கிறித்தவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிறிஸ்தவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிறித்தவர் அல்லது கிறிஸ்தவர் (christian) என்னும் சொல் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுவோரைக் குறிக்கிறது. கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்துவைத் தங்கள் கடவுளாகவும், மீட்பராகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்களிடையே திரித்துவ நம்பிக்கையும் உள்ளது. தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு இறைவனின் இரண்டாம் ஆளே இயேசு கிறிஸ்து என்பது கிறிஸ்தவர்களின் விசுவாசம் ஆகும். கிறிஸ்தவன் என்பது ஆண்பாலையும், கிறிஸ்தவள் என்பது பெண்பாலையும் குறிக்கும் வார்த்தைகள் ஆகும். கிறிஸ்தவர்களின் மறைநூல் விவிலியம் ஆகும். இது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற இரண்டு பகுதிகள் விவிலியத்தில் அடங்கியுள்ளன.

சொல் பிறப்பு[தொகு]

இயேசு என்னும் சொல்லுக்கு மீட்பர், இரட்சகர் என்றும், கிறிஸ்து என்னும் சொல்லுக்கு அருட்பொழிவு பெற்றவர், கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர், அரசர் என்றும் பொருள். மெசியா என்ற எபிரேயச் சொல்லின், கிரேக்க வார்த்தையே கிறிஸ்து (Χριστός, christos) என்பதாகும். இது இயேசுவின் அரசத்தன்மையைக் குறிக்கும் சிறப்புச் சொல் ஆகும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் என்ற பொருளிலேயே, கிறிஸ்தவர் என்ற சொல் உருவானது. இது தமிழில், மறு கிறிஸ்து (கிறிஸ்து + அவர்) என்ற பொருளைத் தருகிறது. 'அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்'[1] என்று விவிலியம் குறிப்பிடுகிறது.

கிறிஸ்தவ நம்பிக்கை[தொகு]

கிறிஸ்தவர்களின் பொதுவான நம்பிக்கை பின்வருமாறு:

கிறிஸ்தவ வாழ்வு[தொகு]

கிறிஸ்தவ வாழ்வு என்பது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் வாழ்வு ஆகும். நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு [14] ஆகிய மூன்று அம்சங்கள் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை ஆகும்.

நம்பிக்கை:

நம்பிக்கை என்பது கடவுள் மீது கொள்ள வேண்டிய விசுவாசத்தைக் குறிக்கிறது. கடவுளை ஏற்று, அவருக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வாழ்வைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு தம் சீடர்களை நோக்கி, "நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.[15] "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" என்று புனித பவுல் குறிப்பிடுகிறார்.[16]

எதிர்நோக்கு:

எதிர்நோக்கு என்பது கடவுள் மீது கொள்ளும் விசுவாசத்தால், இயேசு கிறிஸ்து வாக்களித்துள்ள மீட்பின் பேறுபலன்களையும், விண்ணக வாழ்வையும் நாம் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை. "நம் மூதாதையருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதியை நான் எதிர்நோக்குவதால் தான் இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளேன்" என்று புனித பவுல் அகிரிப்பாவிடம் குறிப்பிடுகிறார்.[17]

அன்பு:

அன்பு என்பது முதலாவதாக இறையன்பையும், அடுத்ததாக பிறரன்பையும் வலியுறுத்துகிறது. இவற்றைப் பற்றி இயேசு பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."[18]

கிறிஸ்தவ மதிப்பீடுகள்[தொகு]

இயேசு கிறிஸ்து கற்றுத்தந்த மதிப்பீடுகளின்படி வாழ்வதே கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வாக அமையும். பின்வருவனவற்றை கிறிஸ்தவ மதிப்பீடுகளாக குறிப்பிடலாம்:

 • சமத்துவம்:
யூத சமுதாயத்தில் தாழ்ந்தவர்களாக கருதி புறக்கணிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள்[19] ஆகியோரை, உயர்ந்தவர்களாக கருதப்பட்ட ஆண்களுக்கு நிகராக இயேசு ஏற்றுக்கொண்டார். எனவே, கிறிஸ்தவர்கள் ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும்.
 • சகோதரத்துவம்:
யூத சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதப்பட்ட வரி தண்டுவோர், பாவிகள் ஆகியோரோடு, இயேசு சகோதர உணர்வோடு பழகி, அவர்களோடு விருந்தும் உண்டார்.[20] எனவே, கிறிஸ்தவர்கள் அன்பு நிறைந்த சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
 • ஒற்றுமை:
பிரிவுகளும், பிணக்குகளும் மலிந்திருந்த யூத சமுதாயத்தில், அன்பும், அமைதியும் தவழ்ந்து கடவுளின் பெயரால் ஒற்றுமை ஏற்பட இயேசு அறிவுறுத்தினார். எனவே, கிறிஸ்தவர்கள் தாங்களும் ஒற்றுமையாக இருந்து,[21] மக்களிடையே ஒற்றுமை ஏற்படவும் ஆர்வமாக பணியாற்ற வேண்டும்.
 • இரக்கம்:
பாவிகள் மீதும், உடல் நலமற்றோர் மீதும், ஏழைகள் மீதும் இயேசு இரக்கம் காட்டி உதவி செய்தார். எனவே, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும், தேவையில் இருப்போருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.[22]
 • நீதி:
நீதி புறக்கணிக்கப்பட்டிருந்த யூத சமுதாயத்தில், தவறான முறையில் மக்கள் மீது அடக்குமுறைகளைத் திணித்த பணக்காரர்களையும், சமய மற்றும் அரசியல் தலைவர்களையும் இயேசு கடுமையாகக் கண்டித்தார்.[23] எனவே எதிர் வரும் துன்பங்களையும் பொருட்படுத்தாமல், அநீதிகள் நிகழும் இடங்களில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை ஆகும்.[24]
 • தியாகம்:
உலக மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாக, தந்தையாம் கடவுளின் திட்டப்படி இயேசு தனது உயிரையே தியாகம் செய்தார்.[25] கிறிஸ்தவர்களும் அவரைப் பின்பற்றி, முதலாவது கடவுளுக்காகவும், அடுத்தது மற்றவருக்காகவும் தம்மையே இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.[26]
 • பகிர்தல்:
இயேசு பசித்தோருக்கு உணவு, நோயுற்றோருக்கு சுகம், பாவிகளுக்கு மன்னிப்பு எனத் தன்னிடம் இருந்தவற்றைத் தேவையில் இருந்தோருக்கு பகிர்ந்தளித்தார்.[27] அவ்வாறே, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடம் இருப்பவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ வேண்டும்.[28]

ஆதாரங்கள்[தொகு]

 1. திருத்தூதர் பணிகள் 11:26
 2. தொடக்க நூல் 1:1 'தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த...'
 3. மத்தேயு 28:19 "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்."
 4. லூக்கா 1:34-35 'மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" என்றார்.'
 5. மாற்கு 1:14-15 'கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார்.'
 6. எபிரேயர் 10:10 'இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.'
 7. திருத்தூதர் பணிகள் 10:40 'கடவுள் இயேசுவை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.'
 8. மாற்கு 16:19 'இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.'
 9. திருத்தூதர் பணிகள் 2:1-4 'பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.'
 10. மாற்கு 16:15-16 'இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்" என்று கூறினார்.'
 11. லூக்கா 21:27 'அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.'
 12. திருவெளிப்பாடு 21:1 'நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன.'
 13. மத்தேயு 25:46 'பாவிகள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.'
 14. 1 கொரிந்தியர் 13:13 'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.'
 15. மாற்கு 16:17-18
 16. எபிரேயர் 11:1
 17. திருத்தூதர் பணிகள் 26:6
 18. மத்தேயு 25:37-39
 19. லூக்கா 18:16 'இயேசு குழந்தைகளைத் தம்மிடம் வரழைத்து, "சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது" என்று கூறினார்.'
 20. மாற்கு 2:16 'இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர்.'
 21. யோவான் 17:21 "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!"
 22. லூக்கா 6:36 "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்."
 23. மத்தேயு 23:23 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள்."
 24. மத்தேயு 5:10 "நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது."
 25. உரோமையர் 5:8 "நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்."
 26. யோவான் 15:13 "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை."
 27. மாற்கு 6:41 'அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார்.'
 28. எபிரேயர் 13:16 "நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை."
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவர்&oldid=1828947" இருந்து மீள்விக்கப்பட்டது