தீக் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தீக் அரண்மனை பரத்பூர் மாநில ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆடம்பரமான கோடைக்கால தங்குமிடமாக 1772 இல் கட்டப்பட்டது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள பரத்பூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அரண்மனை 1970 களின் முற்பகுதி வரை செயல்பாட்டில் இருந்தது. [1]

வரலாறு மற்றும் கட்டிடக்கலை[தொகு]

ஜாட் இன மன்னர்கள் பரத்பூருக்கு மாறுவதற்கு முன்பு தீக் தலைநகராக இருந்தது. 1721 இல் அரியணைக்கு வந்த பதான் சிங் இங்கு ஒரு அரண்மனையை கட்டினார். அதன் இருப்பிடம் ஆக்ராவுக்கு அருகாமையில் இருப்பதால், தீக் அரண்மனை படையெடுப்பாளர்களால் பலமுறை தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. பதான் சிங்கின் மகன் இளவரசர் சூரஜ் மல் 1730 ஆம் ஆண்டு அரண்மனையைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டத் தொடங்கினார். இக்கோட்டையில் பெரிய சுவர்களும், அதனைச் சுற்றி ஆழமான அகழியும் இருந்தன. [1]

தீக், ஜாட்களுக்கும் 8,000 ஆண்களைக் கொண்ட முகலாய மற்றும் மராட்டிய இராணுவத்திற்கும் இடையிலான ஒரு போர்த் தளமாகும். எட்டு வருட போருக்குப் பின்னர், சூரஜ் மல் டெல்லியைக் கைப்பற்றி செங்கோட்டையைச் சூறையாடினார். ஒரு முழு பளிங்கு கட்டிடம் உட்பட ஏராளமான மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் சென்றார். பின்னர் அவை அகற்றப்பட்டு தீக்கின் அரண்மனை புனரமைக்கப்பட்டது. [1]

போற்றுதற்குரிய முகலாய அரசவைகளினால் ஜாட் ஆட்சியாளர்கள் ஆக்ரா மற்றும் தில்லியில் ஆதிக்கம் செலுத்தினர். இதன் தோட்டங்களின் வடிவமைப்பு முகலாய சர்பாக்கால் ஈர்க்கப்பட்டது. அரண்மனை, அதன் மையத்தில் ஒரு தோட்டம் மற்றும் நடைபாதைகளுடன் ஒரு நாற்கரத்தை உருவாக்குகிறது. அலங்கார பூச்செடிகள், புதர்கள், மரங்கள் மற்றும் நீரூற்றுகள் கோடையில் இந்த இடத்தைக் கணிசமாக குளிர்விக்கின்றன. அரண்மனையின் இருபுறமும் கோபால் சாகர் மற்றும் ரூப் சாகர் ஆகிய இரண்டு பெரிய நீர் தொட்டிகளும் வெப்பநிலையைக் குறைக்க உதவியது. [1]

கேசவ் பவன் எண்கோண அடித்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒற்றை மாடி ஒரு சதுர கட்டிடம். இது பன்னிரண்டு கதவுகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரூப் சாகர் தொட்டியின் அருகில் நிற்கிறது. இந்த மாளிகையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து வளைவுகள் உள்ளன. அவை பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. உட்புறத்தைச் சுற்றி ஒரு கால்வாயின் மீது நூற்றுக்கணக்கான நீர் வழங்கிகளைக் கொண்டுள்ளது. கால்வாயின் சுவர்கள் நூற்றுக்கணக்கான சிறிய நீர் வழங்கிகள் மூலம் துளைக்கப்பட்டுள்ளன. ஒரு சிக்கலான கப்பி அமைப்பு மூலம் தொட்டியில் உள்ள தண்ணீரை பெரிய தோல் "வாளிகள்" மூலம் இழுக்க காளைகள் பயன்படுத்தப்பட்டன. [1]

ஹோலி போன்ற பண்டிகைகளில், வண்ணங்கள் தண்ணீரில் சேர்க்கப்படுகின்றன. கரிம வண்ணங்களைக் கொண்ட சிறிய துணி பைகள் நீர்த்தேக்க சுவரில் உள்ள துளைகளில் கைமுறையாக செருகப்பட்டன. குழாய்களின் சிக்கலான வலையமைப்பைக் கடந்து நீர் பாயும்போது, நீரூற்றுகள் வண்ண நீரைக் கொட்டின. [1]

நீரூற்று தெளிப்பு மற்றும் வழங்கிகள் ஒரு பருவமழை போன்ற சூழலை உருவாக்குகின்றன. இது ஒரு தனித்துவமான நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டு அரங்கம் முழுவதும் இடி போன்ற ஒலியை உருவாக்குகிறது. கூரையைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான உலோக பந்துகள் நீர் அழுத்தத்துடன் உருட்டப்படுகின்றன. இதன் விளைவாக இடி மின்னல் விளைகிறது. பாலைவன நகரத்தில் உள்ள இந்த சூழல் ஜாட் மன்னர்களுக்கும் ராணிகளுக்கும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்க வேண்டும். [1]

மகாராஜாவின் படுக்கையறையில் மகத்தான கருப்பு கிரானைட் படுக்கை அமைந்துள்ளது. இது ஒரு காலத்தில் பார்சி மரண சடங்குகளின் ஒரு பகுதியாக செயல்பட்டு, இறந்த உடல்களைக் கழுவுவதற்கான தளமாக செயல்பட்டது. [1]

பார்வையிடுதல்[தொகு]

தீக் அரண்மனை வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். அருகிலுள்ள விமான நிலையங்கள் ஆக்ரா (70 கி.மீ) மற்றும் டெல்லியில் (200 கி.மீ) உள்ளன. அருகிலுள்ள இரயில் நிலையம் பரத்பூர் சந்திப்பு (35 கிமீ) ஆகும்.

தீக் அரண்மனைக்கு டெல்லியில் இருந்து நான்கு மணிநேரத்திலும், ஆக்ராவிலிருந்து இரண்டு மணிநேரத்திலும், மதுராவிலிருந்து ஒரு மணி நேரத்திலும் சாலை வழியாகச் செல்லலாம். [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 PODDER, TANUSHREE. "Summer symphony". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்_அரண்மனை&oldid=2971048" இருந்து மீள்விக்கப்பட்டது