வந்தவாசி
வந்தவாசி VANDAVASI | |
---|---|
இரண்டாம் நிலை நகராட்சி | |
ஆள்கூறுகள்: 12°30′N 79°37′E / 12.5°N 79.62°Eஆள்கூறுகள்: 12°30′N 79°37′E / 12.5°N 79.62°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | செய்யார் |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | இரண்டாம் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | வந்தவாசி நகராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. அம்பேத்குமார் |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
• நகராட்சித் தலைவர் | திரு. |
பரப்பளவு[1] | |
• இரண்டாம் நிலை நகராட்சி | 72 km2 (28 sq mi) |
பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• இரண்டாம் நிலை நகராட்சி | 31,320 |
• பெருநகர் | 74,320 |
இனங்கள் | வந்தவாசிகாரன் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN 97 |
சென்னையிலிருந்து தொலைவு | 117 கி.மீ (73மைல்) |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 78 கி.மீ (48மைல்) |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 38 கி.மீ (24மைல்) |
ஆரணியிலிருந்து தொலைவு | 44 கிமீ (27மைல்) |
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு | 41 கிமீ (25மைல்) |
மேல்மருவத்தூரிலிருந்து தொலைவு | 36 கிமீ (22மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 81 கிமீ (50மைல்) |
இணையதளம் | வந்தவாசி நகராட்சி |
வந்தவாசி (ஆங்கிலம்: VANDAVASI), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 22 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது பெரிய நகரமாகும். இங்குத் தரமான கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நகரம் வேலூர் - ஆரணி - திண்டிவனம் - புதுச்சேரி சாலை, ஆற்காடு - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை மற்றும் போளூர் - செய்யூர் சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
வந்தவாசி நகரம் உருவாக்கம்[தொகு]
- பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக வந்தவாசி விளங்கியது.
- சம்புவராயர்கள் படைவீட்டை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, போளூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
- 1989க்கு முன் வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் வந்தவாசி நகரமாக விளங்கியது
- 1989 ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த வந்தவாசி நகராட்சி, வந்தவாசி வட்டம் மற்றும் வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) ஆகியப் பகுதிகளை திருவண்ணாமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
- வந்தவாசி வட்டம், செய்யார் வருவாய் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
- அதேபோல் வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) 2007 ஆம் ஆண்டு வந்தவாசி மக்களவைத் தொகுதியின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) உள்ளது.
- வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் TN25 மூலம் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டது (TN97).பின்னர் வந்தவாசி வட்டம் இந்த ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் இயங்கி வருகிறது
- வந்தவாசி நகரம் 1942 ஆம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
- சிறப்பு நிலை பேரூராட்சியாக 1986 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது வந்தது.
- 1994 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
- 1998 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [2]. வந்தவாசி தமிழ்நாட்டில் ஒரு சிறந்த இரண்டாம் நிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. வந்தவாசி நகரத்தை இந்த வந்தவாசி நகராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°37′E / 12.5°N 79.62°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 74 மீட்டர் (242 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அமைவிடம்[தொகு]
வந்தவாசி நகரத்திலிருந்து
- மாவட்டத் தலைநகரம் மற்றும் ஆண்மீக நகரான திருவண்ணாமலையிலிருந்து 76 கிமீ தொலைவிலும்,
- பட்டு மற்றும் அரிசி நகரான ஆரணியிலிருந்து 44 கிமீ தொலைவிலும்,
- கோட்டை நகரான வேலூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும்,
- போளூரிலிருந்து 58 கிமீ தொலைவிலும்,
- பட்டு நகரான காஞ்சிபுரத்திலிருந்து 41 கிமீ தொலைவிலும்,
- செய்யாறு ஆறு நகரான செய்யாரிலிருந்து 21 கிமீ தொலைவிலும்,
- மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 116 கிமீ தொலைவிலும்,
- சக்தி பீடம் மேல்மருவத்தூரிலிருந்து 34 கிமீ தொலைவிலும்,
- திண்டிவனத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும்,
- பெரணமல்லூரிலிருந்து 21 கிமீ தொலைவிலும்,
- அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து 76 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,326 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 31,320 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.5% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3337ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,242 மற்றும் 410 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 60.86%, இசுலாமியர்கள் 34.73%, கிறித்தவர்கள் 3.03%, தமிழ்ச் சமணர்கள 1.28% மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[4]
வரலாறு[தொகு]
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. 1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலூன்ற காரணமானது.
வந்தவாசி கோட்டை[தொகு]
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்
தொழில் வளம்[தொகு]
வந்தவாசி கோரைப்பாய் நகரம்[தொகு]
வந்தவாசியில் பல ஆண்டுகளாக கோரைப்பாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ஆற்றோரங்களில் விளைந்த மானாவாரி கோரைகளை அறுத்து, கைகளால் பாய் நெய்து வந்தனர். இந்த பாய்களை தெருத்தெருவாக தலையில் சுமந்து சென்று விற்பனை செய்தனர். பின்னர் 1979-ம் ஆண்டு கோரைப்பாய் தயாரிக்க இயந்திரம் வந்தவாசியில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கோரைப்பாய் உற்பத்தி படிப்படியாக இயந்திரமயமாகியது. தற்போது வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் கோரைப்பாய் தயாரிக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஜப்பானிலிருந்து கோரைப்பாய் தயாரிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த கோரைப்பாய் தயாரிப்புக்கென வந்தவாசியை சுற்றியுள்ள தென்னாங்கூர், வடநாங்கூர், மாலையிட்டான்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோரை பயிரிடப்படுகிறது.
மேலும் தேவைக்கு திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோரை வரவழைக்கப்படுகிறது. கோரை ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் தன்மை கொண்டதாகும். 6 மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் கோரையானது, அளவு மற்றும் தரம் வாரியாக பிரிக்கப்பட்டுத் தேவையான வர்ணம் ஏற்றப்பட்டு வெயிலில் காய வைக்கப்படுகிறது. பின்னர் இயந்திரங்கள் மூலம் பல்வேறு அளவுகளில் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு இயந்திரம் மூலம் மணிக்கு சுமார் 5-லிருந்து 6 பாய்கள் வரை நெய்யலாம். பின்னர் பாய்களின் 2 ஓரங்களிலும் வர்ண நாடாக்கள் தைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கோரைப்பாய்கள் 2.5 அடி அகலம் முதல் 4 அடி அகலம் வரை பல்வேறு அளவுகளில் நெய்யப்படுகின்றன. இவை ரூ.80-லிருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் முகூர்த்த பாய்கள், பல்வேறு வடிவங்கள் பொறித்த பாய்கள், பந்தி பாய்கள், திருமணப் பரிசாக வழங்க மணமக்கள் பெயர் பொறித்த பாய்கள் என நாளொன்றுக்கு மொத்தம் சுமார் 3 ஆயிரம் பாய்கள் வரை வந்தவாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பாய்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும், மேற்கு வங்கம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஓர் இயந்திரம் அமைக்க ஆயிரம் சதுர அடி இடம் தேவைப்படும். மேலும், தரமான கோரைகளைப் பிரித்தல், சாயம் ஏற்றி காய வைத்தல், நெசவு, நாடா தைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு என ஒரு இயந்திரத்துக்கு குறைந்தபட்சம் 4 பேர் தேவை. இத்தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.[5]
கோவில்கள்[தொகு]
வந்தவாசியில் இருந்து 23 கிமீ தொலைவில் தேசூர் அருகில் சியமங்கலம் மற்றும் அறியம்பூண்டி என்ற கிராமங்கள் உள்ளன. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது[6][7].
ஜலகண்டீஸ்வரர் ஆலயம்[தொகு]
வந்தோரை வாழவைக்கும் வந்தவாசியில் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பும் உண்டு. மழை காலங்களில் இந்த கோவில் முழுதும் தண்ணீரால் நிரம்பி விடும். மூலவர் சுயம்பு நாத ஈஸ்வரர் என்கிற ஜலகண்டீச்வரரை தொடும் அளவிற்கு நீர் ஊற்றெடுத்து தேங்கும். இது எவ்வளவு உயரம் தேங்கும் என்றால் ஒரு மனிதரின் இடுப்பு அளவிற்கு என்றும் கூறலாம். இவ்வாறு ஏன் அந்த கால கட்டத்தில் அமைக்கப்பட்டது என்றால் "ஈஸ்வரர் கோபத்தில் நெற்றிக்கண் திறந்து பார்க்கும் பொது மிகுந்த உஷ்ணமாக இருக்கும். அதனை குளிர்விக்க தண்ணீருக்குள் தவம் புரிவார் ஈஸ்வரர். அதனால் தான் அவருக்கு ஜலகண்டீஸ்வரர் என பெயரும் வந்தது" என்று கூறுவர். ஆகவே தான் ஈஸ்வரர் தண்ணீரில் மூழ்கும்படி இவ்வாறு வடிவமைத்து உள்ளனர். ஆனால் பக்தர்கள் உள்ளே செல்ல அவதிப்படுவதால் தற்போது கட்டமைப்புகளில் மாற்றம் செய்து தண்ணீர் உள்ளே தேங்காத வண்ணம் அமைத்துள்ளனர். இந்த கோவிலின் புதுப்பிக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகம் 2011 ஆனி மாதம் முடிந்தது.
தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோவில்[தொகு]
தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கர் கோவிலும் பார்க்கத்தகுந்தது. தென்னாங்கூர் கோவில் மற்ற கோவில்களை போல இல்லாமல் பூரி ஜகன்னாதர் கோவிலை போன்ற கோபுர வடிவம் கொண்ட கோவில் ஆகும். மேலும் சிறந்த தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட பைபர் கிளாஸ் பைண்டிங் முறையில் உட்கட்டமைப்பில் உள்ள படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான வெள்ளிக் கதவுகள் மூலவரின் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் பெருமாள் கடவுளுக்கு திருப்பதி தேவஸ்தான முறையில் அலங்காரங்களும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
பெருமாள் கோவில்[தொகு]
பழங்காலத்தில் இந்துக்கள் சைவம் மற்றும் வைணவம் என்று இரு வேறு மதத்தவர் போல பிரிந்து காணப்பட்டனர். இவர்களுக்குள் போட்டிகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்தன. இவைகளைப் போக்க ஒரு மாமுனிவரின் ஆணைப்படி "ஹரியும் சிவனும் ஒன்று" என்பதை சுட்டிக்காட்ட நாடெங்கிலும் ஒரே சுற்றுச்சுவரின் உள்ளேயே சிவன் மற்றும் பெருமாள் சன்னதிகள் நிறுவப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட கோவில்களுள் வந்தவாசி பெருமாள் கோவிலும் ஒன்று ஆகும். இந்த கோவிலின் புதுப்பித்தல் மற்றும் கும்பாபிஷேகம் முடிந்து விட்ட போதிலும், தலை வாசல் கோபுரம் எழுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று மிக அழகாகப் பார்க்க கம்பீரமாய் காட்சி தருகிறது.மற்றுமொரு சிறப்பாக பெருமாள் படுத்த கோலத்தில் சிறிய சிலையாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
கோட்டை ஆஞ்சநேயர் கோவில்[தொகு]
இந்த கோவில் அமைவிடம் வந்தவாசி கோட்டையின் நுழைவு வாயில் ஆகும். வந்தவாசி கோட்டை மிகவும் சேதம் அடைந்துவிட்ட நிலையிலும் இந்த வீர ஆஞ்சநேயர் கோவில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பக்கத்தில் பழங்காலத்தில் மன்னர்களாலும் பிரிட்டனாலும் உபயோகிக்கப்பட்ட பீரங்கி ஒன்றும் உள்ளது. கோவிலும் பீரங்கியும் தற்போது அறநிலையத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]
இந்நகரம் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. வந்தவாசி நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. இந்த நகரை வந்தவாசி நகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் | திரு.எசு.அம்பேத்குமார் |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத் |
அரசியல்[தொகு]
- தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் வந்தவாசி தொகுதி ஒன்றாகும். வந்தவாசி நகராட்சியானது, வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
- 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த திரு. எசு.அம்பேத்குமார் வென்றார்.
போக்குவரத்து[தொகு]
சாலை வசதிகள்[தொகு]
வந்தவாசி நகரத்தை பொறுத்த வரை ஆரணி, வேலூர் மற்றும் திண்டிவனம் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 43 மற்றும் ஆற்காடு, செய்யார் மற்றும் காஞ்சிபுரம் , உத்திரமேரூர், மேல்மருவத்தூர், சேத்துப்பட்டு , போளூர் ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 5 மற்றும் மாநில நெடுஞ்சாலை 115 மற்றும் மாநில நெடுஞ்சாலை 116 மற்றும் மாநில நெடுஞ்சாலை 118 ஆகிய சாலைகள் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில நெடுஞ்சாலை SH43 : திண்டிவனம் - தெள்ளார் - வந்தவாசி - ஆரணி - வேலூர்
- மாநில நெடுஞ்சாலை SH115 : போளூர் தேவிகாபுரம் - சேத்துப்பட்டு - வந்தவாசி - மேல்மருவத்தூர் - செய்யூர்
- மாநில நெடுஞ்சாலை SH118 : வந்தவாசி - மானாம்பதி - உத்திரமேரூர் - புக்கத்துறை
- மாநில நெடுஞ்சாலை SH116: காஞ்சிபுரம் - மாங்கால் கூட்ரோடு- தென்னாங்கூர் - வந்தவாசி
- மாநில நெடுஞ்சாலை SH5 : ஆற்காடு - செய்யார் - வந்தவாசி - தெள்ளார் - திண்டிவனம்
பேருந்து சேவைகள்[தொகு]
இதனையும் காண்க: வந்தவாசி பேருந்து நிலையம்
வந்தவாசி நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையங்களிலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் பெரணமல்லூர், சேத்துப்பட்டு, மேல்மருவத்தூர், தேசூர் மற்றும் செய்யார் ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் திருவண்ணாமலை செல்லவேண்டும் என்றால் சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை வழியாக தான் செல்லமுடியும்.
- ஆரணி மார்க்கமாக:
ஆரணி, வேலூர், குடியாத்தம், பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
- காஞ்சிபுரம் மார்க்கமாக:
காஞ்சிபுரம், சென்னை, திருத்தணி, பூந்தமல்லி, அரக்கோணம், நகரி, திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
- செய்யாறு மார்க்கமாக:
செய்யாறு, ஆற்காடு, திருப்பதி, சித்தூர், ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
- உத்திரமேரூர் மார்க்கமாக:
சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
- மேல்மருவத்தூர் மார்க்கமாக:
மேல்மருவத்தூர், மரக்காணம், சென்னை, செய்யூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
- திண்டிவனம் மார்க்கமாக:
திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, பழனி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், திருநெல்வேலி, நாகர்கோவில், நாகப்பட்டினம், விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
- சேத்துப்பட்டு மார்க்கமாக:
சேத்துப்பட்டு, போளூர், திருவண்ணாமலை, சேலம், பெங்களூரு, செங்கம், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
- தேசூர் மார்க்கமாக:
தேசூர், செஞ்சி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
ரயில் போக்குவரத்து[தொகு]
வந்தவாசி நகரில் தற்போது இரயில் நிலையம் மற்றும் இரயில்கள் சேவைகள் ஏதுமில்லை. இருந்தாலும் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - ஆரணி - நகரி இரயில் பாதை திட்டம் இந்த நகரின் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்படும் என திட்டம் தீட்டப்பட்டு அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன[8].
இருந்தாலும், அருகிலுள்ள மேல்மருவத்தூர் மற்றும் திண்டிவனம் ரயில் நிலையங்கள் மூலம் வந்தவாசி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து சென்னை, திருப்பதி, புதுச்சேரி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. 21 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "வந்தவாசி நகராட்சி இணைய தளம்". 2008-04-05 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-04-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vandavasi". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ வந்தவாசி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ கோரைப் பாய்களின் உற்பத்தியை அதிகரிக்க கோரைப்பாய் பூங்கா அமைக்க வேண்டும் என வந்தவாசி மக்கள் கோரிக்கை
- ↑ "TAMILNADU - SIYAMANGALAM MALAI". 2011-03-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-05-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Cave temples of Mahendravarman I (Pallava)
- ↑ |திண்டிவனம் - ஆரணி - நகரி ரயில்பாதை திட்டம் மண்டகதியில் நடைபெறும் திட்டப் பணி