திருமால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருமால்
Bhagavan Vishnu.jpg
திருமால்-நான்கு கரங்களுடன்
அதிபதி காத்தல்
தேவநாகரி विष्णु
சமசுகிருதம் viṣṇu
வகை மும்மூர்த்திகள்
இடம் வைகுந்தம்
ஆயுதம் சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம்
துணை இலக்குமி
பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை
தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா

திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக்கும்.விஷ்ணு, மாதவன், கேசவன், பெருமாள, வாசுதேவன், வாமதேவன் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் என்பது திருமால் ஆகும். இவர் சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மால், மாலவன், பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சங்கு, சக்கரம், வில், கதாயுதம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும்,திருப்பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.[1] திருமால் சிவ பூஜை செய்து சுதர்சனசக்கிரம் பெற முயன்றபோது திருமால் தனது கண்ணையே பூவாக அர்சித்து இறுதியில் சுதர்சன சக்கரம் பெற்றாரென்று திருமாலின் அவதாரமான வேதவியாசர் எடுத்தியம்புகிறார்.[2]இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமம் கருதப்படுகிறது.

இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுளாகவும், பிரம்மா படைப்பவராகவும், ருத்திரன் அழிப்பவராகவும் அறியபெறுகின்றனர். [3]சிவன் தனது இடப்புறத்திலிருந்து காக்கும் பணிபுரிய திருமாலினையும், வலப்புறத்திலிருந்து படைக்கும் பணிபுரிய பிரம்மரையும் தோற்றுவித்தாரென்று வேதவியாசர் எடுத்தியம்புகின்றார். அழிக்கும் கடவுள் ருத்திரர் பிரம்மரின் மகனாக உதித்தார் என்று வாயு புராணம் கூறுகிறது. ஒருமுறை திருமாலுக்கும்,பிரம்மருக்குமிடையே தான்தான் பெரியவரென பூசல் நிகழபிரம்மன் பத்ம கற்பத்தில் உனது உந்திகமலத்திலிருந்து தோன்றுவார் என அருளியதன்படி பிரம்மா திருமாலது தொப்புள்கொடியிலிருந்து தோன்றினாரென்று வேதவியாசர் கூறுகின்றார். [4][5]சிவபெருமானின் வாமதேவம் வடிவான இவர் அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது.

இராமாயணம், மகாபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் தேவேந்திரனான திருமாலின் புகழினைக் கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது. பாகவத புராணம், ஸ்ரீமத் பாகவதம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் ஆகும்.[6]

திருக்கோலம்[தொகு]

கோவில்களில் பெருமாள் மூன்று நிலைகளில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார், [7]

 1. நின்ற திருக்கோலம்
 2. அமர்ந்த திருக்கோலம்
 3. சயன திருக்கோலம், இதில் மஹாவிஷ்ணுவின் ஸயனத் திருக்கோலம் பத்து வகைப்படும்,
  1. ஜல சயனம்
  2. தல சயனம்
  3. புஜங்க சயனம் (சேஷ சயனம்)
  4. உத்யோக சயனம்
  5. வீர சயனம்
  6. போக சயனம்
  7. தர்ப்ப சயனம்
  8. பத்ர சயனம் (ஆலிலை சயனம்)
  9. மாணிக்க சயனம்
  10. உத்தான சயனம்

குணநலன்கள்[தொகு]

திருமாலின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,

 1. வாத்சல்யம் - தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
 2. சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
 3. சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
 4. சௌலப்யம் - கடவுளின் எளிமையை குறிப்பது.

இந்த நான்கு குணங்களும் திருமாலுடைய கிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய திருமாலே மனித உருவெடுத்து அவதரித்தமை சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.[8]

திருமாலின் அவதாரங்கள்[தொகு]

உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது திருமால் உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காகத் திருமால் எடுத்த அவதாரங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர். பாகவத புராணத்தில் திருமால் இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.[9]

திருமாலின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என பிரிக்கின்றார்கள்.[10]

 1. அவதாரம் - முழு சக்தியை கொண்டது.
 2. ஆவேசம் - தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.
 3. அம்சம் - திருமால் சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது.

சப்தாவதாரம்[தொகு]

அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை திருமால் கொன்றதால், சுக்கிராச்சாரியார் திருமாலை ஏழுமுறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி முதலிய ஏழு அவதாரங்களும் சப்தாவதாரங்களை திருமால் எடுத்ததாக வாயு புராணம் கூறுகிறது.

தசாவதாரம்[தொகு]

முதன்மை கட்டுரை: தசாவதாரம் (இந்து சமயம்)

திருமாலும், திருமகளும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் திருமாலைக் காண வந்தார்கள். அவர்களை ஜெய விஜய எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த திருமால் தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ளும்படி செய்ததாகத்க் தசாவதாரங்களுக்கு காரணம் சொல்லப்படுகிறது.

பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:

 1. மச்ச அவதாரம்
 2. கூர்ம அவதாரம்
 3. வராக அவதாரம்
 4. நரசிம்ம அவதாரம்
 5. வாமண அவதாரம்
 6. பரசுராம அவதாரம்
 7. இராம அவதாரம்
 8. கிருஷ்ண அவதாரம்
 9. கௌதம புத்தர்
 10. கல்கி அவதாரம்

பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தர் திருமாலின் தசாவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறார். இதுகுறித்து புராணங்களில் செய்தியுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது.

மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா: [11]

(ஆனால் வைணவ நூல்களில் புத்தர் குறித்த குறிப்புகள் இல்லை.)

கடவுளுடனான உறவு[தொகு]

இந்துக் கடவுளான சிவனின் மனைவியான பராசக்தியினால் உருவானதால் காக்கும் கடவுளான திருமால் போற்றப்படுகிறார். தேவேந்திரனான திருமாலின் பிள்ளைகளான வள்ளி, தெய்வானையை சிவபார்வதி மகனான முருகப்பெருமான் தனது மனைவிகளாக ஏற்றதன் காரணமாக முருகப்பெருமானின் மாமாவாக திருமால் அறியப்பெறுகிறார்.

தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனர் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடல் கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகாவரம் பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், திருமாலிடம் வேண்டினர். திருமாலும் மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினைக் காண இயலாத சிவபெருமான் திருமாலின் மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும், அவரின் வேண்டுகோளுக்கினங்கி மோகினியாக மாறிய திருமாலுடன் சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.[12]

திருமால் நாமாவளி[தொகு]

திருமால் நாமாவளி என்பது திருமாலின் வேறுபட்ட பெயர்களின் தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கோவிந்த நாமாவளி, சத்யநாராயண அஷ்டோத்திர சதநாமாவளி, விஷ்ணு சஹஸ்ரநாமம் அவற்றில் குறிப்பிடத்தக்கன. இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம் வைணவத்தலங்களில் மந்திரமாக மூலவரின் முன் மட்டுமல்லாது பெரும்பான்மையானோரால் தினமும் இல்லத்திலும் ஓதப்படுவதாக உள்ளது.

திருமாலின் ஆயிரம் பெயர்கள்[தொகு]

முதன்மை கட்டுரை: விஷ்ணு சஹஸ்ரநாமம்

திருமாலின் ஆயிரம் பெயர்களை கோர்வையாக ஒருங்கினைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார். இது விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்பெறுகிறது. மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு போர்க்களத்தில் திருமாலின் பெயர்களைக் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. ச.கேசவன் இத்தொகுப்பினை தமிழில் எழுதியுள்ளார்.[13] இவ்வாறான நாமாவளிகளுக்கு உரை எழுதுவது பாஷ்யம் என்று அழைக்கப்பெறுகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு ஆதிசங்கரரால் உரையெழுதப்பெற்றது என்ற நம்பிக்கையுள்ளது.[14][15]

இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தினை நூறு பேர் ஒரே சமயத்தில் வாசிப்பதை விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை என்கிறார்கள். இது வைணவத் தலங்களில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் லட்சார்ச்சனை விழா என்ற பெயரில் நடைபெறுகிறது.

காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146
 2. http://m.dinamalar.com/temple_detail.php?id=10975
 3. http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm
 4. http://m.dinamalar.com/temple_detail.php?id=10974
 5. http://m.dinamalar.com/temple_detail.php?id=11027
 6. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19
 7. புத்தகம்: ஶ்ரீ வைஷ்ணவம், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், பக்கம் 55 & 56
 8. http://temple.dinamalar.com/news_detail.php?id=4744
 9. http://temple.dinamalar.com/StoryDetail.php?id=36211
 10. [ http://www.dinamani.com/religion/article611053.ece?service=print புவியினர் போற்றும் பூவராகன் - எஸ். வெங்கட்ராமன் - ஏப்ரல் 17, 2009
 11. http://www.tamilartsacademy.com/journals/volume12/articles/article5.xml
 12. அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்
 13. http://www.indusladies.com/forums/pujas-prayers-and-slokas/118104-vishnu-sahasranamam-in-tamil.html
 14. http://www.visvacomplex.com/SriGanEsa_Sahasranamam1.html
 15. http://www.tamilhindu.com/2011/04/tamils-and-vedanta-3/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமால்&oldid=2510385" இருந்து மீள்விக்கப்பட்டது