சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு சுறாவின் உடற்பகுதிகள்
ஒரு சுறா மீன்
சிறியவெண்சுறாக்கள், சென்னை
பெருஞ்சுறாக்கள் - Carcharhinus melanopterus

சுறா என்றழைக்கப்படும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன. 22 சென்டி மீட்டர் நீளம் உள்ள பிக்மி சுறா முதல் 12 மீட்டர் நீளம் உள்ள திமிங்கலச் சுறா வரை சுறாக்களில் பல சிற்றினங்கள் உள்ளன. சுறா மீனின் உடல் எலும்பு வளையக்கூடிய குருத்தெலும்பால் (கசியிழைய என்பு) ஆனது[1]

சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. பத்து இலட்சம் துளிகளில் ஒரு துளி இரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும். சுறாக்களின் கேள்திறனும் அதிகம்; நுண்ஒலிகளைக் கேட்கும் திறன் பெற்றவை. சுறாக்களுக்குக் குறைந்தது நான்கு வரிசைப்பற்கள் இருக்கும். இரையைக் குத்திக் கிழிக்கிறது எல்லாமே முதல் வரிசைப் பற்கள்தான். இதுல ஒரு பல் உடைந்து விழுந்தால், பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும். இல்லைன்னாக்கூட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுறாக்களுக்குப் புதிய பல் முளைத்துவிடுகிறது. புலி சுறாக்களுக்கு பத்தாண்டுகளில் 24,000 பற்கள் முளைக்கின்றன. சுறாக்களால் வண்ணங்களைப் பிரித்து அறிய முடியாது. பார்வையும் கூர்மை கிடையாது. மந்தமான வெளிச்சத்தில்தான் இதற்குப் பார்வை தெளிவாகத் தெரியும். சுறாவின் உடல் எலும்புகள் எல்லாம் குருத்தெலும்பால்(கசியிழைய என்பு) ஆனவை

சுறாக்களில் சுமார் 440 வகை உண்டு. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை. சுறாக்குட்டிகளுக்குப் பிறக்கும்போதே பற்கள் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவை இரண்டு குட்டிகள் போடும். சில வகை சுறாக்கள் நூறு குட்டிகள் கூடப் போடும். குட்டிகளை அம்மா விட்டுவிட்டுப் போய்விடும். இவை தாமே இரை தேடிப் பிழைத்துக் கொள்ளும். பெரிய சுறாக்கள், குட்டிச் சுறாக்களைச் சாப்பிட்டுவிடும். ஆனால், தாய் தன் குட்டிகளைச் சாப்பிடாது. மாதக்கணக்கில் இவை பட்டினி கிடக்கும். உடம்பு இளைக்காது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பும் எண்ணெயும் இவைகளைப் பாதுகாக்கும்.வேல் சுறா 15 மீட்டர் நீளம் வரை வளரும், ட்வாப் சுறாவின் நீளம் 5 அங்குலமே.

சுறாவும் மாந்தனும்[தொகு]

கடல்களில் மீன் பிடிக்கும் தொழிலில், இயந்திர வலையிழுப்புக் கப்பல்களின் உதவியால் மிகப் பெருமளவில் மீன்கள் பிடிக்கின்றார்கள். உலகில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் டன் எடையுள்ள மீன்களைப் பிடிக்கின்றார்கள் [2] . இப்படி அளவுக்கு அதிகமாக கடல்வாழ் மீன்களைப் பிடிப்பது போலவே, சுறா மீன்களையும் மிக அதிக அளவில் பிடிகிக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 40 மில்லியன் சுறாமீன்களைப் பிடிக்கின்றார்கள் [2] . சுறாவின் செட்டை அல்லது மீன்சிறை , மீன்சிறகு என்னும் துடுப்பு போன்ற பகுதியை மக்கள் விரும்பி உண்ணுவதால் இப்படிப் பெருமளவில் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன [2]

சுறாவின் பற்கள்[தொகு]

சுறாவின் பற்கள் நேரடியாக தாடையுடன் இணைக்கப்பட்டுள்ளன.இவை அடிக்கடி விழுந்தாலும் மீண்டும் முளைத்துவிடும்.சில சுறாக்கள் தங்கள் வாழ்நாளில் 30000 பற்களை இழக்கின்றன. பல் மீள்முளைத்தல் காலம் எட்டு நாள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும்.சுறாவின் பற்களின் வடிவம் அவற்றின் உணவைப் பொறுத்தது.

சுறாவின் துடுப்புக்கள்[தொகு]

சுறா எட்டு துடுப்புகள் கொண்டிருக்கும்.சுறாக்கள் துடுப்புக்களைப் பயன்படுத்தி நேரே உள்ள பொருட்களை விலகிச் செல்கின்றன.சுறாவின் துடுப்புக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை சூப்புக்கு சீனாவில் பெரும் கிராக்கி நிலவுவதுதான் சுறாக்கள் இப்படி வேகமாக பிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. சுறாக்கள் பிடிக்கப்பட்டு அவற்றின் துடுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீதமுள்ள சுறாக்களின் உடல் கடலிலேயே தூக்கி வீசப்பட்டுகிறது.[3]

சுறாவின் வால்கள்[தொகு]

வால்கள் வேகம், முடுக்கம், உந்து சக்தி போன்றவற்றை சுறாவுக்கு அளிக்கும்.

அழிவடையக் காரணம்[தொகு]

இவை மனிதனால் வேட்டையாடப்பட்டே அதிகளவு அழிவடைகின்றன. மனிதர்கள் கிழவான் போன்ற மீன்களை வேட்டையாடும் போது பிடிபட்டு அழிவடைகின்றன. மனிதன் சுறாக்களை வேட்டையாடுவதன் நோக்கம்:

  • அவற்றின் செட்டைகளை(துடுப்புகளை) பெற்றுக்கொள்ள
  • இறைச்சிக்காக
  • சுறா எண்ணெய் பெற்றுக்கொள்ள

அழிவின் விளிம்பில் உள்ள சுறா இனங்கள்[தொகு]

அழிவின் விளிம்பில் இருப்பதாக விஞ்ஞானிகளால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் ஐந்து ரக சுறாக்களை பிடிப்பதற்கும், அவற்றின் துடுப்புக்களை வெட்டி எடுப்பதற்கும் உலக அளவில் தடைவிதிக்கப்படவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் முக்கிய கோரிக்கை ஆகும். 2010 ஆம் ஆண்டு நடந்த இதேபோன்றதொரு மாநாட்டில் இதற்கு தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை உலக நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் என்று விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். [4]

சுறா வேட்டை[தொகு]

இந்த விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒரு ஆண்டுக்கு உலக அளவில், குறைந்தது பத்துகோடி சுறாமீன்கள் கொல்லப்படுவதாக கணக்கிட்டுள்ளனர். ஆனால் இதை ஈடுகட்டுமளவுக்கு ஆண்டுக்கு பத்துகோடி சுறாக்கள் புதிதாக உற்பத்தியாவதில்லை என்பதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் டேமியன் சேப்மென், சுறாவேட்டையை இப்படியே தொடர்ந்தால் சுறா மீனினமே எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார். குறிப்பாக, சுறாக்களில் இருக்கும் சில குறிப்பிட்ட ரகங்களை குறிவைத்து வேட்டையாடுவதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் சேப்மென், சில குறிப்பிட்ட ரக சுறா இனங்கள் ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாகவும் எச்சரித்திருக்கிறார்.உண்மை சம்பவம்......

சுறாக்களைப் பாதுகாத்தல்[தொகு]

உலகின் முதலாவது சுறா புகலிடம் பாலவ் தீவிற்கு அண்மையிலுள்ள கடல் பிராந்தியத்தில் 2010 ம் ஆண்டு ஆரம்ம்பிக்கப்பட்டது.அதன்பின்னர் மாலைதீவும் சுறாக்களுக்கு புகலிடத்தை வழங்குவதில் அக்கறை காட்டியது.அத்துடன் 2011 ம் ஆண்டு பெப்ரவரி முதல் குஆம் தீவினைச்சூழவுள்ள கடல் பிராந்தியத்தில் சுறா மீன்களைப் பிடித்தல் தடை செய்யப்பட்டது.

சுறாப் புகலிடங்கள்[தொகு]

சுறாப் புகலிடங்கள் சுறாக்களை வேட்டையாடுவது முற்றாகத் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாகும். உலகின் முதலாவது சுறாப் புகலிடம் பாலாவ் தீவினை அண்மித்த கடல் எல்லையாகும். இது 2009 ஆம் ஆண்டு ஆரம்ம்பிக்கப்பட்டது. இப்பிரதேசம் 600000 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பரந்துள்ளது. மாலைதீவு, ஒண்டுராசு, பகாமாசு, தொகெலாவு போன்ற இடங்களிலும் சுறாப் புகலிடப்பிரதேசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Budker, Paul (1971). The Life of Sharks. London: Weidenfeld and Nicolson. SBN 297003070. 
  2. 2.0 2.1 2.2 National Geographic ஏப்ரல் 2007, பக்கம் 33
  3. http://www.thamilan.lk/news.php?nid=32312
  4. http://www.bbc.co.uk/tamil/science/2013/03/130305_sharkkilling.shtml

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுறா&oldid=2039811" இருந்து மீள்விக்கப்பட்டது