இதே காலத்தில் தக்காணத்தில் சாளுக்கிய அரசின் கீழும் ஏற்பட்ட இந்துமத மறுமலர்ச்சி இதற்கு வித்திட்டது எனலாம். தொடக்க கால அமைப்புக்கள் மலைப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோயில்களாகவே இருந்தன. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்துக் கட்டிடக்கலை இரண்டு பிரிவுகளாக வளரத்தொடங்கியது. வடபகுதிப் பாணிக்கு வடஇந்தியக் கட்டிடக்கலைப் பாணி அல்லது நாகர கட்டிடக்கலைப் பாணி என்றும், தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ந்த பாணிக்கு திராவிடக் கட்டிடக்கலைப் பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை விடத் தக்காணத்தில் வளர்ந்த ஒரு கலப்புப் பாணி வேசர கட்டிடக்கலைப் பாணி என்று அழைக்கப்படுகின்றது. இந்துக் கட்டிடக்கலையின் முக்கியமான முதலிரு பிரிவுகளும் 13 ஆம் நூற்றாண்டு வரை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டன.

வடஇந்தியக் கட்டிடக்கலை வட்டார அடிப்படையில் வேறுபாடுகளுடன் வளர்ச்சியடைந்தது. இவை முக்கியமாக ஒரிசா, மத்திய இந்தியா, ராஜபுதனம், குஜராத், தக்காணம் முதலிய வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில், சிறப்பாகத் தமிழ் நாட்டில் வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலையும் அரச குலங்களின் ஆட்சிக்கால அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முத்தரையர் காலம் (கி.பி 600 - 900), சோழர் காலம் (கி.பி 900 - 1150), பாண்டியர் காலம், (கி.பி 1100 - 1350) விஜயநகரக் காலம் (கி.பி 1350 - 1565), நாயக்கர் காலம் (கி.பி 1600 - ) என அழைக்கப்படுகின்றன.

சோழர் கட்டிடக்கலை[தொகு]

சோழர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாய் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்ட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்[தொகு]

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறத

கங்கைகொண்ட சோழபுரம்[தொகு]

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தாராசுவரம் ஐராவதேஸ்வரர் கோயில்[தொகு]

ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.

இஸ்லாமியக் கட்டிடக்கலை[தொகு]

14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் இஸ்லாமியரின் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து உருவான இஸ்லாமிய அரசுகளும், வளர்ந்து வந்த அவற்றின் வலிமையும் இஸ்லாமியப் பண்பாட்டை இந்தியாவுக்குள் கொண்டுவந்தன.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Agarwala, Satish Chandra., Architecture and Town Planning, Dhanpat Rai & Co., Delhi.
  • Brown, Percy., Indian Architecture (Budhist and Hindu Period), D. B. Taraporevala Sonsa and Co., Bombay, 1971.
  • Fletcher, Banister., Cruikshank, Dan. (editor), A History of Architecture, CBS Publishers and Distributors, New Delhi, 1999.