முத்தரையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர்கள் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி,புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.

தமிழகத்தில் 29 உட்பிரிவினராக அறியப்படுகின்ற முத்தரையர் சமுதாய மக்கள் முதிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோலி, தலாரி, வேலமா என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், வால்மீகி, கங்கைபுத்திரர், கோலி, காபல்கார் என்று கருநாடகத்திலும் அழைக்கப்படுவர். கேரளா மாநிலத்தில் அரையர் என்ற பெயரால் அழைக்கப்படுவர்.[1]

முத்தரையரின் தோற்றுவாய்

முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[2], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார். முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகின்றார்.[சான்று தேவை]

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.

தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு(பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு ஏராளமான கல்வெட்டுக்களும் கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.

நாலடியார் பாடல் குறிப்பு

நாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர். [3] [4]

கோவில்கள்

விஜயாலய சோழீஸ்வரம் கோவில்

இளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்ட விஜயாலய சோழீஸ்வரம் கோவில் கி.பி 825

இக்கோவில் கி பி 840 இல் இளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது. கி பி 852 இல் விஜயல சோழனுக்கும் இளங்கோவதி முத்தரையர்க்கும் நடந்த போரில் விஜயாலய சோழன் வென்றார்.பிறகு இக்கோவிலுக்கு விஜயாலய சோழீஸ்வரம் என்று பெயர் சூடினார்.கி பி 865 இல் முத்தரைய மன்னர் மல்லன் வித்துமன் இக்கோவிலுக்கு நன்கொடையும் புனரமைப்பு பணிகளையும் செய்து உள்ளார்.

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்

இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் குகைக்கோயிலைப் புதுப்பித்து இதன் பராமரிப்பிற்கு நன்கொடைகளை வழங்கிய செய்தியை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்

குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகளை வழங்கிய செய்தி தெரிய வருகிறது.

ஏரிகள்

மதுரம் ஏரி

ஆதித்ய சோழர் காலத்தி கீழ்செங்கிளிநாட்டை ஆண்ட ரணசிங்க முத்தரையர் அவரால் நீர்ப்பாசனம் குமிழ் (குமிழி) நிறுவப்பட்டது, இது மருதன் ஏரி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டையில் கட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டுக் குறிப்புகள் [5]

 • நார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
 • குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
 • குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
 • முத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
 • அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.


தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர்

தமிழ்நாடு அரசு 22 பெப்ரவரி 1996 அன்று 29 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து "முத்தரையர்" சாதியாக அறிவித்து அரசாணை எண் 15 வெளியிட்டது. அதன்படி முத்தரையர்களில் 29 பட்டங்களைப் போடுபவர்கள் அடங்குவர். அதன்படி அந்த 29 பிரிவுகளாவன

 1. முத்துராஜா
 2. முத்திரையர்
 3. அம்பலகாரர்
 4. ஊராளி கவுண்டர்
 5. சேர்வை
 6. சேர்வைக்காரர்
 7. காவல்காரர்
 8. தலையாரி
 9. பரதவர்(பர்வதராஜகுலம்)
 10. வலையர்
 11. கண்ணப்பகுல வலையர்
 12. பாளையக்காரன்
 13. வழுவாடி தேவர்
 14. பூசாரி
 15. முடிராஜு
 16. முத்திரிய மூப்பர்
 17. முத்திரிய மூப்பனார்
 18. முத்திரிய நாயுடு
 19. முத்திரிய நாயக்கர்
 20. பாளையக்கார நாயுடு
 21. பாளையக்கார நாயக்கர்
 22. முத்துராஜா நாயுடு
 23. வன்னியகுல முத்துராஜா
 24. முத்திரிய ராவ்
 25. வேட்டுவ கவுண்டர்
 26. குருவிக்கார வலையர்
 27. அரையர்
 28. அம்பலம்
 29. பிள்ளை

மேற்கோள்கள்

 1. – CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s, MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE (1994). Castes and Tribes of Southern India. pdf. Andhra Pradesh: Government Press. பக். 1. http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf. பார்த்த நாள்: 2012-10-10. 
 2. களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
 3. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
  கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
  பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
  நீரும் அமிழ்தாய் விடும். 200

 4.  மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
  செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
  நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
  செல்வரைச் சென்றிரவா தார். 296

 5. கொங்கு மண்டல சதகம், பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தரையர்&oldid=2541930" இருந்து மீள்விக்கப்பட்டது