தாமோதரன் என்ற சொற்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயத்தில் தாமோதரன் என்ற பெயர் காத்தல் கடவுளான விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பன்னிரண்டாவது பெயராக வழங்கி வரும் சொல். பாரதப்போருக்குப் பின் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்துகொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும் சாத்திரங்களையும் சொல்லி முடித்து முடிந்த முடிவாக கடவுளின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிடும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தோத்திரத்தை உபதேசித்தார். அதனில் 367-வது பெயராக வரும் சொல்தான் 'தாமோதரன்'.

நான்கு விதப் பொருள்[தொகு]

இறைவனின் எளிமையையும் பெருமையையும் ஒரே பெயரில் ஒன்று சேர்த்துப் பறைசாற்றும் பெயர் 'தாமோதரன்'. பாலகன் கண்ணனாக தாய் யசோதையினால் வயிற்றைச் சுற்றிக் கயிற்றால் கட்டப்பட்ட எளிமை; உலகத்தனையையும் தன் வயிற்றில் சுமந்து காப்பாற்றும் தெய்வ வலிமை -- இரண்டும் 'தாமோதரன்' என்ற பெயரால் வெளிப்படுத்தப் படுகின்றன. தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு.

தாம என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைக்கும் அவருடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன் அவன்.

இன்னும் ஒரு பொருள். உதார என்பது பரிவு உணர்ச்சியைக் குறிக்கும். தம என்பது தன்னடக்கத்தைச் சொல்லும். அதனால் 'தாமோதரன்' என்ற சொல் 'குன்றாத தன்னடக்கத்துடன் ஏழை, எளியவர்களிடம் மிகுந்த பரிவுடன் இருப்பவர்' என்றும் பொருள் தரும்.

காஞ்சி மகாசுவாமிகள் 'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை' என்ற ஆண்டாள் வாக்கிற்கு 'தன்னை தரித்த தாய் தேவகியின் குடலைத் தன்னுடைய கர்ப்பவாசத்தால் தூய்மை ஆக்கியவன்' என்று பொருள் சொல்லி, 'எவனது குடலுக்கு வெளியிலே மேல் பக்கம் தாம்புக் கயிற்றைப் போட்டு வளர்ப்புத் தாய் யசோதை புண்படுத்தினாளோ, அவன் தன் பெற்ற தாயின் குடலை தன்னுடைய வாசத்தாலேயே தூய்மை செய்தவன்' என்று இன்னும் விளக்குகிறார்.