சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.
சமயகுரவர் என்போர் சைவசமயத்துக்குத் தொண்டாற்றிய நால்வராவர். அவர்கள்,
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பவராவர். நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் தமிழ் நாட்டிலுள்ள பல திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டுப் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. மறைந்துபோன பாடல்கள் போக, இப்போதுள்ள இவர்களின் பாடல்கள் ஏழாயிரம் ஆகும். அடுத்த நூற்றாண்டில் வந்த சுந்தர மூர்த்தி நாயனார் பாடல்கள் 1000. இம்மூவரின் பாடல்களும் தேவாரம் என்று போற்றப் பெறுகின்றன.ஞானசம்பந்தர் கையில் தாளம் ஏந்தி, பாடியும் ஆடியும் சிவனை வழிபட்டார். பாணர் குடும்பத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய பாடல்களுக்கு யாழ் இசைத்து வந்தார். ஞானசம்பந்தர் தம் பாடல்களில் அந்தந்த ஊர்க் கோயில்களைப் பாடுமிடத்தில் கோயில்களைச் சூழ்ந்த இயற்கை அழகுகளையும், கற்பனைச் சுவையுடன் எடுத்துரைத்துப் பாடியுள்ளார்.
கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர். காளத்தி மலையில் ஆகமவிதிப்படி சிவ கோசரியார் என்பவர் வழிபாடும் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வணங்கி வந்தார். இதைக்கண்டு சிவ கோசரியார் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் வருகின்ற குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.
திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.
சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும்
- வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார்
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளில் மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
விக்கித் திட்டம் சைவத்தில் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.