வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ளது கோட்டைபட்டி இங்குள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சென்றாய பெருமாள் கோயில். இந்த சென்றாய பெருமாள் கோயிலில் கம்பளத்து நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்யும் பணியைச் செய்து வருகின்றனர். இங்கு பூஜை செய்யும் பூசாரிகள் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெறுகிறது.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 371 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°09'30.5"N, 77°44'20.9"E (அதாவது, 10.158480°N, 77.739149°E) ஆகும்.
தல வரலாறு
[தொகு]சுமார் 405 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆதி சென்னம நாயக்கர், ஒருநாள் தனது பசு மாடுகளில் ஒன்றைக் காணாமல் தேடியிருக்கிறார். அந்தப் பசு மாட்டைத் தேடி மலையின் உச்சிப்பகுதிக்குச் சென்று பார்த்த போது, அங்கு அந்தப் பசு, பாலகன் ஒருவனுக்குப் பால் தந்து கொண்டிருந்திருக்கிறது. மலைப்பகுதிக்குப் பாலகன் எப்படி வந்தான் என்று அவர் சிந்தித்த நிலையில் அவர் கண் முன் பெருமாள் தோன்றி, இந்த மலைப்பகுதியில் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தால் இந்தப் பகுதி மக்களுக்கும், இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கும் அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்றும், இவர்கள் குடும்பத்தினர் இக்கோயிலில் பக்தர்களுக்குச் சொல்லும் அருள் வாக்குகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் சொல்லி மறைந்திருக்கிறார். அன்றிலிருந்து ஆதிசென்னம நாயக்கர் வாரிசுதாரர்கள் இந்தக் கோயிலை அமைத்து பூசை மற்றும் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.
அறங்காவலர்கள்
[தொகு]தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் மரபு வழியில் அறங்காவலர்களாக சென்னம நாயங்காரவின் மரபுரிமையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கண்ணன் பூசாரி எனும் சென்னம நாயங்கார, செல்வராஜ், ராஜ் ஆகியோர் உள்ளனர்.