நாராயண தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண தீர்த்தர் ஒரு கருநாடக இசை வல்லுனர். ஆந்திர மாநிலமான குண்டூர் மாவட்டம் வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். மங்களகிரிக்கு அருகாமையில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். தள்ளவஜ்ஹுல என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவிந்த சாஸ்த்ருலு என்பது அவரின் இயற்பெயர். பின்னர் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூர் நோக்கி இடம்பெயர்ந்தனர். சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள சான்றுகளின் படி அவருடைய காலம் 1650-1745 எனக் கொள்ளலாம்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தார். இசையை இளவயதிலேயே நன்றாக கற்றார். பாகவத புராணம், மற்ற புராணங்களை நன்றாகக் கற்றறிந்து இருந்தார். சம்ஸ்கிருத மொழி நன்கு கற்றிருந்தார். மிக இளவயதிலேயே வாழ்க்கையைத் துறந்து ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர் தத்துவங்களை போதிக்க காசிக்குச் சென்றார். நாட்டியக்கலை மற்றும் இசையில் அதிக ஈடுபாடு இருந்தமையால், அவருக்கு 34 வெவ்வேறு வகையான ராகங்கள் தெரியும். மிக அதிகமாக, த்ரிபுட, ஆதி, ரூபக, சாபு, சம்பா, மத்ய, விளம்ப, ஏகா மற்றும் அட தாளங்களைப் பயன்படுத்தினார். நிர்த்ய மற்றும் நாட்டிய பதங்களுக்கு எளிதான நேரான பாடல்களைப் பயன்படுத்தினார். கடினமான பதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். அவருடைய கத்யங்கள் மிக அழகானவை. அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயடம், சர்துலவிக்ரீட்தம்,வசந்த திலக ப்ரித்வி போன்ற 17 வகையான சந்தஸ்களைப் பயன்படுத்தினார். 15 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை சரஸ்வதி மஹால் தஞ்சாவூர் மற்றும் காசி பல்கலைக்கழக நூலகங்களில் கிடைக்கின்றன. பாரிஜாத அபஹர்ணம் மற்றும் ஹரிபக்தி சுன்டர்ணவம் என்று இரு நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

நாராயண தீர்த்தர் 1745 ல் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருப்புந்துருத்தி என்ற கிராமத்தில் ஒரு பெரிய மாமரத்தின் அடியில்.மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரம் சுக்ல அஷ்டமி நாளில் இறந்தார். அவர் உயிருடனே என்று சொல்லப்படும் "ஜீவ" சமாதி அடைந்தார் என்று சொல்லுபவர்களும் உள்ளனர்.

அவரைப் பற்றி மற்றோர் தகவல். குருவின் ஆணைக்கு இணங்க போதேந்திர சுவாமிகளைப் சந்திக்க கோவிந்தபுரம் பயணிக்கிறார். ஆனால் இவர் செல்வதற்கு சில மாதங்கள் முன்பாகவே அவர் சமாதி அடைந்து விட்டார் என்பதைக் கேள்விபட்டு கோவிந்தபுரத்திலேயே சில நாட்கள் தங்கிவிட்டு, தாங்க முடியாத வயிற்று வலியுடன், காவிரிக்கரையின் ஓரமாக உள்ள பல ஊர்களையும் பார்த்துவிட்டு திருவையாறு வந்தடைகிறார். நடுக்காவிரி என்ற கிராமத்தை அடையும்போது வயிற்றுவலி அதிகமாகி அருகில் உள்ள விநாயகர் கோயிலில் தூங்குகிறார். ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் கிருஷ்ணன் வந்து, "காலையில் நீ விழித்தெழும் போத ஒரு மிருகத்தைப் பார்ப்பாய், அதைத் தொடர்ந்து சென்றால் உன்னுடைய வயிற்று வலி காணாமல் போகும்" என்று கூறுகிறார். அதே போல, காலையில் விழித்தெழும் போது, ஒரு பன்றியைப் பார்க்கிறார். கிருஷ்ணன் கனவில் சொன்னது ஞாபகம் வர, அதே சமயத்தில் பன்றியைப் பார்ப்பது நல்ல சகுனம் இல்லை என நினைத்து, சிறிது நேரம் தயங்கிடுகிறார். ஆனால் கிருஷ்ணன் ஆணையை மீறமுடியாமல், பன்றியைத் தொடர்ந்து சுமார் 4 கிலோமீட்டர் தொடர்ந்து சென்று களைத்து விடுகிறார். திடிரென்று அந்தப் பன்றியும் அருகில் உள்ள கோயிலின் உள்ளே சென்று மறைந்து விடுகிறது அதே நேரத்தில் நாராயண தீர்த்தர் வானில் இருந்து, "நான் தான் உன்னை அழைத்து வந்துள்ளேன்," என்று ஒரு சத்தம் கேட்கிறார். அதைக் கேட்ட நாராயண தீர்த்தரும் மிக்க மகிழ்ச்சி டைகிறார். அவருக்கும் வயிற்றி வலி திடிரென்று மறைந்து விடுகிறது. அதுவரை "பூபதிராஜபுரம்" என்று பெயர் கொண்ட ஊர், "வரகூர்" என்று பெயர் பெறுகிறது, ஏனெனில் சமஸ்கிருதத்தில்,"வரஹா" என்றால் பன்றி எனப்படும். நாராயண தீர்த்தர் வரகூர் கிராமத்தில் பல காலம் தங்கி,பல சம்ஸ்கிருத மொழியில் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமாது "தரங்கிணி" ஆகும். அதனைப் பாடும்போது ருக்மிணி, ராதா இவர்களுடன் கிருஷ்ணன் நடனம் ஆடுவதும், அதற்கான சதங்கை ஒலி நாராயண தீர்த்தருக்கு கேட்டாதாகவும் சொல்லுவார்கள். விசவருப தரிசனம் கண்ட நாராயண தீர்த்தர் தேவ சமாதி அடைத்தார் என்று சொல்வார்கள்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண_தீர்த்தர்&oldid=3359551" இலிருந்து மீள்விக்கப்பட்டது