இந்திய அஞ்சல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு1 அக்டோபர் 1854; 169 ஆண்டுகள் முன்னர் (1854-10-01)[1][2]
தலைமையகம்தாக் பவன், சன்சத் வீதி, புது தில்லி
பணியாட்கள்416,083 (மார்ச் 2021)[3]
ஆண்டு நிதி20,820.02 கோடி (US$2.6 பில்லியன்) (2022–23)[4]
அமைச்சர்
துறை தலைமைகள்
  • வினீத் பாண்டே, செயலாளர்
  • அலோக் சர்மா, பொது இயக்குனர்[5]
மூல துறைஅஞ்சல் துறை, தகவல் தொடர்பு துறை அமைச்சகம், இந்திய அரசு
கீழ் துறை
முக்கிய ஆவணம்
வலைத்தளம்www.indiapost.gov.in

இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.

இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும் (சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.

வரலாறு[தொகு]

இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764 - 1766களில் பம்பாய், மெட்ராஸ் மற்றும் வங்காள மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்டது.

அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அசாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம் & அசாம், பிகார் & ஒரிஸ்ஸா, பம்பாய் (சிந்து உள்ளடக்கியது), பர்மா, மெட்ராஸ், பஞ்சாப் & வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 சூலை 1852ல் சிந்து மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன.

துறை அமைப்பு[தொகு]

இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 23 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல் சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது.

அஞ்சல் அலுவலகங்களின் வகைகள்[தொகு]

இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

  1. தலைமை அஞ்சல் அலுவலகங்கள்
  2. துணை அஞ்சல் அலுவலகங்கள்
  3. புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்
  4. புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்

அஞ்சல் அலுவலகச் சேவைகள்[தொகு]

இந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

  1. ராஜதானிப் பிரிவு - தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  2. பச்சைப் பிரிவு - தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டத் அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.
  3. பெருநகரப் பிரிவு - பெங்களூர் , ஐதராபாத், கொல்கத்தா, சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும்.
  4. வணிகப் பிரிவு - அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.
  5. பருவ இதழ்கள் பிரிவு - அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.
  6. மொத்த அஞ்சல் பிரிவு - பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்.

அஞ்சல் குறியீட்டு எண்[தொகு]

அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.

உதாரணமாக:

பலதரப்பட்ட அஞ்சல் சேவைகள்[தொகு]

பொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன.

ஒரு அஞ்சல் அலுவலம்
  • அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை
  • பதிவு அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல்
  • அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order)
  • அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels)
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை
  • 1986 முதல் விரைவு அஞ்சல் சேவை மூலம் 35 கிலோ எடை வரையிலான பொருட்களுக்களை அனுப்பலாம்.
  • 2009 ஆண்டில் தொடங்கப்பட்ட லாஜிஸ்டிக் சேவை மூலம் வீட்டு உபயோகப் பொருட்களைக் கூட அனுப்பலாம்.
  • விரைவஞ்சல் சேவை உலக அளவில் 99 நாடுகளில் உள்ளது.
  • ‘ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பட்டுவாடா விவரத்தை அறியலாம்.
  • செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி
  • மின்னணு அஞ்சல்
  • இணைய வழி பில் தொகை செலுத்தல்
  • புத்தகங்கள் விற்பனை

இதர சேவைகள்[தொகு]

இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.

  • பொது சேமநல நிதி
  • தேசிய சேமிப்புப் பத்திரம்
  • வங்கி சேமிப்புக் கணக்கு
  • மாத வருவாய்த் திட்டம்
  • வைப்புத் தொகைத் திட்டங்கள்
  • கடவுச்சீட்டு விண்ணப்பம்
  • தங்கப் பத்திரம்
  • காப்பீட்டுத் திட்டச் சேவை
  • உள்ளுர் கேபிள் உரிமம்
  • கிசான் விகாஸ் பத்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "GPO: awaiting restoration". தி இந்து. Archived from the original on 8 May 2003. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
  2. "Postal Network and System". india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Annual Report 2020-21" (PDF). India Post. பார்க்கப்பட்ட நாள் 9 October 2021.
  4. "Union Budget (2022-23) - Department of Posts" (PDF). Union Budget - Ministry of Finance. பார்க்கப்பட்ட நாள் 9 October 2021.
  5. "Organization Overview". India Post. பார்க்கப்பட்ட நாள் 9 October 2021.

இவற்றையும் காணவும்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Headrick, Daniel. "A double-edged sword: Communications and imperial control in British India." Historical Social Research/Historische Sozialforschung (2010): 51–65. in JSTOR
  • Majumdar, Mohini Lal. The imperial post offices of British India, 1837-1914 (Phila Publications, 1990)
  • Rahman, Siddique Mahmudur. "Postal Services During The East India Company's Rule in Bengal." Bangladesh Historical Studies 19 (2002): 43+


வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அஞ்சல்_துறை&oldid=3742049" இலிருந்து மீள்விக்கப்பட்டது