சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவன்
Shiva Bijapur.jpg
யோக நிலையில் சிவபெருமான்
அதிபதி படைத்தல், காத்தல், அழித்தல்
வேறு பெயர்கள் ஈசன், பிற ஆயிரத்துக்கும் மேல்
சமசுகிருதம் Śiva
வகை மும்மூர்த்திகள்
இடம் கயிலை மலை
மந்திரம் ஓம் நமசிவாய
ஆயுதம் திரிசூலம், பாம்பு, நெருப்பு
துணை சக்தி, பார்வதி, காளி, துர்க்கை
குழந்தைகள் விநாயகர், முருகன்
வாகனம் நந்தி
நூல்கள் தேவாரம் திருவாசகம்
சமயம் சைவம்
விழாக்கள் மகாசிவராத்திரி பிரதோசம்
சிந்து சமவெளியின் முந்து சிவன்

சிவன் (Śiva, சிவா) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.

இவரை வழிபடும் வழக்கம் வரலாற்றுக்கு முற்பட்டதெனவும், சிந்து மொகெஞ்சதாரோ நாகரிகங்களில் இவரை வழிபாடு செய்தமைக்கான அடையளங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது.[1]

இவர் நடனம், யோகம் எனக் கலைகளில் சிறந்து விளங்குபவராகவும், உமையம்மையுடன் கையிலை மலையில் வசிப்பதாகவும் சைவர்களாலும், இந்துக்களாலும் நம்பப்படுகிறது. உமையம்மை தட்சனின் புதல்வி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்துச் சிவனை மணந்து, பின் தட்சனின் யாகத்தில் விழுந்து இறந்ததாகவும், பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்து சிவனை மணந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமான் பார்வதி தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற குழந்தைகளும் உள்ளனர். அத்துடன் சிவபெருமான் தட்சனை அழிக்கத் தோற்றுவித்த வீரபத்திரனும், திருமால் மோகினியாக அவதாரம் எடுத்த போது பிறந்த ஐயப்பனும் சிவ குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள்.


பொருளடக்கம்

சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்[தொகு]

சைவ சமயம்

Tripundra.PNG

இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.

சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும். தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வமாக வழிபட்ட சேயோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.[1] முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன.[2] சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர். உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ (शिव) என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகின்றன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறது.

எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சிவபக்தர்களின் பக்தியில் மூழ்கி, அவர்கள் கேட்கும் வரங்களின் விளைவுகளை ஆராயாமல் வரம் தருவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார். மேலும் சடாமுடியுடையதால் சடையாண்டி, சூலாயுதத்தினை வைத்திருப்பதால் திரிசூலன், மூன்றுகண்களை உடையதால் முக்கண்ணன் எனத் தோற்றத்தினை வைத்தும் பல பெயர்களின் அழைக்கப்படுகிறார். அத்துடன் கையிலாய மலையில் வசிப்பதால் கயிலைவாசன் எனவும், சுடுகாட்டில் வசிப்பதால் சுடலையாண்டி எனவும் வசிப்பிடம் கொண்டும் பல பெயர்களின் அறியப்பெறுகிறார்.

அடைக்கலம் காத்தான் எனத் தொடங்கி யாழ்மூரிநாதன் வரை ஆயிரம் தமிழ்ப்பெயர்களும் சிவபெருமானுக்கு கூறப்படுகின்றன.[3] மேலும் சிவபெருமானுடைய நூற்றியெட்டு பெயர்கள் சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி எனும் தொகுப்பாகவும், சிவபெருமானுடைய ஆயிரம் பெயர்களைக் கொண்டது சிவ சஹஸ்ரநாமம் எனும் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.

இப்படி ஒருசாரார் விளக்கம் கொடுக்கையில், தொல்காப்பியன் ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறியதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்போர்கள் எழுதியுள்ள உரைகளை ஆராய்ந்து வரியாக விளக்கத்தினை ஏற்படுத்திக்கொண்ட மற்றையவொரு சாரார். ”சிவன்” என்ற சொல்லிற்கான பொருள்களைபின்வருமாறு விளக்குகின்றனர்.

”சிவன்” என்பது ”சிவ் + அன்” ஆகும். அதாவது, ”சிவ்” தன்மையானவன் ”சிவன்.” ”சிவ்” என்பது ”ச் + இ + உ” ஆகும். இது ”மேன்மை(ச்) நிறைவு(இ) உயிர்ப்பு(உ) தன்மை” யாகும்.


மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை” யை நாம்: அன்பு, அருள், அறிவு, அறம், செம்மை, ஒளி, இன்பம், தூய்மை, அழகு, இன்பம், இனிமை, .... எனப் பலவற்றில் அடையாளப்படுத்தமுடியும்.

ஆகவே, ”சிவன்” என்பது, அன்புமயமானவன், அருள் மயமானவன், அறிவன், அறமயமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இன்பமயமானவன், புனிதன், தூயவன், அழகன், இனியவன், .... எனவெல்லாம் வரும்.

எனவே இவைகள் யாவும் ”சிவன்” என்பதன் ”பொருள்கள்” ஆகும்.

இவைகள் புத்தபெருமானுடனும் ஒன்றும்!

இங்கு மொழிப் பொருட் காரணமான ”மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மையானவன்” எனபது பொது வகையால் ஒன்றாயினும், சிறப்பு வகையால் அன்புமயமானவன், அருள் மயமானவன், இறிவன், அறமயமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இன்பமயமானவன், புனிதன், தூயவன், அழகன், இனியவன், .... எனப் பலவாக உள்ளது.

இதையே சேனாவரையர் தனது உரையில் விளக்கியுள்ளார்.

இல்லறம்[தொகு]

ஆதிசக்தியும் அவதாரங்களும்[தொகு]

சிவபெருமான் அண்ட சராசரங்களை உண்டாக்குவதற்காகத் தன்னில் இடப்பக்கத்தினை சக்தியாகப் பிரித்தார். [சான்று தேவை]ஆதி மூலவரான சிவபெருமானிலிருந்து சக்தி பிரிந்ததால் ஆதி சக்தி எனப்பட்டார். சிவபெருமானைப் போல ஆடல் கலையில் வல்லவராகவும், சிவபெருமானுக்கு நிகரானவராகவும் ஆதி சக்தி உள்ளார்.

தாட்சாயிணி[தொகு]

சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சனின் புதல்வியாகப் பூமியில் பிறந்தார். இவர் தாட்சாயிணி என்றும் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். சிவபெருமான் மீது காதல் கொண்டு பிரஜாபதியின் விருப்பத்தினையும் மீறிச் சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையான பிரம்மதேவரின் ஐந்து தலைகளுள் ஒன்றை கொய்து நான்கு தலைகளாக மாற்றிய சிவபெருமான் மீது பிரஜாபதி தட்சன் கோபம் கொண்டிருந்தார். எனவே சதி தேவியார் சிவபெருமானை திருமணம் செய்தது கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தமையால், சதி தேவியார் யாகக் குண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்கச் சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார். மேலும் வீரபத்திரன் மிகுந்த கோபம் கொண்டு பிரஜாபதி தட்சன் தலையைக் கொய்து பிரஜாபதி தட்சனின் யாகக் குண்டத்திலியே போட்டார். பின் தேவர்களின் மீது கோபம் கொண்டு அவரவர்க்கு உரிய தண்டனை தந்தார்.மேலும் ஈசன் தன் கருணையால் பிரஜாபதி தட்சன் தலைக்குப் பதில் அங்குள்ள ஒரு மேஷத்தின் தலையையை பொறுத்தினார்.பின் சதி தேவியின் உடலைச் சுமந்து பிரபஞ்சம் முழுதும் கோபத்துடன் சுற்றி திரிந்தார். இதனைக் கண்ட மகா விஷ்ணு தன் சுதர்சனத்தால் அன்னையின் உடலைப் பிரித்துச் சக்தி பீடங்களாக மாற்றினார்.

பார்வதி[தொகு]

சிவபெருமானை சதி தேவியாக அடைய இயலாத ஆதி சக்தி, மீண்டும் பூமியில் பர்வதராஜன் மைனாகுமாரி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். இவர் பார்வதி தேவி என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாகத் தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்கச் செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கிக் காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையைக் கொய்தார். பின் பார்வதி குழந்தையைக் காத்தருள வேண்டவே, சிவபெருமான் தனது பூத கணங்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையைக் கொண்டுவரும்படி ஆனையிட்டார். சிவ பூத கணங்களும் யானை தலையைக் கொண்டுவந்தன. சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் கணபதி என்றும் அறியப்படுகிறார்.

சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் முருகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை வாயு தேவன் சரவணப்பொய்கை நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அணைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றிணைந்தது. ஆறு முகங்களை உடையதால் "ஆறுமுகம்" என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் "கார்த்திக்கேயன்" என்றும், அழகான குழந்தை என்பதால் "முருகன்" என்றும் அறியப்படுகிறார்.

அழகு என்ற சொல்லிற்கு தமிழில் 

"முருகு" என்று பெயர்.

கங்கை[தொகு]

பர்வதராஜன் மற்றும் மைனாவதி தம்பதியினரின் மகளான கங்கை, சிவபெருமானிடம் என்றும் புனித தன்மை உடையவளாகத் திகழ வரம் பெற்றார். இதனால் தேவலோகத்தினை புனிதம் செய்ய இந்திரன் அழைப்பால் தேவலோக நதியாக மாறினாள். பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க கங்கை நதி பூமிக்கு வந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கித் தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து கங்கையை பூமிக்கு வரும் பொழுது பிரவாகத்தினை தடுத்து காத்தருள வேண்டினார். பகிரதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் கங்கையை சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இதனால் சிவபெருமான் கங்காதரன் என்று பெயர்பெற்றார்.

மோகினி[தொகு]

மகிசாசுரனின் தங்கையான மகிசி பிரம்மாவை தவத்தினால் மகிழ்வித்து சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே தன் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கினாள். அவ்வரத்தினால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமை செய்துவந்தமையால் திருமால் மோகினி அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் கூடி ஐயனார் என்ற மகனைப் பெற்றார். இவரே ஐய்யப்பன் என்றும் அறியப்படுகிறார்.

சிவபெருமானது ஐந்து குமாரர்களான பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆகியோர் பஞ்ச குமாரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.[4]

வரலாறு[தொகு]

சிவனின் தோற்றம்[தொகு]

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.[5][6] சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்டது சிவன் இல்லை என்று சில ஆராய்ட்சியாளர்கள் கூறுகின்றனர் [7]

பசுபதி முத்திரை[தொகு]

தொன்மையான மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின் பொழுது கண்டுபிடிக்கப்பெற்ற ஒரு முத்திரை, சிவ உருவத்தின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அகழ்வாராய்ச்சி அறிஞரான சர் ஜான் மார்சல் மற்றும் பலர் இந்த முத்திரை சிவனது தோற்றத்தினைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்கள்.

ருத்ரன்[தொகு]

ருத்ரன் சிவபெருமானின் ஒரு அம்சமாவார், புராணங்களில் இவரைப் பிரம்மா தோற்றுவித்ததாகவும், பிறந்ததிலிருந்து அழுது கொண்டிருந்தவரைச் சமாதானம் செய்யப் பிரம்மா பல பெயர்களை இட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தில் ருத்ரன், சிவன் இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். வேதங்களில் ருத்ரன் மிக ரௌத்திரமாகக் கடவுளாகவும், அழிக்கும் தெய்வமாகும், உறுமும் புயலின் கடவுளாகவும் கூறப்பெறுகிறார்.

இந்து மதத்தின் பழமையான வேதத்தில் ஒன்றான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார். இவர் வில் அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாகச் சித்தரிக்கப்பெறுகிறார். மேலும் பிரம்மாவிலிருந்து தோன்றியவராகவும், புயல்களின் கடவுளான ருத்ரர்களின் தகப்பனாகவும் அறியப்பெறுகிறார்.

வேதகால கடவுளுக்கான அடையாளங்கள்[தொகு]

அக்னி தேவன், வாயு தேவன், இந்திரன், பிரஜாபதி போன்ற வேதக் கடவுள்களுடன் சிவனுடைய சிறப்பு வேதத்தில் விளக்கப்பெற்றுள்ளது.

இந்து மதத்தில் இறைவன் நிலை[தொகு]

அகிலாண்ட தோற்றமும் ஊழிக்காலமும்[தொகு]

சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவராகவும், ஊழிக்காலம் எனப்படும் பிரளயத்தில் அவர் மட்டுமே நிலைத்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

பல கோடி கல்ப ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் மட்டுமே இருந்தார். அவர் தன்னுடைய ஒரு பாதியைச் சக்தி தேவியாகப் பிரித்தார். இருவரும் ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசங்களைத் தோற்றுவித்தனர். ஐம்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றுக்கு உரிய சிவபெருமான், படைத்தலுக்காகப் பிரம்மாவையும், காத்தலுக்காகத் திருமாலையும், அழித்தலுக்காக ருத்திரனையும் படைத்தார். அவர்களால் பதினான்கு உலகங்களைக் கொண்ட அகிலாண்டம் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு யுக முடிவிலும் வருகின்ற பிரளயம் போல் இல்லாமல் மகாபிரளயத்தில் அனைத்து அகிலாண்டங்களும் அழிகின்றன. அக்காலத்தில் சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடி ஆதிசக்தி, மும்மூர்த்திகள், பதினென்கணங்கள், மனிதர்கள் என அனைவருக்கும் முக்தியளித்து தன்னுள் இணைத்துக் கொள்கிறார். சிவபெருமானின் ஊழித்தாண்டவம் முடியும் பொழுது அவர் மட்டுமே நிலைத்திருப்பதாக இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

சைவம்[தொகு]

முதன்மை கட்டுரை: சைவ சமயம்

சைவ சமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; ) என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.[8] சிவ வழிபாடினை என்பது சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.[9] சைவசமயத்தினை சுருக்கமாகச் சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.[10] இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.[11]

பஞ்சயதனா பூசை[தொகு]

ஆதி சங்கரரால் பொழிவு பெற்ற ஸ்மார்த்தம் சமயத்தில் சிவன் முதன்மைக் கடவுள்களில் ஒருவராகக் கருதப்பெறுகிறார். உமையம்மை, கணபதி, திருமால், சூரியன் போன்றார் பிற கடவுளாவர்.

திரிமூர்த்தி[தொகு]

திரி என்பது மூன்று எனப் பொருள்தரும். திரிமூர்த்தி என்பது மூன்று பெரும் சக்திகளுடைய கடவுள்களைக் குறிப்பதாகும். இதனை மும்மூர்த்திகள் என்றும் கூறுவர்.

 1. பிரம்மா - படைப்பின் கடவுள்
 2. திருமால் - காக்கும் கடவுள்
 3. ருத்ரன் (சிவ அம்சம்)- அழிக்கும் கடவுள்.

அடையாளங்கள் மற்றும் குணநலன்கள்[தொகு]

அடையாளங்கள்[தொகு]

சிவபெருமான் ஞானக்கண் என்று கூறப்படும் நெற்றிக்கண்ணை உடையவர், அவருடைய ஆயுதமாகத் திரிசூலம் உள்ளது. அதனுடன் இசைக்கருவியான உடுக்கை (டம்டம்) இணைந்துள்ளது. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர். மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.

தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்பினர், அதன் தோலினையும் உரித்திக் கொண்டார். கொலையாயுதமான மழுவினை எய்தனர், அதனைத் தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாகச் சிவபெருமான் இணைத்துக் கொண்டார். சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார். பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோலை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.

காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றைச் சிவபெருமான் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார். பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு)வாசுகி பாம்பினால் கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர் என்பனவெல்லாம் சிவபெருமானின் அடையாளங்களாகக் கூறப்படுகிறது.

சிவனின் குணங்கள்[தொகு]

சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் எனத் தன்னை நினைத்துத் தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களைக் கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.

தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார்.[12] என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவ

வழிபாடு[தொகு]

சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;

 • காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
 • நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
 • மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
 • அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

சிவனின் ஐந்து தொழில்கள்[தொகு]

சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.

நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு[13]:

 1. ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலைக் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
 2. ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலைக் குறிக்கும்
 3. இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலைக் குறிக்கும்
 4. இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலைக் குறிக்கும்
 5. தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலைக் குறிக்கும்.

சிவனின் ஐந்து முகங்கள்[தொகு]

பொதுவாக ஐந்து முகங்களைக் கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்குக் காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

ஐந்து வடிவங்களும், தொழில்களும், திசைகளும்[தொகு]

பெயர் தொழில் திசை வடிவம் நிறம்
சத்யோ ஜாதம் படைத்தல் மேற்கு நிலம் பால் நிறம்..
வாமதேவம் காத்தல் வடக்கு நீர் சிவப்பு நிறம்
அகோரம் அழித்தல் தெற்கு நெருப்பு அஞ்சன (கறுப்பு) நிறம்
தற்புருடம் மறைத்தல் கிழக்கு காற்று மஞ்சள் குங்கும நிறம்
ஈசானம் அருளல் வடகிழக்கு ஆகாயம் படிக நிறம்.

[14][15]

சிவனது தனித்துவ அடையாளங்கள்[தொகு]

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாகக் கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

 • நெற்றிக்கண் காணப்படல்.
 • கழுத்து நீலநிறமாகக் காணப்படல்.
 • சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
 • நீண்ட சுருண்ட சடாமுடி
 • தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
 • உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
 • புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
 • கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
 • கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
 • நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
 • இடுகாட்டினை வாழ்விடமாகக் கொண்டிருப்பவர்
 • சக்தியைப் பாதியாகக் கொண்டிருத்தல்

சிவ அவதாரங்கள்[தொகு]

சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், சிவபெருமான் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்மபுராணம் கூறுகிறது. அவையாவன, ஸ்வேதா, சுதாரா, மதனன், சுஹோத்திரன், கங்கணன், லோகாக்ஷி, ஜெய் கிஷ்ஹவ்யன், தாதிவாகன், ரிஷபன், பிருகு, உக்கிரன், அத்திரி, கவுதமன், வேதசீர்ஷன், கோகர்ணன், ஷிகந்தகன், ஜடமாலி, அட்டஹாசன், தாருகன், லங்காலி, மகாயாமன், முனி, ஷுலி, பிண்ட முனீச்வரன், ஸஹிஷ்ணு, ஸோமசர்மா, நகுலீஸ்வரன் என்பனவாகும்.

இவற்றில் நகுலீஸ்வரன் என்பவர் பாசுபத சைவத்தின் ஒரு பிரிவான நகுலீச பாசுபதத்தினை உருவாக்கியவர் ஆவார்.

மனித வடிவங்கள்[தொகு]

சிவபெருமான் மனித வடிவெடுத்து மக்களுக்கு உதவியதாக திருவிளையாடல் புராணமும், பெரிய புராணத்திலும் குறிப்புகள் காணப்படுகின்றன. தருமிக்கு பொற்கிழிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர் வடிவம், சுந்தரமூர்த்தியை தடுத்தாட்கொண்ட வடிவம் என எண்ணற்ற வடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன.

சிவ வடிவங்கள்[தொகு]

முதன்மை கட்டுரை: சிவ வடிவங்கள்

சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.[16] அருவுருவமாக இலிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.

மகேசுவரமூர்த்தங்கள்[தொகு]

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன, சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர், பிட்சாடனர், காமசம்ஹாரர், கால சம்ஹாரர், சலந்தராகரர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, கிராதகர், கங்காளர், சக்ரதானர்,கஜமுக அனுக்கிரக மூர்த்தி, சண்டேச அனுக்கிரகர், ஏகபாதமூர்த்தி, லிங்கோத்பவர், சுகாசனர், உமா மகேஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நீலகண்டர் என்பனவாகும்.

சிவஉருவத்திருமேனிகள்[தொகு]

மகேசுவரமூர்த்தங்களுடன் இணைந்து மேலும் பல சிவரூபங்கள் இணைந்து சிவஉருவத்திருமேனிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை மொத்தம் அறுபத்து நான்காகும். அவையாவன இலிங்க மூர்த்தி, இலிங்கோத்பவ மூர்த்தி, முகலிங்க மூர்த்தி, சதாசிவ மூர்த்தி, மகா சதாசிவ மூர்த்தி, உமாமகேஸ்வர மூர்த்தி, சுகாசன மூர்த்தி, உமேச மூர்த்தி, சோமாஸ்கந்த மூர்த்தி, சந்திரசேகர மூர்த்தி, இடபாரூட மூர்த்தி, இடபாந்திக மூர்த்தி, புஜங்கலளித மூர்த்தி, புஜங்கத்ராச மூர்த்தி, சந்த்யான்ருத்த மூர்த்தி, சதாநிருத்த மூர்த்தி, சண்டதாண்டவ மூர்த்தி, கங்காதர மூர்த்தி,கங்காவிசர்ஜன மூர்த்தி , திரிபுராந்தக மூர்த்தி, கல்யாணசுந்தர மூர்த்தி, அர்த்தநாரீஸ்வர மூர்த்தி, கஜயுக்த மூர்த்தி, ஜ்வாரபக்ன மூர்த்தி, சார்த்தூலஹர மூர்த்தி, பாசுபத மூர்த்தி, கங்காள மூர்த்தி, கேசவார்த்த மூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, சரப மூர்த்தி, சடேச அனுக்ரஹ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, காலந்தக மூர்த்தி, காமதகன மூர்த்தி, இலகுளேஸ்வர மூர்த்தி, பைரவ மூர்த்தி, ஆபத்தோத்தரண மூர்த்தி , வடுக மூர்த்தி, க்ஷேத்திரபால மூர்த்தி, வீரபத்ர மூர்த்தி, அகோர மூர்த்தி, தட்சயஞ்யஷத மூர்த்தி, கிராத மூர்த்தி, குரு மூர்த்தி, அசுவாருட மூர்த்தி, கஜாந்திக மூர்த்தி, சலந்தரவத மூர்த்தி, ஏகபாதத்ரி மூர்த்தி, திரிபாதத்ரி மூர்த்தி, ஏகபாத மூர்த்தி, கௌரிவரப்ரத மூர்த்தி,சக்கரதான மூர்த்தி, கௌரிலீலாசமன்வித மூர்த்தி, விசாபகரண மூர்த்தி, கருடன் அருகிருந்த மூர்த்தி, பிரம்ம சிரச்சேத மூர்த்தி, கூர்ம சம்ஹார மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, வராக சம்ஹார மூர்த்தி, பிரார்த்தனா மூர்த்தி, இரத்த பிட்சா பிரதான மூர்த்தி, சிஷ்ய பாவ மூர்த்தி [17]

இந்தச் சிவவடிவங்களில் சில புகழ்பெற்று விளங்குகின்றன, அவைப் பற்றிக் கீழே

நடராசர்[தொகு]

முதன்மை கட்டுரை: நடராசர்
நடனம் ஆடும் நடராச வடிவம்

நடனக் கலையின் கடவுளாக நடராசர் அறியப்படுகிறார். நடராசர் என்பது சிவன் தாண்டவம் ஆடுகின்ற கோலமாகும். இத்திருக்கோலத்தினை சபேசன் என்றும், கூத்தன் என்றும் அழைக்கின்றார்கள். சபேசன் என்றால் சபையில் ஆடுகின்ற ஈசன் என்றும், கூத்தன் என்றால் கூத்து என்ற கலையில் ஈடுபடுகிற ஈசன் என்றும் பொருள்படும். ஆங்கிலத்தில் "the Lord of the Dance" என்றும் சிவன் புகழப்படுகிறார்.

அர்த்தநாரீஸ்வரர்[தொகு]

11ம் நூற்றாண்டினைச் சார்ந்த சோழர் காலத்து அர்த்தநாரீஸ்வரர் சிலை

.

முதன்மை கட்டுரை: அர்த்தநாரீஸ்வரர்

சிவனும் சக்தியும் இணைந்த திருவுருவத்தினை அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கின்றார்கள். இந்தத் திருக்கோலத்தில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் காட்சிதருகின்றனர். தன் இதயம் இருக்கும் இடப்புறத்தினை உமையம்மைக்கு பகிர்ந்துள்ளார் சிவன் என்றும் கூறுவர்.

தட்சிணாமூர்த்தி[தொகு]

பிரம்மகுமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய நால்வருக்கும் ஞானத்தினை போதிக்க சிவபெருமான் எடுத்த உருவமே தட்சிணாமூர்த்தியாகும். இந்தத் திருவுருவத்தில் பதின் பாலகராகச் சிவபெருமான் காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கும்.

திரிபுராந்தகர்[தொகு]

முதன்மை கட்டுரை: திரிபுராந்தகர்

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காகச் சிவபெருமான் எடுத்த திருவுருவத்திற்கு திரிபுராந்தகர் என்று பெயர்.

பிட்சாடனர்[தொகு]

அன்பின் வடிவினனான சிவனை ரிக் வேதம் அழகின் ரூபியாகச் சித்தரிக்கிறது.இவர் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்த சிவனின் கோர ரூபம்.தாருகாவனத்து முனிவர்கள் தம் தவ வலிமையினால் மமதை கொண்டு தாமே கடவுள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களின் ஆணவத்தை அடக்க உடலில் ஆடையில்லா கோலத்துடன் பிச்சை பாத்திரம் ஏந்தி நாயுடன் தாருகாவனம் சென்றார்.இவரின் கோலத்தைக் கண்டு இச்சித்த முனிவர்களின் மனைவிகளின் கற்புத்திறன் அழிந்தது.இதனால் முனிவர்களின் மமதையும் நீங்கியது.

வீரபத்திரர்[தொகு]

வீரபத்திரர் எம்பெருமான் சிவபெருமானின் மிகவும் உக்கிரமான ரூபமாகும்.சிவ பூசையில் தவறு செய்வோரையும் சிவ பூசைக்கு ஊறு விளைவிப்போரையும் தண்டிக்கும் கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறார்.தக்கனின் மகள் தாட்சாயிணியாக அவதரித்த சக்தி பருவம் எய்தியவுடன் எம்பெருமான் மீது காதல் கொண்டு தவமியற்றி சிவபெருமானை தன் மணாளனாக்கிக் கொண்டார்.பிறப்பால் மன்னர் குலத்தைச் சேர்ந்த தக்கன் தன் மகள் யோகியர்களின் தலைவனான சிவபெருமானை மணம் செய்த்தை பொருத்துக் கொள்ள இயலவில்லை.சிவ பெருமானை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் யாகம் வளர்த்துச் சிவன் தவிர்த்து மற்ற கடவுளனைவர்க்கும் அழைப்பு விடுத்ததுடன் நில்லாமல் சிவனிற்கு அவிர் பாகம் தர மறுத்தான்.இதனால் சினமுற்ற சிவபெருமான் வீர பத்திரன் ரூபமெடுத்து தக்கனின் யாகத்தையும் தக்கனையும் அழித்தார்.

சிவ அம்சங்கள்[தொகு]

சிவபெருமானின் அவதாரங்கள், வடிவங்கள் இவற்றைத் தவிர்த்துச் சில இறைவன்கள் சிவ அம்சமாகக் கருதப்படுகிறார்கள். சைவ சமயம் அனைத்து கடவுள்களையும் சிவ அம்சம் என்கிறது. அதன் அடிப்படையில் ஆதிசக்தி[18], முருகன்[19], விநாயகன்[20], வீரபத்திரன்[21], பைரவர், உருத்திரன் ஆகியோரை சிவ அம்சமாக விவரிக்கிறது. வைணவ சமயம் திருமால்[22], பலராமர், ஆதிசேசன், அனுமார்[23][24], ஜாம்பவான்[25] ஆகியோரை சிவ அம்சமாகக் கூறுகிறது.

இறைவன், இறைவியர் மட்டுமல்லாத அஃறினையான பொருள்களும் சிவ அம்சம் நிறம்பியதாக நம்பப்படுகிறது. அவையாவன ருத்திராட்சம், குத்துவிளக்கின் மேற்பாகம், யோகக் கலையில் பிங்கலை[26] என்பனவாகும்.

கடவுளுடனான உறவு[தொகு]

இந்து தொன்மவியல் கூறப்படுகின்ற கடவுள்களுக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான உறவு நிலைபற்றிக் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

திருமால்[தொகு]

வைணவர்களின் முழுமுதற்கடவுளான திருமால் சிவபெருமானின் மனைவியான உமையம்மையின் அண்ணாகப் போற்றப்படுகிறார். இதனால் திருமால் சிவபெருமானின் குழந்தைகளான விநாயகருக்கும், முருகனுக்கும் மாமனாகவும் அறியப்படுகிறார்.

படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கும் திருமாலிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற கருத்துவேறுபாடு எழுந்த பொழுது, சிவபெருமான் லிங்கோத்தபவராகக் காட்சியளித்தார். அவருடைய அடியைக் காண திருமால் வராக அவதாரம் எடுத்துச் சென்றதாகவும், பிரம்மா முடியைக்காண அன்னமாக எடுத்துச் சென்றதாகவும் இருவரும் அதில் தோல்வியடைந்து சிவனையே முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொண்டதாகவும் இந்து நூல்கள் கூறுகி்ன்றன. இதனை விளக்கும் பொருட்டு லிங்கோத்பவர் திருமேனி சிவாலயங்களில் அமைக்கப்பெறுகிறது.

தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்கச் சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகவரம்பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், திருமாலிடம் வேண்டினர். திருமாலும் மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினை காண இயலாத சிவபெருமான் திருமாலின் மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும், அவரின் வேண்டுகோளுக்கினங்கி மோகினியாக மாறிய திருமாலுடன் சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.[27]

பிரம்மன்[தொகு]

இலிங்கோத்பவராகக் காட்சியளித்த சிவபெருமானின் முடி தேடி சென்ற பிரம்மா, சிவமுடியிலிருந்து கீழே விழுந்த தாழ்ம்பூவின் துணையோடு தான் சிவமுடியை கண்டதாகப் பொய்யுரைத்தார். இதனால் பிரம்மாவின் வழிபாடு எங்கும் இல்லாதபோக சாபம் கிடைத்தது.

பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான தட்சன் கடுந்தவம் இயற்றி உமையம்மையை மகளாகப் பெற்றார். தந்தைக்கு மறுக்கப்பட்ட பூசையால் சிவனை வெறுத்தார். உமையம்மையே தாட்சாயினியாக அவதாரம் எடுத்தது அறிந்திருந்தும், சிவபெருமானுக்கு மணம் செய்விக்க மறுத்தார். இருந்தும் மும்மூர்த்திகளும், தேவர்களும் வலியுறுத்திச் சிவ தாட்சாயிணி திருமணத்தினை நடத்திவைத்தனர்.

ஆதிசக்தி[தொகு]

கல்ப கோடி ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் மட்டுமே இருந்தார். அவர் தன்னில் ஒரு பாதியை ஆதிசக்தியாக வெளிபடுத்தினார். இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை தோற்றுவித்தனர் எனச் சைவ நூல்கள் கூறுகின்றன. சிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி பூமியில் தட்சனின் மகள் தாட்சாயினியாகப் பிறந்து சிவபெருமானை மணந்தார். தட்சன் சிவபெருமானை வெறுத்தமையால், தன்னுடைய யாகத்திற்கு சிவபெருமானை அழையாமல் இருந்தார். இதை அறிந்த தாட்சாயினி தட்சனின் யாகத்தினை பூர்த்தியாகமல் செய்ய அதில் விழுந்து மறித்தார். பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்தார். கடுந்தவம் புரிந்து சிவபெருமானின் மனைவியானார். இத்தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இருகுழந்தைகள் உள்ளனர்.

விநாயகன்[தொகு]

கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையைத் தோற்றுவித்தாகவும், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும், பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

முருகன்[தொகு]

சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றைக் கார்த்திகைப் பெண்டீர் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.

கயிலை வந்த பிரம்மனிடம் படைப்பின் மூலமான பிரணவத்தின் பொருள் கேட்ட முருகன், பிரம்மன் அதை அறியாததால் சிறையில் இட்டார். தேவர்கள் வேண்டச் சிவபெருமான் பிரம்மனை விடுக்க முருகனிடம் கோரி, பிரணவத்தின் பொருளைத் தனக்கு உரைக்கும் படி கூறினார். சிவபெருமானுக்கு குருவாக இருந்து முருகன் உபதேசம் செய்தமையால் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார்.

சிறுதெய்வங்கள்[தொகு]

இந்து சமயத்தில் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்பெறும் நாட்டார் தெய்வங்களில் பல தெய்வங்கள் சிவனுடைய அம்சமாகக் கருதப்படுகின்றன. மாசி பெரியசாமி, முனியப்பசாமி, தன்னாசியப்பன் எனப் பல நாட்டார் தெய்வங்கள் சிவ வழிபாட்டிற்குள் வருகின்றன. சமணர்களின் மாசாத்தன் எனும் சிறு தெய்வம் சிவனின் மகனாக மாறியதாகவும் கருத்துண்டு [28] இந்தத் தெய்வங்கள் திருநீறு அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன. இந்தத் தெய்வங்களின் பிரசாதமாகச் சைவ அடையாளமான திருநீர் வழங்கப்படுகிறது.

சிவ விழாக்கள்[தொகு]

மகா சிவராத்திரி[தொகு]

முதன்மை கட்டுரை: மகா சிவராத்திரி

மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாகக் கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறை கால‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்நாளில் பா‌ர்‌வ‌தி தே‌வி, ‌சிவபெருமானை எ‌ண்‌ணி வ‌ழிப‌ட்டதாகச் சைவர்கள் நம்புகின்றார்கள்.

கார்த்திகை தீபம்[தொகு]

முதன்மை கட்டுரை: கார்த்திகை விளக்கீடு

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

பிரதோசம்[தொகு]

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் தோன்றியது. இதனால் சகல உயிர்களும் மரணிக்குமென பயம்கொண்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர். அவர் ஆலகால விஷத்தை அருந்தி உலகைக் காப்பாற்றினார். எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் உடலில் நஞ்சு சேர்ந்தால் சகல உயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை இருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.

சிவ விரதங்கள்[தொகு]

சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.

Sr. விரதம் எப்பொழுது
1 சோமவார விரதம் திங்கள்கிழமைகளில் இருப்பது
2 உமா மகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3 திருவாதிரை விரதம் மார்கழி மாதத்தில் வருவது
4 சிவராத்திரி விரதம் மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5 கல்யாண விரதம் பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6 பாசுபத விரதம் தைப்பூச தினத்தில் வருவது
7 அஷ்டமி விரதம் வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8 கேதார கவுரி விரதம் ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன்[தொகு]

கலிங்கத்துப்பரணி[தொகு]

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமையமர்ந் துயர்மலை இருந்தனனாக (கலி. 38)

இமயமலையில் பிறந்த மூங்கில் வில்லை வளைத்தவன், ஈரத்தினை உடைய சடையை உடையவனாகிய இறைவன், இறைவியோடு கயிலை மலையில் இருந்ததனன் என்று இப்பாடல் கூறுகிறது.

புறநானூறு[தொகு]

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே ... (புறம். 91)

அதியமானிடமிருந்து நெல்லிக்கனியை பெற்ற ஔவையார், சிவபெருமானைப் போல நிலைபெற அதியமானை வாழ்த்துகிறார்.

புறப்பொருள் வெண்பாமாலை[தொகு]

கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் கேட்கவாய்
பண்ணவனைப் பாடிப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலவிடற் றானையென்
கையொத்து நேர்கூப் புக. (புறப்பொருள் வெண்பாமாலை கடவுள் வாழ்த்து)

பொருள்: எள்ளினில் எண்ணெய் எவ்வாறு ஒன்றாக உள்ளதோ அதைப்போன்று, விடத்தால் நீலம் பொருந்திய கழுத்தினை உடையவனை, என் இரு கண்களும் காணவும், காதிரண்டும் அவன் புகழ் கேட்கவும், வாய் அவன்மீது பல பண்களை (பாடல்களை) பாடவும் சொல்லெடுக்க, என் இரு கரங்களும் எடுத்து நேர்த்தியாய் கூப்பும்.

தேவாரம்[தொகு]

பன்னிரு திருமுறைகள் கொண்ட தேவாரம் பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்[29].

 1. முதல் திருமுறை (சம்பந்தர் அருளியது)
 2. இரண்டாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
 3. மூன்றாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
 4. நான்காம் திருமுறை (அப்பர் அருளியது)
 5. ஐந்தாம் திருமுறை (அப்பர் அருளியது)
 6. ஆறாம் திருமுறை (அப்பர் அருளியது)
 7. ஏழாம் திருமுறை (சுந்தரர் அருளியது)
 8. எட்டாம் திருமுறை (திருவாசகம், மாணிக்கவாசகர் அருளியது)
 9. ஒன்பதாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
 10. பத்தாம் திருமுறை (திருமூலர் அருளிய திருமந்திரம்)
 11. பதினொன்றாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
 12. பன்னிரண்டாம் திருமுறை (சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)

ஒன்பதாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் ஒன்பது பக்தர்களாவர்[30]:

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் பன்னிருவராவர்[30]:

இதனை அருளியோர் பின்வருமாறு:

 1. திருஞானசம்பந்தர் (முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகள்)
 2. திருநாவுக்கரசர் அல்லது அப்பர் (நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் திருமுறைகள்)
 3. சுந்தரர் அல்லது சுந்தரமூர்த்தி நாயனார் (ஏழாம் திருமுறை)
 4. வாதவூரடிகள் (மாணிக்கவாசகர்) (திருவாசகம், எட்டாம் திருமுறை)
 5. திருமூலர் (திருமந்திரம், பத்தாம் திருமுறை)
 6. சேக்கிழார் (பெரியபுராணம், பன்னிரண்டாம் திருமுறை)
 7. அதிரா அடிகள்
 8. இளம்பெருமான் அடிகள்
 9. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
 10. கண்டராதித்தர்
 11. கபிலதேவ நாயனார்
 12. கருவூர்த் தேவர்
 13. கல்லாடதேவ நாயனார்
 14. காரைக்காலம்மையார்
 15. சேதிராயர்
 16. சேந்தனார்
 17. சேரமான் பெருமான் நாயனார்
 18. திருமாளிகைத் தேவர்
 19. திருவாலவாயுடையார்
 20. திருவாலியமுதனார்
 21. நக்கீரர்
 22. நம்பியாண்டார் நம்பி
 23. பட்டினத்து அடிகள்
 24. பரணதேவ நாயனார்
 25. புருடோத்தம நம்பி
 26. பூந்துருத்தி நம்பிகாடநம்பி
 27. வேணாட்டடிகள்

வாயு புராணம் கூறும் சிவனின் எட்டு பெயர்கள்[தொகு]

வாயு புராணத்தில் சிவனின் எட்டு பெயர்கள் விளக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் பிரம்மா தன்னைப் போல் ஒரு மகன் தோன்ற வேண்டுமென நினைக்க அவர் தொடைமீது நீல லோகித நிறமுடைய குழந்தை தோன்றி இடைவிடாது அழத்துவங்கியது. அப்போது அழுகைக்குக் காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வைக்குமாறு வேண்ட, அதன் பெயர் ருத்ரன் என்று கூறிட, ஒரு பெயர் போதாதென எட்டுப் பெயர்கள் வைத்தார். அவ்வெட்டு பெயர்கள் முறைய 1 உருத்திரன், 2 பவன், 3 சிவன், 4 பசுபதி, 5 ஈஸ்வரன் , 6 பீமன், 7 உக்கிரன், 8 மகாதேவன் ஆகும் [31]

புகழ் பெற்ற சிவத்தலங்கள்[தொகு]

முதன்மை கட்டுரை: சிவத் தலங்கள்

சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாகக் கம்போடியா, நேபாளம், இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளைக் கூறலாம். இவற்றினை விடவும் பாரத கண்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில் முப்பீட ஸ்தலங்கள், பஞ்சபூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச மன்ற தலங்கள், பஞ்ச பீட தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், பஞ்ச ஆசன ஸ்தலங்கள், பஞ்ச குரோச ஸ்தலங்கள், பஞ்ச லிங்க ஸ்தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள்,சப்த கரை சிவ தலங்கள்,சப்த கைலாய தலங்கள், அட்டவீரட்டானத் தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள், நவ சமுத்திர ஸ்தலங்கள், தச வீராட்டன தலங்கள் எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள், ஆதி கைலாய தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது காவிரி தென்கரைத் தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், பாண்டிய நாட்டு தலங்கள், கொங்கு நாட்டுத் தலங்கள், நடுநாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டு தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தலங்களில் உமையம்மை, பிரம்மா, திருமால், இந்திரன், சப்தகன்னியர்கள், நவகிரகங்கள், தேவலோக மங்கைகள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் எனப் பலர் சிவபெருமானை வழிபட்டுள்ளனர். வழிபட்டவர்களின் வேண்டுதல்களால் சிலதலங்கள் வழிபட்டோரின் சிறப்புதலமாகவும் அறியப்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 தமிழர் சமயம் நூலில் பாவாணர்.
 2. சைவ சமயம் நூல் - கொழும்பு விவேகநந்த சபை வெளியீடு சைவ சமய வரலாறு பகுதி பக்கம் 4
 3. http://www.shaivam.org/snmstham.htm The Thousands Named (Tamil Names of Lord siva)
 4. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! - தினமலர் கோயில்கள்
 5. http://www.harappa.com/script/parpola8.html
 6. http://www.archaeologyonline.net/artifacts/harappa-mohenjodaro.html
 7. http://www.sscnet.ucla.edu/southasia/History/Ancient/Indus2.html
 8. திருமந்திரம் -1486
 9. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm
 10. தமிழர் சமயம் - பாவாணர்
 11. http://www.valaitamil.com/tamil-and-samayam_6859.html
 12. "பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
  உவமை யின்மை யொருவினை யின்மை
  குறைவி லறிவுடைமை கோத்திர மின்மையென்
  றிறைவ னிடத்தி லெண்குண மிவையே"
  பிங்கலம்(2 : 6). பவம் (வ.) = பிறப்பு.
 13. http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614103.htm
 14. http://tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=670
 15. http://www.tamilvu.org/slet/l5F31/l5F31pd1.jsp?bookid=128&sec=8&pno=2518
 16. நீக்கமற நிறைந்த சிவன்
 17. http://temple.dinamalar.com/news.php?cat=7&pgno=4 64 சிவ வடிவங்கள் தினமலர் கோயில்கள்
 18. http://temple.dinamalar.com/New.php?id=874 சிவ அம்ச அம்பிகை
 19. http://tamilastrology.yourastrology.co.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2/
 20. சிவனும் பார்வதியும் ஆனை ரூபம் கொண்டு கூடி மகிழ்ந்தமையால் பிறந்த குழந்தை மற்றும் பார்வதி தேவியின் சாபத்தால் சிவன் ஆணை முகம் பெற்ற கதை
 21. சிவபெருமானின் சடாமுடியிலிருந்து தோன்றியமை
 22. அரியும் அரனும் ஒன்று - பழமொழி
 23. http://www.srigurumission.ujiladevi.in/2013/01/blog-post_25.html
 24. http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=14855 ஜெகம் புகழும் புண்ணியக் கதை அனுமன் கதையே - இந்திரா சௌந்திரராஜன் நக்கீரன் இதழ்
 25. மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் - பாற்கடலில் தோன்றியவை பங்கீடு பகுதி
 26. http://www.kaumaram.com/anuboothi/na_002u.html
 27. அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்
 28. http://www.tamilhindu.com/2009/09/vedic-shaivism-unity-in-diversity/
 29. http://www.thevaaram.org/nayanmar.php
 30. 30.0 30.1 http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=15
 31. http://www.gita-society.com/scriptures/ALL18MAJORPURANAS.IGS.pdf வாயு புராணம்

thiruvannamalai siddhar karthigainathan.blogspot.in/

வெளி இணைப்புகள்[தொகு]

கோயில்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்&oldid=2156171" இருந்து மீள்விக்கப்பட்டது