உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லாடனார் (சங்க காலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லாடனார் (Kalladanar) சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] இவரது பதினொரு பாடல்கள் சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன.[2] அவற்றில் இவர் பல அரசர்களையும், நாட்டுமக்களையும் குறிப்பிட்டுள்ளார். சைவ திருமுறையான பதினொன்றாம் திருமுறையில் நக்கீர தேவர் இயற்றிய திருக்கண்ணப்பதேவர் திருமறத்திற்கு பிறகு இவரது பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன.[2] சங்காலப் புலவரான இவரை கல்லாடதேவர், கல்லாட தேவ நாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[2] இவர் பொ.ஊ. 9ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

கல்லாடம் என்பது வேங்கட மலைக்கு வடபால் ஆந்திர மாநிலத்தில் உள்ளதோர் ஊர். இவ்வூரில் வாழ்ந்த புலவர் கல்லாடனார். இவர் தன் குடும்பம் பசியால் வாடியபோது காவிரிப் படுகை நோக்கி வந்தார். வழியில் பொறையாற்று கிழானும், அம்பர் கிழான் அருவந்தையும் இவரைப் பேணிப் பாதுகாத்தனர். இவர் மேலும் தென்திசை நோக்கிச் சென்றார். நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் பகைவரை வெற்றி கொண்ட காட்சியை நேரில் கண்டு பாடியுள்ளர். பாண்டியனும் இவருக்குப் பரிசில் பல நல்கினான்.

கல்லாடனார் ஊர்

[தொகு]

ஆந்திர மாநிலத்தில் கல்லாடம் என்னும் ஊர் உள்ளது.[3] புலவர் கல்லாடனார் வேங்கட மலையையும், அதன் அரசன் புல்லியையும் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.[4] இதனால் கல்லாடம் ஊரில் வாழ்ந்த புலவர் கல்லாடனார் என்பது தெளிவாகிறது. வேங்கட நாட்டுக்கு வடபால் பசியோடு வாடிய தன் சுற்றம் பொறையாறு பாயும் நெல்வளம் மிக்க ஊருக்குச் சென்று பொறையாற்று கிழானின் காத்திருந்தததை இவர் குறிப்பிடுகிறார்.[5] இதனாலும் இச்செய்தி உறுதியாகிறது.

கல்லாடனார் பாடல்கள்

[தொகு]
அகநானூறு 9, 63, 113, 171, 199, 209, 333,
குறுந்தொகை 260, 269
புறநானூறு 23,[6] 25,[7] 371, 385, 391

பாடல் தரும் செய்திகள்

[தொகு]

அகத்திணைப் பாடல்கள்

[தொகு]

அகம் 9

நான் வினை முற்றி இல்லம் மீள்கிறேன். என் நெஞ்சம் என் தேரினும் முந்திச் சென்று அவளைக் காண்கிறதே என்று எண்ணித் தலைவன் வியக்கிறான்.

அகம் 83

நான் புல்லியின் வேங்கடத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறேன். இங்குச் செல்ல அன்போடு அனுப்பிவைத்த நெய்தல்மலர் போன்ற அவளது கண் என் கூடவே வருகிறதே என்று தலைவன் நினைக்கிறான்.

அகம் 113

என் உடல் வேண்டுமானால் இங்கேயே இருக்கட்டும். என் உயிர் அவர் பொருள் செய்யுமிடத்துக்குச் செல்லட்டும் என்கிறாள் தலைவி

அகம் 171

கரடி உயிரைக் கொல்லாமல் இரும்பைப் பூவை உண்ணும் சுரத்தில் சென்றவர் பண்பை நினைத்து வருந்தாதே - தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

அகம் 199

வாகைப் பெருந்துறைப் போரில் நன்னனைக் கொன்று, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் தான் இழந்த நாட்டுவளச் செல்வத்தைத் திரும்பப் பெற்றது போன்ற செல்வத்தை மிகுதியாகப் பெற்றாலும் இவளைப் பிரிந்து உன்னோடு வரமாட்டேன் என்று பொருள் தேடச் செல்ல விரும்பிய தன் நெஞ்சுக்குத் தலைவன் சொல்கிறான்.

அகம் 209

அலர் ஆலங்கான வெற்றி போல் பரவுகிறது. காரி, ஓரியைக் கொன்று சேரலர்க்கு அளித்த ஓரியின் கொல்லிமலைப் பாவை போன்ற உன் அழகு அழிய அழாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

அகம் 333

தூதனாவது அவர் வருகையைச் சொல்லக்கூடாதா?

குறுந்தொகை 260

தொண்டை நாட்டுக்குக்குப் பொருள் தேடச் சென்றவர் வரவில்லையே! - தலைவி ஏக்கம்.

குறுந்தொகை 269

சுறா எறிந்த புண் ஆறித்தந்தை கடலுக்குச் சென்றுவிட்டான். தாய் உப்பு விற்கச் சென்றுவிட்டாள். வரலாம். - தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

புறத்திணைப் பாடல்கள்

[தொகு]

புறம் 23 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது.

ஆலங்கானப் பாரால் பகைவர் நாடு சீரழிந்துள்ளதைப் படம்பிடிக்கும் பாடல் இது.
  • துறை - செழியனின் யானைப்படை கலக்கியது.
  • புலன்(நிலம்) - சூரபன்மாவை அழித்த முருகனின் படை போல, இவனது கூளிப்படை கொள்வதைக் கொண்டு, வேண்டாத்தை வீசிச் சிதருண்டு கிடந்தது.
  • கா(ஊர்ப் பூங்கா) - கோடாரி பாய்ந்து காவல்மரங்கள் சாய்ந்து கிடந்தன.
  • காடு - ஆண்மானைப் புலி கொன்றுவிட்டதால் தவிக்கும் பெண்மான் தன் குட்டியுடன் கொட்டிக் கிடக்கும் பூளாப்பூவை உண்ணாமல், வேளைக் கீரையைக் கறித்துக்கொண்டிருந்தது.
  • மருங்கு(சுற்றுவட்டாரம்) - செழியன் இட்ட தீயில் வெந்துகொண்டிருந்தது.

புறம் 25 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது.

ஞாயிறு திங்களுடன் செல்வது போலப் போர்க்களம் சென்றாய். பகைவரைக் கொன்றாய். அவர்களது கைம்மை மகளிர் கூந்தல் கொய்யக் கண்டும் உன் வேல் சிதையவில்லையே! என்கிறார் புலவர்.
  • ஞாயிறு - நெடுஞ்செழியன், திங்கள் - அவன் குலம்

புறம் 371 - (பாண்டியன்) தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது.

கல்லாடனார் அரிசி இல்லை என்று இந்த நெடுஞ்செழியனை அவன் போர்கள உழவு செய்துகொண்டிருந்த பாசறைக்கே சென்று தன் ஆகுளிப் பறையை முழக்கினாராம். குடர்மாலை சூடியிருந்த அவன் 'ஆனாப் பொருள்' (அழியாத செல்வம்) நல்கினானாம். அதற்காக அவன் வானத்து மீனின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலநாள் வாழவேண்டும் என்று கல்லாடனார் வாழ்த்துகிறார்.

புறம் 385 - அம்பர் கிழான் அருவந்தையைப் பாடியது.

காவிரி நீர் பாயும் ஊர் அம்பர். அதன் தலைவன் அம்பர் கிழான் அருவந்தை. கல்லாடனார் அவன் வாயிலில் நின்று பாடவில்லையாம். பிறனொருவன் வாயிலில் நின்றுகொண்டு தன் தடாரிப் பறையை முழக்கினாராம். அதைக் கேட்ட அம்பர் கிழான் அருவந்தை தானே முன்வந்து புலவரின் பசியைப் போக்கினானாம். அவர் உடுத்தியிருந்த அழுக்கால் நீலநிறத்துடன் காணப்பட்ட அவரது ஆடையைக் களைந்துவிட்டு வெண்மையான புத்தாடை அணிவித்தானாம். அதனால் அவன் தன் வேங்கடமலையில் பொழியும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டுமாம். - இது புலவர் வாழ்த்து.

புறம் 391 - பொறையாற்று கிழானைப் பாடியது

  • இந்தப் பாடலில் பல அடிகள் சிதைந்துள்ளன.
வேங்கடமலை இருக்கும் வடபுலம் பசியால் வாடுகிறது என்பதால் நானும் என் சுற்றமும் இங்கு வந்து உன்னிடம் தங்கியுள்ளது. நீ உன் மனைவியோடு வந்து எங்கள் உயிரைக் காப்பாற்றினாய். (காவிரிப்)புனல் பாயும் உன் நாடு 'வேலி ஆயிரம் விளைக'

கல்லாடனார் காட்டும் அரசர்கள்

[தொகு]

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அஃதை, அம்பர்கிழான் அருவந்தை, ஓரி, காரி, நன்னன், பாணன், புல்லி, பொறையாற்று கிழான்,

கோசர், சேரலர், தென்னர், தொண்டையர்

அஃதை

அஃதை நட்பிற்கு அடையாளமாகத் வாழ்ந்தவன். சிறந்த வள்ளல். பல்வேல் கோசர் குடியினரின் தலைவன். நெய்தலஞ்செறு இவன் நாடு. - அகம் 113

செழியன் = தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

தலையாலங்கானப் போரில் செழியன் எழுவர் கூட்டணியை வென்றான். - அகம் 209

தொண்டையர்

வழை மரங்கள் அடர்ந்த மலையையும், ஓமை மரங்கள் நிற்கும் சுரனும் உடையது தொண்டை நாடு - குறுந்தொகை 260

நன்னன், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

வாகைப் பெருந்துறை என்னுமிடத்தில் நடந்த போரில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன் நன்னனைக் கொன்று தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான். - அகம் 199

பாணன்

இவன் நாட்டு மக்கள் பகைவர்க்கும் சுரைக்குடுக்கையில் அரிசியும் கருணைக் கிழங்கும் தந்து உதவி வேலை உயர்த்திக்கொண்டு ஆடி விழாக் கொண்டாடுவர். - அகம் 113

புல்லி

புல்லி வேங்கட நாட்டு அரசன். - அகம் 73, அகம் 209

வல்வில் ஓரி, முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி, சேரலர்(சேர மன்னர்கள்)

காரி ஓரியைக் கொன்று ஒரியின் கொல்லிமலை நாட்டைச் சேர மன்னர்களுக்குத் தந்தான். -அகம் 209

கல்லாடனார் பாடலில் ஊர்கள்

[தொகு]

ஆலங்கானம்

தென்னர் கோமான் செழியன் ஆலங்கானப் போரில் எழுவர் கூட்டுப்படையை வென்ற செய்தி நாடெங்கும் பரவியிருந்தது போல அலர் பரவியிருந்தது. - அகம் 209

வேங்கடம்

யானைகள் மிகுந்த நாடு. யானைகள் மரா மரத்தைக் கிழித்து உண்ணும். அங்கு வாழ்ழும் இளையர் மரா மர நாரால் யானைகளைப் பிணித்துக் கொண்டுவந்து ஊரில் கட்டுவர். - அகம் 83

அரிய செய்திகள்

[தொகு]
  • மகளிர் உலக்கையால் இடிக்கும் உரல் பாணி ஒலி குடிஞை என்னும் ஆந்தை ஒலிக்கு எதிரொலி போல் கேட்கும். - அகம் 9
  • இல்லத்தில் மாலை வேளையில் பல்லி சகுனம் பார்ப்பர். - அகம் 9

செடியினம்

[தொகு]

இரும்பை

இரும்பைப் பூ அம்புமுனை போல் அரும்பு விடும். பூக்கும்போது அதன் வாய் இழுதி என்னும் நரம்பு போல் நடுவில் துளை கொண்டிருக்கும்.காற்று அடிக்கும்போது பனிமழைக்கட்டி வானில் சிதறுவது போல் சிதறும். - அகம் 9

ஞெமை

பாணன் நாட்டைத் தாண்டிச் சென்றால் ஞெமை மரக் காடு இருக்கும். அந்த மரம் தலைவிரி கோலத்துடன் காணப்படும். - அகம் 171

பனை

கோடையின் கொடுமையால் மடல் உதிர்ந்த பனைமரம் போல யானை தன் கையை உயர்த்திப் பிளிறும். - அகம் 333

மராஅம்

மராஅம் என்னும் மரா மரம் வலப்புமாக முறுக்கிக்கொண்டு சுழன்று ஏறும். - அகம் 83

யா மரம்

யா மரத்தின் தளிர் அரக்கைத் தெளித்தது போல் இருக்கும். இது மகளிர் மேனியில் ஊரும் பசப்புக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. - அகம் 333

விலங்கினம்

[தொகு]

எண்கு

மானின் ஓசை கேட்டு எய்து புலால் உண்ணும் மக்களைப் போல் அல்லாமல் இரும்பை மரத்தில் ஏறி அதன் பூக்களை உண்ணும். - அகம் 171

அடிக்குறிப்பு

[தொகு]
  1. கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 46-52.
  2. 2.0 2.1 2.2 http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=20
  3. ஆந்திர மாநிலத்தில் கல்லாடம் என்னும் ஊர் உள்ளது.
  4. புல்லிய
    வேங்கட விறல் வரைப் பட்ட
    ஓங்கல் வானத்து உறையினும் பலவே! (புறநானூறு 385)
  5. வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
    ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் (புறநானூறு 391)
  6. கல்லாடனார் பாடல் புறநானூறு 23
  7. கல்லாடனார் பாடல் புறநானூறு 25
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாடனார்_(சங்க_காலம்)&oldid=4137237" இலிருந்து மீள்விக்கப்பட்டது