உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்வார்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர்.

தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.[1]

அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.

இவர்கள் பொ.ஊ. 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.

சொற்பொருள்

[தொகு]

மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் இந்தச் சொல் ஆள்வார் என்றும் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆனதாகவும் எஸ். பழனியப்பன் என்ற இந்தியவியல்/மொழியியல் ஆய்வாளர் பதிப்பித்துள்ளார்.[2]

வரலாறு

[தொகு]

பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் திவ்விய பிரபந்தம் (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.

பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் என்ற சிறப்பும் உண்டு.

பன்னிரு ஆழ்வார்கள்

[தொகு]
 1. பொய்கையாழ்வார்
 2. பூதத்தாழ்வார்
 3. பேயாழ்வார்
 4. திருமழிசையாழ்வார்
 5. நம்மாழ்வார்
 6. மதுரகவி ஆழ்வார்
 7. குலசேகர ஆழ்வார்
 8. பெரியாழ்வார்
 9. ஆண்டாள்
 10. தொண்டரடிப்பொடியாழ்வார்
 11. திருப்பாணாழ்வார்
 12. திருமங்கையாழ்வார்

12 ஆழ்வார்களின் காலநிரல்

[தொகு]
நூற்றாண்டு ஆழ்வார்கள்[3] எண்ணிக்கை
6 முதல் ஆழ்வார் மூவர்: பொய்கை, பூதன், பேயன் 3
7 திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் 3
8 குலசேகராழ்வார், பெரியாழ்வார், கோதை ஆண்டாள், திருமங்கையாழ்வார் 4
9 நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் 2

வழிமுறை

[தொகு]
நூற்றாண்டு வழிமுறையினர்
9 நாதமுனிகள்
10 ஆளவந்தார்
11 இராமானுசர்
12 பராசர பட்டர்
14 மணவாள மாமுனிகள்

நாடு

[தொகு]
 • சேர நாடு—குலசேகர ஆழ்வார்
 • சோழ நாடு—திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார்
 • பாண்டிய நாடு—நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவி ஆழ்வார்
 • தொண்டை நாடு—பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்

அருளிச்செயல்கள்

[தொகு]
ஆழ்வார் திருநாமம் அருளிச்செயல்கள் திருநட்சத்திரம் அவதாரத் திருத்தலம் அம்சம்
பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதி ஐப்பசி திருவோணம் திருவெக்கா பாஞ்சசன்யம்
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி ஐப்பசி அவிட்டம் திருக்கடன்மல்லை கௌமோதகி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி ஐப்பசி சதயம் திருமயிலை நந்தகம்
திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி தை மகம் திருமழிசை சுதர்சன சக்கரம்
நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி வைகாசி விசாகம் ஆழ்வார்திருநகரி சேனை முதலியார்
மதுரகவி ஆழ்வார் கண்ணிநுண் சிறுத்தாம்பு சித்திரையில் சித்திரை திருக்கோளூர் தாமரை (பத்மம்)
குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி மாசி புனர்பூசம் திருவஞ்சிக்குளம் கௌஸ்துபம்
பெரியாழ்வார் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி ஆனி ஸ்வாதி வில்லிபுத்தூர் கருடாழ்வார்
ஆண்டாள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை திரு ஆடிப்பூரம் வில்லிபுத்தூர் பூமிப்பிராட்டியார்
தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி மார்கழி கேட்டை திருமண்டங்குடி வனமாலை
திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் கார்த்திகை ரோகினி திருக்கோழி ஸ்ரீவட்சம்
திருமங்கையாழ்வார் திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம், திருக்குறுந் தாண்டகம், பெரிய திருமொழி கார்த்திகையில் கார்த்திகை திருகுறையலூர் சார்ங்கம்

ஆழ்வார்களின் வரிசை அடுக்கு

[தொகு]

ஆழ்வார்களை வரிசைப்படுத்துவதில் 12,13,14,15 ஆம் நூற்றாண்டுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவை ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தோடு தொடர்புடையன அல்ல.

ஆழ்வார் திருவரங்கத்தமுதனார் 'இராமானுச நூற்றந்தாதி' [4] பின்பழகிய பெருமாள் சீயர் 'குருபரம்பரை' [5] வேதாந்த 'பிரபந்த சாரம்' [6] மணவாள மாமுனிகள் 'உபதேச ரத்தின மாலை' [7]
முதலாழ்வார் மூவர் 1, 2, 3 1, 2, 3 1, 2, 3 1, 2, 3
திருப்பாணாழ்வார் 4 9 11 10
திருமழிசை 5 4 4 4
தொண்டரடிப்பொடி 6 8 10 9
குலசேகரர் 7 5 7 6
பெரியாழ்வார் 8 6 8 7
ஆண்டாள் 9 7 9 8 (தனித் தொகுப்பு)
திருமங்கை 10 10 12 11
நம்மாழ்வார் 11 11 5 5
மதுரகவி 12 12 6 12 (தனித் தொகுப்பு)

'திருமுடி அடைவு' என்னும் முறைமை மணவாள மாமுனிகள் வரிசையைப் பின்பற்றுகிறது.

மேலும் காண்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
 1. ஆன்மிகம், ed. (31 அக்டோபர் 2014). ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம். தினமணி.
 2. http://www.academia.edu/9668394/%C4%80%E1%B8%BBv%C4%81r_or_N%C4%81ya%E1%B9%89%C4%81r_The_Role_of_Sound_Variation_Hypercorrection_and_Folk_Etymology_in_Interpreting_the_Nature_of_Vai%E1%B9%A3%E1%B9%87ava_Saint-Poets
 3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 198. {{cite book}}: Check date values in: |year= (help)
 4. 12ஆம் நூற்றாண்டு நூல்
 5. 13ஆம் மூற்றாண்டு நூல்
 6. 14ஆம் நூற்றாண்டு நூல்
 7. 15ஆம் நூற்றாண்டு நூல்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்கள்&oldid=4016333" இலிருந்து மீள்விக்கப்பட்டது