திண்டுக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திண்டுக்கல்
திண்டுக்கல்
இருப்பிடம்: திண்டுக்கல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°13′N 77°35′E / 10.21°N 77.58°E / 10.21; 77.58ஆள்கூற்று : 10°13′N 77°35′E / 10.21°N 77.58°E / 10.21; 77.58
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் டி. என். ஹரிஹரன் இ. ஆ. ப. [3]
மாநகர தந்தை மருதராஜ்
மக்களவைத் தொகுதி திண்டுக்கல்
மக்களவை உறுப்பினர்

எம். உதய குமார் (அஇஅதிமுக ) [4]

சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல்
சட்டமன்ற உறுப்பினர்

கே. பாலபாரதி (சிபிஎம்)

மக்கள் தொகை 1 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் www.municipality.tn.gov.in/dindigul/


திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 தேதி தரம் உயர்த்தப்பட்டது.இங்கு 48 கவுன்சிலர்கள் உள்ளனர்.[5] ஹைதர் அலி காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை முக்கிய இடமாக இருந்து வந்தது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திண்டுக்கல்லில் 1,96,955 மக்கள் வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மக்களின் சராசரி கல்வியறிவு 86.91% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 77.41% விட கூடியதே. திண்டுக்கல் மக்கள் தொகையில் 11.75% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு[தொகு]

திண்டுக்கல் மலைக்கோட்டையின் 19 ஆம் நூற்றாண்டு புகைப்படம்

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று .

மலைக்கோட்டை[தொகு]

திண்டுக்கல் மலைக்கோட்டையின் முன் பகுதி
திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலின் முன்பகுதி

காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’ என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆங்கிலேயர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில் தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் திருமலை நாயக்கர் இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், ஹைதர் அலி போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். கி.பி.1784ல் திப்பு சுல்தான் இங்கு வந்துள்ளார். கி.பி.1788ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாளையக்காரர்களை அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த கோபால் நாயக்கரும், அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4ல் கைது செய்து, நவ.,5ல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன.மதுரையை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790ல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம்தான் இது.

மலைக்கோட்டை கோவில்[தொகு]

திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.

முக்கிய வழிபாட்டு தலங்கள்[தொகு]

திண்டுக்கல் மாநகரம்

அபிராமி அம்மன் கோவில்[தொகு]

திண்டுக்கல்லில் முன்பிருந்தே ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் அபிராமி அம்மை திண்டுக்கல் நகரவாசிகளின் இஷ்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராமாம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர் . இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.

கோட்டை மாரியம்மன்[தொகு]

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வமாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.

ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும். பொதுவாகவே இப்பகுதியில் நல்ல பூ விளைச்சல் உள்ளதால் " பூச்சொரிதல் திருவிழா " கொடியேற்றத்திற்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. அன்று அம்மனின் உற்சவ மேனி பூ அலங்காரம் செய்த தேரில் உலா வரும், பக்தர்கள் அனைவரும் தத்தம் பகுதிகளில் திருக்கண் அமைத்து தாங்கள் சேகரித்த பலவகை மலர்களை தேரில் சேர்ப்பர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பூக்களை மூலவரின் மேல் சொரிந்து மாரியம்மனின் கருவறை முழுதும் நிரப்பி விடுவர். அப்போது அம்மன் பூக்கடலில் நேராடுவது போன்ற தோற்றம் தென்படும். திருவிழாவில் பூச்சொரிதல், அங்கு விலாஸ் மண்டகப்படி, தசாவதாரம் முதலிய நாட்கள் முக்கியமானவை. அனேகமாக ஒரு அம்மன் கோவிலில் தசாவதாரம் நடத்தப்படுவது இங்கு மட்டும்தான்.[7]

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்[தொகு]

பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. ராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அமீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார்.அமீர்-உன்-நிஷா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும்,இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.[8]

புனித ஜோஸப் தேவாலயம்[தொகு]

1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.[9]

பூட்டு[தொகு]

திண்டுக்கல் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது பூட்டு. யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது.[சான்று தேவை]

இலக்கியச்சிறப்பு[தொகு]

திண்டுக்கல் நகரில் உள்ள பத்மகிரீசர் மீது பலபட்டடை சொக்கநாதர் எனும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் "பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது" எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றியுள்ளார்.

ஆன்மீகச்சிறப்பு[தொகு]

திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி அருளாளர்கள் பலர் இருந்துள்ளனர். ஓதச்சாமியார் எனும் சித்தர் அவ்வாறு மலைக்கோட்டையை ஒட்டிய குகையில் இருந்து அருள் புரிந்துள்ளார். பகவான் ரமணர் கூட திண்டுக்கல்லில் சில காலம் வசித்துள்ளார்.

திண்டுக்கல் பூ வணிக மையம்[தொகு]

திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமிழ்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  5. [1]
  6. (M)-URBAN இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
  7. [2]
  8. [3]
  9. [4]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்&oldid=2017263" இருந்து மீள்விக்கப்பட்டது