இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Emblem of India.svg

இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி:
இந்திய அரசியலமைப்பு

Constitution of India.jpg
முகப்புரை


மற்ற நாடுகள் ·  சட்டம் நுழைவு

இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன. ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே, நீதிப் புனராய்வு என்று பெயர். அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் அவசரக் காலங்களில், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். மற்ற சூழ்நிலைகளில், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால், பாதிக்கப் பட்டவர் பின்வரும் நீதிப் பேராணைகள் வழியாக, நீதியை உச்சநீதி மன்றத்திலோ(அரசியலமைப்பு உட்பிரிவு(சரத்து)-32 வழியாக), உயர்நீதி மன்றத்திலோ (உட்பிரிவு-226 வழியாக)பெற முடியும்.

இதற்கு ஐந்து வகையான நீதிப் பேராணைகள் தீர்வு உள்ளன.அவை:

  1. ஆட்கொணர் நீதிப்பேராணை
  2. கட்டளை நீதிப்பேராணை
  3. தடை நீதிப்பேராணை
  4. உரிமைவினா நீதிப் பேராணை
  5. தடைமாற்று நீதிப்பேராணை

என அழைக்கப்படுகின்றன.

ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus)[தொகு]

தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

வேறுபாடு:நீதிமன்ற அழைப்பாணை இட்டும் நீதிமன்றம் காவல்துறையினரை, குறிப்பிட்ட நபரை அழைத்து வர ஆணையிடலாம். அவ்வாறு அழைக்கப்படும் நபர் சட்டக் கடமைமீறலைச் செய்தவர் ஆவார். ஆனால், இந்த நீதிப் பேராணை, சட்ட உரிமைக்காக வழங்கப்படுகிறது.

கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus)[தொகு]

ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.

தடை நீதிப்பேராணை (Writ of Prohibition)[தொகு]

நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து, அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்பதாகும்.

உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto)[தொகு]

பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorari)[தொகு]

நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.

மேற்கோள்கள்[தொகு]