உள்ளடக்கத்துக்குச் செல்

திலாப்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலாப்பியா
Tilapia
நைல் திலாப்பியா
(Oreochromis niloticus niloticus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Actinopterygii
வரிசை:
Perciformes
குடும்பம்:
Cichlidae
துணைக்குடும்பம்:
Pseudocrenilabrinae
சிற்றினம்:
Tilapiini
Genera

Oreochromis (30 இனங்கள்)
Sarotherodon (10 இனங்கள்)
திலாப்பியா (40 இனங்கள்)

திலாப்பியா (Tilapia) ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர் நீரிலும் வாழ வல்லது. மீன் வளர்ப்பு (aquaculture) முறையின் மூலம் தற்பொழுது (2010) ஆண்டொன்றுக்கு இவ்வகை மீன்கள் சுமார் 27 இலட்சம் (2,700,000) டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பெயரும், மூலமும்

[தொகு]

திலாப்பியா என்று அழைக்கப்படும் மீன் வேறு விதங்களிலும் தமிழில் அழைக்கப்படுகின்றது. திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறுபெயர்களாகும்.

திலாப்பியா ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து உலகெங்கும் கொண்டு செல்லப் பட்ட உயிரினமாகும். ஆப்பிரிக்க பழங்குடிகள் ஒன்றில் மீன் என்பதற்கு 'தில்' என்ற ஒலிக்குறிப்பு இருந்ததாகவும், அதுவே திலாப்பியா என்ற சொல்லுக்கு மூலம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

தோற்றமும் பரவலும்

[தொகு]

ஆப்பிரிக்காவில் 180 கோடி ஆண்டுகள் வயது கொண்ட உயிரினப் படிமங்களில் (fossil) திலாப்பியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசங்களில் திலாப்பியா தோன்றி வாழ்ந்தது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொசாம்பிகு திலாப்பியா என்னும் வகை இந்தேனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மலேசியாவிற்கும், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் எகிப்தின் மன்னரால் நைல் திலாப்பியா ஜப்பானின் மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவற்றின் குஞ்சுகள் தாய்லாந்து மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அவரது சித்ரலாதா அரண்மனைக் குளத்தில் வளர்க்கப்பட்டன. இஸ்ரேலிலிருந்து ஆரியஸ் திலாப்பியா என்னும் வகை வட அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. காலப் போக்கில் தென் அமெரிக்காவிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி திலாப்பியா உலகெங்கும் பரவியது.

குடும்ப விபரம்

[தொகு]

சிக்கிலிட்டுகள் (Cichlids) என்று வழங்கப்படும் குடும்பத்தை சேர்ந்த மீனினம்தான் திலாப்பியா. ஒடுங்கிய உடல்வாகும், முட்டையிட்டுப் பொரித்த மீன்குஞ்சுகளை தாய் மீனோ, தந்தை மீனோ, அல்லது இரண்டுமோ இணைந்து கவனத்துடன் காப்பதும் இக் குடும்பத்தின் சிறப்பம்சங்களாகும்.

உலகில் சுமார் 50 திலாப்பியா மீன் இனங்கள் (species) உள்ளன. அவற்றை மூன்று தொகுதிகளாக (genus) பிரிக்கலாம்:

1. ஓரியோக்ரோமிஸ் (Oreochromis) தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்களில் தாய் மீன்கள் குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும் (கோழிகள் செட்டைகளில் குஞ்சுகளைக் காப்பது போல).

2. சாராத்தெரடான் (Sarotherodon) தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்களில் தந்தை மீன்கள் தனியாகவோ, அல்லது தாய் மீனுடன் சேர்ந்தோ குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும்.

3. திலாப்பியா (Tilapia) தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்கள் வாயில் முட்டைகளைப் பொரிப்பதில்லை. மாறாக, நீர்நிலையில் தரையில் சிறு பள்ளம் தோண்டி, அதில் முட்டைகளையிட்டு தமது மார்புத் துடுப்புகளினால் விசிறி குஞ்சு பொரிக்க வைக்கின்றன.

மீன் வளர்ப்பில் ஓரியோக்ரோமிஸ் தொகுதியைச் சேர்ந்த திலாப்பியாக்களே பெரிதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதுகுச் செட்டையின் மேல் அமைந்த செம்மை மற்றும் நீல நிறம் இவற்றை அடையாளம் காட்டுகின்றன. இத் திலாப்பியாக்களில் முக்கியமானவை கீழ்க்கண்டவையாகும்:

ஓரியோக்ரோமிஸ் நைலோட்டிக்கஸ் (Oreochromis niloticus)

[தொகு]
நைல் திலாப்பியா - பெண் மீன்
நைல் திலாப்பியா - ஆண் மீன்

பொதுவான பெயர் - நைல் திலாப்பியா. இது இளங்கரிய நிறமும், சற்றே வெள்ளி நிறமும் கலந்த மீனாகும். நன்னீரில், வெப்ப நீரில் (28 டிகிரி சென்ட்டிக்ரேடுக்கு மேல்) வளர்க்கப்பட்டால் நைல் திலாப்பியா மற்ற இனங்களை விட விரைவாக வளரும்.

ஓரியோக்ரோமிஸ் ஆரியஸ் (Oreochromis aureus)

[தொகு]
நீல திலாப்பியா

பொதுவான பெயர் - நீல திலாப்பியா. இதன் இளங்கரிய மற்றும் வெள்ளி நிறக் கலவையில், நீல நிறம் சற்று தூக்கி நிற்கும். இது மற்ற திலாப்பியாக்களைக் காட்டிலும் குளிரை அதிகமாகத் தாங்க வல்லது.

இவற்றில் நைல் திலாப்பியா பெருமளவில் வளர்க்கப்படும் திலாப்பியா ஆகும். நீல திலாப்பியா x நைல் திலாப்பியா கலப்பினமும் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட மொசாம்பிகு திலாப்பியா (ஓரியோக்ரோமிஸ் மொசாம்பிகஸ், Oreochromis mossambicus) உவர் நீரிலும், தரம் குறைந்த நீரிலும் வாழவும், வளரவும் வல்லது. ஆனால் இதன் அட்டைக் கரி நிறமும், மந்த வளர்ச்சியும் இது வளர்ப்பு மீனாக ஏற்றுக் கொள்ளப்பட தடையாகி விட்டன. ஆனால், மொசாம்பிகு திலாப்பியா சில முக்கியமான கலப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. குறிப்பாக, மொசாம்பிகு திலாப்பியா x நைல் திலாப்பியா மற்றும் மொசாம்பிகு திலாப்பியா x நீல திலேப்பியா கலப்பினங்களில் தானாகவே தோன்றிய சிவப்புத் தோல் கொண்ட சில மீன்களை தலைமுறை, தலைமுறையாக உள்கலப்பு (inbreeding) செய்து உருவாக்கப்பட்டதே செந்திலாப்பியா (red tilapia). இந்த செந்திலாப்பியாவும் பரவலாக வளர்க்கப்படும் இனமாகும்.

சூழலியல் குறிப்புகள்

[தொகு]

ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம், திலாப்பியா நன்னீரிலும், உவர் நீரிலும் வாழக் கூடியது. நன்னீர்தான் அது இயற்கையாகவே காணப்படும் சூழல் என்பதால், உவர் நீரில், குறிப்பாக நீரின் உப்பின் அளவு 1.5% மேலாகும் போது, திலாப்பியா வாழப் பழக்குவிக்கப்பட வேண்டும். நன்னீரிலிருந்து மெது, மெதுவாக (பொதுவாக ஒரு நாளுக்கு 0.5% என்ற கணக்கில் உவர்ப்பை உயர்த்தி) 2.5-3.0% உப்பளவிற்கு (salinity) அதைக் கொண்டு செல்லலாம். கடல் நீரின் உப்பளவான 3.5%கும் கொண்டு செல்லலாம். ஆனால் பொதுவாகவே 3.0% உப்பளவிற்கு மேல் திலாப்பியாக்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுண்டு. 1.5% உப்பளவிற்கு மேல் திலாப்பியா இனவிருத்தி செய்வதும் பாதிக்கப்படும்.

திலாப்பியாவிற்கு 28-35 டிகிரி சென்டிகிரேட் வெம்மையாக உள்ள நீரே உவப்பானதாகும். 20 டிகிரிக்கு கீழ் இனவிருத்தி நடக்காது. 16 டிகிரிக்கு கீழ் வளர்ச்சி இருக்காது. 10 டிகிரியில் மரணம் சம்பவிக்க தொடங்கும்.

காரத்தன்மை (alkalinity) கொண்ட நீரில் திலாப்பியா நன்கு வளரும். pH 7-9 இருப்பது விரும்பத்தக்கது.

பல மீன்களை ஒப்பிடும் போது திலாப்பியா 2-3 ppm அளவிற்கு குறைந்த உயிர்வளி கொண்ட நீரிலும் வாழும். ஆனால் நெடுநேரம் குறைந்த உயிர்வளி கொண்ட நீரில் வாழ்ந்தால், அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். நோய்த் தாக்குதலுக்கும் உள்ளாகலாம்.

திலாப்பியா நீர் ஒடாமல் தேக்கமாக உள்ள நீர்நிலைகளை விரும்புகிறது. நீர்த் தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் திலாப்பியாவைக் காணலாம். நீரோட்டம் குறைவாக உள்ள ஆற்றின் பகுதிகளிலும், வாய்க்கால்களிலும் காணலாம்.

திலாப்பியா குஞ்சுப் பருவத்தில் நீரிலுள்ள நுண்ணுயிர் மிதவை விலங்குகளை (zooplankton) விருப்பமுடன் உண்ணுகிறது. வளர, வளர நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் (phytoplankton), பாசிகள் (algae), நீரினடியில் மட்கும் தாவரப் பொருட்கள் (detritus), அவற்றுடன் ஒட்டியுள்ள நுண்ணுயிர்கள் (bacteria), சிறு புழு, பூச்சிகள் போன்றவற்றை உண்ணுகிறது.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]
சிலேபிகெண்டை(Tilapia)

திலாப்பியா விரைவிலேயே பருவமடைந்து விடும் மீன் வகையாகும். சுமார் 30-40 கிராம் எடையை எட்டும் போதே பருவமடைந்து விடும். உடனடியாக இனப் பெருக்கத்தில் ஈடுபடும். தகுந்த தட்பவெப்பம் நிலவினால் பெண் திலாப்பியா பருவமடைந்த பிறகு ஆண்டொன்றுக்கு 8-12 தடவை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 1000 முதல் 2000 முட்டைகளை இடும். பல மீன் வகைகளை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவே என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே சமயத்தில் பத்திருபது இலட்சம் முட்டைகளை இடும் மீன்களும் உள்ளன. ஆனால், அப்படிப்பட்ட மீன்கள் ஆண்டிற்கு ஒரு முறையோ, அல்லது இரு முறையோதான் இனவிருத்தி செய்யும். முட்டைகளும் அளவில் சுமார் 1 மில்லி மீட்டரோ அதற்கு குறையாகவோ இருக்கும். திலாப்பியா முட்டையோ 3-4 மி.மீ இருக்கும். பொரித்து வரும் குஞ்சுகளும் பெரிதாக இருக்கும். பெற்றோர் மீன்களால் அவை நன்கு கவனிக்கப்படுவதால், அவற்றில் பெரும்பான்மை உயிர் தப்பி பெரிய மீன்களாகும். அதிக எண்ணிக்கையில் முட்டையிடும் மற்ற மீனினங்கள் பொதுவாக குஞ்சு பொரிப்பதையோ, குஞ்சு வளர்ச்சியையோ பொருட்படுத்துவதில்லை. எனவே சில குஞ்சுகளே உயிர் தப்பி பெரிய மீன்களாகும்.

திலாப்பியாவில் ஆண் பெண்ணைக் காட்டிலும் பெரிதான அளவில் வளரும். பருவமடைந்த பிறகு இந்த மாற்றம் நடக்கும்.

ஆண் திலாப்பியா உற்பத்தி

[தொகு]

விரைவாக பருவமடைந்து, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, குஞ்சுகள் பெருகுவது திலாப்பியா வளர்ப்பில் பிரச்சினையாக இருந்து வந்தது. ஏனென்றால் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் பொழுது அவற்றின் வளர்ச்சி குன்றுகிறது. மேலும், தொடர்ந்து குஞ்சுகள் பலுகிப் பெருகும் போது உணவுப் பற்றாக்குறையும், நீரின் தரக் குறைவும் ஏற்பட்டு வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப் படுகிறது. எனவே, இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் ஆராயப்பட்டன.

ஒரு வழி, வளருகின்ற மீன்களில் ஆண் மீன்களைப் பிரித்தெடுத்து அவற்றை மட்டும் வளர்ப்பது (ஆண் திலாப்பியா, பெண் திலாப்பியாவைவிட விரைவாக வளரும்). இந்த முறையை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம் என்பதால் இது பரவலாக உபயோகப்படுத்தப்படுவதில்லை.

இன்னொரு வழி, திலாப்பியா குஞ்சுகளை உண்டு வாழும் விரால், கெழுத்தி, கொடுவா போன்ற மீன்களையும் நீர் நிலையில் விட்டு, குஞ்சுகளைக் கட்டுப்படுத்துவது. இந்த முறையும் நடைமுறையில் பயன் தருவது கிடையாது.

மற்றொரு வழி சில கலப்பினங்கள் 90%க்கும் மேற்பட்ட ஆண் குஞ்சுகளை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக நைல் திலாப்பியா x நீல திலாப்பியா கலப்பினம் பெரும்பாலும் ஆணாகவே இருக்கும். இந்த முறைதான் உலகத்தின் மிகப் பெரிய திலாப்பியா உற்பத்தியாளரான சீனா கடைப்பிடிப்பது.

கரு முட்டையிலிருந்து குஞ்சு பொரித்த சில தினங்களுக்குள் குஞ்சுகளுக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோனை உணவோடு அளித்தால் அவை ஆணாகி விடும். 17-ஆல்பா மீதைல் டெஸ்டோஸ்டீரான் என்னும் செயற்கை ஹார்மோனை தீவனத்தில் 60 ppm என்ற கணக்கில் குஞ்சு பொரித்த பின் முதல் 21 நாட்களுக்கு வழங்க வேண்டும். இந்த ஹார்மோன் மீன் குஞ்சாக இருக்கும் போது மட்டுமே சிறிய அளவில் வழங்கப்படுவதால், 3-4 மாதங்கள் கழித்து அவை உணவிற்கான அளவை எய்தும் போது, மீனை உண்பதில் அபாயம் ஏதும் கிடையாது. ஆனால் ஹார்மோனைக் கையாளும் ஊழியர், கையுறை, முகமூடி முதலியவற்றை அணிந்து கொள்ளவில்லை என்றால், ஹார்மோனால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, ஹார்மோனில்லாமல் 100% ஆண் திலாப்பியாவை உருவாக்கும் முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மரபியலில் உள்ள சில தத்துவங்களைப் பயன்படுத்தி அனைத்துக் குஞ்சுகளும் ஆணாயிருக்கும் வண்ணம் செய்ய இயலும் ஒரு தொழில்நுட்பம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இப்படி பெறப்படும் திலாப்பியா GMT, அதாவது Genetically Male Tilapia என்று அழைக்கப்படுகிறது.

திலாப்பியா குஞ்சு உற்பத்தி

[தொகு]

திலாப்பியா விரைவாக பருவமடைந்து, எந்த புற ஊக்குவிப்பும் இன்றி, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் குஞ்சு உற்பத்தி எளிதாகிறது. ஆண், பெண் திலாப்பியாவை 3:1 என்ற கணக்கில் சிறிய குளங்களில் இருப்பு செய்து, நாள்தோறும் குஞ்சுகளைப் பிடித்திடலாம். குஞ்சுகள் நீரின் மேல் மட்டத்தில், கரையோரத்திலே ஒதுங்கி நிற்கும் என்பதால், கைப்பிடி நீளமான ஒரு கைவலை கொண்டு ஒரே ஒரு நபரே குஞ்சுகளை அறுவடை செய்திடலாம்.

சிறு கண் கொண்ட வலையால் சிறு செவ்வகத் தொட்டிகளைச் (உதாரணமாக 1.2 மீ நீளம், 0.8 மீ அகலம், 0.5 மீ ஆழம்) செய்து, அவற்றை குளத்தில் கட்டி, அவற்றினுள்ளும் ஆண், பெண் திலாப்பியாவை இருப்பு செய்யலாம். இவ் வகைத் தொட்டி ஹாப்பா என்று அழைக்கப்படுகிறது. இப்படிச் செய்வதன் அனுகூலம் என்னவென்றால், திலாப்பியாவை 4-5க்கு ஒரு நாள் பிடித்து, வாயைத் திறந்து முட்டைகளையும், புதிதாகப் பொரித்திருக்கும் குஞ்சுகளையும் அறுவடை செய்து விடலாம். இந்த முட்டைகளையும், குஞ்சுகளையும் தனியாகப் பராமரித்து அவற்றை வளர்க்கலாம். எப்படி கோழியின் முட்டையை நாம் எடுத்து விடுவதால், அது அடைகாக்கப் போகாமல் மறுபடியும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு முட்டைகளை இடுகிறதோ, அப்படியே வாயிலிருந்து முட்டைகளும், குஞ்சுகளும் எடுக்கப்படும் போது, பெண் திலாப்பியாவும் மீண்டும் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும். எனவே, இம் முறையில் உற்பத்தி பெருகுகிறது.

திலாப்பியா வளர்ப்பு முறைகள்

[தொகு]

உலகத்தில் பெரும்பாலான திலாப்பியா வளர்ப்பு குளங்களில்தான் நிகழ்கிறது. மண்ணில் தோண்டிய குளங்களில் நீரை நிரப்பி, அவற்றிற்கு உரமிட்டு, திலாப்பியா குஞ்சுகளை இருப்பு செய்து வளர்ப்பதே இம் முறையாகும். உரமிடுவதன் மூலமாக நீரில் சிறு மிதவை தாவரங்கள், அவற்றை உண்ணும் சிறு மிதவை விலங்குகள் முதலானவை பெருகுகின்றன. இவை திலாப்பியாவிற்கு இரையாகின்றன. குளத்தினடியில் இருக்கும் மக்கிய தாவரப் பொருட்கள், அவற்றினூடே வளரும் பலவித நுண்ணுயிர்களும் திலாப்பியாவிற்கு உணவாகின்றன. இது தவிர அவற்றிற்கு வளர்ப்பவர்களால் இரையும் அளிக்கப்படுகின்றது. தவிடுகள், புண்ணாக்குகள், மாவுகள் போன்றவை மிகுந்த இந்த இரையும், திலாப்பியாக்கள் நீரிலிருந்து பெறும் பல்வகையான உணவுப் பொருட்களும் திலாப்பியா விரைந்து வளர உதவுகின்றன. குளத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 4-5 என்ற கணக்கில் அடர்த்தி செய்யப்படும் சுமார் 2-3 கிராமுள்ள குஞ்சுகள் 5-6 மாதங்களில் 500 கிராமை எட்டும். பத்து மாதங்களில் ஒரு கிலோ அளவிற்கு வளர்ந்து விடும். எனவே, தகுந்த தட்பவெப்பத்தில், சரியான மேலாண்மையில் ஒரு ஹெக்டேர் (10,000 சதுர மீற்றர்) பரப்பளவுள்ள ஒரு குளத்தில் பத்து மாதங்களில் 3-4 டன் திலாப்பியா அறுவடை செய்ய இயலும்.

தீவிர மேலாண்மை முறைகளை பயன்படுத்தி உற்பத்தியை இன்னும் பெருக்க இயலும். பெரிய நீர் நிலைத் தேக்கங்களில் வலையினால் அமைக்கப்பட்ட கூண்டுகளில் திலாப்பியா வளர்க்கும் முறை பல நாடுகளில் பின்பற்றப்படுத்தப்படுகிறது. நீர் மின்சார நிலையங்களில் அதிவேகமாக வெளியாகும் நீரை காங்க்ரீட் தொட்டிகளில் செலுத்தி அந்த தொட்டிகளில் திலாப்பியா வளர்ப்பது கோஸ்ற்றா ரிக்கா, ஹாண்டூரஸ் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களில் பசுமைக்குடில் அமைத்து அதற்குள் தொட்டிகளில் நீரை மீள்சுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திலாப்பியா வளர்க்கப்படுகிறது. மேற்கண்ட முறைகளில் ஒரு சதுர மீற்றர் தண்ணீர்ப் பரப்பளவில் 10 முதல் 100 கிலோ மீன் வரைக்கும் உற்பத்தி செய்யும் சாத்தியம் உள்ளது.

விமர்சனம்

[தொகு]

இன்று தமிழக நீர்நிலைகளில் இந்த மீனே ஆதிக்கம் செலுத்துவதால் மற்ற பாரம்பரிய மீன்கள் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுவருகிறது. இந்தத் திலேபியா மீன்கள் பாரம்பரிய மீன்களுக்குப் பரம எதிரியாகி உள்நாட்டு மீன் இனத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. இம்மீன்கள் தண்ணீர் எவ்வளவு மாசுபட்டு இருந்தாலும் அதில் வாழும். பாரம்பரிய மீன்கள் சாப்பிடும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடும். மேலும் பாரம்பரிய இன மீன்களின் முட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிடுகின்றன. இனப்பெருக்கத்திலும் இவற்றின் அக்கறை அதிகம். தன்னுடைய மீன் குஞ்சுகளில் 70 முதல் 80 சதவீதத்தை இவை காப்பாற்றி விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நாட்டு இன மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மாதிரியான உணவுகளை உண்ணும். ஆனால், இந்தத் திலேபியாவுக்கு உணவில் எந்த விதிவிலக்கும் கிடையாது. எல்லாவற்றையும் சாப்பிடும். இதே நிலை நீடித்தால், கடைசியில் திலேபியா மட்டுமே மிஞ்சும். திலேபியாவை ஒரு பெரு நோய் தாக்கினால் நம் பகுதிகளில் மீன் இனமே ஒட்டுமொத்தமாக அழியும் பேராபத்தும் இருக்கிறது என குற்றச்சாட்டு உள்ளது.[1]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி". தி இந்து. 25 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

Beveridge, M.C.M. & McAndrew, B.J. 2000. Tilapias: Biology and Exploitation. Kluwer Academic Publishers.

Lim, C.L. & Webster, C.D. 2006. Tilapia Biology, Culture and Nutrition. Food Products Press.

Suresh, A.V. 2003. Tilapias. Pages 321-345, Chapter 16 In: Lucas, J.S. & Southgate, P.C. (Editors) Aquaculture, Farming Aquatic Animals and Plants. Blackwell Publishing.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/a-second-coming-for-tilapia-in-south-tamil-nadu/article9286888.ece


"https://ta.wikipedia.org/w/index.php?title=திலாப்பியா&oldid=3577520" இலிருந்து மீள்விக்கப்பட்டது