உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தி தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தி
நந்திதேவர்
வேறு பெயர்கள்நந்தீசர்
தேவநாகரிनन्दि
வகைசிவபெருமானின் வாகனம்
இடம்கயிலை மலை
மந்திரம்ஓம் தத் புருஷாய வித்மகே

சக்ர துண்டாய தீமஹி

தந்நோ நந்தி ப்ரசோதயாத்
துணைசுயப்பிரகாசை
மைசூர் சாமுண்டி மலையில் நந்தி சிலை
நந்திச் சிலை

நந்தி (சமக்கிருதம்: नन्दि, தமிழ்: நந்தி, கன்னடம்: ನಂದಿ, தெலுங்கு: న౦ది) என்பது சிவபெருமானின் தங்குமிடமான கயிலை மலை நுழைவாயிலை-பாதுகாக்கும் தெய்வம் ஆகும். இவர் வழக்கமாக ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார். சைவ சித்தாந்த மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் பிரதான குருவாக நந்தி தேவர் கருதப்படுகிறார்; அதாவது சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோகா முனி ஆகிய எட்டு சீடர்களும் சைவ சமயத்தை பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.[1]

சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.[2]

சொற்பிறப்பு

[தொகு]

நந்தி என்ற சொல் தமிழ் வார்த்தையான (தமிழ்: நந்து), என்பதிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் வளர்வது, அல்லது தோன்றுவது எனப்படுகிறது. இது வெள்ளை காளைகளின் வளர்ச்சியையோ அல்லது செழிப்பையோ குறிக்க பயன்படுத்தப்பட்டது; அதே போல் தெய்வீக காளை நந்தி. சமஸ்கிருத சொல்லான நந்தி (சமக்கிருதம்: नन्दि) என்கிற சொல் தெய்வீக சிவா-நந்தியின் பண்புகள், மகிழ்ச்சி, மற்றும் திருப்தி ஆகியவற்றின் பொருளைக் கொண்டுள்ளது.[3] ஏறக்குறைய அனைத்து சிவன் கோயில்களும், அமர்ந்திருக்கும் நந்தியின் கல் உருவங்களைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக அவை பிரதான சன்னதியை நோக்கி அமைந்துள்ளன.

நந்தி என்ற பெயரை காளைக்கு (சமஸ்கிருதம்: விர்சபா) பயன்படுத்துவது, உண்மையில், சைவ மதத்திற்குள் வெவ்வேறு பிராந்திய நம்பிக்கைகளின் சமீபத்திய ஒத்திசைவின் வளர்ச்சியாகும் என்பது சமீபத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[4] சமஸ்கிருதம், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் உள்ள மிகப் பழமையான சைவ நூல்களில், நந்தி என்ற பெயர் கயிலைமலையின் துவாரபாலகருக்குப் பதிலாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. சைவ சித்தாந்த நூல்கள் நந்தியை விர்சபாவிலிருந்து தெளிவாக வேறுபடுத்துகின்றன. அவற்றைப் பொறுத்தவரை, தேவி, சந்தேஷா, மகாகலா, விர்சபா, நந்தி, விநாயகர், பிரிங்கி, மற்றும் முருகன் ஆகியோர் சிவனின் எட்டு தளபதிகள் ஆவார்கள்.

வரலாறு மற்றும் புனைவுகள்

[தொகு]

சிவன் மற்றும் நந்தியின் வழிபாட்டை சிந்து பள்ளத்தாக்கு நாகரிக காலத்தில் கூட காணமுடிகிறது. இங்கு புகழ்பெற்ற 'பசுபதி நாதர்' அமர்ந்திருக்கும் உருவ முத்திரை உள்ளது. இது பொதுவாக சிவன் என்று அடையாளம் காணப்படுகிறது. மேலும் மொகெஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் பல காளை முத்திரைகள் காணப்பட்டன. இதனால் நந்தி வழிபாடு பல ஆயிரம் ஆண்டுகள்[5] நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்களின் முடிவுக்கு வழிவகுத்தது.

நந்தி ஷிலதா முனிவரின் மகன் என்று வருணிக்கப்படுகிறார். ஷிலாதா ஒரு வரம் பெற கடுமையான தவத்திற்கு உள்ளானார். அதனால், அழியாத மற்றும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கொண்ட ஒரு குழந்தை நந்தியை அவரது மகனாகப் பெற்றார். நந்தி, ஷிலதா செய்த வேள்வி மூலமாகவும் தோன்றினார் என்றும் கருதப்படுகிறது. அவர் பிறந்த போது அவரது உடலில், வைரங்களால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்திருந்தார் என்ற கருத்து நிலவுகிறது.[6] நந்தி தேவர், சிவபெருமானின் தீவிர பக்தராக வளர்ந்தார். அவர் கடுமையாக தவம் செய்து, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள திரிப்பூர் தீர்த்த க்ஷேத்ரா அருகே நர்மதா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இன்றைய நந்திகேஸ்வர் கோவிலில் நுழைவாயில் காவலராகவும், சிவ பெருமானின் முக்கிய சீடராகவும் இருக்கும்படியான நிலையை அடைந்தார் என்பது வரலாறாக உள்ளது.

சிவன் கற்பித்த அகமிக் மற்றும் தாந்த்ரீக ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதி தெய்வத்திடமிருந்து நந்தி பெற்றார். நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்ட தனது எட்டு சீடர்களுக்கு அந்த தெய்வீக அறிவை அவர் கற்பித்தார். அவர்கள் சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோக முனி போன்றோர் ஆவார்கள். இந்த அறிவைப் பரப்புவதற்காக இந்த எட்டு சீடர்களும் நந்தி தேவரால், உலகின் எட்டு வெவ்வேறு திசைகளுக்கு அனுப்பப்பட்டனர்.[1]

பிரதோஷம்

[தொகு]

பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

அதிகார நந்தி

[தொகு]

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

அதிகார நந்தியும் கருடரும்

[தொகு]

கயிலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக, விஷ்ணு, கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

தன்னைக் காக்க விஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த விஷ்ணு, சிவனிடம் வேண்ட, நந்தியிடம், கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார் என்பது வரலாறாக உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Satguru Sivaya Subramuniyaswami (2003). Dancing with Siva: Hinduism's Contemporary Catechism. Himalayan Academy Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-945497-89-9.
  2. "நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர் நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர் கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி) சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர் செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."
  3. "Monier Williams' Sanskrit-English Dictionary". பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
  4. Gouriswar Bhattacharya, (1977), "Nandin and Vṛṣabha", Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft, Supplement III,2, XIX. Deutscher Orientalistentag, pp. 1543–1567.
  5. R. C. Dogra, Urmila Dogra (2004). Let's Know Hinduism: The Oldest Religion of Infinite Adaptability and Diversity. Star Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176500562.
  6. Chidatman (Swami.) (2009). The sacred scriptures of India, Volume 6. Anmol Publications. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126136308.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தி_தேவர்&oldid=3817594" இலிருந்து மீள்விக்கப்பட்டது