கோரக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோரக்கர்
பிறப்புகி.பி 11ஆம் நூற்றாண்டு
நிறுவனர்நாத சைவம்
தத்துவம்சித்த சித்தாந்தம்
குருமச்சமுனி

கோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவரும், நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுநரும்[1] ஆவார். இவரை வடநாட்டில் "நவநாத சித்தர்" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு கோரட்சநாதர் என்பது அவரது பெயர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் தமிழகத்திலும் இவர் மிகப்பிரபலமானவராகத் திகழ்கின்றார். வடநாட்டில், கோரக்கரின் சீடர் கொடிவழியில் வந்தோர் கோரக்கநாதியர், தர்சனியர், கண்பதர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.[1] இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ளப்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது. இவர்து சமாதி கோரக்கநாதர் மடத்தில் உள்ளது.

சித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கர் புகழ் இந்தியா முழுக்கப் பரந்து காணப்பட்டது. அவர் காலத்தில் ஏற்பட்ட முகலாயர் ஆதிக்கத்தை வெல்வதற்கான வல்லமையைப் பெற்றிருப்பதற்கு இந்துக்களுக்கு அவர் பேருதவி புரிந்திருந்தார்.[2][3]

தொன்மங்கள்[தொகு]

கோரக்கநாதரின் பளிங்குச்சிலை, இலட்சுமண்கர்க், இராஜஸ்தான்.

கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக தொன்மங்கள் உரைக்கின்றன. தமிழ் மரபில், மச்சமுனி வழங்கிய அருட்சாம்பலை, சந்தேகத்தில், அடுப்படியில் போட்ட பெண்ணின் கோரிக்கைக்கமைய பத்து வயதுப் பாலகனாக இவர் சாம்பலிலிருந்து எழுப்பப்பட்டதாக மரபுரைகள் நிலவுகின்றன.[4] அன்று கார்த்திகை ஆயில்யம் என்று சொல்லப்படுகின்றது. மாசிமகப் பூரணையில் உலக நன்மைக்காக பிரம்ம முனியுடன் இணைந்து கோரக்கர் செய்த வேள்வியைக் குழப்ப தேவர்களால், இருள்தேவி, மருள்தேவி ஆகிய இரு தேவமகளிர் அனுப்பப்பட்டதாகவும், அவர்களின் சாபத்தால், அவர்கள் இருவரும் சிவமூலி - பிரம்மபத்திரம் எனும் இரு மயக்கு மூலிகைகளாக மாறியதாகவும் வாய்மொழிக்கதைகள் சொல்கின்றன. இப்படி வாழ்ந்த கோரக்கர், போகர் பழநியில் பாசாண முருகன் சிலை செய்ய உதவிவிட்டு ஐப்பசிப் பரணியில், போரூரில் அல்லது திருக்கோகர்ணமலையில் அல்லது வட பொய்கை நல்லூரில் சமாதி அடைந்ததாகவும் பல்வேறு தொன்மங்கள் உள்ளன.

வரலாறு[தொகு]

கோரக்பூர் கோரக்கநாதர் கோயில்.

கோரக்கர் வாழ்ந்தது 11ஆம் நூற்றாண்டு எனப்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் போதும், சில சான்றுகள் அவர் 10 முதல் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவர் என்றும் எண்ணச்செய்கின்றன. வடநாட்டில் பஞ்சாப் அல்லது கிழக்கிந்தியப் பகுதியில் அவதரித்த கோரக்கர், ஆரம்பத்தில் பௌத்தராக இருந்ததாகவும், யோகம், சைவம் என்பவற்றில் ஈர்ப்புக்கொண்டு பின் சைவராக மாறியதாகவும் சொல்லப்படுகின்றது.[1]

கோரட்சநாதர் சிற்பம், போர்பந்தர்,குஜராத்.

கோரக்கரின் குரு மச்சேந்திரர் என்பதில் வடநாட்டுத் தென்னாட்டுத் தொன்மங்களில் யாதொரு வேறுபாடும் இல்லை. இமயத்திலிருந்து இலங்கை வரை, இன்றைய காந்தாரத்திலிருந்து அஸ்ஸாம் வரை, அவர் பாரதத்திருநாடு முழுவதும் பயணம் செய்திருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இறுதியில் அவர் மராட்டியத்து கணேசபுரியில் அல்லது கோரக்பூரில் சமாதி அடைந்ததாக[5], வடநாட்டு மரபுகள் உண்டு.

பண்பாட்டுப் பங்களிப்பு[தொகு]

கோரக்கநாதருக்கும் கோரக்பூருக்கும் தொடர்பிருப்பதற்கு ஆதாரமாக, அங்குள்ள நாத செம்பெருந்தாய மடமான கோரக்கநாதர் மடம் சான்று பகர்கின்றது.[6] நேபாளத்திலும் இந்தியாவிலும் வழக்கிலிருக்கும் கூர்க்கா என்பது, கோரக்கரின் பெயரிலிருந்தே வந்திருக்கின்றது. நேபாளத்து கோர்க்கா பகுதிக்கு பெயர் வழங்கக் காரணமும் கோரக்கரே ஆகும்.[7]

வடமொழியிலமைந்த நாத சைவ நூல்களான கோரக்க சங்கிதை, சித்த சித்தாந்த பத்ததி, யோகமார்த்தாண்டம், யோகபீஜம், யோக சிந்தாமணி போன்றன கோரக்கரால் எழுதப்பட்டவை.[8] ஹடயோகம் பற்றி ஆழமாக விவரிக்கும் முதல் நூலான "சித்த சித்தாந்த பத்ததி" இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

தமிழில், சந்திர ரேகை, நமநாசத் திறவுகோல், இரட்சமேகலை, அட்டகர்மம், கற்பசூத்திரம் முதலான நூல்கள் கோரக்கரால் எழுதப்பட்டவை என நம்பப்படுகின்றன.[4]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 George Weston Briggs (1938), Gorakhnath and the Kanphata Yogis, 6th Edition (2009 Reprint), Motilal Banarsidass. ISBN 978-8120805644, p. 228
  2. William Pinch (2012), Warrior Ascetics and Indian Empires, Cambridge University Press, ISBN 978-1107406377, pages 4-9, 28-34, 61-65, 150-151, 189-191, 194-207
  3. David Gordon White (2011), Sinister Yogis, University of Chicago Press, ISBN 978-0226895147, pages 198-207
  4. 4.0 4.1 "கோரக்க சித்தர்". பார்த்த நாள் 2 ஆகத்து 2016.
  5. "Discipleship". பார்த்த நாள் 2007-05-13.
  6. AK Banerjea (1983), Philosophy of Gorakhnath with Goraksha-Vacana-Sangraha, ISBN 978-8120805347
  7. "Guru Gorakhnath". Karma99 (யூன் 2014). பார்த்த நாள் 3 ஆகத்து 2016.
  8. Feuerstein, Georg (1991). 'Holy Madness'. In Yoga Journal May/June 1991. With calligraphy by Robin Spaan. Source: [1] (accessed: February 29, 2011)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரக்கர்&oldid=2901139" இருந்து மீள்விக்கப்பட்டது