புதுக்கோட்டை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுக்கோட்டை
மாவட்டம்

திருமயம் கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் புதுக்கோட்டை
பகுதி மத்திய மாவட்டம்
ஆட்சியர்
மெர்சி ரம்யா, இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

-
நகராட்சிகள் 2
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 12
பேரூராட்சிகள் 8
ஊராட்சி ஒன்றியங்கள் 13
ஊராட்சிகள் 497
வருவாய் கிராமங்கள் 763
சட்டமன்றத் தொகுதிகள் 6
மக்களவைத் தொகுதிகள் 4 (பகுதிகள்)
பரப்பளவு 4663 ச.கி.மீ.
மக்கள் தொகை
16,18,345 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
621 xxx, 622 xxx, 614 xxx, 613 xxx
தொலைபேசிக்
குறியீடு

04322
வாகனப் பதிவு
TN-55
பாலின விகிதம்
ஆண்-50%/பெண்-50% /
கல்வியறிவு
77.19%
சராசரி கோடை
வெப்பநிலை

40.9 °C (105.6 °F)
சராசரி குளிர்கால
வெப்பநிலை

17.8 °C (64.0 °F)
இணையதளம் pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் (Pudukkottai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் புதுக்கோட்டை ஆகும். சனவரி 14, 1974-இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மாவட்டத்தின் எல்லைகள்[தொகு]

புதுகை மாவட்டத்தின் எல்லைகள் வடக்கு மற்றும் வடமேற்கே திருச்சி மாவட்டமும், தெற்கு மற்றும் தென்மேற்கே சிவகங்கை மாவட்டமும், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், பாக் நீரிணையான (வங்காள விரிகுடா கடலும்), கிழக்கு மற்றும் தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்டத்தின் அமைப்பு[தொகு]

  • புதுகை மாவட்டம் கிழக்கு நிலைக்கோட்டில் 78° 25' மற்றும் 79° 15'க்கு இடையேயும் வடக்கு நேர்க்கோட்டில் 9° 50' மற்றும் 10° 40'க்கு இடையேயும் அமைந்துள்ளது.
  • புதுகை ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். கடற்கரையின் நீளம் 42 கிலோமீட்டர் ஆகும்.
  • இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதாகும்.
  • மேலும் பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிறக்கம் கொண்ட பகுதியாக இருக்கும்.

முக்கிய அமைவிடங்கள்[தொகு]

வரலாறு[தொகு]

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்[தொகு]

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் பொ.ஊ.மு. 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலகட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலகட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

தமிழி கல்வெட்டு[தொகு]

பிராமி (தமிழி) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் பொ.ஊ.மு. 200 முதல் பொ.ஊ. 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில் (அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.

தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையின் பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்கள், சோழர்கள், முத்தரையர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹொய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர்.

சங்ககாலம்[தொகு]

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குரியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு பொ.ஊ. முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்"

என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71-ஆவது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25-ஆவது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247-ஆவது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இன்னும் 4 ஊர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள அம்புக்கோவில் (பண்டைய அலும்பில்); ஆவூர்கிழார், ஆவூர் முலம்கிழார் ஆகிய புலவர்களின் ஊரான ஆவூர்; எரிச்சி (பண்டைய எரிச்சலூர்) - புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி கிராமம் (எனினும், அண்மைய ஆய்வுகளின்படி இவ்வூர் இலுப்பூர் அருகே இருப்பதாக கருதப்படுகிறது.) இவ்வூர் மடலன் மதுரைக் குமரனார் என்ற புலவரின் ஊராக இருக்கக்கூடும்; ஔவையாருடன் தொடர்புப்படுத்தி பார்க்கத்தக்க அவயப்பட்டியில் ஔவையார் சிறிது காலம் வாழ்ந்திருக்ககூடும்; பொன்னமராவதி அருகே உள்ள பரம்பு மலையில் (தற்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது) கடையேழு வள்ளல்களில் முதலாமவரான பாரியின் நிலமாகும். கபிலர், பாரியின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். இங்கு, செந்தமிழ் கல்லூரி என்ற தமிழ் மொழிக்கான கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது.

இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.

புதுக்கோட்டையில் ரோமாபுரி[தொகு]

திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பொ.ஊ. முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் பொ.ஊ.மு. 29க்கும் பொ.ஊ. 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது.(செலாவணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்)

இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,

மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (பொ.ஊ.மு. 29 - பொ.ஊ. 14)
டைபீரியஸ் சீசர் (பொ.ஊ. 14 - பொ.ஊ. 27)
நீரோ ட்ரூசஸ் (பொ.ஊ. 38 - பொ.ஊ. 9)
அந்தோனியா (ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா (ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா (பொ.ஊ. 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (பொ.ஊ. 41 - 54)
நீரோ (பொ.ஊ. 54 - 68)
வெஸ்பாசியானஸ் (பொ.ஊ. 69 - பொ.ஊ. 79)

நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

களப்பிரர் ஆட்சி(சுமார் பொ.ஊ. 300 - பொ.ஊ. 590)[தொகு]

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் பொ.ஊ. 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

முதல் பாண்டியப் பேரரசு[தொகு]

புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன் (பொ.ஊ. 710 - 740), மாறன் சடையன் (பொ.ஊ. 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன் (பொ.ஊ. 862 - 880) வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது.

பல்லவர்[தொகு]

புதுக்கோட்டைப் பகுதியில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (பொ.ஊ. 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தந்திவர்மன் (பொ.ஊ. 775 - 826), நிருபதுங்கவர்மன் (பொ.ஊ. 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

முத்தரையர்[தொகு]

தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக்கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.

புதுக்கோட்டை தொண்டைமான்கள்[தொகு]

சென்னை மாகாணத்தில் 1913-இல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பகுதியைக் காட்டும் வரைபடம்

இராமநாதபுர மன்னர் இரகுநாத கிழவன் என்ற கிழவன் சேதுபதி, இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, இரகுநாதராயத் தொண்டைமான் தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.

மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் புதுக்கோட்டை என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து விஜயரகுநாதத் தொண்டைமான் (1730-1769). இராய ரகுநாதத் தொண்டைமான் (1769-1789), விஜயரகுநாதத் தொண்டைமான் (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.

பொ.ஊ. 18-ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் சந்தா சாகிப்பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் ஐதர் அலியுடன் போர்புரிந்தபொழுதும் புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியாக இருந்தார்.

பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.

பின்னர் மன்னரான விஜயரகுநாதராயத் தொண்டைமான் (1807-1825), தமது 10-ஆவது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு பிளாக்பர்ன் என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை சேஷய்ய சாஸ்திரி என்ற திவான் கவனித்தார்.

இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912-ஆம் வருடம் புதுக்கோட்டை நகரத்தில் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டது. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

4,644 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 16,18,345 ஆகும். அதில் ஆண்கள் 803,188 ஆகவும்; பெண்கள் 815,157 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 10.88% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 348 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 77.19% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,79,688 ஆகவுள்ளனர்.[1]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 14,28,784 (88.29%), கிறித்தவர்கள் 72,850 (4.50%), இசுலாமியர்கள் 1,14,194 (7.06%) ஆகவும் உள்ளனர்.

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
19015,47,620—    
19115,83,413+6.5%
19216,07,933+4.2%
19315,73,642−5.6%
19416,22,706+8.6%
19517,04,102+13.1%
19617,50,461+6.6%
19719,47,351+26.2%
198111,56,813+22.1%
199113,27,148+14.7%
200114,59,601+10.0%
201116,18,345+10.9%
ஆதாரம்:[2]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

வருவாய் நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும், 763 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[3]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களையும்[4] , 497 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[5] மேலும் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என இரண்டு நகராட்சிகளையும் மற்றும் 8 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.[6]

காலநிலை[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 41.2 °C மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 23.1 °C ஆகும். ஆண்டிற்கு சராசரியாக 887.4 மி. மீ. மழைப்பொழிவை இம்மாவட்டம் பெறுகிறது.[7]

வேளாண்மை[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மையாகப் பயிர் செய்யப்படும் பயிர்கள் அரிசி, சோளம், மக்காச்சோளம், உளுந்து, எள், வேர்க்கடலை, தென்னை, கரும்பு, மா, வாழை மற்றும் முந்திரி ஆகியவை ஆகும்.[7]

கல்வி[தொகு]

2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு[2]

வரிசை எண் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம் ஆண் ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள் மொத்தம்
1 கலை அறிவியல் கல்லூரிகள் 5404 12479 17883 295 437 732
2 பொறியியற் கல்லூரிகள் 9460 4273 13669 619 418 1037
3 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 11608 965 12255 641 279 920
4 கல்வியியல் கல்லூரிகள் 404 1189 1593 148 105 263
5 வேளாண் கல்லூரிகள் 87 92 179 12 9 21
6 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 32 449 481 45 25 70
7 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் 33 199 232 2 14 16
8 தொடக்கப்பள்ளிகள் 30070 29469 59539 1176 1688 2864
9 நடுநிலைப்பள்ளிகள் 24086 22359 46445 1093 1166 2259
10 உயர்நிலைப்பள்ளிகள் 33358 32025 65383 1152 2067 3219
11 மேல்நிலைப்பள்ளிகள் 24086 22359 46445 1093 1166 2259
12 சிறப்புப் பள்ளிகள் 50 35 85 5 14 19
13 தொழிற்பயிற்சி நிலையங்கள் 1160 172 1332 104 16 120
மாவட்டத்தில் மொத்தம் 139838 126065 265521 6385 7404 13799

மேலும் இங்கு சிறப்பாக செயல்படகூடிய மகளிர் கல்லுரிகளும் அமைந்துள்ளது.அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை. பாரதி மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை. நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி, ராஜேந்திரபுரம்.

அரசியல்[தொகு]

இம்மாவட்டம் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் கரூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டவை.[8]

உணவு[தொகு]

முட்டை மாஸ் மற்றும் முட்டை லாப்பா புரோட்டா எனும் உணவு புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த பிரபலமான உணவு ஆகும்.[9]

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

சுற்றுலாத் தலங்கள். மேல் இடமிருந்து கடிகாரச் சுற்றாக: தீர்த்தங்காரர் சிலை (சித்தன்னவாசல்), திருமயம் மலைக்கோட்டை, விஜயாலய சோழீஸ்வரம் கோயில் (நார்த்தாமலை), குடுமியான்மலை மற்றும் மூவர் கோயில் (கொடும்பாளூர்).

மேற்கோள்கள்[தொகு]

  1. Pudukkottai District : Census 2011 data
  2. Decadal Variation In Population Since 1901
  3. புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம்
  4. "புதுக்கோட்டை மாவட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
  5. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  6. புதுக்கோட்டை மாவட்ட நகராட்சிகளும்; பேரூராட்சிகளும்
  7. 7.0 7.1 புதுக்கோட்டை மாவட்ட விவரம்
  8. புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள்
  9. "முட்டை மாஸ்.... மூன்று வகை ரெசிப்பி... ஐந்து வகை குழம்பு... அசத்தும் ருசி!". Archived from the original on 2020-05-23. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுக்கோட்டை_மாவட்டம்&oldid=3890690" இலிருந்து மீள்விக்கப்பட்டது