நருமதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நருமதை ஆறுஅல்லது நர்மதா ஆறு (Narmada River) இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து நர்மதா மாவட்டம் வழியாக அரபிக் கடலிலுள்ள கம்பாத் வளைகுடாவில் கலக்கின்றது. குசராத்துக்கும் மத்திய பிரதேசத்திற்கும் உயிர் நாடியாக விளங்குகிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு தபதி ஆகும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மரபுவழி எல்லையாக இது உள்ளது. இரண்டு நில அடுக்குகள் மோதுவதால் உருவாகும் நிலபிளவு வழியாக பாயும் ஆறுகளில் இது ஒன்று.

தோற்றம்[தொகு]

கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் அனூப்பூர் மாவட்டத்திலுள்ள அமர்கண்டிலுள்ள நரும்தை குளத்தில் தோன்றும் நர்மதா ஆறு அங்கிருந்து பாய்ந்து கபிலதாரா என்ற அருவியை உருவாக்குகிறது. மலைகளுக்கிடையே நெளிந்து ஓடும் இவ்வாறு கடின பாறைகளுக்கிடையே பாய்ந்து இராம்நகரிலுள்ள சிதிலமடைந்த அரண்மனையை அடைகிறது. ராம்நகருக்கும் மண்ட்லாவிற்கும் இடைபட்ட 25 கி.மீ தூரம் பாறைகள் காரணமாக ஆழமாக இருந்ததுடன் அதிக வளைவுகள் இன்றி நேராக இருந்தது. வடமேற்காக சிறிது பயணித்து சபல்பூரை அடைந்தது. அந்நகருக்கு அருகில் நருமதையின் 29 அடி உயர தூவந்தர் அருவி உள்ளது. அவ்வருவியில் இருத்து 3 கிமீக்கு மக்னீசியம் சுண்ணக்கல்லும் பசால்ட்டு பாறையும் உடைய பளிங்குக்கல் பாறைகள் என அழைக்கப்படுவதன் ஊடாக 295 அடி ஆறானது 59 அடி ஆறாக குறுகி ஓடியது. இதன் பின் அரபிக்கடலில் கலக்கும் வரை நருமதை மூன்று குறுகிய பள்ளத்தாக்குகளை வடக்கிலிருக்கும் சாத்பூரா மலைத் தொடருக்கும் தெற்கிலிருக்கும் விந்திய மலைத்தொடருக்கும் இடையில் சந்திக்கிறது. பல இடங்களில் பள்ளத்தாக்கின் தென் பகுதி அகலமாக உள்ளது. இந்த மூன்று பள்ளத்தாக்குகளும் சாத்பூரா மலைத்தொடராலும் குத்தான மலைத்தொடராலும் பிரிக்கப்படுகின்றன.

பளிங்குகல் பாறைகளை விட்டு வெளிவரும் நருமதை முதன் முறையாக வளமான மண் நிறைந்த வடிநிலத்தை அடைகிறது. 320 கிமீ நீளமுடை இதன் அகலம் தெற்கில் 35 கிமீ ஆகும், வடக்கில் இதன் அகலம் குறைவு. நருமதாபுரம் என அழைக்கப்படும் ஹோசங்காபாத்துக்கு எதிரிலுள்ள பர்கரா மலை வடபகுதி வடிநிலத்தை தடுப்பதால் அதன் அகலம் குறைவாகவுள்ளது. முதல் பள்ளத்தாக்கில் தெற்கிலிருந்து பல ஆறுகள் நருமதையுடன் இணைகின்றன. சாத்பூரா மலைச்சரிவிலிருந்து நிறைய நீர் நருமதையுடன் கலக்கிறது. 172 கிமீ நீளமுடைய தவா ஆறு இதில் பெரியதாகும்.

நமாவருக்கும் அண்டியாவிற்கும் கீழே நருமதை இருபுறமும் மலைகள் இடையே ஓடியது அங்கு அதன் தன்மை பலவாறு மாறியது. ஓம்காரேஈசுவர் தீவை அப்பகுதியில் உருவாக்கியது. இவ்வாற்றுத்தீவு மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவனின் புண்ணிய தீவாகும். பாறைகள் வழி கீழிறங்கும் நருமதை விரைவில் வேகமெடுக்கிறது. கண்டுவா வடிநிலத்துக்கு சற்று மேலே காவேரி சிக்தா என இரு சிறு ஆறுகள் நருமதையுடன் இணைகின்றன. இரு இடத்தில் நமவாருக்கு 40 கிமீக்கு கீழுள்ள மாந்தரிலிருந்தும், புனசாவுக்கு 40 கிமீ கீழுள்ள தாத்ரய் என்னுமிடத்திலும் இருந்தும் நருமதை 39 அடி கீழிறங்கி ஓடுகிறது

பேரெல்லி என்னுமிடத்திற்கு சற்று கீழ் ஆக்ரா- மும்பய் சாலையை கடந்ததும் மண்டலேசுவர் சமவெளியை அடைகிறது. இரண்டாவது வடிநிலத்தின் நீளம் 180 கிமீ, தெற்கில் இதன் அகலம் 65 கிமீ வடக்கில் இதன் அகலம் 25 கிமீ. இரண்டாவது பள்ளத்தாக்கு சகேசுவர் தரா அருவியால் துண்டிகப்படுகிறது. இரண்டாவது வடிநிலத்தின் முதல் 125 கிமீ தூரத்துக்கு மர்கரி அருவி வரை ஆழம் குறைவான ஆற்றில் பாறைகள் மீது மோதி நீர் வேகமாக சற்று மேடான மால்வாவில் இருந்து தாழ்வான நிலப்பகுதியான குசராத் சமவெளிக்கு வருகிறது.

மக்ரைய்க்கு கீழே நருமதை குசராத் மாநிலத்தின் வதோரா மாவட்டத்தையும் நர்மதா மாவட்டத்தையும் அடைந்து பின் வண்டல் நிறைந்த வளமான பரூச் மாவட்டத்தை அடைகிறது. ஆற்றின் கரைகள் பழைய வண்டல் படிமங்களாலும் உறுதியான சேறாலும் பளிங்குகல் பாறைகள் மண்துகளின் சரளைகளாலும் உயர்ந்து காணப்படுகிறது. மக்ரையில் இதன் அகலம் 1.5 கிமீ ஆகும் பரூச் அருகே இதன் அகலம் 3 கிமீ ஆகும். கம்பாத் வளைகுடா கழிமுகத்தில் இதன் அகலம் 21 கிமீ ஆகும். பழைய நருமதையின் சுவடு பரூச் நகருக்கு தெற்கே 1-2 கிமீ தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குசராத்திலேயே முழுவதும் ஓடும் ஒர்சாங், கர்சான் ஆகியவை நருமதையின் முக்கிய துணையாறுகள் ஆகும். ஒர்சாங் நருமதையுடன் சேன்டாட் என்னுமிடத்தில் கூடுகிறது. அதற்கு எதிர்கரையில் உள்ள கர்னலியில் ஆறுகள் கூடுவதால் அப்பகுதியில் கூடுதுறை அமைந்துள்ளது. கர்சான் கூடுதுறைக்கு சில கிமீ தள்ளி ருத் என்னுமிடத்தில் இணைகிறது.

நர்மதா பரிக்ரமா[தொகு]

தென்னாட்டில் கிரி வலம் (பரிக்ரமா) பிரபலமாக இருப்பதைப் போன்றே, வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலம். நர்மதை மிகவும் புனிதமான நதியாதலால், நதியைக் காலணி அணியாமல் வலம் வர வேண்டும். பரிக்ரமாவின் போது பணம் வைத்துக் கொள்ளக் கூடாது,பிச்சையேற்றே உணவு உண்ண வேண்டும்.[1]

புராணத்தின்படி நர்மதை சிவபெருமானின் உடலிலிருந்து தோன்றியதால் நர்மதை ஜடாசங்கரி என்றும் அழைக்கப்படுகிறது.

நர்மதா பரிக்ரமாவை முதலில் ஆரம்பித்தவர் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமர், பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மஹாபலி, கிருபர், வியாசர் ஆகியோர் நர்மதை நதியைச் சுற்றி வந்து பரிக்ரமா செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்பது ஐதீகம். சபரிமலை யாத்திரையைப் போன்றே, இந்தப் புனித யாத்திரை காலங்காலமாக முனிவர்களாலும், சாதுக்களாலும், ஆன்மீகச் சாதகர்களாலும், நர்மதைக் கரையில் வாழும் கிராம மக்களாலும் தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்று. பொதுவாகப் பரிக்ரமாவை 3 வருடம், 3 மாதம், 13 நாட்களில் நிறைவு செய்வது மரபு.[2]

புண்ணிய தலங்கள்[தொகு]

நர்மதை நதியின் கரையில் இந்து மதத்தினரின் ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், மஹேஷ்வர், கருடேஷ்வர், விமலேஷ்வர் மற்றும் பல தலங்களும், சமணர்களுக்கு பர்வானியும், இஸ்லாமியருக்கு மாண்டவும் உள்ளன.[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. நர்மதை நதி வலம் : நர்மதா பரிக்ரமா; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 2
  2. நர்மதை நதி வலம் : நர்மதா பரிக்ரமா; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 2
  3. நர்மதை நதி வலம் : நர்மதா பரிக்ரமா; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 5,8

புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நருமதை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நருமதை&oldid=2819872" இருந்து மீள்விக்கப்பட்டது