உள்ளடக்கத்துக்குச் செல்

தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவம் (Tapas), ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளும் தவம் எனப்படும். உடலையும், மனதையும் உருக்கி செய்யப்படும் நோன்பு, தியானம், விரதங்கள், பாதயாத்திரை, தீர்த்த யாத்திரை, பூஜை, ஜெபம், ஓதுதல் முதலியன தவத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பகவத் கீதையில் தவம்

[தொகு]

பகவத் கீதையின் 17-வது அத்தியாயமான, சிரத்தாத்திரய விபாக யோகத்தில், கிருஷ்ணர், ஆத்ம ஞானத்தை அடையத் தேவையான தகுதிகளில் ஒன்றான தவத்தை, சாத்விக தவம், இராட்சத தவம் மற்றும் தாமச தவம் என மூன்றாக பிரித்து அருச்சுனனுக்கு கூறுகிறார்.

  • சாத்வீக தவம் - ஆன்மீக முன்னேற்றத்திற்கு மட்டுமே செய்வது சாத்வீக தவமாகும். (எடுத்துகாட்டு: ஆத்ம ஞானத்திற்காக செய்யப்படும் தவம்)
  • இராட்சத தவம் - தனது நன்மைக்கு மட்டுமே செய்வது இராட்சத தவமாகும். (குழந்தை அல்லது செல்வம் வேண்டி செய்யப்படும் தவம்)
  • தாமச தவம் - பிறரைத் துன்புறுத்தும் நோக்கத்திற்காகச் செய்யும் தவமே தாமச தவமாகும்.

தவ முறைகள்

[தொகு]

கிருஷ்ணர் உடல், பேச்சு மற்றும் மனதால் செய்யப்படும் தவ முறைகளை விளக்குகிறார்.

  • உடலால் செய்யப்படும் தவம் (காயக தவம்) : நேரம் தவறாது செயல்படுவது, அளித்த வாக்கை நிறைவேற்றுவது, பூசைகள் செய்வது, தானம் அளிப்பது போன்றவைகள் காயக தவமாகும்.
  • பேச்சால் செய்யப்படும் தவம் (வாசிக தவம்) : தெரிந்த உண்மையை மட்டும் பேசுதல், இனிமையாகவும், மென்மையாகவும் பேசுதல், பிறர் மனம் புண்படாது பேசுதல், கேட்பவருக்கு நன்மை பயக்கூடியது மட்டும் பேசுதலே வாசிக தவமாகும். வாசிகத் தவத்தின் பயனால் உண்டாகும் பேச்சுக் கட்டுப்பாடு, ஆன்மீக முன்னேற்றத்தை மேம்படுத்தும்.
  • மனதின் தவம் (மானச தவம்) : மனதில் தீய எண்ணங்களை விட்டு விட்டு, தூய எண்ணங்களுடன், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுதலே மானச தவமாகும்.

உபநிடதங்களில் தவம்

[தொகு]

வேதாந்தமாகிய உபநிடதங்கள், சீவமாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத அறிவை அடைவதே தவத்தின் நோக்கம் எனக் கூறுகிறது.[1]

சமயச் சடங்குகளின் மூலம் இறைவனுக்கு படையல்களைப் படைப்பதை விட, ஆத்மா எனும் தன்னை அறிதலின் மூலமே மனநிறைவு எனும் மோட்சத்தை, தவ வாழ்வினால் அடைகிறார்கள் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது.[1]

நான் யார் ? (ஆத்மா) என்பதை அறிய, தவம், தியானம், தியாகம், நம்பிக்கை மற்றும் வேதாந்த விசாரணை மூலம் அறிந்து, தானும் பிரம்மமும் ஒன்றே என்ற அத்வைத அறிவை அடைவதே தவம் ஆகும் என சுவேதாஸ்வதர உபநிடதம் குறிப்பிடுகிறது.[1][2] முண்டக உபநிடதத்தின் 3.1.5-6-ஆம் பகுதிகள் தவத்தினால் ஆத்ம அறிவை பெறும் ஒரு ஆன்மீக சாதகனுக்கு மோட்சம் எனும் மனநிறைவு கிடைக்கிறது எனக் கூறுகிறது.[1][3]

ஆதிசங்கரர் தனது நூற்களில், சமயச் சடங்குகளை விட, தவத்திற்கே முன்னுரிமை வழங்குகிறார். சாதாரண தவ வாழ்வை விட, ஆத்ம ஞானத்தின் மூலம் பிரம்மத்தின் இயற்கையை அறிவதே சிறந்த அறிவுபூர்வமான தவம் எனக் கூறுகிறார்.[1][1][2]

பிரம்மச்சரியம்

[தொகு]

இந்து வர்ணாசிரம தருமத்தின் படி, வாழ்க்கையின் முதல் படிநிலையில் உள்ள பிரம்மச்சாரிகளுக்கு தவ வாழ்க்கை முறை போதிக்கப்படுகிறது.[4] பிரம்மச்சரிய வாழ்வில், பொருளின்பங்களில் நாட்டம் செல்லாதவாறு, குரு குலங்களில் மனவடக்கம், புலனடக்கம் மூலம் தவம், சந்நியாசம், தியானம், அகிம்சை, சிரவணம், மனனம் மூலம் மேலான பிரம்ம ஞானத்தை, குருவால் சீடர்களான பிரம்மச்சாரிகள் போதிக்கப்படுகின்றனர்.

பிறவாப் பெரு நிலைக்கான தவம்

[தொகு]

விடுதலை அல்லது மோட்சம் எனும் பிறவாப் பெரு நிலையை அடைய இந்து, பௌத்த, சமண சமயத் துறவிகள் தவ வாழ்வை கடைப்பிடிக்கின்றனர். ஞானிகளும், துறவிகளும், ஆன்மீக சாதனையாளர்களும், பல்வேறு ஆன்மீக சாதனைகள் மூலம் முயற்சி செய்வதன் மூலம் சீவாத்மாகிய தானும், அழிவற்ற, ஆனந்த மயமான, என்றும் நிலையான பிரம்மமும் ஒன்றே என அறிந்து, மற்ற அனைத்தும் நிலையற்றவை (மாயை) என உணர்வதே தவத்தின் இறுதி இலக்காகும்.

நவீன காலத்தில்

[தொகு]

நவீன காலத்தில் தவ வாழ்க்கை மேற்கொள்வதற்காக, கங்கை ஆறு பாயுமிடங்களான ரிஷிகேஷ், அரித்துவார், உத்தரகாசி, வாரணாசி போன்ற புனிதமான பகுதிகளில், இந்து சமய பிரம்மச்சாரிகளுக்கும் , இளம் துறவிகளுக்கும், வேதாந்தக் கல்வியுடன், தவம், தியானப் பயிற்சிகளையும் வழங்குகிறது. செய்வதற்கு [5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 David Carpenter, Brill's Encyclopedia of Hinduism, Editor: Knut Jacobsen (2010), Volume II, Brill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17893-9, see Article on Tapas, pp 865-869
  2. 2.0 2.1 CR Prasad, Brill's Encyclopedia of Hinduism, Editor: Knut Jacobsen (2010), Volume II, Brill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17893-9, see Article on Brahman, pp 724-729
  3. Mundaka Upanishad Robert Hume, Oxford University Press, p. 374
  4. Walter O. Kaelber (May, 1976), Tapas, Birth, and Spiritual Rebirth in the Veda, History of Religions, Vol. 15, No. 4, page 357-360
  5. Pattathu, Paul (1997). Ashram spirituality. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85428-58-1.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவம்&oldid=3847791" இலிருந்து மீள்விக்கப்பட்டது