நடனகோபாலநாயகி சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடனகோபாலநாயகி சுவாமிகள் (பிறப்பு:சனவரி 9, 1843 - இறப்பு: சனவரி 8, 1914) தந்தை பெயர் அரங்கய்யர், தாயார் இலட்சுமிபாய் இயற்பெயர் ராமபத்திரன் என்பதாகும். ”மதுரையின் ஜோதி” என்றும் ”சௌராஷ்ட்ர ஆழ்வார்” என்றும் போற்றப்படுபவர்.[1]

இறை ஞானம் தேடல்[தொகு]

ராமபத்ரன் தனது 9 அகவையில் வீட்டைத் துறந்து, திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வரும் பாதையில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ள குக ஆஸ்ரமத்தில் 12 ஆண்டுகள் தவம் புரிந்தார்.

பின் பரமக்குடி சென்று நாகலிங்க அடிகளிடம் அட்டாங்க யோக ஸித்திகளை, பதினெட்டே நாட்களில் கைவரப் பெற்று, 'சதானந்த சித்தர்' எனும் திருப்பெயர் பெற்றார் ராமபத்ரன்.

பின் சதானந்தர் மதுரையிலிருந்து தனது சீடர்களுடன் ஆழ்வார்திருநகரியில் உள்ள நம்மாழ்வார் சந்நிதியில் மனம் கரைந்தார். அங்கே, வைணவ ஆச்சார்யரான வடபத்ர அரையரிடம் வைணவ தீட்சை பெற்று நடனகோபாலன் எனும் தாஸ்ய நாமம் ஏற்று, வைணவ நூல்களை கற்றார்.

பின் ஆழ்வார் திருநகரியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற நடனகோபால்ல்ருக்கு, ஆண்டாளின் நாயகி சொரூபமான பக்தி உணர்வும், கண்ணன் மீதான காதல் வேகமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்த பிறகு, உள்ளத்தால் நாயகி பாவனை மேலிட பாடல்களைப் பாடிவந்த சுவாமிகள், முகத்தில் மஞ்சள்பூசி, சேலை உடுத்திக் கொண்டு தோற்றத்தாலும் நாயகியாகவே மாறினார்.

நாயகி பாவம்[தொகு]

பின் திருவரங்கம் நாராயண ஜீயர், நடனகோலருக்கு 'நடனகோபால நாயகி' என பெயர் சூட்டி அருளினார். இதன் பிறகு, ஸ்ரீமந் நாராயணனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து, சுவாமிகள் பாடிய பாடல்களும் நாமாவளிகளும் பிரபலம் அடைந்தன.

சுவாமிகள் பெரும்பாலும் மதுரையிலேயே வசித்தார். வயிற்றுக்கு வேண்டிய உணவை உஞ்சவிருத்தி மூலம் பெற்றார். பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர் பாடிய தமிழ்ப் பாக்களாலும், சௌராஷ்டிரப் பாடல்கள்களாலும், அவரை ”வரகவி” எனும் புகழ் பெற்று தந்தது. அவருடைய பாடல்களில் அறவுரை, வைணவ தத்துவம், வைணவ பக்தி நெறி, நாயகனாகிய கண்ணனைப் பிரிந்து வாடும் நிலை ஆகியவை அதிகம் வெளிப்பட்டன.

மறைவு[தொகு]

வைகுண்ட ஏகாதசி, 8 சனவரி 1914, வியாழக்கிழமை, மதியம் 12 மணி; சுவாமிகள் மேலே நோக்கி, 'ஹரி அவ்டியோ' (ஹரி வந்துவிட்டார்) என்று உரக்கச் சொல்லியபடி முக்தி நிலை அடைந்தார்.

சமாதி[தொகு]

நடனகோபாலநாயகியின் சமாதி, மதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது காதக் கிணறு எனுமிடத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=1099

உசாத்துணை[தொகு]

  • ”நமனை வென்ற நாயகி” (நூல்), நூலாசிரியர், முனைவர். தா. கு. சுப்பிரமணியன்

வெளி இணைப்புகள்[தொகு]