கஜேந்திரமோட்சம்
கஜேந்திர மோட்சம் (Gajendra Moksha) (சமக்கிருதம்: गजेन्द्रमोक्षः) பாகவத புராணத்தின் எட்டாவது நூலில் பகவான் விஷ்ணு, முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையின் அபயக் குரலைக் கேட்டவுடன் நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்ததை விளக்குகிறது. இக்கதையை வியாசரின் மகனான சுகப் பிரம்மம், அத்தினாபுரத்து மன்னர் பரிட்சித்துவிற்கு கூறியதாக அமைகிறது.[1] கஜேந்திர மோட்ச வரலாறானது வைணவ சமயத்தின் சரணாகதி தத்துவத்திற்கு உதாரணமாக உள்ளது.
புராண வரலாறு
[தொகு]கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, திரிகூடமலையில் உள்ள யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்தது. ஒரு நாள் தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கி சென்றது. அப்பொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே என பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது.
தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த பெருமாள் தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.
பின்னணி
[தொகு]இதில் யானையாக கூறப்பட்ட கஜேந்திரன் தனது முற்பிறவில் அரசன் இந்திரதுய்மனாக நாட்டை ஆண்டு வந்தார். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினார். ஆனால் அகந்தை இவர் கண்களை மறைக்க, அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக பிறப்பெடுத்து, பின் இறைவனால் அகந்தை ஆணவம் அழிக்கப்பட்டு, மோட்சம் கிடைக்கப்பெற்றார். முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரன், விஷ்ணுவை நோக்கி துதித்த பாடல், கஜேந்திர ஸ்துதியாக போற்றப்படுகிறது. இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் சுலோகம் ஆகும். முதலையாக சாபம் பெற்றது ஒரு கந்தர்வன். ஒரு முறை முனிவர் தேவலாவுடன் கந்தர்வனும் சேர்ந்து நீராடினர். முனிவர் சூரிய நமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக கந்தர்வன், அவரது கால்களை இழுத்தார். இதில் கோபமடைந்த முனிவர், முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார்.
அதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவியெடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர்.
கஜேந்திர மோட்சத் திருவிழா
[தொகு]கஜேந்திரன் எனும் யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த பாங்கை விளக்கும் கஜேந்திர மோட்சத் திருவிழாவை ஆண்டு தோறும் அனைத்து பெருமாள் கோயில்களில் பங்குனி - சித்திரை மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவைக் காண வந்த பக்தர்கள், தங்களுக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என பெருமாளிடம் வேண்டிக் கொள்வர்.[2][3] இதைக் காண பெருவாரியான பக்தர்கள் திரண்டு, தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கஜேந்திர மோட்சம் என்றால் என்ன?
- ↑ கருணை தெய்வம் கஜேந்திர வரதன் - திருமோகூர் கஜேந்திர மோட்சம் மார்ச் 5
- ↑ "ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சம்". Archived from the original on 2020-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-04-07.
வெளி இணைப்புகள்
[தொகு]- கஜேந்திரமோட்சம் உபன்நியாசம் – காணொளி
- கஜேந்திர மோட்சம் பரணிடப்பட்டது 2018-04-02 at the வந்தவழி இயந்திரம்
- Gajendra Moksha (pdf) English translation
- Bhāgavata Purāṇa: English translation of the Gajendra story