பிரானா மீன்
பிரானா Piranha | |
---|---|
மெம்ஃபிஸ் மிருகக்காட்சி அகத்தில் பிரானா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | நியாப்டெரிகீயை
|
உள்வகுப்பு: | Teleostei
|
வரிசை: | Characiformes
|
குடும்பம்: | Characidae
|
துணைக்குடும்பம்: | Serrasalminae ஜெரி, 1972
|
சிற்றினம்: | பிரானா
|
பேரினம் | |
Catoprion |
தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களி;ல் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்களின் (Piranha) பற்கள் சவர அலகு போன்று கூர்மையானவை. தாடைகள் மிகவும் வலிமைமிக்கவை.
வாழுமிடம்
[தொகு]இந்த பிரானா மீன்கள் தென்அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.[1].
இனம்
[தொகு]Serrasalmidae என்ற குடும்பத்தைச் சேர்ந்த பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா (Red-bellied piranha) என்பதே முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். Serrasalmus nattereri எனப் பாகுபடுத்தப்பட்டுள்ள இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.
வடிவம்
[தொகு]பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 சென்றிமீற்றருக்கு மேல் வளர்வதில்லை. சில இனங்களில் வயிற்றுப் பகுதி செம்மஞ்சள் நிறமாகவும், ஏனைய பகுதிகள் வெள்ளி நிறமாகவும் இருக்கும். வேறு சில முற்றாகக் கறுப்பு நிறமானவை. பிரானா மீன்களின் தலைபெரியதாகவும் மழுங்கியும் இருக்கும். உடல் ஆழமானதாக இருப்பதோடு, வயிறு வாள் போன்ற விளிம்புடையதாகக் காணப்படும். இவற்றின் வலிமையான தாடைகளில் முக்கோண வடிவான கூரிய பற்கள் இருக்கின்றன. இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.
இரை தேடல்
[தொகு]ஆற்றில் நீர்மட்டம் தாழ்வடையும் வேளையில் இவை கூட்டங்களாக இரை தேடிச் செல்கின்றன. ஒரு கூட்டத்தில் 100 க்கு மேற்பட்ட மீன்கள் இருக்கக்கூடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன. இரையொன்று இனங்காணப்பட்டதும் கூட்டத்தின் அடுத்த உறுப்பினர்களுக்கு ஒலிச் சைகைகள் மூலம் செய்தி அறிவிக்கப்படும். பிரானாக்களின் செவிப்புலன் மிகக் கூர்மையானதாக இருப்பது கவனிக்கத்தக்கது. சைகை கிடைத்ததும் அனைத்து மீன்களும் இரையை நோக்கித் திரண்டு தாக்குதலை ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு மீனும் இரையை ஒரு கடிகடித்துவிட்டு ஏனையவற்றிற்கு இடங்கொடுத்துவிட்டு அப்பால் செல்லும். இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் எஞ்சும் வரை இரையைத் தின்று தீர்த்துவிடுகின்றன. யானையே அகப்பட்டாலும் சிறிது நேரத்தில் இவ்வாறு தின்றுவிட்டு எலும்புளை மட்டும் விட்டுவிடும். [2]
மனிதர்கள் மீதான தாக்குதல்
[தொகு]மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. பிரேஸிலில் இடம்பெற்றுவரும் இத்தாக்குதல்களுக்கு Serrasalmus spilopleura என்ற பிரானா இனமே காரணமாக இருந்துள்ளது. தென்கிழக்கு பிரேஸிலில் ஒரு பிரதேசத்தில் மாத்திரம் 2003 கோடை காலத்தில் இரண்டு வாரங்களுக்குள் 52 தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவது இவ்வதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என பேராசிரியர் இவான் சஸிமா என்ற பிரேஸில் நாட்டு விலங்கியலாளர் கூறியிருக்கிறார்.
விஞ்ஞானிகள் மறுப்பு
[தொகு]பிரானா கடிப்பதனால் ஏற்படும் காயம் வட்டவடிவமாகக் குழிபோல இருக்கும். பெருமளவு இழையங்களும் குருதியும் இதன் மூலம் இழக்கப்படலாம். நதிகளில் குளிக்கச் செல்பவர்களே பெரும்பாலும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பிரானாக் கூட்டங்களால் தின்று தீர்க்கப்பட்ட மனிதர்கள் பற்றிய செய்திகள் அண்மைக்காலத்தில் பல பகுதிகளிலிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் விஞ்ஞானிகள் இச்செய்திகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். மேற்சொன்னவாறு பிரானாக்களினால் முற்றாகத் தின்று தீர்க்கப்பட்டவர்கள் பலர் மாரடைப்பினாலோ, நீரில் மூழ்கியதாலோ இறந்த பின்னரே பிரானாத் தாக்குதல் இடம்பெற்றிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உசாத்துணை
[தொகு]- அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை
- ↑ Freeman, Barbie; Nico, Leo G.; Osentoski, Matthew; Jelks, Howard L.; Collins, Timothy M. (2007). "Molecular systematics of Serrasalmidae: Deciphering the identities of piranha species and unraveling their evolutionary histories" (PDF). Zootaxa 1484: 1–38. http://www.mapress.com/zootaxa/2007f/zt01484p038.pdf. பார்த்த நாள்: 2009-06-22.
- ↑ தினத்தந்தி, 30-3-2018, சிறுவர் தங்கமலர், பக்கம் 6