புதுக்கோட்டை சமஸ்தானம்
புதுக்கோட்டை சமஸ்தானம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1680–1948 | |||||||||||
கொடி | |||||||||||
![]() சென்னை மாகாணத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அமைவிடம் | |||||||||||
நிலை | . கிபி 1686 முதல் 1800 வரை சுதந்திர அரசாகவும் ,1800 - முதல் 1948 முடிய பிரித்தானியர்களின் கீழ் சமஸ்தானமாக இயங்கியது. | ||||||||||
தலைநகரம் | புதுக்கோட்டை | ||||||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ், ஆங்கிலம் | ||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
அரசன் | |||||||||||
• (முதல்) 1680–1730 | இரகுநாதராய தொண்டைமான் | ||||||||||
• (இறுதி) 1928–1948 | இராஜகோபால தொண்டைமான் | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1680 | ||||||||||
• துவக்க கால ஆவணங்கள் | 1680 | ||||||||||
• முடிவு | 1 மார்ச் 1948 | ||||||||||
பரப்பு | |||||||||||
1941 | 3,050 km2 (1,180 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1941 | 438648 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | தமிழ்நாடு, இந்தியா,புதுக்கோட்டை |

புதுக்கோட்டை சமஸ்தானம், கி பி 1686 முதல் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து தன்னாட்சியாக இயங்கியது. பின்னர் 1800 - முதல் 1948 முடிய பிரித்தானியர்களின் கீழ் சமஸ்தானமாக இயங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம், 1948-ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
முக்கிய ஆட்சியாளர்கள்
[தொகு]ஆவடையரகுநாத தொண்டைமான்
[தொகு]திருமலை தொண்டாமான் அக்காலத்தில் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலத்தில் இருந்த திருப்பதியில் இருந்து அன்புக்கோயிலில் குடியேறியவர். திருமால் தொண்டைமான் என்பவரின் மரபு வழியில் வந்தவர்களில்
- திருமால் தொண்டைமான்
- நமன தொண்டைமான்,
- பச்சை தொண்டைமான்,
- தண்டகா தொண்டைமான்,
- நமணா தொண்டைமான்,
- திருமா தொண்டைமான்,
- நமனா தொண்டைமான்,
- பச்சை தொண்டைமான்,
- நமனா தொண்டைமான்,
- பச்சை தொண்டைமான்,
- கிண்கிணி தொண்டைமான்,
- தண்டகா தொண்டைமான்,
- திருமா தொண்டைமான்
என்ற தொண்டைமான்களில் பதினான்காவது தலைமுறையான பச்சை தொண்டைமான் மகன் ஆவடை இரகுநாத தொண்டைமான். இவர் விசயநகரப் பேரரசின் மன்னரான மூன்றாம் ஸ்ரீரங்கரிடம் படைத் தளபதியாக இருந்தவர். இவர் கறம்பக்குடியில் 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்தார்.
இவருடைய வீரத்தையும், இரணுவப் பணிகளையும் பாராட்டி ஸ்ரீரங்கர், 1639 ஆம் ஆண்டு ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய என்ற பட்டத்தையும் ஏராளமான நிலங்களையும், பரிசுகளையும் அளித்தார். அரசர்களுக்கு உரிய அம்பாரி யானை, முரசு யானை, சிங்கமும பல்லாக்கு பயன்படுத்தும் உரிமை வழங்கினார். ஆவடையரகுநாத தொண்டைமானின் மகனாக 1641 இல் இரகுநாதராய தொண்டைமான் பிறந்தார். 1661 ஆம் ஆண்டு, ஆவடையரகுநாத தொண்டைமானின் மரணத்திற்குப் பின்னர் அவரது பதவிக்கு இரகுநாதராய தொண்டைமான் வந்தார். இந்த மரபினரே புதுக்கோட்டை அரசர்களாவர்.
ஆட்சி பொறுப்பை ஏற்ற இரகுநாதராய தொண்டைமான், தஞ்சை நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் இராமநாதபுரம் சேதுபதிகளிடம் படைத்தலைவராக இருந்தார்.[1]
இரகுநாத தொண்டைமான் (1686–1730)
[தொகு]
1669 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையின் வசம் இருந்த கறம்பக்குடி, பிலாவிடுதி பகுதிகளை ஆட்சி செய்தார். அப்போது தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர் படையில் சேர்ந்து, பல போர்களில் கலந்துகொண்டார். இவரது வீரத்தையும், திறமையும் பாராட்டி விஜயராகவ நாயக்கர் 'பெரிய ராமபாணம்' என்ற விகுதியும், 'விஜய' என்ற பட்டத்தையும், வைர மாலையும் பரிசாக வழங்கினார். 1673 ஆம் ஆண்டு தஞ்சாவூர் படையில் இருந்து விலகினர். பிறகு மதுரை நாயக்கர் இராணி மங்கம்மாள் ஆட்சியில் குஸ்தம் கான் மதுரையை கைப்பற்றிக்கொண்டான். அப்பொழுது மதுரையை மீட்கும் கூட்டணியில், இவர் பெரும்பங்கு வகித்தார். இதற்கு நன்றிகடனாக திருச்சி அரசு காவலராக இருக்கும் உரிமையும், 12 கள்ளர் குடிகளுக்கு தலைமையாக இருக்கும் உரிமையும் வழங்கப்பட்டது.
பேராற்றல் மிக்க ரகுநாதராய தொண்டைமானையும், இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கினார். இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை சேதுபதி மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார்.
இச் சமயத்தில் தற்போதைய புதுக்கோட்டையின் குளத்தூர், திருமயம் பகுதிகளை சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர் ஆட்சி செய்துவந்தார். இவர்கள் சேதுபதி மன்னர்களை விட பழமையான மரபினர். ஆனால் கிழவன் சேதுபதி காலத்தில், அவர்களுக்கு கிழ் ஆட்சிக்குட்பட்டவராக இருந்தனர். சேதுபதி ஆட்சிக்கு கீழே இருக்க விரும்பாமல், சுயாட்சியை விரும்பி தஞ்சாவூர் மராட்டியர் உதவியை நாடியதை அறிந்த சேதுபதி, அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். பல்லவராயர் ஆட்சி பகுதிகள் முழுமையாக தொண்டைமானிடம் ஒப்படைத்தார்.
கிபி 1686 ல் , புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கி புதுக்கோட்டையின் முதல் மன்னராக ரகுநாதராய தொண்டைமான் அரியணை ஏறினார். இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர். ரகுநாதராயத் தொண்டைமான் தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார்.
இப்பகுதியில் இருந்த பல்லவராயர்களுடன் மண உறவில் இணைந்தனர். இப்பகுதியில் இவர்களது தொடர்புகள் வலுப்பட்டன.
1717–1721 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக் குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் புதுக்கோட்டையில் அடைக்கலம புகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்டு பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர்தம் பேரன்களில் மூத்தவராகிய விஜயரகுநாதனுக்கு முடி சூட்டிவிட்டு 1730-ல் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.[1]
விஜயரகுநாதராய தொண்டைமான் (1730–1769)
[தொகு]இவருக்குச் சிவஞானபுரத்துறைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டு பாளையப்பட்டுகளை அளித்துத் தமக்கு உதவியாக வைத்தக் கொண்டார். அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது. ஆதலினால் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தார். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார்.
1733-ல் தஞ்சை அரசரின் சேனைத் தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்து பெரும் பகுதியைப் கைபற்றிக்கொண்டார் ஆயினும், திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டார்.
ஐதராபாத்து நிசாம் (ஹைதராபாத் நிஜாம்) எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர்.
மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கர்நாடக இராச்சியவிடமாய் நடந்த போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்குத் துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தார். நவாப்புக்கு திரை கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டனர். பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர்கள் ஆங்கிலேயரைப் பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தார். புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியான கர்னல் லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார்.
அது "எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நன்மைமைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும்" என்பது.
இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மா ஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர்.
இராயரகுநாத தொண்டைமான் (1769–1789)
[தொகு]இவர் 1738-ல் பிறந்தார். தமது முப்பத்தோரவது ஆண்டில் பட்டத்திற்கு வந்தார். தம் முன்னோரைப் போன்றே ஆங்கிலேயரிடத்தில் நட்பு பூண்டிருந்தார்.1780-ல் ஐதரலி கருநாடக சமவெளி மீது ஓர் பேரிடிவிழுந்தாற்போலப் பாய்ந்து வந்த காலையில் ஆங்கிலேயர் இவ்விடுக்கணைத் தடுப்பதற்கு ஓர் உபாயமும் செய்யாதிருந்தனர். தென்னாட்டுத் தலைவர்கள் யாவரும் ஐதலியுடன் சேர்ந்து கொண்டனர். இம்மன்னர் ஒருவரே ஆங்கிலேயர்க்கும், நவாப்புக்கும் உதவியாய் நின்றனர். ஐதரின் சேனையானது ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டை நாட்டில் புகுந்தபோது இவருடைய சேனை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது, இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்: “நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம். தாங்கள் இன்னும் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு. இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கக்கூடியதன்று".
ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிராகவம் இவர் ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக்கோட்டடைத் தாலுகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள் தான் உண்டு. 1789 டிசம்பர் 30-ல் இவ்வரசர் விண்ணுலகடைந்தார்.
ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் (1789–1807)
[தொகு]இவர் இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலைத்தொண்டைமானுடைய மூத்த புதல்வராவர். இவர் தமது முப்பதாவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 1790 ல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளிமேல் படையெடு்த்து வந்தபோது இம்மன்னர் ஆங்கிலேயருக்குத் துணையாக நின்றார். 1795-ல் ஆற்காட்டு நவப்பாகிய மகமதலி இவருக்கு ராஜாபகதூர் என்னும் பட்டத்தை அளித்தனன். அதனால் 1500 குதிரைப் படையும், கொடியும், முரசும், முடியும், பட்டத்து யானையும் வைத்துக் கொள்ள உரிமையுடையவரானார். இவர் மூன்று கல்யாணம் செய்துக்கொண்டார். இவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளில் உயிருடன் இருந்த விஜயரகநாதராய தொண்டைமானும், ரகுநாததொண்டைமானும் முறையே 1807-லும், 1825-லும் மன்னராயினர். இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் வானுலகெய்தினர். இவருடைய பத்தினியாராகிய ஆயிஅம்மாள் ஆய் என்பார் உடனட்கட்டையேறிவிட்டார்.
இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1807–1825)
[தொகு]

இவர் பட்டத்துக்கு வந்தபொழுது பத்து வயதுள்ள சிறுவராய் இருந்த படியால் இவருடைய பங்காளி விசய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார், அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி வியரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஒப்புக்கொண்டபின் இவரின் முடிசூட்டு விழா புதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன் நடைபெற்றது. இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு பிரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார், குழந்தைகளாகவிருந்த விஜய ரகுநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழிகளும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் பயிற்றுவிக்கப்பெற்றனர். இம்மன்னர் காலத்தில்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக்ளாகப் பகுக்கப்பட்டது; நீதிமனறங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அரசாங்கத்திற்கு வேண்டிய மற்றைய காரியங்களும் செய்யப்பெற்றன. 1812-ல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று, இப் பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812-ல் இம்மன்னருக்கும், இவர் தம்பியாருக்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். இவருக்கு இரு மனைவியர் உண்டு. இவர் 1825-ல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இராஜா ரகுநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார்.
இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் (1825–1839)
[தொகு]இவர் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர். இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர்.
ஸ்ரீபிரகதம்பதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் (1839–1886)
[தொகு]இவர் பட்டத்துக்கு வந்த காலத்தில் ஒன்பது வயதுள்ள சிறுவராயிருந்தார். 1844-ல் இருந்து தாமே அரசாண்டு வந்தார். 1866-ல் நீதிமன்றங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன.
1. அப்பீல் கோர்ட்டு
2. மூன்று ஜட்ஜிகள்உள்ள செஷன்ஸ் கோர்ட்டு
3. ஸ்மால் காஸ் கோர்ட்டு
4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள்
இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றாவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபால் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் கல்லூரியும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்.
ஸ்ரீபிரகதாம்பாதாள் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886முதல்)
[தொகு]
இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரையேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும், ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி, மருத்துவ நிலையம், அலுவலகம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாகாவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றமாக 1887-ல் அமைக்கப்பட்டது.
1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரண்மனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரை வரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது.
1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907ல் இருந்து இதில் 18 உறுப்பினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் பட்டனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர் காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்கு இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார்.
1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது.
இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:-
1.புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார்.
2.பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார்.
3.பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலைவிலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள்) பல இடங்களிலும் ஏற்படுத்தினார்.
4.புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார்.
5.நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார்.
6.குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார்.
7.தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார்.
8.எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார்.
9.நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார்.
10.மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார்.
விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் (1922 முதல்)
[தொகு]இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவரகள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஓப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டமையால், இவர் 1922 அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17-ல் பிறந்தவர். காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர் 1898-ல் காரிய நிர்வாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினர். 1909-ல் திவான் பதவியை ஏற்றுக்கொண்டனர். 1922-ல் அரசாட்சியை ஒப்புக்கொண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார். இவர் இது காறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கவைகளாம். நகர சபையில் 8 அங்கத்தினரும், சட்டசபையில் 35 அங்கத்தினரும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டியவராவர். இன்னும் நமது நாடு முழுதும் கட்டாய இலவசக்கல்வி ஏற்படுத்திப் பெரும் புகழுடன் இவ்வரசர் பெருந்தகை நீடுழி வாழ்வாராக.
ஸ்ரீ பிரகதம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்
[தொகு]புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.
இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17 சனவரி 1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22 ஆவது வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.
1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த மன்னர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972 இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.
ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1997 இல் மறைந்தார்.
தொண்டைமான் இலக்கியங்கள்
[தொகு]புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் ஆதரவின் கீழ் உருவான தமிழ் பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கும்மி, அம்மானைப் பாடல்கள் பலவாகும்.
- சிவத்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ்
- சிவத்தெழுந்த பல்லவராயன் உரை
- ராய தொண்டைமான் அனுக்கிரக மாலை
- ராய தொண்டைமான் இரட்டை மணிமாலை
பஞ்சரத்தினம் என்று அழைக்கப்பட்ட
- ஏழைபங்காளி ,
- கருணைக்கடைகண்,
- பிறவியில்லாத அருள் ,
- மனத்துயர் தீர்த்தருள்,
- தருணமிதம்மா,
இந்த ஐந்து பாடல்களும், திருகோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் (1730 -1769) பாடியதாகும் (மேலும் பல கீர்த்தனைகளை பாடியுள்ளார்).
- அம்புநாட்டு வளந்தான்
- வெங்கண்ண சேர்வை வளந்தான்
- விராலிமலைக் குறவஞ்சி
- விரலியின் காதல்
- திருமலைராயன் கப்பல்
- ஆண்டப்பவேளான் குறவஞ்சி
- உடையப்பவேளான் குறவஞ்சி
- திருமலை ராயன் கலித்துறை
- நல்லப் பெரியாள் கலியுகக் குழுவல் நாடகம்
- நாவலங்க நல்லக்குட்டி குழுவல் நாடகம்
- திருக்களம்பூர் முத்து வைரவன் சேர்வை கும்மி
- கபிலை நாடகம்
- ஆவூர் குழுவல் நாடகம்
- இயன்மொழி வாழ்த்து
- பிரகதாம்பாள் கும்மி
- வாராப்பூர் வளர்ந்தான்
- மழவராயனேந்தல்
- அபிஷேக மாலை
- குமரேசசதகம் (குமர மாலை முருகன் புகழ் பாடும் பாடல் )
- ஆவுடையார் கோவில்புராணம்
- மிழலை சதகம்
- கானநாட்டுச் சதகம்
- கேரளா நாட்டை ஆண்ட மன்னர் சுவாதி திருநாள் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் பல பாடல்களை பாடியுள்ளார் இப்பாடல் இன்றும் திருக்கோகர்ணம் கோவிலில் பாடப்படுகின்றன. தொண்டைமான் மன்னரும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பெயரில் பல பாடல்களை இயற்றி தமது புலமையை வெளிக்காட்டி இருக்கிறார்.
புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு
[தொகு]
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சொந்தமாக ஒரு நாணயத்தை வெளியிட்டுக்கொண்டார்கள்.bஅதன் பெயர் அம்மன் காசு. அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் 'புதுக்கோட்டை அம்மன் காசு' என்ற பெயர். 'புதுக்கோட்டை அம்மன் சல்லி' என்றும் அழைப்பார்கள். பிரித்தானியாவின் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம். இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள். அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டுவந்தனர். பிரகதாம்பாள்தாச என்றுதான் அவர்களுடைய விருதுகள் தொடங்கும்.
நிர்வாகத் துறைகள்
[தொகு]புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இயங்கிய துறைகள்: 1. நிலவரி வசூல் 1. கிராமம் 2. வருவாய் வட்டம் 3. காவல் 4. சிறைச்சாலை 5. அஞ்சல் சேவை 6. பங்களா 7. பராமத்து 8. உப்பளம் 9.காடு 10. நீதிமன்றம் 11. வட்டார அலுவலகம்
புதுக்கோட்டை ராஜாக்களின் குடும்ப உறவுகள்
[தொகு]Family tree of the Rajas of Pudukkottai | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள். pp. 7, 8.