மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி (Melpathur Narayana Bhattathiri, 1560 - 1632) கேரள நம்பூதிரி பிராமண குலத்தைச் சேர்ந்தவர். வடமொழியில் தொன்றுதொட்டு பழக்கத்திலிருக்கிற ஸ்ரீமத் பாகவதத்தை 18000 சுலோகங்கள் கொண்டது) அதே வட மொழியில் கவிநயத்துடன் 1036 சுலோகங்களில் சுருக்கிப் புனைந்தவர்.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

கேரளத்திலுள்ள குருவாயூர் அருகே மேல்பத்தூரில் பிறந்தவர். 16 வயது நிரம்புவதற்குள்ளேயே வடமொழி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஒரு மேதை என்று அறியப்பட்டவர். சிறியதும் பெரியதுமாக 40 நூல்கள் இயற்றியிருக்கிறர். நாராயணீயம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.குருவாயூரில் கோயில் கொண்டிருக்கும் குருவாயூரப்பனைத் தெய்வபக்தியுடன் வழிபட்டு பல அற்புதங்கள் அவரைப் பற்றி பேசப்பட காரணமானவர்.[1][2]

நாராயணீயம்[தொகு]

நாராயணீயம் இன்றும் ஆயிரக்கணக்கான தென்னிந்திய இந்துக்களின் இல்லங்களில் தினந்தோறும் பக்தியுடன் பாராயணம் செய்யப்படும் வடமொழி சமயநூல்களில் ஒன்று. பட்டத்திரியை பக்திப் பாதையில் இழுக்கக் காரணமாக இருந்தவருக்கே பக்கவாத நோயினால் அவதிப்படும்படி நேர்ந்தது. பட்டத்திரி அந்த நோயை தானே வாங்கிக்கொண்டு, குருவாயூரப்பன் சன்னிதியில் 100 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு தசகம் (10 சுலோகங்களுக்குக் குறையாமல் கொண்டது) என்ற கணக்கில், 1036 சுலோகங்கள் இயற்றினார். ஒவ்வொரு தசகம் முடியும்போதும் ஆண்டவனிடம் தான் எடுத்துக் கொண்ட நோயினின்றும் தன்னைக் காக்கும்படி வேண்டும் வாக்கியமும் அந்த சுலோகங்களில் இருக்கும்.

நாராயணீயத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட பொருள் ஸ்ரீமத் பாகவதமே. மகாவிஷ்ணுவின் எல்லா அவதாரக் கதைகளும், முக்கியமாக கண்ணன் லீலைகளத்தனையும் உயர்ந்த பக்திப்பெருக்குடனும் உணர்ச்சியுடனும் சொல் அலங்காரங்களுடன் சித்தரிக்கப்பட்ட ஒரு நூல். இலக்கியம் முடியும் 100வது நாள் அவருடைய நோயும் விலகி அவருக்கு ஆண்டவனின் திவ்ய தரிசனமும் கிடைத்ததாம்.

நாராயணீயம் ஒரு பக்தி நூல் மட்டுமல்ல. உயர்ந்த வேதாந்தக் கருத்துகள் அந்நூலெங்கும் இழையோடுகின்றன. இக்கருத்துக்கள் அநேகமாக அத்வைதத்தைச் சார்ந்ததாக இருப்பதால் பட்டத்திரி சுயமாக ஒரு விசிஷ்டாத்வைதியா அல்லது அத்வைதியா என்பதில் உரையாசிரியர்களிடையே பட்டிமன்றங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.

மற்ற நூல்களில் சில[தொகு]

  • பிரக்ரிய-ஸர்வஸ்வம்
இது ஒரு இலக்கணநூல். பாணினியின் சித்தாந்தகௌமுதியைப்போன்றது.
  • அபனினீயப்பிரமாணம்
பாணினியின் இலக்கணத்தைத்தாண்டியிருக்கும் வடமொழிச்சொற்களையும் பற்ரியது.
  • தாது காவியம்
கண்ணனுடைய வாழ்க்கையைச் சித்தரிப்பதாகப்பொருள் கொண்டு இலக்கணத்தைப் படிப்பிக்கும் காவியம்.
  • மான மேயோதயம்
நிறுவல், பகுப்பு இவைகளைப் பற்றிய தத்துவ நூல். இந்நூலின் பிற்பாதி நாரயணர் என்ற வேறொரு பண்டிதரால் 1655 இல் முடிக்கப்பட்டது.
  • ஸ்ரீபாத ஸப்ததி
தேவியின் புகழ் பாடும் தோத்திரம்.
  • குருவாயுபுர ஸ்தோத்ரம்
கண்ணனைப்பற்றி ஒரு சிறு தோத்திரப்பாடல்

மேற்கோள்கள்[தொகு]

துணை நூல்கள்[தொகு]

  • Swami Tapasyananda. Narayaneeyam. 1976. Sri Ramakrishna Math, Mylapore.ISBN 81-7120419-8

வெளி இணைப்புகள்[தொகு]