சைவ சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சைவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைவ சமயம், சிவநெறி (Saivism) என்றெல்லாம் அழைக்கப்படுவது, சிவம் என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி சைவம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ நெறி சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.[1] இன்றைய இந்து மதத்தின் ஒரு பிரிவாக அமைந்துள்ளது.

சைவ வரலாறு[தொகு]

  • சிவபெருமான் அனைவருக்கும் உரிய இறைவனாகக் கருதப்படுகிறார். ஆயினும் சிவபெருமானின் அடிகளாராக விளங்கிய 63 நாயன்மார்களால் சைவம் என்று சிவபெருமானின் தனித்தன்மையை விளக்குவதற்குச் சைவ வழியைத் தோற்றுவித்தனர்.
  • இந்தியாவின் ஆதி கிளைநெறிகளில் அமைந்து விளங்கும் சைவமும் வைணவமும் பின்நாட்களில் இந்து சமயத்தின் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயமாகக் காணப்படுகின்றன. [2]
  • இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று குறிப்பிடுகின்றது.[3]
  • சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாகச் சிவபெருமான் விளங்குகிறார். உமை, விநாயகர், முருகர், பரமனின் (சிவபெருமானின்) அம்சமான பரிவார கடவுள்கள் பைரவர் (வீரத்தின் அதிபதி), தட்சிணாமூர்த்தி/பரமகுரு (ஞானத்தின் அதிபதி), வீரபத்திரர், நாகதம்பிரான் மற்றும் கிராமப்புற தெய்வங்களும் சைவ சமயத்தவரின் வழிபாட்டுத் தெய்வங்களாகச் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
  • திருக்கயிலையில் நந்தி தேவர் பணிவிடை செய்ய, விநாயகரும், முருகனும் அருகிருக்க பார்வதி துணையிருக்க வீற்றிருக்கும் சிவபிரானே சைவர்களின் பரம்பொருளாக விளங்குகின்றார். பொ.பி 12-ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந்திருந்த சைவநெறி, ஆப்கானிஸ்தான் முதல் கம்போடியா வரையான தெற்காசியா - தென்கிழக்காசியா முழுவதற்குமான தனிப்பெரும் நெறியாக விளங்கியமைக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.[4]
  • இன்றைக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், காஷ்மீர், நேபாளம், தமிழீழம், வங்காள தேசம், மலேசியா முதலான பகுதிகளில் வாழும் மக்களின் முதன்மையான சமயமாகச் சைவமே திகழ்கின்றது.

சைவ முறை பெயர்[தொகு]

தோற்றம்[தொகு]

சைவரின் முழுமுதல் இறைவன்

பழங்குடித் தொடர்ச்சி[தொகு]

இமய மலைச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது.[5] சைவம் என்ற சொல்லின் சரியான தமிழ் வடிவம் சிவனியம் ஆகும். இமயம் காலத்தால் பிந்தியது என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.[6] சிவனை உருவகிப்பதில் சாம்பல் பூசுதல், புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடிகளின் கூறுகள் முக்கிய பங்கு வகிப்பதால், பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் பிறந்த பெருந்தெய்வமே சிவன் எனலாம். நாகர் பழைமை வாய்ந்த தனி இனம் என்று வழக்காடுவோர், சிவனின் அணிகலனாக நாகங்கள் காணப்படுவதைக் கொண்டு, சிவன் நாகரின் தெய்வம் என்பர்.[7] சிவ இலிங்க வழிபாட்டுக்கு அடிப்படையாக நடுகல் வழிபாடே அமைந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. இத்தகைய சான்றாவணங்களால், சிவ வழிபாடு மிகத்தொன்மையானது என்றும், மானுடர்களின் மிகப்பழைய தெய்வங்களில் ஒருவன் சிவன் என்றும் அறியமுடிகின்றது.

சிந்துவெளி நாகரிகச் சான்றுகள்[தொகு]

சிந்துவெளியில் கிடைத்த "பசுபதி ஈசன்" முத்திரை

பொ.ஊ.மு. 2500 முதல் 2000 வரை நிலவியதாகக் கருதப்படும்[8] சிந்துவெளி நாகரிகக் களவெளிகளில் கிடைத்த சில ஆதாரங்கள், அக்காலத்தே கூட, சிவ வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என்ற ஊகத்தை வலுப்படுத்துவனவாக இருக்கின்றன. மொகெஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் சிவலிங்கத்தை ஒத்த பல கற்கள் கிடைத்துள்ளன. இருகொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரை, ஈசனின் "பசுபதித்" தோற்றத்தைக் குறிக்கின்றது என்றும் அதுவே மிகப்பழைய முந்து-சிவன் சிற்பம் என்றும் சிந்துவெளி ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்தனர்.[9] அதைக் கூர்ந்து ஆராய்ந்த பலர், அது சிவவடிவம் என உறுதியாகச் சொல்லமுடியாதென்றும், எனினும் அமர்ந்திருக்கும் நிலை, தெளிவற்றுத் தெரியும் மூன்று முகங்கள், பிறைநிலா எனக் கொள்ளக்கூடிய இரு கொம்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிவன் எனும் பெருந்தெய்வம் எழுவதற்கு முந்திய வடிவமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.[8]

வேதக் காலச் சைவம்[தொகு]

இலகுலீசர் - பாசுபதத்தைத் தோற்றுவித்தவர்

பொ.ஊ.மு. 1500-க்கும் 500-க்கும் இடைப்பட்ட வேதக்காலத்து நூல்களில் வருகின்ற உருத்திரன், இயமன் முதலான தெய்வங்களின் கலவையாகவே பின்னாளில் சிவன் எழுந்தான் என்பர். இருக்கு வேதத்தில், எவ்வித முகன்மையும் இல்லாமல், மிகச்சில பாடல்களிலேயே போற்றப்படும் உருத்திரன், யசுர் வேதத்தின் திருவுருத்திரப் பகுதியில், இன்றைய சிவனாக வளர்ந்து நிற்பதைக் காணலாம். வேதங்களை அடுத்து உருவான உபநிடதங்களில் பலச் சிவ வழிபாட்டைப் போற்றுவதிலிருந்து, வேதக்காலத்தின் பிற்பகுதியிலேயே சிவன் இன்றைய வழிபாட்டு முகாமையை அடைந்துவிட்டதை அறியமுடியும்.

தென்னகச் சைவம்[தொகு]

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும் அவை கிறித்துவுக்குப் பிந்தியவை என்பது பொதுவான கருத்தாகக் காணப்படுகின்றது. எனினும் தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறித்துவுக்கு முந்திய பிராமி ஆவணங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவச்சின்னங்களும், தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும்.[10]

சைவத்தின் எழுச்சி[தொகு]

தெளிவான அடையாளங்களுடன், சைவமானது முழுமையான ஒரு மதமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டது, பொ.ஊ.மு. 3 முதல் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டுகட்கு இடையில் என்று சொல்லப்படுகின்றது.[11] பொ.ஊ.மு. 6–4-ம் நூற்றாண்டுகளுக்கு இடையே தொகுக்கப்பட்ட சுவேதாசுவதரமே மிகப்பழைமையான சைவ நூலாகக் கொள்ளப்ப்படுகின்றது.[12] உலக இன்பங்களைத் துறந்து கடுநோன்புகள் புரிந்து தாந்திரீக நெறியில் சிவனை வழிபடும் வழக்கம், கிறித்து காலத்திலேயே தொடங்கிவிட்டது. இவர்கள் "பாசுபதர்" என்று அறியப்பட்டனர். பாணினியின் அஷ்டாத்யயி எனும் சங்கத இலக்கண நூலுக்கு பதஞ்சலி முனிவர் எழுதிய மாபாடிய உரையில் (பொ.ஊ.மு. 2-ம் நூற்றாண்டு), பாசுபதர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது. பாசுபதரில் தலைசிறந்தவரான இலகுலீசர் இக்காலத்திலேயே (பொ.ஊ.மு. 2 முதல் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டு) தோன்றி, பாசுபத நெறியை வளப்படுத்தியதாகத் தெரிகின்றது.

சங்கரநாரணன் வடிவில் இந்தோனேசியாவில் சிவன்.

இலகுலீசருக்குப் பின் அவர் ஏற்படுத்திய புரட்சி, பாசுபதத்திலிருந்து, காளாமுகம், காபாலிகம் எனும் இரு கிளைச்சைவங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இவை மூன்றும் ஆதிமார்க்கம் என்றே அறியப்பட்டதுடன், துறவிகளுக்கு, குறிப்பாக அந்தணராகப் பிறந்து சைவத் துறவிகளாக மாறியோரால் மாத்திரமே கடைப்பிடிக்கப்பட்டது. வைணவம், புத்தம், சமணம் முதலான நெறிகளுடன் இவைகொண்ட உரையாடல்கள், சைவத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றதுடன், பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்குப் பின் சைவம் மாபெரும் சமயமாக எழுச்சி பெறுவதற்கான உறுதியான கால்கோள்களாக விளங்கின.

சைவத்தின் உன்னதக்காலம்[தொகு]

பொ.ஊ. 600 முதல் 1200 வரையான காலம், சைவத்தின் பேரெழுச்சிக் காலமாக அறியப்படுகின்றது. ஆதிச் சமயத்துக்குப் பின் உருவான சித்தாந்தமும், வாமம், தட்சிணம் முதலான புறச்சித்தாந்த நெறிகளும் மந்திரமார்க்கம் எனும் பிரிவைச் சைவத்தில் தோற்றுவித்தன. இவை துறவிகளுக்கு மாத்திரமன்றி, இல்லறத்தாருக்கும் உலகியல் இன்பங்களுக்கும் உரிய முன்னுரிமை கொடுத்ததால், தீவிரமாக மக்கள் நடுவில் பரவலாயிற்று. சமணம், புத்தம் என்பவற்றுக்கு எதிராக, அப்பர், சம்பந்தர் முதலான நாயன்மார், பத்தி (பக்தி) இயக்கத்தை ஏற்படுத்தி, சமூக மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தனர். வடநாட்டில் இதே காலத்தில் உருவான புராணங்கள் மக்கள் நடுவில் சைவத்தை எடுத்துச்செல்லலாயின.

இக்காலத்தில் சைவம், இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமன்றி, தென்கிழக்காசியா வரை கூட மிகச்சிறப்புடன் திகழ தொடங்கியது. பாதாமி சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் (பொ.ஊ. 660), கீழைக்கங்கன் தேவேந்திரவர்மன் (பொ.ஊ. 682/683), காஞ்சியின் இரண்டாம் நரசிம்ம பல்லவன் (பொ.ஊ. 680–728) போன்றோர், சைவ மதத் தலைவர்களிடம் மகுடம் பெற்றே பட்டம்சூடிக்கொண்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. கம்போடியாவின் அங்கோர் வழிதோன்றலின் முதல் மன்னன் ஈசானவர்மனும் சைவத்துறவியிடமே அரச மணிமுடி பெற்றுக்கொண்டதும், சாவகத்து மயாபாகித்துப் பேரரசு மன்னன் விசயன், சைவ அரச மகுடம் பெற்று நாட்டை ஆண்டதும், தென்கிழக்காசிய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.[13] இவ்வாறு, துறவிகளின் மதமாக இருந்த சைவம், அரச ஆதரவைப் பெற துவங்கியதுடன், அதற்கு முன் அரச ஆதரவைப் பெற்றிருந்த சமணம், பௌத்தம் என்பவற்றைத் தன் மெய்யியல் செழிப்பால் தோற்கடித்துத் தன்னை வலுப்படுத்திக்கொண்டது.

பிற்காலம்[தொகு]

காஷ்மீரில் பல்கிப்பெருகிய சைவநெறி, தொடர்ச்சியான முகலாயப் படையெடுப்பால் தென்னகம் நாடவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே சைவம் செழித்திருந்த தென்னகம், சைவத்தை மேலும் வரவேற்றதுடன், காசுமீரில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த சித்தாந்த மந்திரமார்க்கத்தை மேலும் வலுப்படுத்தி, இந்திய மெய்யியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, சமற்கிருதம் அல்லாத வேற்றுமொழியொன்றில் - தமிழில் - சைவ மெய்யியலொன்றைத் தோற்றுவித்து வரலாறு படைத்தது. அதேகாலத்தில் பிராமண எதிர்ப்புடன் கன்னடத் தேசத்தில் தோன்றிய வீர சைவம் சாதிமத வேறுபாடின்றி, அனைவரிடமும் சைவத்தைக் கொண்டு சேர்த்தது. இவ்வாறு, தமிழகம், காசுமீர், கன்னடம் ஆகிய மூன்று பகுதிகளும், சைவச் சமயத்தின் தவிர்க்கமுடியாத - இன்றியமையாத பாகங்களாக மாறிப்போயின.

சைவக் கிளைநெறிகள்[தொகு]

சைவம் - அதன் கிளைநெறிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

ஊர்த்தசைவம், அனாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேத சைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், இயோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறு வகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிபடுஞ் சமயம், சைவம் ஆகும்.[14]

  1. காசுமீர சைவம்
  2. வீர சைவம்
  3. சிவாத்துவைதம்
  4. பாசுபதம்
  5. காபாலிகம்
  6. காளாமுகம்

இவற்றின் மெய்யியல்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவச் சித்தாந்தத்தை மெய்யியலாகக் கொண்டு விளங்குவது சித்தாந்தச் சைவம், இந்தியாவில் மட்டுமன்றி நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.

சைவ மெய்யியல்[தொகு]

சிவக்குறியாம் இலிங்கவடிவிலேயே ஈசன் வழிபடப்படுவன்: திருவானைக்கா ஈசன்

வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய உயிரே பதியின் இடையறாத கொடையால் (அ) உதவியால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்டகால பட்டறிவில் பாசத்தடையில் (பற்றிலிருந்து) இருந்து நீங்கிப் பதியைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்தன்மையான பண்பாகும்.

சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் வினை யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.

கொலை, களவு, கள் குடித்தல், ஊன் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் குற்றம் என்கிறது. இதனைச் செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை உய்ப்பர் (அனுபவிப்பர்) என்கிறது. புண்ணியம், பதிப் புண்ணியம் பசுப்புண்ணியம் என இருவகைப்படும். பதிப் புண்ணியம் சிவப்புண்ணியம் எனவும்படும். பசுப் புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதிப் புண்ணியம், சிவப் பெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுப்புண்ணியம் ஆகும். பதிப் புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசுப் புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் உணர்ந்து முடிந்ததும் அழிந்துவிடும். பதிப் புண்ணியப்பயன் சிவப் பெருமானால் உணரப்படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்.

“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்."  - சிவஞானபோதம் 8:1

இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசுப் புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்பு உண்ட உணவின் பயன் உணரப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசுப் புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.

சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவப் புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களைச் செய்தவர்கள் சிவ இன்பத்தையும், உயிர் புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் உய்ப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள்.[15] சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு அணிந்து சிவப்பெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு காலை வழிபாடு செய்துத் திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள் ஓத வேண்டும்.

சைவ அடியவர்கள்[தொகு]

நால்வர்

சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களைச் சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சந்தானக் குரவர் என்போர் இவரிலும் வேறுபட்ட, மெய்யியல் சான்றோர். வீரச் சைவருக்கு பசவர் முதலான சரணரும், காசுமீரிகளுக்கு அபிநவகுப்தர், வசுகுப்தர் முதலானோரும், சிரவுத்தருக்கு அப்பைய தீட்சிதர், ஸ்ரீகண்டர், அரதத்தர் ஆகியோரும், நாத சைவருக்கு கோரக்கர் முதலானோரும் முதன்மையான சைவப்பெரியோர்.

சைவ நெறி நூல்கள்[தொகு]

சைவ ஆகமங்கள் முதன்மையான சைவநூல்கள். வடநாட்டில் வழக்கிலுள்ள பைரவத் தந்திரங்களும் இத்தகையன. தமிழ்ச் சைவருக்குப் பன்னிரு திருமறைகள், பதினான்கு சாத்திரங்கள் முதன்மையானவை. வீரச்சைவருக்கு வசன சாகித்தியம், நாதச் சைவருக்கு சித்தச் சித்தாந்தப் பத்ததி, சிரவுத்தருக்குச் சுருதிச் சூத்தி மாலை என்று சைவ நூல்கள் அளவில.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm
  2. Olasky, M. (2004). The Religions Next Door: What We Need to Know about Judaism, Hinduism, Buddhism, and Islam--and what Reporters are Missing. B&H Publishing Group.. 
  3. Todd M. Johnson and Brian J. Grim. (2013) “The World’s Religions in Figures: An Introduction to International Religious Demography”, First Edition, John Wiley & Sons Ltd., pp. 1 – 27. 
  4. Kanchan, R. K. (1990). Hindu Kingdoms of South-East Asia (Vol. 13). Cosmo Publications.. 
  5. Tiwari, S. K. (2002). Tribal roots of Hinduism. Sarup & Sons.. 
  6. Sen, S. N. (1999). Ancient Indian history and civilization. New Age International.. 
  7. Lochtefeld, J. G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: AM (Vol. 1). The Rosen Publishing Group. p.454. 
  8. 8.0 8.1 > Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.20-28. ISBN 0-521-43878-0.. 
  9. Michaels, Axel (2004). Hinduism: Past and Present. Princeton, New Jersey: Princeton University Press.ப.312 ISBN 0-691-08953-1.. 
  10. பத்மநாதன்.சி (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். பக். 1 - 20. 
  11. Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.204 - 205 ISBN 0-521-43878-0.. 
  12. Chakravarti, Mahadev (1994), The Concept of Rudra-Śiva Through The Ages (Second Revised ed.), Delhi: Motilal Banarsidass, ப.9 ISBN 81-208-0053-2. 
  13. White, D. G. (2001). Tantra in practice (Vol. 8).p.133. Motilal Banarsidass Publ... 
  14. சென்னைப் பேரகரமுதலி - சைவ வகைகள்[தொடர்பிழந்த இணைப்பு]
  15. சைவ சமயம் - வினாவிடை

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_சமயம்&oldid=3896039" இலிருந்து மீள்விக்கப்பட்டது