உள்ளடக்கத்துக்குச் செல்

வங்கவராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்படோன் நெகரியசு
வங்கவராசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
அவுலோபிஃபோமசு
குடும்பம்:
சினோடொண்டிடே
பேரினம்:
ஆர்ப்பாடன்
இனம்:
H. nehereus
இருசொற் பெயரீடு
Harpadon nehereus
(ஹமில்ட்டன், 1822)

வங்கவராசி (அ) பம்பாய் வாத்துமீன் (Bombay Duck) அல்லது பம்மலு என்னும் மீன் இந்தியக்கடல் பகுதியான அரபிக்கடலில் மிக அதிக அளவில் கிடைக்கிறது. இதன் அறிவியல் பெயர் எர்படோன் நெகரியசு என்பதாகும். இது ஒரு பொருளாதார முக்கியத்துவமுள்ள மீனாகும். இதை வங்காளத்தில் பம்மலோ அல்லது லோட்டா, குசராத்தியில் பம்மலா மற்றும் மராத்தியில் பாம்பில் எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்தியக் கடற்பரப்பில் வடபகுதியிலேயே அதிகமாகக் கிடைக்கிறது. இது சீனக்கடற் பரப்பில் அதிகமாக பிடிக்கப்படுகிறது. இதைப் பெரும்பாலும் கருவாடாகவேப் பயன்படுத்துகின்றனர். இதை சீனமொழியில் லாங் டௌ யூ என அழைக்கிறார்கள்.

இதைப்பிடிக்க தூரிவலை (மடிவலை)களையே (வலைக்கண்ணளவு - 20 மி.மி., நீளம் - 35 - 60 மீ) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதை 45 கி.மீ. உட்பட்ட 18 முதல் 40 மீ ஆழ்முள்ள கடற்பகுதிகளிலேயே அதிகமாகப் பிடிக்கின்றனர். கார்த்திகை - மார்கழி (நவம்பர் - டிசம்பர்) மாதங்களே அதன் உச்சபருவக் காலமாகும்.

இது ஏற்றுமதியில் மதிப்புள்ள மீனாகும். இதை கருவாடாக மாற்றி காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீனிற்கு அடித்தப்படியாக வணிக முக்கியத்துவமுள்ள மீனாகும். இதன் ஆரோக்கியம் குறித்து எழுந்த ஐயத்தின் காரணமாக ஐரோப்பியப் பகுதிகளில் சிலக்காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்பு அதன் குறைகள் ஓரளவிற்கு சரிசெய்யப்பட்டு ஏற்றுமதி தொடர்ந்த வன்னம் உள்ளது.

மும்பை மீன் சந்தையொன்றில் வங்கவராசி மீன்கள்

பொதுப்பண்புகள்

[தொகு]

இது ஒரு வகையான பல்லிமீனாகும். இது சினோடாண்டிடே என்னும் மீன் குடும்பத்தைச் சார்ந்தவை. இது இந்திய - மேற்குபசிபிக் கடற்பகுதிகளைத் பிறப்பிடமாகவும் இந்தியாவை ஒட்டியுள்ள அரேபிய வளைகுடாககளிலும் தென்கிழக்குக் கடற்பகுதிகளான தெற்குசீனா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளை நிலையான வாழ்விடமாகக் கொண்டுள்ளது.

இது பெரும்பான்மையான ஆழ்கடல் மீன்களுக்கு ஒத்த உருவப்பண்புகளைப் பெற்றிருக்கிறது. இதன் வாய் அகண்டும் உடலில் அதிகப்படியான ஊன்பசை நிறைந்து குழகுழப்பாகவும் சுண்ணாம்புக் குறைவாக உள்ள எலும்புகளால் ஆன மீனாகும். இதற்கு நின்றொளிர்வு (Phosphorescence) தன்மையும் காணப்படுகிறது.

இது முதலில் ஆழ்கடல் மீனாகவும் பிற்காலத்தில் படிப்படியாக நகர்ந்து ஆழமற்ற கடல்பகுதிகளிலும் கழிமுகங்களிலும் வாழும் தன்மையுடையதாக மாற்றம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

பெயர்க்காரணம்

[தொகு]

இதன் தமிழ் பெயர்த்தோற்றம் குறித்து உண்மைக்கருத்துக்கள் அறியப்படவில்லை. இது வங்காளத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மட்டும் அதிகம் கிடைக்கப் பெறுவதால் இது வங்கவராசி எனப் பெயர்ப் பெற்றிருக்கலாம் என அறியப்படுகிறது.

ஆங்கிலத்தில் இதன் பெயர்த்தோற்றத்திற்கு இதன் மணம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இம்மீன்களை ஆங்கிலேயர் காலத்தில் பொதுவாக தொடர்வண்டிகளில் தான் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச் செல்லும் மீனின் நாற்றமானது அது இருக்கும் பெட்டி முழுதும் மணம் வீசும். ஆங்கிலத்தில் பம்பாய் தொடர்வண்டியில் காணப்படும் பெட்டிகளை பம்பாய் டாக் (Bombay Dak) என அழைக்கபடுவதே பிற்காலத்தில் மருவி பம்பாய் டக்/பம்பாய் வாத்துமீன் என அழைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கண்டறியும் பண்பு

[தொகு]

தாழ்வாய் மேல்வாயைவிட பெரிதாகவும், முதுகுத்துடுப்பைத் தொடர்ந்து தெளிவான கொழுமியத் துடுப்பு காணப்படும். அடித்துடுப்பு/இடுப்புத்துடுப்பு பெரிதாகவும் குதத்துடுப்பு வரை நீண்டும் காணப்படுகிறது. பக்கவாட்டுக்கோடு நீண்டு வால்துடுப்பிற்கு இடையில் குத்திய இடைமடலாக காட்சியளிக்கிறது.

பொதுவாக 10-30 செ.மீ. நீளமும் அதிகப்படியாக 40 செ.மீ நீளமும் உடையது. இது வெளிறிய வெள்ளை நிறத்திலேயே பொதுவாகக் காணப்படும்.

வங்கவராசி மீனின் உடற்பாகங்கள்

பரவல்

[தொகு]

இது மும்பய் பகுதிகளுக்கும் கட்ச வளைகுடா பகுதிகளுக்கும் இடையில் உள்ள அரபிக்கடல் பகுதியில் பரவலாகவும் வங்கக் கடல் பகுதியில் குறைந்தளவே காணப்படுகிறது. அதுவும் வங்காளக் கடல்பகுதியிலியே இது காணப்படுகிறது. இது தமிழ் நாட்டிலும் அதன் ஒட்டிய கடல்பகுதிகளில் அரிதாகவே காணப்படுகிறது.

உலகம் - ஆப்பிரிக்க கிழக்கு கடற்கரை, சான்சிபர் (Zanzibar) வடக்குப்பகுதிகளிலும், செங்கடல், கட்சவளைகுடா மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் பரவிக் காணப்படுகிறது.

உணவு

[தொகு]

இம்மீன் குழம்புச் செய்யப் பொருந்தா மீனாகும். இவை ஊன்பசைப் புரதம் நிறைந்த உறுதியான எலும்புகளில்லா மீன் என்பதால் குழம்பில் பயன்படுத்தும் போது உடைந்து ஒரு கூழ்போல் ஆகிவிடும். இதைப் பெரும்பாலும் நன்கு வறுத்தே உண்கின்றனர்.

மேற்கோள்

[தொகு]
  • Mookerjee HK, Ganguly DN and TC Mazumdav, (1946), On the food of the estuarine fish of Bengal, Sci. and Cult., Calcutta, 11:564 - 565
  • Pillay TVR, (1951), A preliminary note on the food and feeding habits of the Bombay duck, Herpodon nehereus (Ham) in the river Mattah, Sci. and Cult. Calcutta, 17:261-262
  • Khan MZ, (1989), Population dynamics of the Bombay duck, Harpodon nehereus (Ham) of Saurashtra coast, Indian journal of Fisheries, 36(2): 93-101
  • http://www.clovegarden.com/ingred/seafishv.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கவராசி&oldid=2039818" இலிருந்து மீள்விக்கப்பட்டது