உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லி மலை

ஆள்கூறுகள்: 11°28′N 78°10′E / 11.47°N 78.17°E / 11.47; 78.17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லி மலை (Kolli hills) இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் , கொல்லிமலை வட்டம், மற்றும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் ஆகும். இது ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ. உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ.) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக அக்டோபர் 2012 அன்று தொடங்கப்பட்டது.[1][2][3]

கொல்லிமலை
—  பேரூராட்சி  —

மரபுச் சின்னம்
கொல்லிமலை
இருப்பிடம்: கொல்லிமலை

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 11°28′N 78°10′E / 11.47°N 78.17°E / 11.47; 78.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்கள் தொகை

அடர்த்தி

90,370 (2001)

11,077/km2 (28,689/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.158 சதுர கிலோமீட்டர்கள் (3.150 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.town.tn.gov.in/senthamangalam


காரணம்[தொகு]

கொல்லி மலையும் அதன் கீழுள்ள சமவெளியும்

உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு.[சான்று தேவை] இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் 'மூலிகைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

கொல்லி மலையின் ஒரு பகுதி
பேளுக்குறிச்சியில் இருந்து கொல்லிமலையின் தோற்றம்
பேளுக்குறிச்சியில் இருந்து கொல்லிமலையின் தோற்றம்

அமைப்பு[தொகு]

கொல்லி மலை தமிழ் நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குன்றுத் தொடர். இம் மலையானது, தம்மம்பட்டி வரையில் நீண்டு செல்லும் துறையூர்ப் பள்ளத்தாக்கால் பச்சை மலைகளினின்றும் பிரிக்கப்படுகிறது. அயில்பட்டிக் கணவாயினால் போத மலைகளினின்றும் பிரிக்கப்படுகிறது. இந்த மலைத் தொடர், தென்வடலாகப் பதினெட்டுக் கல்லும், கிழ மேற்காகப் பன்னிரண்டு கல்லும் நீளமுடையது. இம் மலையின் தென் சரிவும், மேற்குச் சரிவும், கிழக்குச் சரிவும் சமவெளியினின்றும் 4000 அடி செங்குத்தாக உயர்ந்து செல்லுகின்றன. வடக்குச் சரிவு காட்டாறுகளால் அறுத்துச் செல்லப்பட்ட வரிசை வரிசையான படுகைகள் நிறைந்து பிளவுபட்டுக் காணப்படுகிறது. இப் படுகைகள் வடகிழக்குப் பக்கமாக ஓடுகின்றன. இவைகளில் குறிப்பிடத்தக்கவை, வரகூர் கோம்பை, மூலைக்குரிச்சி, பெரிய கோம்பை, வாலக் கோம்பை என்பன. இம் மலைப் பகுதி உயர்ந்த ஒரு பீடபூமியைத் தன்னகத்தில் கொண்டு விளங்குகிறது. அப்பீடபூமியானது ஒரு கவிகலன் (basin) போல் நடுவில் தாழ்ந்தும், பக்கங்களில் உயர்ந்தும் உள்ளது. உயர்ந்து செல்லும் இதன் பக்கங்களில் அடுக்கடுக்காக நிலங்களைப் பண்படுத்திப் பயிர்த் தொழில் செய்கிறார்கள். பயிர்கள் வளர்ந்து, பச்சைப் பசேலென்று ஆட்சியளிக்கின்றது.[4]

ஆத்தூர் வட்டத்திலிருக்கும் கொல்லி மலைப் பகுதி நாமக்கல் பகுதியினின்றும் மாறுபட்டதாகும். இம் மலையின் தென்மேற்குப் பகுதியானது பைல் நாட்டின் பருவுயர் சிகரங்களைக் கொண்டது. இச் சிகரங்களினின்றும் வட சரிவிலுள்ள பள்ளத்தாக்கின் இனிய காட்சிகளைக் காணலாம். அருவிகள் அச்சரிவில் ஒலியோடு விழுந்து செல்லும். அச்சிற்றாற்றுப் படுகைகளின் உச்சியைக் கடந்து செல்லும் மலை வழிப் பாதையிலிருந்து நோக்கினால் சமவெளிகளையும், அவற்றை வடக்கில் தடுத்து நிறுத்தும் சேர்வராயன், கல்ராயன், தேனாந்தி (Tenande) மலைகளின் இயற்கை அழகையும் கண்டு மகிழலாம். மேற்கிலுள்ள பீடபூமியின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரமுள்ளது. வடமேற்குப் பீடபூமியின் உச்சி 400 அடி தாழ்ந்தது. வடக்கிலுள்ள பள்ளத்தாக்குகளைப் பிரிக்கும் மலைத்தொடர் 3000 அடி உயரமுள்ளது. ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி ஆகும்.[4]

கொல்லி மலையானது சுவேதா ஆறு வசிட்ட நதி போன்ற சிற்றாறுகளின் நீர்பிட்டிப்புப் பகுதியாக உள்ளது. இம்மலைப் பகுதியில் தேன் கரடி, கருத்த வரையாடுகள், காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குள் உள்ளன.[4]

வரலாற்றுக் குறிப்புகள்[தொகு]

பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் பொ.ஊ. 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.

இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.[சான்று தேவை]

சங்ககாலத்தில் கொல்லிமலை[தொகு]

அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.

கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்[தொகு]

பெருஞ்சேரல் இரும்பொறை[தொகு]
பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கொல்லிப்பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் என்னுமிடத்தில் நடந்த போரில் இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானையும், அவனோடு சேர்ந்துகொண்டு தாக்கிய இருபெரு வேந்தரையும் வென்றான் என்று இப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகின்றது.
- பதிற்றுப்பத்து 8 பாடல் 73, புலவர் அரிசில் கிழார்
பொறையன்[தொகு]
கொல்லிமலை நாட்டு அரசன் பொறையன்.
- இளங்கீரனார் – நற்றிணை 346
வேற்படை கொண்ட பசும்பூண் பொறையன் இதன் அரசன்
- ஔவையார் – அகம் 303
பொறையன் இதன் அரசன்
– நற்றிணை 185
  • சேர மன்னர்களின் கொங்குநாட்டுத் தலைநகரான கருவூர்ப் பகுதியில் சங்ககால நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள் சங்ககாலத் தாமிழி (அசோகன் காலத்துப் பிராமி) என்று கொண்டு ஐராவதம் மகாதேவன் என்வர் படித்துக் காட்டியுள்ளார். கொல்ஈ, புறை பரணிடப்பட்டது 2010-10-26 at the வந்தவழி இயந்திரம் என்னும் சொற்கள் அதில் உள்ளன. இவற்றை இவர் கொல்லிப்பொறையன் என்னும் பெயரோடு பொருத்திப் பார்ப்பது வலிமை மிக்க சான்றாகும்
சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை[தொகு]
சேரமான் யானைக்கட் சேய் தாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லியோர் அடுபொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
- குறுங்கோழியூர் கிழார் - புறம் 22
வானவன்[தொகு]
வெல்போர் வானவன் இதன் அரசன்
- தாயங்கண்ணனார் – அகம் 213
இவன் அதனைப் போரிட்டு வென்றான்
- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33
அதியமான்[தொகு]
கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்னும் ஊர்ப்பகுதியில் அதிகமானும் இருபெரு வேந்தரும் இணைந்து சேரனைத் தாக்கியபோது பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான்
– பதிற்றுப்பத்து 8ஆம் பத்து பதிகம்
ஓரி[தொகு]
‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’
- பெருஞ்சித்திரனார் – புறம் 158
வல்வில் ஓரியும் கொல்லிப் பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
- வன்பரனர் புறம் 152
வல்வில் ஓரி கொல்லிமலை அரசன்
- கபிலர் – குறுந்தொகை 100,
பரணர் - அகம் 208
புகழ்மிக்க ஓரியைக் கொன்று முள்ளூர் மன்னன் காரி கொல்லிமலை நாட்டைச் சேரலர்க்குக் கொடுத்தானாம்.
- கல்லாடனார் – அகம் 209

கொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்[தொகு]

காந்தள் போல் கூந்தல் மணம்

கொல்லியில் பூக்கும் கார்மலர் (கார்த்திகை எனப்படும் காந்தள் பூ) போலத் தலைவியின் கூந்தல் மணந்ததாம்.
- பரணர் - அகம் 208

யானை

கொல்லிமலைப் பூக்களுக்கு இடையே பிடி(பெண்யானை) மறந்திருப்பது போல இளஞ்சேரல் இரும்பொறையின் பட்டத்தரசி மகளிர் ஆயத்தாரிடையே மறைந்திருந்தாளாம்.
- பெருங்குன்றூர் கிழார் – பதிற்றுப்பத்து 81

மூங்கில்

தலைவியின் தோள் கொல்லிமலை மூங்கில் போன்றதாம்
- தாயங்கண்ணனார் – அகம் 213,
- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33

சூர்மகள்

சூர் மகள் விரும்பும் கொல்லிமலையின் உச்சியிலிருந்து கொட்டும் அருவியின் ஓசை போல அலர் ஊரில் பரவியது.
- ஔவையார் – அகம் 303

கொல்லிப்பாவை மடப்பத்தன்மை

கொல்லிப்பாவை போல் தலைவி மடப்பத்தன்மை உடையவளாக விளங்கினாளாம்
- கபிலர் – குறுந்தொகை 100\882,
‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம்.
- பரணர் – அகம் 22\1524,

கொல்லிப்பாவை[தொகு]

கொல்லிமலையில் வீற்றிருக்கும் தமிழர்களின் தெய்வம் இந்த பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாக இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது.[சான்று தேவை] குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். அவையாவன மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா போன்றவைகள் ஆகும்.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

ஆகாய கங்கை அருவி[தொகு]

கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.

ஆகாயகங்கை அருவி

கொல்லிப் பாவைக் கோவில்[தொகு]

கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.

அறப்பளீஸ்வரர் கோவில்[தொகு]

சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

அறப்பளீஸ்வரர் கோவில்

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.

முருகன் கோவில்[தொகு]

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.

மாசி பொியசாமி கோவில்[தொகு]

கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.

படகு சவாரி[தொகு]

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்

வாசலூர்பட்டி படகுத் துறை

வியூ பாயிண்ட்[தொகு]

இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்

வல்வில் ஓரி பண்டிகை[தொகு]

வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், தம்மம்பட்டி, மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.

2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மற்றும் இதர கிழக்கு மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தம்மம்பட்டி வழியாக அதிக கொண்டை ஊசி வளைவுகள் இல்லாத இரண்டு பாதைகள் உள்ளன. சென்னை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், தம்மம்பட்டி, சேரடி வழியாக ஒரு சாலையும் தம்மம்பட்டி முள்ளுக்குறிச்சி வழியாக இன்னொரு சாலையும் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குடவரை (கொல்லிமலை)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cms.tn.gov.in/sites/default/files/gos/rev_t_229_2012.pdf
  2. kumaresankollimalai,fb.kumara hills cantact 9626384216Kolli Hills to become separate taluk today October 12, 2012
  3. http://dinamani.com/edition_dharmapuri/namakkal/article1297966.ece?service=print
  4. 4.0 4.1 4.2 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 51-94". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kolli Hills
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லி_மலை&oldid=3885012" இலிருந்து மீள்விக்கப்பட்டது