அகுவாடா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகுவாடா கோட்டை
அரபிக் கடலைப் பார்த்தபடியிருக்கும் கோட்டை மதில்.
அமைவிடம்கோவா, இந்தியா
கட்டப்பட்டது1612
அகுவாடா கோட்டை is located in கோவா
அகுவாடா கோட்டை
கோவாவில் அமைவிடம்

அகுவாடா கோட்டை (Fort Aguada) என்பது இந்தியாவின் கோவாவில் உள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு போர்த்துக்கேயக் கோட்டை ஆகும். சிங்குவெரிம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள இது அரபிக் கடலை நோக்கியபடி அமைந்துள்ளது. இக்கோட்டையும் இதன் கலங்கரை விளக்கமும் நல்ல நிலையில் பேணப்பட்டுள்ள ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்குகின்றன.

தோற்றமும் வரலாறும்[தொகு]

ஒல்லாந்தரிடமிருந்தும், மராட்டாக்களிடமிருந்தும் இப்பகுதியைப் பாதுகாப்பதற்காக 1613 ஆம் ஆண்டில் இக்கோட்டை கட்டப்பட்டது. அக்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல்களுக்கான ஒரு அடையாளப் புள்ளியாக இவ்விடம் விளங்கியது. இந்தக் கோட்டை கடற்கரையோரமாக காண்டோலிமுக்குத் தெற்கே மண்டோவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பாக இருப்பதும், அருகில் உள்ள பார்தேசு துணை மாவட்டத்தைப் பாதுகாப்பதுமே இதன் பணியாக இருந்தது.[1]

இக்கோட்டைக்குள் இருக்கும் ஒரு நன்னீர் ஊற்றின் மூலம் அப்பகுதிக்கு வரும் கப்பல்களுக்கு நீர் வழங்கினர். இதனாலேயே இதற்கு அகுவாடா என்னும் பெயர் ஏற்பட்டது. அகுவாடா என்பது "நீர்" என்னும் பொருள் தரும் ஒரு சொல். இங்கே நான்கு மாடிகளைக்கொண்ட போர்த்துக்கேயக் கலங்கரை விளக்கம் உள்ளது. 1864ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இது இவ்வகையில் ஆசியாவிலேயே மிகப் பழமையானது. இக்கோட்டை ஒருகாலத்தில் 79 பீரங்கிகளைக் கொண்டதாக இருந்தது. 2,376,000 கலன்கள் நீரைச் சேமித்து வைக்கக்கூடிய வசதிகள் இங்கே இருந்தன. ஆசியாவின் மிகப் பெரிய நீர் சேமிப்பிடங்களில் ஒன்றாகவும் இது விளங்கியது.

இக்கோட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மேற்பகுதி கோட்டையாகவும், நீர் வழங்கும் நிலையமாகவும் தொழிற்பட்ட அதே வேளை, கீழ்ப்பகுதி போர்த்துக்கேயக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான நிறுத்தும் இடமாக இருந்தது. மேற்பகுதியில், அகழி, நிலக்கீழ் நீர்த்தாங்கி, வெடிமருந்து அறை, கலங்கரை விளக்கம், கொத்தளங்கள் என்பன இருந்தன. போர்க் காலங்களிலும், அவசர தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்காக இரகசியத் தப்பும் வழி ஒன்றும் இருந்தது. தொடக்கத்தில் கலங்கரை விளக்கம் ஏழு நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒளியைப் பாய்ச்சுமாறு அமைக்கப்பட்டு இருந்தது. 1834 ஆம் ஆண்டில் இது 30 செக்கன்களுக்கு ஒரு தடவை ஒளி பாய்ச்சும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. 1976ல் இது கைவிடப்பட்டது.

அகுவாடா கலங்கரை விளக்கம்[தொகு]

அகுவாடா கலங்கரை விளக்கம் கோட்டைக்கு மேற்கில் அமைந்துள்ள ஒரு மலையில் 1864-ல் கட்டப்பட்டது. இது ஆசியாவிலேயே பழமையான கலங்கரை விளக்கம் ஆகும். இது மோர்முகாவ் தீபகற்பத்திற்கும் கலங்குட் கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டு காலம் பணியாற்றிய பிறகு 1976-ல் புதிய கலங்கரை விளக்கத்தால் மாற்றப்பட்டது. பழைய கோவாவில் உள்ள புனித அகசுடசு மடத்தின் இடிபாடுகளில் காணப்பட்ட கலங்கரை விளக்கத்தில் ஒரு பெரிய மணி இருந்தது.[1]

அகுவாடா கோட்டையின் அழகியத் தோற்றம்

அகுவாடா மத்திய சிறை[தொகு]

அகுவாடா மத்திய சிறையானது கோட்டையின் ஒரு பகுதியாகும். இது 2015ஆம் ஆண்டு வரை கோவாவிலேயே மிகப்பெரிய சிறையாக இருந்தது. 17ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய கால கட்டமைப்பானது கோவா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தினால் கோவா பாரம்பரிய செயல் குழு மற்றும் கோவாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கோவாவின் சுதந்திரப் விடுதலை வரலாற்றினைக் காட்சிப்படுத்தவும், கோவா விடுதலையில் பங்கேற்று, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடி, இந்திய விடுதலைக்காகப் போராடி, அங்கு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரின் வீரச் செயல்களுக்கும், புகழ்பெற்ற தியாகங்களுக்கும் உண்மையான அஞ்சலியாக, சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இது அமைந்துள்ளது. இதனை திசம்பர் 19, 2021 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த மறுமேம்பாட்டிற்கு தோராயமாக ரூ.22 கோடி செலவானது. இந்த அருங்காட்சியகத்தில் போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட விடுதலைப் போராளிகளான டி பி குன்ஹா மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு சிறப்பு அறைகள் உள்ளன.[2][3][4][5][6]

தாஜ் கோட்டை அகுவாடா ஓய்விடம்[தொகு]

தாஜ் கோட்டை அகுவாடா ஓய்விடம் முன்பு கோட்டை அகுவாடா கடற்கரை ஓய்விட பகுதியாக இருந்தது. இந்த உணவகம் 1974-ல் வரலாற்று சிறப்புமிக்க போர்த்துகீசிய கோட்டை அகுவாடாவின் தளத்தில் திறக்கப்பட்டது.[7]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Navy, Indian (1989) (in en). Maritime Heritage of India. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5206-917-0. https://books.google.com/books?id=A1acCwAAQBAJ&dq=fort+aguada&pg=PT120. 
  2. "Goa’s Aguada Jail to become a tourist hotspot post renovation in March 2021". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Goa). 6 January 2021. https://timesofindia.indiatimes.com/travel/travel-news/goas-aguada-jail-to-become-a-tourist-hotspot-post-renovation-in-march-2021/as80130312.cms. 
  3. "Goa Unlocked: Aguada Jail To Become Tourist Attraction By March". Outlook (Indian magazine). 6 January 2021. https://www.outlookindia.com/website/story/india-news-goa-unlocked-aguada-jail-to-become-tourist-attraction-by-march/369603. 
  4. "This jail in Goa is set to become famous, and you won't believe why!". இந்தியா டுடே. 18 May 2016. https://www.indiatoday.in/travel/travel-buzz/story/you-will-finally-be-able-to-visit-this-place-in-goa-as-a-tourist-fort-aguada-central-jail-gtdc-travel-india-324167-2016-05-18. 
  5. Biswas, Sayantani (19 December 2021). "Goa: PM arrives to inaugurate multiple development projects on Liberation Day". Mint (Panaji). https://www.livemint.com/news/india/goa-pm-arrives-to-inaugurate-multiple-development-projects-on-liberation-day-11639903681752.html. 
  6. "PM likely to open Aguada museum on December 19". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Calangute). 13 September 2021. https://timesofindia.indiatimes.com/city/goa/pm-likely-to-open-aguada-museum-on-december-19/articleshow/86152384.cms. 
  7. "Taj Fort Aguada Beach Resort & Spa gets new General Manager".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுவாடா_கோட்டை&oldid=3743399" இலிருந்து மீள்விக்கப்பட்டது