நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் | |
---|---|
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°13′8.4″N 78°10′1.2″E / 11.219000°N 78.167000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
நிலப்பரப்பு | கொங்கு நாடு |
தலைமையிடம் | நாமக்கல் |
வட்டம் (தாலுகா) | நாமக்கல் வட்டம், பரமத்தி வேலூர், இராசிபுரம், திருச்செங்கோடு வட்டம், மோகனூர், கொல்லி மலை, சேந்தமங்கலம், குமாரபாளையம் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | ச. உமா, இந்திய ஆட்சிப் பணி |
• காவல்துறை கண்காணிப்பாளர் | எசு. இராஜேஷ் கண்ணன் இந்தியக் காவல் பணி |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,368.21 km2 (1,300.47 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,26,601 |
• அடர்த்தி | 510/km2 (1,300/sq mi) |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 |
அஞ்சல் குறியீட்டு எண் | 637xxx |
தொலைபேசி குறியீடு | 04286 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | TN-28, TN-88, TN-34[1] |
Nearest districts | சேலம், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, கரூர் |
Central location: | 11°13′N 78°10′E / 11.217°N 78.167°E |
இணையதளம் | namakkal |
நாமக்கல் மாவட்டம் (Namakkal district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாமக்கல் ஆகும். 1997-ஆம் ஆண்டு சனவரி 1 அன்று சேலம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. கோழிப் பண்ணைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற மாவட்டம் ஆகும்.
எல்லைகள்
இதன் மேற்கில் ஈரோடு மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், வடக்கில் சேலம் மாவட்டமும் உள்ளன. காவிரி ஆறானது ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக உள்ளது.
வரலாறு
சங்க காலத்தில் வேட்டுவ மாமன்னர் வல்வில்ஓரி கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த பகுதியாகும். இவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இன்னும் வழிபாட்டு நிலையில் உள்ளன. பல நாடுகளை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த கடையெழு மன்னர் ஆவர். கொங்கு நாட்டின் சிம்ம சொப்பனமாக விளங்கிய பகுதி இதுவாகும். பிறகு, தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பாளையங்களாக இருந்தபோது சேந்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, ராமச்சந்திர நாயக்கர் ஆட்சி செய்து வந்துள்ளார் தற்போது உள்ள நாமக்கல் கோட்டையை இவர் கட்டினார் எனக் கருதுகின்றனர். தூசூர் நாடு, வாழவந்தி நாடு, இராசிபுர நாடு, கீழ் பூந்துறை நாடு, ஏழூர் நாடு, பருத்திப்பள்ளி நாடு, கீழ்க்கரை அரைய நாடு, விமலை நாடு ஆகியன கொங்கு நாட்டின் பகுதிகளாக இருந்தன. நாமக்கல் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியதால் இரண்டிற்கும் ஒரு வரலாறுதான் உண்டு. சேர, சோழ, பாண்டியர்களிடம் ஹோய்சாளர்கள் 14-ஆம் நூற்றாண்டின் ஆட்சியை உருவாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து விஜயநகர பேரரசு 1565-ஆம் ஆண்டும் மதுரை நாயக்கர்கள் 1623-ஆம் ஆண்டும் ஆட்சிக்கு வந்தனர். அதன் பிறகு சுல்தான்களாலும் மைசூர் மகாராஜாவாலும் 1750களில் கையகப்படுத்தப்பட்டது. இந்த சமயத்தில் ஹைதர் அலி இந்த பகுதிக்காக ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது 1768ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வசம் வந்தது.[2]
மக்கள்தொகை பரம்பல்
3,420 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாமக்கல் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,726,601 ஆகும். அதில் ஆண்கள் 869,280 ஆகவும்; பெண்கள் 857,321 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 15.61% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 505 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 74.63% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 150,699 ஆகவுள்ளனர்.[3] நகர்புறங்களில் 40.32% மக்களும்; கிராமப்புறங்களில் 59.68% மக்களும் வாழ்கின்றனர்.
இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 1,673,652 (96.93%) ஆகவும், கிறித்தவர்கள் 16,909 (0.98%) ஆகவும், இசுலாமியர்கள் 32,483 (1.88%) ஆகவும், மற்றவர்கள் 0.20% ஆகவும் உள்ளனர்.
புகழ்பெற்றவர்கள்
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 391 வருவாய் கிராமங்களும், 5 நகராட்சிகளும், 19 பேரூராட்சிகளும், 19 ஊராட்சி ஒன்றியங்களும், 322 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[4]
வருவாய் வட்டங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் வட்டம், திருச்செங்கோடு வட்டம், இராசிபுரம் வட்டம், சேந்தமங்கலம் வட்டம், குமாரபாளையம் வட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், கொல்லிமலை வட்டம் மற்றும் மோகனூர் வட்டம் என 8 வட்டங்களும், 322 வருவாய் கிராமங்களும் உள்ளது.[5]
உள்ளாட்சி நிர்வாகம்
இம்மாவட்டத்தில் 5 நகராட்சிகளும், 19 பேரூராட்சிகளும் உள்ளது.[6]
நகராட்சிகள்
பள்ளிபாளையம் & குமாரபாளையம் நகராட்சிகள் இரண்டும் குமாரபாளையம் வட்டத்தில் உள்ளது.
பேரூராட்சிகள்
ஊராட்சி நிர்வாகம்
இம்மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களும் 322 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[7]
ஊராட்சி ஒன்றியங்கள்
- நாமக்கல் ஊராட்சி ஒன்றியம்
- திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம்
- இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம்
- மோகனூர் ஊராட்சி ஒன்றியம்
- பரமத்தி ஊராட்சி ஒன்றியம்
- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம்
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம்
- மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
- நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
- பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம்
- புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
- சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
- வென்னாந்தூர் ஊராட்சிஒன்றியம்
- எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
- கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம்
அரசியல்
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள்
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளது.[8]
தொகுதி | வேட்பாளர் | கட்சி |
---|---|---|
இராசிபுரம் | ப. தனபால் | அதிமுக |
சேந்தமங்கலம் | சாந்தி ராஜமாணிக்கம் | தேமுதிக |
நாமக்கல் | கே. பி. பி பாஸ்கர் | அதிமுக |
பரமத்தி-வேலூர் | தனியரசு | அதிமுக |
திருச்செங்கோடு | சம்பத் குமார் | தேமுதிக |
குமாரபாளையம் | பி. தங்கமணி | அதிமுக |
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டுள்ளது, அது போலவே திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி) ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. 15 வது (2009 மே) மக்களவையிலிருந்து இதன் படியே தேர்தல் நடைபெறுகிறது.
சட்டமன்ற தொகுதிகள்
மக்களவை தொகுதி
பொருளாதாரம்
நாமக்கல் மாவட்டம் சரக்கு போக்குவரத்து துறையிலும் கோழி வளர்ப்பிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
- நாமக்கல் சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு கேரளா மாநிலதிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் தினமும் 25,00,000 முட்டைகள் லய்பிரியா, பகுரைன், ஆப்கானித்தான், ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- திருச்செங்கோடு ஆழ்துளைக் கிணறு (BoreWell) தோண்டும் வண்டிகளுக்கு பெயர் பெற்றது.
- குமாரபாளையம் & திருச்செங்கோடு விசைத்தறி & கைத்தறி தொழிலுக்கு பெயர் பெற்றது.
- பள்ளிபாளையத்தில் சேசாயி காகித ஆலை உள்ளது.
- மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
- இராசிபுரம் பகுதி சவ்வரிசி ஆலைகளுக்கு பெயர் பெற்றது.
- பேளுக்குறிச்சி சந்தையானது கொல்லி மலையிலிருந்து வரும் மிளகு, மல்லி, சீரகம் போன்ற மளிகைப்பொருட்களுக்கு பெயர் பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் இங்கு வருவார்கள்.
- பள்ளிபாளையம் தமிழ்நாட்டின் முக்கிய விசைத்தறி மையங்களுள் ஒன்று.
வேளாண்மை
இம்மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தின் முக்கிய பிரிவாக வேளாண்மைத் தொழில் தொடர்ந்து இருந்து வருகிறது. 70 சதவிகித மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக வேளாண்மையையும், அதன் தொடர்புடைய தொழில்களைச் செய்து வருகிறார்கள். மாவட்டத்தினுடைய மொத்த பரப்பானது 3363.35 சதுர கிலோ மீட்டராகும். இதில் மொத்த பயிர் பரப்பானது 3.367 இலட்சம் எக்டேராகும். நிலையான வேளாண்மை உற்பத்தி, நீடித்த வேளாண்மையில் உற்பத்தி அதிகரிப்பு, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தேவையைப் பூர்த்தி செய்தல், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடாகவும் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தினுடைய மொத்த புவியியல் பரப்பானது 3,36,719 எக்டேராகும். இதில் நிகர பயிர் சாகுபடி பரப்பானது 1,41,537 எக்டேராகும். மேலும் இவற்றில் 60,939 எக்டேர் நீர் பாசனம் பெறும் பகுதியாகும். மீதமுள்ள 80,598 எக்டேர் மானாவாரி பகுதியாகும். மேட்டூா் கிழக்குக்கரை வாய்க்கால் மூலம் 4585 எக்டேர் பரப்பளவில் பள்ளிபாளையம் வட்டாரம் பாசனம் பெறுகின்றது. சராசரி வருடாந்திர மழை அளவானது 716.54 மி.மீ ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் இம்மாவட்டத்தினுடைய மக்களுக்கு வேளாண்மை முதன்மைத் தொழிலாகத் திகழ்கிறது.[9]
சராசரி மழையளவானது 716.54 மி.மீ ஆகும். இம்மாவட்டம் அனைத்து பருவகாலங்களிலும் மழை பெறுகின்றது. இருப்பினும் அதிகமான மழையளவு வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கப்பெறுகின்றது. தமிழ்நாடு 7 பெரிய வேளாண் காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வடமேற்கு மண்டலத்திலும், மேற்கு மண்டலத்திலும் பிரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 40 °C -லிருந்து குறைந்தபட்சமாக 18 °C வரை நிலவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவிகித மண்ணின் தன்மை செம்மண்ணாக உள்ளது. இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான மண்ணின் வகைப்பாடு இருக்கூா், து@க்கானூா் மற்றும் பீளமேடு ஆகும். மண்ணின் கார அமில நிலையின் அளவு 5.2 முதல் 8.7 வரை உள்ளது. மன்ணிலுள்ள உப்பின் அளவு 0.1 முதல் 1.0 வரை உள்ளது.[10]
பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாகவும் அது தொடர்பான தொழில் நுட்பங்களை விளம்பரப்படுத்துதல் மூலமாகவும் வேளாண்மை துறையானது உணவு உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சியினை அடைவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உற்பத்தியினை அதிகப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் – பயறு வகைகள், எண்ணெய்வித்து, ஊட்டமிகு சிறுதானியங்கள், எண்ணெய்பனை, மரக்கன்றுகள் நடுதல், தமிழ்நாடு பருத்திச் சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், மண் வள அட்டை இயக்கம், மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், பசுந்தாள் உரம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத் தொழில் நுட்பங்கள் ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிர் பரவலாக்கம் மூலம் அதிக வருமானம் கிடைப்பதோடு, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் கிடைப்பதனால் உழவுத் தொழில் செய்பவர்களுடைய பொருளாதார நிலை உயருகின்றது. வாய்க்கால், குளம், ஆழ்குழாய்க் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் ஆகியன இம்மாவட்டத்தினுடைய பாசனத்திற்கான ஆதாரங்களாகும். இதில் அதிக பகுதிகள் குழாய் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் பெறுகின்றன. பள்ளிபாளையம் வட்டாரத்தில் மேட்டூா் கிழக்குகரை வாய்க்கால் மூலம் 4585 எக்டோ் பாசனம் பெறுகின்றது. ராஜவாய்க்கால் மூலம் 4215 எக்டா் மோகனூா் வாய்க்கால் மூலம் 355 எக்டா், குமாரபாளையம் வாய்க்கால் மூலம் 1146 எக்டா், பொய்யோp வாய்க்கல் மூலம் 323 எக்டா் பாசனம் பெறுகின்றது. நெல், சோளம், நிலக்கடலை, பாசிப்பயறு, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய முக்கிய வேளாண்மை பயிர்களாக, இம்மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.[11]
கோயில்கள்
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
- நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்
- திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்
- நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்
- வையப்பமலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள்
கன்னியாகுமரியை வாரணாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 நாமக்கல் மாவட்டத்தின் வழியாக செல்கிறது. இது புதுசத்திரம்,வேலூர், பரமத்தி, நாமக்கல், இராசிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 47 குமாரபாளையம் நகரின் ஊடாக செல்கிறது. சேலத்தை ஈரோட்டுடன் இணைக்கும் இரும்புப்பாதை நாமக்கல் மாவட்டத்தின் வழியாக சென்றாலும்
இருப்புப்பாதை திட்டம்
நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாநில நெடுஞ்சாலைகள்
- மாநில நெடுஞ்சாலை 94 - நாமக்கல்லையும் திருச்செங்கோட்டையும் இணைக்கிறது.
- மாநில நெடுஞ்சாலை 95 - மோகனூரை நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக இராசிபுரத்துடன் இணைக்கிறது.
- மாநில நெடுஞ்சாலை 25 - நாமக்கல்லையும் திருச்சிராப்பள்ளியையும் இணைக்கிறது
- மாநில நெடுஞ்சாலை 79 - ஈரோட்டையும் ஆத்தூரையும் திருச்செங்கோடு இராசிபுரம் நாமகிரிபேட்டை வழியாக இணைக்கிறது.
- மாநில நெடுஞ்சாலை 161 -நாமக்கல்லையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கண்ணனூரையும் வரகூர், பவித்திரம், தாத்தங்கையார் பேட்டை வழியாக இணைக்கிறது.
சுற்றுலா
மேற்கோள்கள்
- ↑ "www.tn.gov.in" (PDF). TN.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.
- ↑ http://www.tn.gov.in/district_details/28331
- ↑ Namakkal District : Census 2011 data
- ↑ Namakkal Revenue District Administraion
- ↑ நாமக்கல் மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
- ↑ நாமக்கல் மாவட்ட ஊள்ளாட்சி அமைப்புகள்
- ↑ நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
- ↑ நாமக்கல் மாவட்ட சட்டமன்ற & நாடாளுமன்றத் தொகுதிகள்
- ↑ https://namakkal.nic.in/departments/agriculture/
- ↑ http://www.spc.tn.gov.in/Exe_Summary_DHDR/Namakkal.pdf
- ↑ http://www.crida.in/CP-2012/statewiseplans/Tamilnadu%20(pdf)/TNAU,%20Coimbattore/TN23-NAMAKKAL%2031.03.2011.pdf[தொடர்பிழந்த இணைப்பு]