மோகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோகினி
Mohini Halebid.jpg
அமுதத்தினை பிரித்து தரும் மோகினி
ஆயுதம் மோகனம் சக்ராயுதம்
துணை சிவபெருமான்

மோகினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோஹினி) என்பது இந்து கடவுளான திருமால் எடுத்த பெண் அவதாரமாகும். காண்போரை தன்னுடைய மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடைய இந்த அவதாரம், மோகினி அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்து தொன்மவியலில் மோகினி அவதாரம் பற்றி மகாபாரதத்திலும், பாகவதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால் பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும், பிட்சாடனுடருடன் இணைந்து தருகாவன ரிசிகளின் ஆணவம் அழிக்கவும், பசுமாசுரனை அழிக்கவும் என பல முறை மோகினியாக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மோகினி, சிவனுடன் ஈடுபட்டு சாஸ்தா என்ற குழந்தையை தோற்றுவித்தாகவும் , பாரதபோரில் களபலி தருவதற்காக தேர்ந்தெடுக்கப்பெற்ற அரவானின் திருமண ஆசையை நிறைவேற்றியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன .

அமுதம் பகிர்ந்தளித்தல்[தொகு]

தேவர்களும், அசுரர்களும் இணைந்து மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். அந்நிகழ்வில் வெளிபட்ட ஆலகாலத்தினை சிவன் உண்டபின்பு, பாற்கடலிருந்து, திருமகள், அரம்பையர்கள், ஐராவதம், உச்சைசிரவம் போன்றவை தோன்றின. இறுதியாக அமுதம் தோன்றியது.

அமுதம் இறவாமையை தரவல்லது என்பதால் அசுரர்கள் அருந்த கூடாதென திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்களுக்கு சாதாரண பாணத்தினையும், தேவர்களுக்கு அமுதத்தினையும் அளித்தார்.

பஸ்மாசுரன் வதம்[தொகு]

பஸ்மாசுரன் - மோகினி, மரத்தின் மறைவில் சிவபெருமான்

விஷ்ணு புராணத்தில் மோகினி பஸ்மாசுரனை அழித்தமை பற்றி கூறப்பட்டுள்ளது.

அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவர் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கைவைத்தால் அவர்கல் சாம்பல் ஆகும் வரம் பெற்றார். அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரை துரத்தினார்.

அந்நேரத்தில் திருமால் மோகினி அவதாரம் எடுத்து பசுமாசுரனை தனது அழகினால் மயக்கி காமம் கொள்ளச் செய்தார். மோகம் கொண்ட பஸ்மாசுரனை தன்னுடன் ஆடும் படி கூறி, மோகினி ஆடினாள். அவளுடைய நடன முறைகளை பின்பற்றி ஆடிய பஸ்மாசுரன் தான் பெற்ற வரத்தினை மறந்து தலையில் கைவத்தார். சிவபெருமான் தந்த வரத்தின்படி பஸ்மாசுரன் அழிந்தார்.

[1]

ஐயப்பன்[தொகு]

சிவபெருமானுடன், மோகினி இணைந்திருக்கும் காட்சி. வெண் காளையின் மீது பார்வதி.

பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.

காண்போரை மோகத்தில் ஆழ்த்தும் வல்லமையுடைய மோகினி அவதாரத்தினை திருமால் மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியினை காண சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியை கண்டார். அவருக்கும் மோகனம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினி அடைய எண்ணினார்.

அப்பொழுது சிவனும் மோகினியும் உறவு கொண்டார்கள். அவர்களுக்கு பிறந்தவரே ஐயப்பன் ஆவார்.

ஊஞ்சலாடும் மோகினி இராஜாரவி வர்மா (1894)

அரவானின் மனைவியாக[தொகு]

பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற வரத்தை வேண்டியதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரே ஒரு வரம் மட்டும் கேட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரு வரம் மட்டுமே வாங்கியதாகக் கூறப்படுவது, போருக்கு முன்பு அரவான் தன்னைத் தியாகம் செய்து கொண்டதாகத் தமிழ் மரபுகளில் கூறப்படுவதையும், மகாபாரதத்தின் முந்தைய சமசுகிருத பதிப்பில் அரவான் போரிட்டு மடிவதாகச் சொல்லப்படுவதையும் பொருந்திப் பார்க்க 9ஆம் நூற்றாண்டில் நடந்த முயற்சியைக் குறிக்கிறது என ஹில்டிபைடெல் கருதுகிறார்.

கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரு மரபுகளிலும், அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாக நம்பப்படுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இந்தப் பதிப்பில், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. ஆனால் போரின் எட்டாம் நாளில் அரவான் இறந்த பிறகு வெட்டுண்ட தலையுடன் போர் முழுவதையும் கண்டானா என்பது பற்றிய தகவல்களை வில்லிப்புத்தூராழ்வார் குறிப்பிடவில்லை.[2]

பேளூர் கோவிலில் மோகினி சிலை. நாட்டார் மரபுகளில் கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டு அரவானை மணந்தார் என நம்பப்படுகிறது.

மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புற சடங்குகளில் மட்டுமே காணப்படுகின்றன. தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்கிறார். (மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர்). ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க கிருஷ்ணர் மோகினி என்ற பெண் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் இருந்ததாக கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது. அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாள் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறி போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது.

தெருக்கூத்து கதைகளில் சிறப்பான முறையில் திருமணச் சடங்குகள் நடைபெறுவது போலவும் அதனையடுத்து மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காண்பிக்கப்படுகின்றன. இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.[3] திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதை வடிவில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது தெளிவாகச் சொல்லப்படுகிறது.[4][5] திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை. வேறு சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.[6]

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. http://tamil.nativeplanet.com/yana/
  2. Hiltebeitel (1995) p. 453
  3. Hiltebeitel (1988) p. 324
  4. Doshi, Tishani (May 25, 2003). "Lessons in transformation". தி இந்து. Archived from the original on 9 May 2010. http://www.webcitation.org/5pbGt8B6L. பார்த்த நாள்: 19 March 2010. 
  5. Goldman (1993) p. 388
  6. Hiltebeitel (1991) p. 286

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகினி&oldid=2414246" இருந்து மீள்விக்கப்பட்டது