பாலூட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலூட்டி
புதைப்படிவ காலம்:220–0 Ma
திராசிக் முதல் தற்போது வரை
Mamíferos.jpg
மேல் இடது மூலையிலிருந்து வலஞ்சுழியாக:ஒட்டகச் சிவிங்கி, பொன்னிறப்பழ வௌவால், சிங்கம், முள்ளெலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
உட்தொகுதி: தாடையுள்ளவை
பெருவகுப்பு: நான்கு காலிகள்
(unranked) பனிக்குடமுடையன
வகுப்பு: பாலூட்டி (Mammalia)
L, 1758
Clades
மான் ஒரு பாலூட்டி விலங்காகும்.

பாலூட்டி (இலங்கை வழக்கு: முலையூட்டி) என்பது தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஒரு வெப்ப இரத்த விலங்கினமாகும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம், இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது. பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன.

பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. அவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.

பாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008 ஆம் ஆண்டு அனைத்துலக இயற்கைக் காப்பு ஒன்றியத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, இந்த உலகில் 5488 வகையான பாலூட்டிகள் உள்ளன.[1] இதனைப் பாலூட்டியின அறிஞர்கள், உலகளாவிய நிலையில் 1,700 வகைகளாகத் தொகுத்துள்ளனர்.

பாலூட்டி இனம், 1,229 பேரினங்களில், 153 குடும்பங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை 29 வரிசைகளில் அடங்குவதாகவும் அமைந்து உள்ளன[2]

புற அமைப்பியல்[தொகு]

பாலூட்டிகள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொண்டு, வெவ்வேறு தோற்ற இயல்புகளுடன் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, கடலில் வாழும் பாலாட்டியான நீலத் திமிங்கலம், மீனின் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பாலூட்டிகளின் உடம்பில் உள்ள மயிர்த் தொகுதியும், பால் சுரப்பியும் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

பாலூட்டிகளின் உரோமமானது, அவற்றின் உடலில் இருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்க உதவுகிறது. பால் சுரப்பிகள் என்பன மாறுபாடு அடைந்து வியர்வைச் சுரப்பிகளாகும். பாலுட்டிகளின் குட்டிகள் பிறந்து சில காலம் தாயின் பாலையே குடித்து வளர்கின்றன.

வாழிடம்[தொகு]

பாலூட்டிகள் பல வேறுபட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. உயர்ந்த மலைகள், காடுகள், பனிப் பகுதிகள், வறண்ட பாலைவனங்கள், கடல், ஆறு போன்ற நீர்நிலைகள் முதலியவற்றில் வாழ்கின்றன. வாழிடத்திற்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.

உயர்ந்த மலைகளில் காணப்படும் வரையாடுகள்; பனிப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகள்; பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள்; கடலில் வாழும் திமிங்கலங்கள்; ஆறுகளில் வாழும் நீர்நாய்கள்; காடுகள் அல்லது சமவெளிகளில் வாழும் மான்கள், புலிகள், சிங்கங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.

பாலூட்டி வகைகள்[தொகு]

வௌவால்[தொகு]

வௌவால் என்பது பறக்கும் ஆற்றலைக் கொண்டது. முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டிகளில் பறக்கும் தன்மையைக் கொணட ஒரே விலங்கு. இந்த விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்திலேயே இவை மட்டும் 20% இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

உயிரினங்களை வகைப் படுத்தும் அறிவியல் துறையாளர்கள், வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera எனும் வரிசையில் தொகுத்து வைத்துள்ளார்கள். பெரும்பாலான வௌவால்கள், ஏறக்குறைய 70 விழுக்காடு எலியைப் போன்ற சிறு முகம் (குறுமுகம்) கொண்டவையாக இருக்கின்றன. எல்லா வௌவால்களும் பூச்சிகளை உண்பவை.

வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இரை தேடி உலவ ஆரம்பிக்கும். இவை இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி உண்ணும்.

கரடி[தொகு]

கரடி (Bear), ஓர் ஊனுண்ணிப் பாலூட்டி விலங்காகும். இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) எனப்படும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளிலேயே மிகப் பெரியவை. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.

துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் ஆர்க்டோஸ் (Arctos) என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது.

ஒட்டகம்[தொகு]

ஒட்டகம் என்பது பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக, ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களைத் தத்தம் தாயகமாகக் கொண்டவை. பொதுவாக, இவை 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

பூனை[தொகு]

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப் படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.

பண்டைய எகிப்து நாட்டில், பூனைகள் வழிபாட்டு விலங்குகளாகவும் இருந்தன. அவற்றை வீட்டில் வளர்த்து வணங்கி வந்தனர். பூனைகள் இறந்தால் அவற்றிற்கும் பிரமிடுகளைக் கட்டி, அந்தப் பிரமிடுகளுக்குள் பாடம் செய்த எலிகளையும் புதைத்து வைத்தனர். பிரமிடுகளில் அரசர்களுடன் அவர்களுடைய பூனைகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

பசு[தொகு]

பசு என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பாலில் பல சத்துக்கள் நிறைந்து உள்ள காரணத்தினால், மனிதன் அதனை ஒரு முக்கிய உணவுப் பொருளாகக் கருதினான். இந்தியக் கலாச்சாரத்தில், பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும்.

நாய்[தொகு]

நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. ஏறத்தாழ 17,000 [3] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன், ஓநாய்களைப் பழக்கி, அவற்றை வளர்ப்பு நாய்களாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.

மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடிகளைக் கொண்டு, ஆய்வு செய்து பார்த்ததில் 150,000 [4][5] ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  • பத்தாம் வகுப்பு அறிவியல் நூல், தமிழ்நாடு அரசு, முதல் பதிப்பு 2011

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. "Initiatives". The IUCN Red List of Threatened Species. IUCN (April, 2010).
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 
  3. McGourty, Christine (2002-11-22). "Origin of dogs traced". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/science/nature/2498669.stm. பார்த்த நாள்: 2007-11-27. 
  4. Vilà, C. et al. (1997). Multiple and ancient origins of the domestic dog. Science 276:1687–1689. (Also "Multiple and Ancient Origins of the Domestic Dog")
  5. Lindblad-Toh, K, et al. (2005) Genome sequence, comparative analysis and haplotype structure of the domestic dog. Nature 438, 803–819.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலூட்டி&oldid=2190233" இருந்து மீள்விக்கப்பட்டது