உள்ளடக்கத்துக்குச் செல்

விஷ்ணு சஹஸ்ரநாமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருக்ஷேத்திரப் போரை விளக்கும் படம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது. 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது.

இயற்றியவர் வியாசர்

[தொகு]

மகாபாரதம், மற்றும் 18 புராணங்கள், 18 உபபுராணங்கள் இவற்றையெல்லாம் இயற்றிய வியாசருக்கு இந்து மதம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய ஒவ்வொரு நூலிலும் பல அரிய பெரிய தோத்திரங்களை அடக்கியுள்ளார். அப்படித்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமாக அடங்கியுள்ளது.

தொகுத்து உரைத்தவர் பீஷ்மர்

[தொகு]
விஷ்ணு சகஸ்ரநாம ஓலைச்சுவடி, கிபி 1690

இது சத்துவ குணம் நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் [1] அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரை பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.

தோற்றுவாய்

[தொகு]

யுதிஷ்டிரரின் ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் பீஷ்மர் அரசதர்மம், நெருக்கடிநிலைதர்மம், ஆண், பெண் தர்மம், தான தர்மம், வீடுபெறும் தர்மம், ஆக இன்னும் பல தர்மங்களை உபதேசித்தார். நம் முன்னோர்கள் நல்வழி என்று தாம் ஆராய்ந்து உணர்ந்த வழியில் தாமும் சென்று நலம் பெற்றபின் நம்மையும் அதைப் பின்பற்றுமாறு அன்புடன் கட்டளையிட்டுள்ளதை 'அனுசாஸனம்' என்பர். இப்படி அனுசாஸனங்கள் நிறைந்த அனுசாஸனபர்வத்தின் முடிவில், ஒரு சிறந்த அனுசாஸனமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் இடம் பெறுகிறது. முடிவாக யுதிஷ்டிரர் கேட்கும் கேள்விகள் ஆறு:

 1. இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது?
 2. அதை அடைவதற்குரிய மேலான நிலை எது?
 3. எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்?
 4. எந்த தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்?
 5. எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது?
 6. எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்?

இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும்[2] ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.

ஒரு மேல்நோக்கு

[தொகு]

ஆண்டவனுடைய 'அனந்த-கல்யாண-குணங்களை', அதாவது, அவனுடைய எல்லையற்ற நற்குறிசெறிந்த இயற்பண்புகளை, பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட தோத்திரம். ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நற்குணத்தைக் காட்டும். சில பெயர்கள் அக்குணம் இருப்பதாலேயே தோன்றக்கூடிய அல்லது தோன்றிய பெயர்கள். இப்பெயர்களின் முழு உட்கருத்தையும் புரிந்துகொள்வதற்கு, ஏதாவதொரு பரம்பரை வழி வந்த வேதாந்த நுணுக்கங்கள் சில நமக்குத் தெரிதல் வேண்டியிருக்கலாம். உண்மையில் ஆண்டவன் ஒரு பேரிலி. அதனால் எந்தப் பெயர் கொண்டும் அவனை அழைக்கலாம். இவ்வாயிரம் பெயர்களை ஒருவன் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் வண்ணமே அதனுடைய ஆழ்கருத்துகளில் திளைத்து இச்சுவை தவிர வேறு எச்சுவையும் வேண்டேன் என்று சொல்லக்கூடிய பக்குவம் கிடைத்துவிடும் என்பது இந்துமதச் சான்றோர்களின் நம்பிக்கை.நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிடவோ, பிராயச்சித்த கருமங்கள் செய்வதை விடவோ உயர்ந்தது, ஏனென்றால், அவையெல்லாம் பாவங்களை போக்குகின்றன என்பதுதான் மதநூல்களின் தீர்மானம்; ஆனால் நாமங்களை உச்சரிப்பதால், பாவம் புரியத் தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும் என்பது நாம உச்சரிப்பின் பெருமை.

உரையாசிரியர்கள்

[தொகு]

வியாசரும் பீஷ்மருமே உரையாசிரியர்கள் தாம். ஏனென்றால் மந்திரசக்திமிக்க நாமங்களை ரிஷிகள் கண்டுபிடித்தனர். அவற்றில் பலவற்றை வியாசர் மகாபாரதத்தில் பல நிகழ்ச்சிகளில் எடுத்து விளக்கியுள்ளார். அவற்றை வரிசைப் படுத்தித் தொகுத்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து பீஷ்மர் தொகுத்ததில் பல அழகிய கருத்துகள் உருவாகின்றன.முதன்முதல் பாஷ்யம் என்று பெயரிட்டு உரை எழுதியவர் ஆதி சங்கரர். இவர் எழுதிய உரையின் சிறப்பிற்கு சான்றாக மகாபாரதத்திற்கு உரை எழுதிய நீலகண்டர் விஷ்ணுசஹஸ்ரநாமப்பகுதிக்கு வந்ததும், நாமங்களின் பொருள் ஶ்ரீசங்கரரின் பாஷ்யத்திலிருந்தே அறியத்தகுந்தது என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளதைச் சொல்லவேண்டும்.விசிஷ்டாத்வைத வேதாந்த முறையின் வழிவந்த பராசரபட்டரின் உரை அடுத்தபடி தோன்றியது. மத்வ பரம்பரை வழி வந்த ஶ்ரீ சத்யஸந்த யதி ஓர் உரை எழுதியுள்ளார். இம்மூண்று உரைகளைத்தழுவி, பின் நூற்றாண்டுகளில் இன்றுவரை பலர் உரைகள் எழுதியுள்ளனர்.இவர்களில் சிலர்:

 • விஷ்ணுவல்லபர்
 • ஆனந்ததீர்த்தர்
 • கிருஷ்ணானந்தர்
 • கங்காதர யோகீந்திரர்
 • ரங்கநாதாச்சாரியார்
 • மகாதேவ வேதாந்தி
 • வித்யாரண்யதீர்த்தர்
 • கோவிந்த பட்டர்
 • சுதர்சன பட்டர்
 • வித்யாதிராஜர்
 • ராகவ சூரி
 • ராம சாஸ்திரி

விசுவம்

[தொகு]

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சுலோகத்திலுள்ள முதல் பெயர். 'விஶ்வம்' என்ற வடமொழிச் சொல்லிற்கு உலகம் என்று பொருள். நாம் பார்க்கும் இவ்வுலகம் தான் விசுவம். ஆனால் இதையே ஆண்டவனின் பெயராக இங்கு சொல்லப்படுகிறது. உலகைப்படைத்தவன் ஆண்டவன். ஆக அவன் உலகிற்குக் காரணமாகிறான். வேதாந்தத்தில் காரணம் என்று சொல்லப்படும் எதுவும் அதன் காரியத்தை (அதாவது காரணத்தால் ஏற்படும் பயனாகிய காரியப்பொருளை) வியாபிக்கிறது. காரணமில்லாமல் காரியமில்லை. எங்கெல்லாம் காரியம் இருக்கிறதோ அங்கெல்லாம் காரணம் ஒன்று இருந்தாகவேண்டும். அதனால், இங்கு காரியமான உலகு அதன் காரணத்தைக் காட்டிக் கொடுக்கின்ற காரணத்தால் காரியமான 'விசுவமே' காரணத்தின் பெயராகத் திகழ்கின்றது.

பரம்பொருள் பால்பிரிவினைக்குட்படாதாகையால் அஃறிணையாகவே குறிப்பிடப்பெறும். இதனாலேயே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் நாமமே அஃறிணைச்சொல்லான விஶ்வமாக இருக்கிறது.

விசுவம் என்ற சொல்லே 'விஶ்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து முளைத்த சொல். 'விஶ்' என்ற வினைச்சொல்லிற்கு 'நுழை' என்று பொருள். உலகைப்படைத்து அதில் 'அனுப்ரவேசம்' செய்தார் என்று பரம்பொருளைப் பற்றி உபநிடதங்கள் சொல்கின்றன [3] இதற்கு உரை எழுதும் ஆதி சங்கரர் [4] பரம்பொருள் உலகத்திலுள்ள ஒவ்வொன்றிலும் உள்ளுறைபவனாக ('அந்தர்யாமி'யாக) இருக்கின்றான் என்பதே இதன் பொருள் என்று தீர்மானம் செய்கிறார். இப்படி ஆண்டவன் அவன் படைத்த உலகிற்குள் உள்ளுறைபவனாகிறான் என்ற பொருளில் அவன் உலகிற்குள் நுழைந்தான் என்று பொருள் தருவதுபோல் பேசுகிறது வேதம். விஶ்வம் என்ற சொல்லின் தத்துவப் பொருளும் இதுவே.

இந்துமதத்தின் கடவுள் தத்துவத்தில் இரண்டு தத்துவங்கள் பிணைந்துள்ளன. அவன் எல்லாவற்றிலும் உள்ளுறைபவனாக இருக்கின்றான் என்பது ஒன்று.அவன் எல்லாவற்றையும் கடந்து இருக்கிறான் என்பது மற்றொன்று. விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதற்பெயரான விசுவம் அவன் உள்ளுறைவதை சுட்டிக்காட்டுகிறது.

விஷ்ணு

[தொகு]

எல்லாமானவர் என்பதை முதற்பெயரால் சொல்லி, எல்லாவற்றையும் கடந்து இருக்கிறார் என்ற இரண்டாவது தத்துவத்தை சுட்டிக்காட்டும் சொல்லான 'விஷ்ணு'வை இரண்டாவது பெயராகச் சொல்கிறார் பீஷ்மர். இச்சொல் 'படர்ந்து பரவுதல்' என்று பொருள் தரும் சொல். எல்லாவற்றையும் பரவுதலோடு மட்டுமல்லாமல், 'புருஷ சூக்தம்' என்ற வேதப்பகுதியில் சொல்லியதுபோல் [5] எல்லாவற்றையும் பரவி அவைகளைத் தாண்டியும் இருக்கிறான். அதாவது உலகு என்று பொருள்படும் விஶ்வத்தைத் தாண்டி அப்பாலும் உள்ளவன் அவன் என்பதால் அவனுக்கு 'விஷ்ணு' என்று பெயர். இடம், காலம், பொருள் இவற்றால் அடங்காமல் நிற்பதைச் சொல்கிறது 'விஷ்' என்ற வினை.விஶ்வத்தின் உள்ளும் புறமும் நீக்கமற வியாபித்திருப்பதால் அவன் 'விஷ்ணு' வாகிறான்.

'கடவுள்' என்ற சொல்லிலுள்ள 'கட' என்ற பகுதி அவர் எல்லாவற்றையும் கடந்துமிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. இது 'விஷ்ணு' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கடவுள் என்ற சொல்லிலுள்ள இராண்டாவது பகுதி 'உள்'; அவன் கடந்து மட்டுமில்லை, உள்ளேயும் இருக்கிறான் என்ற 'உள்ளுறைதல்' தத்துவத்தைச் சொல்வதால், இது 'விஶ்வம்' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.

எதிர்மாறு பெயர்கள்

[தொகு]

பெயரில்லாத ஆண்டவனுக்குப் பெயர்களிட்டுப் பட்டியலிடும் ஸஹஸ்ரநாமம் ஒன்றுக்கொன்று நேர் எதிர்ப் பொருள் உடைய பெயர்களையும் சேர்த்திருப்பதில் விந்தையெதுவுமில்லை. எனினும் அவ்வெதிர்மாறுப் பெயர்களிலும் கடவுள் தத்துவம் புதைந்து கிடப்பதை உரையாளர்களின் ஆழமான கருத்துகளிலிருந்து அறிகிறோம்.எடுத்துக்காட்டுகள் பலவற்றில் சில:

 • நிமிஷ: - மூடிய கண்கள் உள்ளவர்
 • அநிமிஷ: - கண்களை மூடாதவர்
 • நைகரூப: - ஒரே வடிவில் இல்லாதவர்
 • பிருஹத்ரூப: - பெரு வடிவமுள்ளவர்
 • அதிருஶ்ய: - காணக்கூடாதவர்
 • வியக்தரூப: - புலப்படுகிற வடிவுள்ளவர்
 • ஸத் - நிலைத்த இருக்கை கொண்டவர்
 • அஸத் - ஸத்தாக இல்லாதவர்
 • க்ஷரம் - தேயும் பொருளானவர்
 • அக்ஷரம் - மாறுபாடடையாதவர்
 • அநேகமூர்த்தி: - பலவடிவங்கள் கொண்டவர்
 • அவ்யக்த: - வெளிப்படாதவர்
 • ஏக: - ஒன்றானவர்
 • நைக: - ஒன்றாயில்லாதவர்
 • அசல: - அசையாதவர்
 • சல: - அசைபவர்
 • அணு: - அணுவானவர்
 • பிருஹத் - பெரிதானவர்
 • கிருஶ: - மெலிதானவர்
 • ஸ்தூல: - பருத்தவர்
 • குணபிருத் - குணங்களைத் தாங்கி நிற்பவர்
 • நிர்குண: - குணமற்றவர்

இவைகளை பீஷ்மர் தொகுத்திருப்பதின் சிறப்பாக, எதிர்மாறாக உள்ள ஒவ்வொரு இரட்டையினிலுள்ள இரு சொற்களும் அடுத்தடுத்து வருவதைப் பார்க்கலாம்: (அடைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் எண் அவ்விரு சொற்களும் ஸஹஸ்ரநாம சுலோகங்களில் வரும் தொடர் எண்:

நிமிஷோநிமிஷ: (23); நைகரூபோ பிருஹத்ரூப: (29); அத்ருஶ்யோவ்யக்தரூப: (33); ஸதஸத் க்ஷரமக்ஷரம் (51); அநேகமூர்த்திரவ்யக்த: (77); ஏகோனைக: (78); அசலஶ்சல: (79); அணுர்பிருஹத் க்ருஶஸ்தூல: (90); குணப்ருந்நிர்குண: (90).

இவைகளுள் மறைந்திருக்கும் தத்துவப் பொருள்களுக்கு விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

திவ்யப்பிரபந்தத்தில்

[தொகு]

தமிழ் வேதம் என்று சொல்லப்படும் பிரபந்தத்திலும் இதே முறையில் எதிர்மாறான பெயர்கள் சொல்லி ஆண்டவனைக்குறிக்கும் இடங்கள் பல பல:

'சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்' [6]


பலமுறைவரும் பெயர்கள்

[தொகு]
குறிப்பு: பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட எண்கள் ஸஹஸ்ரநாமத்தில் அப்பெயர் வரும் தொடர் எண்ணைக் குறிக்கிறது.

நான்கு முறை வரும் 3 பெயர்கள்

[தொகு]
ப்ராணத: 65, 321, 408, 956
ஸ்ரீமான் 22, 178, 220, 613 (சங்கரர் பாஷ்யம்)
"நிவ்ருத்தாத்மா" 229, 453, 597, 774 (பராசர பட்டர் பாஷ்யம்)

மூன்று முறை வரும் 9 பெயர்கள்

[தொகு]
அஜ: 95, 204, 521
ப்ராண: 66, 320, 407
பத்மநாப: 48, 196, 346
போக்தா 143, 500, 888
மாதவ: 72, 167, 735
வஸு: 104, 270, 696
விஷ்ணு:2, 258, 657
வீர: 401, 643, 658
வீரஹா 166, 741, 927
ஸத்ய:106, 212, 869
வாஸுதேவா: 332, 695, 709

இரண்டு முறை வரும் 75 பெயர்கள்

[தொகு]
சிவா:(27,600)
சக்தி:
குரு:
கபிலா:(531,898)
ஆதித்யா:(39, 563)
ஸ்ரீநிவாஸா:(183,607)
அநிருத்தா:(185, 638)
புருஷோத்தமா:(24,507)
புருஷா:(14,406)
சௌரி: (அ)::சவுரி: (340, 644)

பீஷ்மர் வரிசையமைத்த பாங்கு

[தொகு]

மந்திர சக்தி மிக்க கடவுளின் நாமங்களை வரிசைப்படுத்தித் தொகுத்து யுதிஷ்டிரர் மூலம் உலகுக்களித்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து இருக்கும்படித் தொகுக்கப்பட்டிருக்கும் வரிசையமைப்பினால் தனி நாமம் கூறும் பொருளைத் தவிர அந்நாமம் வரிசையில் அமைந்த இடம் புதிய மற்றொரு கருத்தைப் பறை சாற்றுகிறது. நான்கு எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்:

அனுகூல: சதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண:

[தொகு]
அனுகூல:(342) -- அன்புடன் கரையேற்றுபவர்.
சதாவர்த்த: (343) -- பலமுறை திரும்பதிரும்ப வருபவர்
பத்மீ (344) -- தாமரையை (கையில்)கொண்டவர்
பத்மநிபேக்ஷண: (345) -- தாமரையை ஒத்த கண்கள் உள்ளவர்

எப்போதும் நமக்கு உதவும் இறைவனின் அம்மாண்பை 'அனுகூல:' விளக்குகிறது. கடவுள் எல்லோருக்கும் அனுகூலர். உள்ளுறைபவனாக, ஆன்மாவாக, ஜீவனாக, பிராணனாக, அறிவாக எல்லாமாக இருப்பதால் அவரால் அனுகூலராக மட்டுமே இருக்கமுடியும். உதவி புரிய அன்புடன் இணைந்து இருக்கும் இறைவன், ஒரு முறை அப்படி இருப்பதில் களிப்படையாமல், நூறு தடவை -- எண்ணற்ற தடவை -- திரும்பத்திரும்ப வருகிறார் என்பதை அடுத்த நாமமான 'சதாவர்த்த:' சொல்கிறது. கையில் ஏந்திய தாமரையாலும், தாமரையை ஒத்த கண்களாலும், பரிவு சொட்டச்சொட்ட, நமக்கு உதவி புரிவதற்காக திரும்பத்திரும்ப வருகிறார்!

அமானீ மானதோ மான்ய:

[தொகு]
அமானீ (747) --மதியாதவர்
மானத: (748) --மதிப்பையளிப்பவர்
மான்ய: (749) -- மதிப்பிற்குரியவர்

தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளாதவர். உண்மையில் இருக்கின்ற பெருமையைக் கூடத் தாழ்த்தித் தூதனாகவும், தேரோட்டியாகவும் கூச்சமின்றிச் செயல்பட்டவர்.தன்னைச் சார்ந்தவர்களுக்குப் பெருமையைக் கூட்டித் தருகிறார்.தன் பக்தர்களுக்குத் தானே கீழ்ப்படிந்தவராகி அதையே பெருமையாகக் கொண்டவர்.

அதீந்த்ரியோ மஹாமாயோ ...மஹாத்யுதி:

[தொகு]
அதீந்த்ரிய: --பொறிகளுக்கப்பாற்பட்டவர்
மஹாமாய: --பெருமாயையுள்ளவர்
மஹோத்ஸாஹ: --பெரும் உற்சாகமுள்ளவர்
மஹாபல: --பெரும்பலமுள்ளவர்
மஹாபுத்தி: --பெரும்புத்தியுடையவர்.
மஹாவீர்ய: --பெரும் வீரியமுடையவர்
மஹாசக்தி:--பெரும் சக்தி படைத்தவர்
மஹாத்யுதி: --பேரொளி பெற்றவர்

இதில் சிறப்பு என்னவென்றால், அறிஞர்கள் இப்பெயர் தொகுப்பில் கிருஷ்ணாவதார ரகசியமே இருப்பதாகச் சொல்கிறார்கள். கண்ணனைப் பற்றி இதில் ஒன்றுமே இல்லையே! சொல்லியிருப்பதெல்லாம் பொதுவாக எல்லாக் கடவுளுக்கும் பொருந்துமே என்று தோன்றும். இதில் தான் கண்ணனின் அவதார ரகசியமே இருக்கிறது. கண்ணனுடைய கதையில் அடிக்கடி நாம் சந்திப்பதென்ன? கோபியர் அவன் வெண்ணெய் திருடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவன் தாயுடன் இருப்பது தெரிகிறது. மண்தின்றதாகச் சொல்லப்பட்ட அவன் வாயில் பார்த்தால் இப்பிரபஞ்சமே தெரிகிறது! கோபியர் அவனுடன் சல்லாபம் செய்துகொண்டிருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் அடுத்த கணமே அவர்கள் தங்கள் கணவன்மார்களுடன் தான் இருக்கிறோமென்று உணர்கிறார்கள். இதுதான் கண்ணனின் ரகசியம். நாம் நினைக்கிற இடத்திலோ, நினைக்கிறபடியோ அவன் இருக்கமாட்டான். மேலுள்ள எட்டு நாமங்களில் அவன் இருப்பதாக அவனைத் தேடுகிறோம். ஆனால் எட்டு நாமங்களுக்குப் பின் வரும் நாமமான அனிர்தேஶ்யவபு: என்ற பெயரில் இருக்கிறான். 'இப்படி, அப்படி என்று எப்படியும் சுட்டிக்காட்டமுடியாத உருவத்தையுடையவன்' என்ற பொருளில், அனிர்தேஶ்யவபு: கண்ணனை உள்ளபடி பறை சாற்றுகிறது.!

அணுர்ப்ருஹத் க்ருஶ: ஸ்தூலோ ...

[தொகு]

அணு: - அணுவானவர்; பிருஹத் - பெரிதானவர்; கிருஶ: - மெலிதானவர்; ஸ்தூல: -பருத்தவர்; குணபிருத் - குணங்களைத் தாங்கி நிற்பவர்; நிர்குண: - குணமற்றவர் ; மஹான் -மிகப்பெரியவர்; அத்ருத: - தாங்கப்பெறாதவர்.

இவ்வெட்டு நாமங்களில் முதல் ஆறு நாமங்களிலுள்ள எதிர்மாற்றுப் பொருட்களைப் பற்றி இங்கே பார்க்கவும். இவ்வெட்டு நாமங்களையும் ஒன்று சேரப் பார்க்கும்போது, பராசர பட்டரின் உரையிலிருந்து நமக்கு ஓர் அருமையான பொருள் கிடைக்கிறது. பீஷ்மர் இவைகளை இந்த வரிசையில் தொகுத்ததின் உட்பொருளும் விளங்குகிறது. யோகசூத்திரம்|யோகசூத்திரத்தின் மூல ஆசிரியர் பதஞ்சலி எட்டு யோகசித்திகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவையாவன: ,

அணிமா, அதாவது, உடலை அணுவளவு சிறிதாக ஆக்கிக்கொள்ளும் ஆற்றல்;
மஹிமா, அ-து, உடலை பிரம்மாண்டமான அளவிற்கு பெரிதாக ஆக்கிக் கொள்வது;
கரிமா, அ-து, உடலை அளவிடற்கறியதாக கனமாக்கிக் கொள்வது;
லகுமா, அ-து, உடலை கனமே இல்லாமல் ஆக்கிக்கொள்வது;
பிராப்தி, அ-து, எங்கும் செல்லக்கூடிய ஆற்றல்;
பிராகாம்யம், அ-து, நினைத்து விரும்பியதை அடைவது.
ஈசித்வம்,அ-து, எல்லாவற்றையும் ஆட்டிவைக்கக்கூடிய யஜமானனாவது;
வசித்வம், அ-து, எல்லாவற்றையும் தனக்குக் கீழ் கொண்டு வருவது;

இவ்வெட்டு நாமங்களில் இவ்வெட்டு யோகசித்திகளையுடையவர் பகவான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.நாமங்களின் வரிசையும், சித்திகளின் வரிசையும் ஒத்துப்போகும் அழகைப் பார்க்கலாம்.

பன்னிரு நாமங்கள்

[தொகு]

விஷ்ணுவின் பன்னிரு பெயர்களாவன: கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ருஷீகேசன் ,பத்மநாபன், தாமோதரன்.

இப்பன்னிரு பெயர்களும் இந்து சமூகத்திலும் அதன் சமயத்திலும் மீறத்தகாத உயர்நிலையுடையவை. அதே காரணத்தினால் தான், விஷ்ணுவை முக்கிய தெய்வமாகக் கொண்ட வைணவத்தில், மரபு வழுவாதவர்கள் தங்கள் உடலின் 12 பாகங்களில் 12 குறிகள் இட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு குறியும் இப்பன்னிருவரில் ஒருவரின் 'நாமத்தைக்' (=பெயரை)குறிக்கும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக மரபில் ஒன்றிவிட்டதால், இன்று அக்குறிகளுக்கே 'நாமங்கள்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.

இப்பன்னிரு நாமங்களையும் ஒருங்கே போற்றும் வகையில் நம்மாழ்வார் தன் திருவாய்மொழி யில் பன்னிருநாமப் பாட்டு என்ற தொகுதியில் பன்னிரு பாடல்களாக ஓர் அந்தாதி முறையில் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.

இதனில் சுவையான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான இராமர், கிருஷ்ணர் ஆகிய இரு பெயர்கள் இப்பன்னிருவரில் இல்லை. எனினும், திரிவிக்ரமன், வாமனன் என்ற இரு பெயர்களைத் தவிர இதர 10 பெயர்களும் கிருஷ்ணருடையது தான்.

இப்பன்னிரு பெயர்களில் நேரடியாக விஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்வது 'திரிவிக்ரமன்', 'வாமனன்' என்ற இரு பெயர்கள்தாம். வாமன அவதாரத்தில் ஒரு சிறிய உருவத்துடன் மகாபலிப்பேரரசரின் முன் வந்து, மூன்றடி மண் கேட்டு அதற்கு அரசன் உடன்பட்டவுடன் வானளாவிய கால்களினால் மூவுலகத்தையும் அளந்தார் விஷ்ணு. இதனால் அவருக்கு திரிவிக்ரமன் என்ற பெயர் வந்தது. 'திரி' என்றால் 'மூன்று'. 'விக்ரம' என்றால் 'காலின் ஓரடி'. 'வாமன' என்றால் 'சிறிய உருவம்'. குள்ளமான உடலமைப்பு கொண்டபடியால் 'வாமனர்' என்ற பெயர். உலகளந்த பெருமானாதலால் 'திரிவிக்ரமர்'.

மற்ற பெயர்களின் சொற்பொருளைப் பற்றி அப்பெயர்களிலுள்ள தனிக்கட்டுரைகளைப் பார்க்கலாம்.

இலட்ச அர்ச்சனை மூலம் வழிபாடு

[தொகு]

பாரதநாட்டில் (குறிப்பாக தென்பிராந்தியங்களில்) கோயில்களிலும் (வீடுகளிலும் கூட) ஏதாவதொரு ஸஹஸ்ரநாமத்தை எடுத்துக்கொண்டு, அதனிலுள்ள 1008 பெயர்களையும் ஒவ்வொன்றாக 'ஓம்' சேர்த்து நான்காம் வேற்றுமையில் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் இறுதியில் நம: என்ற சொல்லையும் சேர்த்து, ஆண்டவன் காலடியில் மலர்களால் அர்ச்சிப்பது ஒரு வழக்கமான வழிபாடாக உள்ளது. இவ்விதம் அர்ச்சிப்பது ஒரு ஸஹஸ்ரநாம அர்ச்சனை எனப்படும். இவ்விதம் கூட்டாக பல நபர்கள் சேர்ந்து நூறு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து முடித்தால் அது இலட்சார்ச்சனை வழிபாடாகும். விழாக் காலங்களிலும், பண்டிகைக் காலங்களிலும் கோடி அர்ச்சனையும் (அ-து, நூறு இலட்சார்ச்சனை) செய்வதுண்டு.

பயன் பட்டியல்

[தொகு]

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் போன்ற பழங்கால ஆன்மிக நூல்களிலெல்லாம் 'பலசுருதி' என்றோர் பகுதி தவறாமல் இருக்கும். அப்பகுதியில் இந்த நூலை எப்படியெப்படியெல்லாம் தியானித்தோ படித்தோ ஆண்டவனை அர்ச்சித்தோ செய்தால் இன்னின்ன நற்பயன்கள் கிடைக்கும் என்பதை இனிக்க இனிக்கச் சொல்லப்பட்டிருக்கும். இவ்விதம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் படிப்பதால் வரக்கூடிய பயன்கள் இருபது சுலோகங்களில் மகாபாரதத்திலேயே ஸஹஸ்ரநாமத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன. காலப்போக்கில் இவை தவிர,பத்மபுராணத்திலிருந்தும் பகவத் கீதையிலிருந்தும் சில சுலோகங்கள் இவைகளுடன் சேர்த்துப் படிக்கப்படுகின்றன.

'பலசுருதி' யிலிருந்து சில பகுதிகள்:

 • எவன் இதனை (இத்தோத்திரத்தை)தினமும் கேட்கிறானோ, எவன் இதனைக்கொண்டு ஆண்டவனை துதிக்கிறானோ அவன் இம்மையிலும் மறுமையிலும் சிறிதும் கெடுதலை அடையமாட்டான்.
 • தருமத்தை விரும்புபவர் தருமத்தையும், பொருளை விரும்புபவர் பொருளையும், காமத்தை விரும்புபவர் காமத்தையும், வம்சம் செழிக்க விரும்புபவர் வம்சச்செழிப்பையும் பெறுவர்.
 • உள்ளத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் புருஷோத்தமனை ஆயிரம் நாமங்களால் துதிப்பவன் நோயால் துன்புறுபவனானால் நோயிலிருந்து விடுபடுகிறான். சிறையில் அடைக்கப்பட்டவன் விடுபடுகிறான். ஆபத்தில் சிக்கியவன் மீள்கிறான். கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்து விடுகிறான்.
 • சிரத்தையும் பக்தியும் கொண்டவனாக இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவன் ஆன்மசுகம், பொறுமை, செல்வம்,மன உறுதி, நினைவாற்றல், புகழ் இவற்றைப் பெறுவான்.
 • அறநூல்களில் கூறப்பட்ட அறமுறைகளை வாழ்க்கைமுறையாக ஏற்று வாழ்நாள் முழுதும் கடைப்பிடிப்பதே தருமம். தருமத்தையே தன் வலிவாகக்கொண்டு ஆண்டவன் இவ்வுலகைக் கட்டுப்படுத்துகிறார்.ஆண்டாள் திருப்பாவையில்6 பகவான் கண்ணனிடம் இற்றைக்கும் ஏழெழ் பிறவிக்கும் உன்தன்னொடு உற்றேமே யாவும் உமக்கே நாம ஆட்செய்வோம். மற்ற நம் காமங்கள் மாற்றேளோரெம்பாவாய் என்று வேண்டுகிறாள். பகவான் நாமம் மற்ற ஆசைகளை அழித்து பிறவி பெரும் பயனை அடைய செய்து, எங்கும் திருவருள் பெற்று இன்புற செய்யும். ஒம் நமோ நாராயணாய.

துணை நூல்கள்

[தொகு]
 • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சி. வெ. ராதகிருஷ்ண சாஸ்திரி. சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
 • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். உரை ஆசிரியர் "அண்ணா". ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர், சென்னை 4. 1959
 • Vishnu Sahasranama. Compiled by Dr. Arulmallige Parthasarathy. Vishnu Sahasranama Trust, Bangalore. 2007.
 • தமிழில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிக்க - Vishnu Sahasranamam Lyrics in Tamil.
 • ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்திரம். (பதினொன்றாம் பாகம்). பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர். சேலம் லிட்டெரரி அச்சகம். 1964.

http://www.raaga.com/channels/sanskrit/moviedetail.asp?mid=s0000312

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. ஶ்ரீமத் பாகவதம்: VI - 3- 20,21
 2. த்யாயன் ஸ்துவன் நமஸ்யம்ஶ்ச - விஷ்ணு ஸஹஸ்ரநாமம். முன்னொட்டு சுலோகங்கள்
 3. தைத்திரீயோபநிடதம், 2-வது அத்தியாயம், 6-வது அனுவாகம்
 4. Complete works of Sri Sankaracharya (in the original Sanskrit) Vol.VIII.Samata Books, Madras, 1983. pp.699-704
 5. தைத்திரீய ஆரண்யகம், மூன்றாவது அத்தியாயம், 12-வது அனுவாகம், 3,4-வது வாக்கியங்கள்
 6. நான்முகன் திரு அந்தாதி, 71
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_சஹஸ்ரநாமம்&oldid=3279010" இலிருந்து மீள்விக்கப்பட்டது