வைணவ சமயம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் இந்துசமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு. நாளாயிர திவ்யபிரபந்தம் எனும் ஆழ்வார்கள் இயற்றிய தமிழ்நூலை வேதங்களுக்கு நிகராக போற்றுவதனால் இச்சமயத்திற்கு வைணவம் என்ற பெயர் எற்பட்டதாக கருத்துண்டு.
உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணு அவதாரங்களில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது. வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
தசாவதாரம் என்பது பத்து அவதாரங்களை குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான பெருமாள் உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரகக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். மோகினி, வெங்கடாஜலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.
சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.