சிவ அடையாளங்கள்
நெற்றிக்கண் கொண்டிருத்தல், பிறை சூடியிருத்தல் முதலியவற்றை சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் தனித்துவ அடையாளங்களாக தேவார திருநூல்கள் எடுத்தியம்புகின்றன.
அவையாவன:
- கங்கை
- சடாமுடி
- நெற்றிக்கண்
- பிறைநிலா
- தோடுடைய செவி
- நாகாபரணம்
- நீல கண்டம்
- பொன்மேனி
- புலித்தோல்
- யானைத்தோல்
- மான்தோல்
- உத்திராட்சம்
- திரிசூலம்
- உடுக்கை
- மான்
- நந்தி
கங்கை
[தொகு]பகீரதன் என்பவரின் மூதாதையர்கள் ஒரு சாபத்தினால் நற்கதி அடையாமல் இருந்தார்கள். இதனை வசிட்ட மகரிசி மூலமாக பகீரதன் அறிந்து கொண்டார். அவருடைய மூதாதையர்களுக்கு நற்கதி கிடைப்பதற்காக பிரம்மனை நோக்கி பத்தாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் புரிந்தார். ஆனால் பிரம்மாவோ மூதாதையர்களின் சாம்பலில் கங்கையின் நீர் பட்டால் மட்டுமே சாபம் தீரும் என்று கூறினார். எனவே பகீரதன் தேவலோகத்தில் இருந்த கங்கையை பூமியை நோக்கி வர தவமிருந்தார். அந்த தவத்தினால் மகிழ்ந்த கங்கை, தான் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வருவதானால், தன்னை தாங்கப் பெறக்கூடிய சக்தியாகிய சிவனிடம் அனுமதி பெற வேண்டுமென கூறினார். பகீதரனின் நல்லெண்ணத்திற்காக சிவபெருமான் கங்கையை தன் சடாமுடியில் தாங்கினார். பின் பூமி பொறுக்கும் அளவில் மட்டும் கங்கை விடப்பட்டாள்.
பகீரதனின் முன்னோர் சாம்பலில் கங்கையின் நீர்பட்டு நற்கதி கிடைத்தது. இதனால் கங்கைக்கு பாகீரதி என்றும், சிவபெருமானுக்கு கங்காதரன் என்றும் பெயர் கிடைத்தது.[1]
கங்கையை சிவனின் இரண்டாவது மனைவி என்றும் புராணங்கள் கூறுகின்றன.
பிறைநிலா
[தொகு]சந்திரனுக்கு அஸ்வினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு நட்சத்திரங்களும் மனைவிமார்களாவர். இவர்கள் அனைவருமே தட்சனின் குமாரிகளாவார்கள். சந்திரை விரும்பி தவமிருந்து தட்சனின் ஆசியுடன் சந்திரை திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களில் ரோகிணி மிகவும் அழகானவள் என்பதால் அவளுடன் காலம் கழிப்பதையே சந்திரன் விரும்பினார். மற்றவர்களுக்கு இது குறித்து கவலையுண்டாயிற்று. அனைவரும் சேர்ந்து தட்சனிடம் சந்திரனின் இந்த போக்கினை கண்டிக்குமாறு கூறினார்கள். இறுபத்தி ஆறு குழந்தைகளையும் சந்திரன் கவலை கொள்ள செய்துவிட்டானென தட்சனுக்கு கோபம் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு அழகு குறைந்து சந்திரன் மறையுமாறு சாபமிட்டார். பதினான்கு அழகு குறைந்த நிலையில் சிவனை நோக்கி தவமிருந்தார் சந்திரன். தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனை காக்க சிவபெருமான் தன் சடாமுடியில் சூடிக்கொண்டார். இதனால் சந்திரன் தேய்வதும், வளர்வதுமாக இருக்கிறார்.
சந்திரனுக்கு சோமன் என்ற பெயருண்டு, எனவே சிவபெருமான் சோமசுந்தரன் என்று அழைக்கப்படுகிறார்.[2]
நெற்றிக்கண்
[தொகு]சிவபெருமானுக்கு நெற்றியின் நடுவே செங்குத்தாக ஒரு கண் இருப்பதாக ஆகமங்கள் விளக்குகின்றன. இந்தக் கண் ஞானத்தின் அடையாளமாகவும், அக்னியின் வடிவமாகவும் கூறப்படுகிறது. சிவன் மிகுந்த கோபமடையும் வேளையில் இந்த கண்ணை திறந்தால், தீப்பிழம்புகள் வெளிவருமென சைவர்கள் நம்புகிறார்கள்.
நாக ஆபரணங்கள்
[தொகு]சிவனுடைய உடலில் நாகங்கள் ஆபரணங்களாக உள்ளன. சிவனுடைய கழுத்தில் இருப்பது வாசுகி பாம்பாகும். சிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை பாற்கடலை கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாக கூறினார்கள். எனவே பாற்கடலை கடைவதற்கு மந்திர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு அரக்கர்கள் பாம்பின் ஒருபுறமும், தேவர்கள் மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி "நீலகண்டன்" என்று பெயர்பெற்றார்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tamilvu.org/library/l3700/html/l3700001.htm கம்பராமாயணம் யுத்தகாண்டம் | பகீரதன் (1586, 3923)
- ↑ தெரிந்த புராணம்... தெரியாத கதை! -சிவனால் சக்தியா? சக்தியால் சிவனா? சக்தி விகடன்
- ↑ http://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=363