விஜயநகரப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜயநகரப் பேரரசு
ವಿಜಯನಗರ ಸಾಮ್ರಾಜ್ಯ / విజయనగర సామ్రాజ్యము

 

 

1336–1646
விஜயநகரப் பேரரசின் எல்லை, கி.பி. 1446, 1520
தலைநகரம் விஜயநகரம்
மொழி(கள்) கன்னடம், தெலுங்கு
சமயம் இந்து
அரசாங்கம் முடியாட்சி
அரசர்
 -  1336–1356 முதலாம் ஹரிஹரர்
 -  1642–1646 ஸ்ரீரங்கா III
வரலாறு
 -  உருவாக்கம் 1336
 -  முதற் பதிவு 1343
 -  குலைவு 1646
முந்தையது
பின்னையது
போசளப் பேரரசு
காக்கத்தியர்
பாண்டியர்
மைசூர் அரசு
கேளடி நாயக்கர்கள்
தஞ்சாவூர் நாயக்கர்
மதுரை நாயக்கர்கள்
தஞ்சாவூர் மராத்திய அரசு

விஜயநகரப் பேரரசு இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது.மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes), பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.

தர்மேஷ்வரர் கோயில் கல்வெட்டுகள், ஹோஸ்கோட்டை, (பெங்களூர் அருகே), செப்புத் தகடுகள், விஜயநகரப் இராச்சியம்[1]

இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் [[தக்காணத்துச் சுல்தானகங்கள்|வட தக்காணத்துச் சுல்தா கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.

தோற்றம்[தொகு]

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 56 கி.மீ. தூரத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் சிதைந்துபோன கலைக்கூடம்போல இருக்கும் ஹம்பி நகரம்தான், ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய விஜய நகரம்! வெற்றியின் நகரம் என்று புகழ்ந்து சொல்லப்படும் விஜய நகரம், கி.பி. 1336-ல் உருவாக்கப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. 40 கி.மீ.(அவர் தூரத்தை லீக் என்ற அள வீட்டில் குறித்திருக்கிறார்) அளவு பெரியதாக இந்த நகரம் இருந்தது என்கிறார், பெர்னாவோ நுனிஸ் என்ற போத்துக்கீசியப் பயணி. இவர் ஒரு குதிரை வணிகர். இன்று உள்ள ஹம்பி, அதன் அருகில் உள் கமலாபுரா கிராமம், அங்கிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள ஹோஸ்பெட் ஆகியவையும் விஜய நகருக்குள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார்.1420-ம் ஆண்டு இந்த நகரைப் பார்வையிட வந்த நிகோல கோண்டி என்ற இத்தாலியப் பயணி, இந்த நகரம் 60 மைல் சுற்றளவுகொண்டது என்று வியந்து கூறி இருக்கிறார். அதுபோலவே, 1522-ல் விஜயநகரத்துக்கு வந்த போர்த்துக்கீசிய யாத்ரீகர் பயாஸ், இது ரோம் நகரைப்போல அழகான பூந்தோட்டங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  துங்கபத்திரை ஆற்றின் அழகும், அதை ஒட்டி அமைக்கப்பட்ட மாடமாளிகைகளும் கண்ணைக் கவருகின்றன. 2892 கி.மீ. நீளமுள்ள கடற்கரைகொண்டது விஜய நகரம் என்று பாராட்டி இருக்கிறார்.14-ம் நூற்றாண்டில் தொடங்கி 200 ஆண்டு களுக்கும் மேலாக இந்த நகரம் புகழ்பெற்று விளங்கி இருக்கிறது. விஜய நகரப் பேரரசில் கிராம எல்லைகளைக் குறிக்க திரிசூல அடை யாளம் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நடப்பட்டன. அந்தக் கற்களை, பிற்காலத்தில் சிறுதெய்வமாக மக்கள் வழிபடத் தொடங்கினர் என்கிறார் பர்போசா. விஜயநகர ஆட்சியின்போது கோட்டைச் சுவருடன் உள்ள சிறிய நகரங்கள் பல உருவாக்கப்பட்டு இருந்தன. நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் வசித்தனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் ரஷ்யப் பயணி நிக்கிதின்.விஜயநகரில் ஐந்து லட்சம் மக்கள் வசித்தனர் என்று, வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இன்று மிச்சம் இருப்பது அதன் சிதைந்துபோன இடிபாடுகள் மட்டும்தான். கோயில்கள், கல் மண்டபங்கள், கலைக்கூடங்கள் என்று, நகரின் மத்தியப் பகுதியில் சிதைவுகளை காணலாம். அந்தப் பகுதியின் பெயர்தான் ஹம்பி.ஹம்பி என்பது, கன்னடப் பெயரான ஹம்பேயில் இருந்து உருவானது. இது, துங்கபத்திரை ஆற்றின் பழைய பெயரான பம்பா என்பதில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும்என்​கின்றனர். இந்த நகரை விஜயநகர அரசர்களின் குல​தெய்​வமான விருபாக்ஷரின் பெயரைத் தழுவி விருபாக்ஷபுரம்என்றும் அழைக்​கின்றனர்.இஸ்லாமிய மன்னர்கள், தெற்குப் பகுதியில் படை எடுத்து வந்த​போது, அவர்களைஎதிர்ப்பதற்காக,குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்தனர். அப்படி உருவாக்கப்பட்டதே விஜய நகரப் பேரரசு.

முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருநாதர் வித்​யாரண்யரின் வழிகாட்டுதல்படி கி.பி. 1336-ல் விஜயநகரப் பேரரசை நிறுவினர். இந்தப் பேரரசு உருவாக்கப்பட்டது குறித்து நிறையக் கருத்துக்கள் நிலவுகின்றன.'புக்கரும் ஹரிஹரரும் வாரங்கல் அரசரின் படைத் தளபதிகளாக இருந்தனர். முகமது பின் துக்ளக்​கோடு நடந்த சண்டையில் தோற்று, இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அங்​கிருந்து, டில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுமாறு கட்டாயப்​படுத்தப்பட்டனர். அதற்கு ஒப்புக்கொள்ளாத இருவரும், தப்பி வந்து தங்களது குரு வித்யாரண்யர் வழிகாட்டுதலில் விஜய நகரப் பேரரசை நிறுவினர்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது.'காகதீய அரசில் போர்ப் பணியாற்றிய ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருவான சிருங்கேரி அரசபீடத்தைச் சேர்ந்த வித்யாரண்யரை, துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ஆனைக்குந்தி என்ற மலை அடிவாரத்தில் சந்தித்தனர். இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். சிறு படைகளை இணைத்து புதிய அரசை உருவாக்கலாம் என்ற யோசனையை வித்யாரண்யர் கூறி இருக்கிறார். அதன்படி உருவாக்கப்பட்டதே விஜயநகரப் பேரரசு’ என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இது எதுவுமே உண்மை இல்லை. ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருமே கர்நாடகத்தின் ஹொய்சால வம்சாவழி வந்தவர்கள் என்றும் ஒரு சாரர் அடித்துச் சொல்கின்றனர்.கி.பி. 1331-ல் தமது 36-வது வயதில் வித்யாரண்யர் சிருங்கேரி மடத்து பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது இயற்பெயர் மாதவர். கன்னட பிராமணரான இவர், விஜய நகரத்தைச் சேர்ந்த ராய வம்சத்துக்குக் குலகுருவாக இருந்தார். சர்வமத சங்கிரகம் என்ற நூலை இவர் எழுதி இருக்கிறார். சங்கமர், துளுவர், சாளுவர்,ஆரவீட்டார் ஆகிய நான்கு குலத்தினர், விஜய நகரத்தை ஆட்சி செய்து இருக்கின்றனர். சாளுவர், ஆரவீட்டார் ஆகியோருக்கு தாய்மொழி தெலுங்கு. சங்கமர், துளுவர் ஆகிய இருவரும், கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள்.விஜயநகரப் பேரரசை நிறுவிய முதலாம் ஹரிஹரர், குருபா இனத்தைச் சேர்ந்தவர். இவர், சங்கம மரபைத் தொடங்கிய பாவன சங்கமரின் மூத்த மகன். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவது ஆகும். இவரது ஆட்சியின்போது, ஹொய்சாலப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இவருடைய தம்பிகளில் ஒருவர்தான் புக்காராயன் எனும் புக்கர்.தனது சகோதரன் ஹரிஹரருடன் இணைந்து, விஜயநகரப் பேரரசை நிறுவியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஹரிஹரரின் மறைவுக்குப் பின், புக்காராயன் அரசன் ஆனார். புக்கரின் 21 ஆண்டு கால ஆட்சியில்தான், நாட்டின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. தென்னிந்திய அரசுகளைத் தோற்கடித்து, அந்தப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.1360-ல் ஆற்காட்டுச் சம்புவராயரும், கொண்டவிடு ரெட்டிகளும், புக்காராயனிடம் தோற்றனர். 1371-ல் மதுரையில் இருந்த சுல்தானைத் தோற்கடித்து, பேரரசின் எல்லைகளை தெற்கே ராமேஸ்வரம் வரை விரிவுபடுத்தினார் புக்கர். இவர் காலத்தில்தான், பேரரசின் புகழ்பெற்ற தலைநகரமாக விஜய நகரம் மாறியது.

விஜய நகரத்தின் வீழ்ச்சி[தொகு]

தென்னிந்தியாவின் பேரரசாக இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆண்ட விஜயநகர அரசுக்குத் தலைக்கோட்டைப் போர் முடிவுரையாக அமைந்தது. கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு, ஏதாவது ஒரு வகையில் அரசவம்சத்தில் உதித்தவர்களிடையே பதவிப் பேராசை பிடித்தாட்டியது. ஒருவரை ஒருவர் ஏய்த்தோ கொன்றே அரசராகினர். அல்லது வாரிசுரிமைப்படி ஒருவரை அரச கட்டிலில் அமர்த்திவிட்டு, மதியூகியாக இருந்த அமைச்சர் எல்லா அதிகாரங்களையும் கைக்கொண்டு ஆண்டு வந்தார்.துளுவப் பரம்பரையில் கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகர ஆட்சிக்கட்டில் ஏறியவர் அவரது இளைய தம்பி அச்சுதராயர் (கி.பி.1530-1542). அவரை அடுத்து கி.பி.1542-இல் அரசரான அவரது மகன் முதலாம் வேங்கடவர் கொல்லப்பட்டு, கிருஷ்ணதேவ ராயரின் மற்றொரு தம்பி மகனான சதாசிவராயர் அரசரானார். சதாசிவராயர் பெயருக்கு மட்டுமே அரசர். பகர ஆளுநராய் (நிழல் அரசராக ) அவருடைய பிரதம அமைச்சர் இராமராயர் என்பவர் இருந்தார்.

விஜய நகர அரசைப் பொறுத்தவரையில் கிருஷ்ணா ஆற்றுக்கும் துங்கபத்திரை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதிக்காக வடக்கேயிருந்த பீஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீரார், பீடார் சுல்தான்களோடு நிரந்தரமான சர்ச்சையும் போர்களுன் ஏற்பட்டவண்ணம் இருந்தன. அந்த விவாகாரங்களில் எப்போதும் விஜயநகர அரசர் கைகளே ஓங்கியிருந்தன. மேலும் இந்த சுல்தான்களுக்கிடையேயும் தீராத முன்வினைப் பகைகள் இருந்தன. காலப்போக்கில் இந்த சுல்தான்களுக்கிடையே மணவினை உறவுகள் ஏற்பட அவர்களுடைய பகை பின்தங்கியது. இந்த சுல்தான்களுக்கிடையே மத்தியஸ்தராகவும் இருந்த இராமராயர் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவரிடம் அரசியல் சாணக்கியத்துடன் பிரித்தாளும் சூழ்ச்சியை உபயோகித்திருக்கிறார். இந்த வேலைகள் யாவும் சுல்தான்களிடையே ஏற்பட்ட மண உறவுகளால் அம்பலமாகி, பகை பழுக்கக் காரணமாகிவிட்டது.இராமராயரிடம் பீஜப்பூர் சுல்தான் ஒரு தூதுக்குழுவை அனுப்பி ரெய்ச்சூர் கோட்டையைத் தம் வசம் ஒப்படைக்கக் கேட்டிருக்கிறார். இராமராயர் மறுக்கவே தக்காண சுல்தான்கள் விஜயநகரப் பேரரசுக்கு எதிராய்ப் போரிட, கூட்டுப்படை அமைத்தனர். 1565ஆம் ஆண்டு கிருஷ்ணை நதிக்கரைக்கு வடக்கே தலைக்கோட்டை என்னுமிடத்தில் அவர்கள் முகாமிட்டனர். தமக்கெதிராக சுல்தான்கள் படைதிரட்டி நிற்பதை அறிந்த இராமராயர், பேரரசின் மண்டலீஸ்வரர்கள், தம் ஆதரவு பெற்ற சிற்றரசர்கள் ஆகிய அனைவரும் தங்களின் முழுப்படையுடன் வந்து சேரும்படி தகவல் அனுப்பினார். பல்வேறு இடங்களில் இருந்தும் படைப்பிரிவுகள் வந்து சேர்ந்தன.

சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சதாசிவராயர் விஜயநகரத்திலேயே வீற்றிருக்க, இராமராயர் தம் தம்பிகள் திருமலைராயர், வேங்கடாத்திரி ஆகியோருடன் படைத்தலைமை ஏற்றுத் தலைக்கோட்டைக்குச் சென்றார். இந்திய சரித்திரத்தில் தென்னிந்திய நிலத்தில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான பெரும்போர் தலைக்கோட்டைப் போர்தான். விஜயநகர அரச படைகளில் ஒன்பது இலட்சம் காலாட்படையினரும், நாற்பத்தைந்தாயிரம் குதிரைப்படையினரும் இரண்டாயிரம் போர்யானைகளும் இடம்பெற்றிருந்ததாக பெரிஷ்டா என்னும் வரலாற்றாசிரியர் எழுத , கூட்டோ என்பவரோ காலாட்படையினர் ஆறு இலட்சம், ஒன்று அல்லது இரண்டு லட்சங்களில் குதிரைப்படையினர் மற்றும் நூறுகளில் யானைகள் என்று எழுதுகிறார். எதிர்த்து நிற்கும் சுல்தான்களில் கூட்டுப்படைகள் இவற்றில் பாதியளவே இருந்திருக்கிறது. ஆனால், அவர்களிடம் அதிக எண்ணிக்கையில் பீரங்கிகள் இருந்திருக்க வேண்டும். 1565ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் போர் தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே உக்கிரமான போர் நடந்தது. முதலில் விஜயநகரப் படைகள் எதிர்த்தரப்பைத் திணறடித்தன. எதிரிகளின் படைக்குப் பெருத்த சேதத்தை விளைவித்தன. இராமராயர் தாமே முன்னின்று, தீரமாகப் போரிட்ட வீரர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கி ஊக்கிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் விஜயநகரப் படைகள் வெற்றி முகத்தில் நின்றுகொண்டிருக்க, அது நிகழ்ந்தது. வரலாற்றின் மகத்தானவை எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்த துரோகம்தான் அது. விஜயநகரப் படைப்பிரிவில் முக்கியமான இரண்டு பிரிவுகளைத் தலைமையேற்றிருந்த முஸ்லீம் தளபதிகள் விஜயநகரப் படையை விட்டு விலகி, சுல்தான் படைகளிடம் போய்ச்சேர்ந்தனர். இதற்கிடையே மதம்பிடித்த யானையொன்று (போர் யானையின் தந்தங்களில் கூர்வாள்கள் கட்டியிருப்பர் என்பது குறிப்பு) உன்மத்தம் முற்றி இராமராயரின் பல்லக்கை நோக்கிக் கண்மண் தெரியாமல் ஓடிவந்தது. யானையைக் கண்டு பயந்துபோன பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கைத் தரையில் எறிந்துவிட்டு அலறியடித்து ஓடிவிட்டனர். பல்லக்கில் இருந்து இராமராயர் விழுந்துவிட, அவரை எதிரிப்படையினர் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். அந்த இடத்திலேயே இராமராயரின் தலையைக் கொய்து ஈட்டியில் செருகி விஜயநகரப் படைவீரர்கள் இடையே தூக்கிப் பிடித்தபடி வலம் வந்தார்கள். தலைமைக்கு நேர்ந்த முடிவால் விரக்தியும் பீதியும் உற்ற விஜயநகரப் படையினர் சிதறி ஓடினார்கள். போரில் கிடைத்த பொன் பொருள்களையும் குதிரை, யானை உள்ளிட்ட செல்வங்களையும் சுல்தான்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். விஜயநகரத்தில் இருந்த அரசர் சதாசிவராயருக்குத் தம் படையும் படைப்பிரதானிகளும் அழிந்துவிட்டது தெரியவர, தம் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததை உணர்ந்தார். விஜயநகரத்தின் கருவூலத்தையும் பொன் பொருள் நவரத்தினங்களையும் ஐந்நூறு யானைகளில் ஏற்றி அருகிலுள்ள பெனுகொண்டாவுக்கு அனுப்பிவிட்டு, தாமும் தம் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினார். செய்வதறியாத விஜயநகர மக்கள் இருப்பதை அள்ளிப் போட்டுக்கொண்டு தென் பகுதியை நோக்கிப் பதறி ஓடினர். பலர் தம் செல்வங்களைப் புதைத்து வைத்தனர். பலர் கொல்லப்பட்டனர். அதுவரை சுற்றிலுமிருந்த காடுகளில் திரிந்த கொள்ளையர் கூட்டமும் தம் பங்குக்கு விஜயநகரத்துள் நுழைந்து பெருங்கொள்ளை அடித்தது. விஜயநகரத்தில் நுழைந்த எதிரிப் படைகள் சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்து நகரை அங்குலம் அங்குலமாகத் தீயிட்டுப் பொசுக்கினர். கலைக்கட்டுமானங்கள், கோட்டை கொத்தளங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கிவிட்டுத்தான் வெளியேறினர். பெனுகொண்டாவிற்குச் சென்ற சதாசிவராயர் சில ஆண்டுகள் கழித்து வந்து விஜயநகரத்தைப் புனர்நிர்மாணம் செய்து பார்த்தார். ஆனால், மக்கள் ஒருவரும் அந்நகருக்குக் குடிவர மறுத்துவிட்டார்கள். கி.பி.1570-இல் பெயரளவில் அரசரான சதாசிவராயரைச் சிறையிலிட்டுவிட்டுத் தானே விஜயநகர அரசரானார் திருமலைராயர். அவரது பரம்பரையே அரவீட்டுப் பரம்பரைஎனப்படுகிறது. இவரது மகன் ஸ்ரீரங்கரும் பெனுகொண்டாவிலிருந்தே அரசாண்டார்.பெனுகொண்டாவிலும் தலைவலிகள் இருந்ததால் சந்திரகிரிக்கும் வேலூருக்கும் தம் தலைநகரை விஜயநகர அரசர்கள் மாற்றி மாற்றித் தெற்கே வந்தவண்ணம் இருந்தனர். ஸ்ரீரங்கனை அடுத்து ஆட்சிக்கட்டிலேறிய அவரது தம்பி இரண்டாம் வேங்கடவர் (கி.பி.1586-1614) காலத்தில் கி.பி.1601-இல் இராயர் சாம்ராச்சியத்தின் தலைநகரானது வட ஆற்காட்டு வேலூர். அதனாலேயே இவ்வேலூரை இன்றும் இராயவேலூர் என்கின்றனர்.மூன்றாம் வேங்கடவர் அரசராக இருந்த காலத்திலேயே கி.பி.1639-இல் இவரிடமிருந்து சென்னையைக் குத்தகைக்கு எடுத்து புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். விஜயநகர அரசின் கடைசி அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கர். கி.பி.1649-இல் வேலூர் பீஜப்பூர் சுல்தானால் வெற்றி கொள்ளப்பட்டதோடு விஜயநகரப் பேரரசு முடிவுற்றது. பீஜப்பூர் சுல்தானை ஸ்ரீரங்கர் மீது படையெடுக்கத் தூண்டியவர் அப்போது மதுரையை ஆண்ட திருமலை சவுரி நாயினு அய்யிலுகாரு எனப்படும் திருமலை நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது. பெருந் துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் ஆட்சிப் பறிப்புக்கும் கைப்பற்றலுக்கும் பெயர்பெற்றது விஜயநகரப் பேரரசு.

விஜய நகரின் படை வலிமை[தொகு]

விஜய நகரப் பேரரசின் படைப் பிரிவில் 24,000 குதிரைகளும், ஒரு லட்சம் வீரர்களும் இருந்தனர். ஒரு படை வீரனுக்கு மாதச் சம்பளம் ஐந்து வராகன்படைப் பிரிவின் தலைமை அதிகாரிக்கு ஆண்டுக்கு 47,000 வராகன். மெய்க்காப்பாளருக்கு ஆண்டுக்கு 600 முதல் 1,000 வராகன் வழங்கப்பட்டது.விஜயநகர அரசர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரையில் கோவா போன்ற பகுதியில் வணிகத்திற்காகக் காலூன்றிய போர்ச்சுகீசியர்களின் முக்கிய வணிகமே கப்பல் கப்பலாக குதிரைகளை இறக்குமதி செய்து விஜயநகர அரசுக்கு விற்பதுதான். குதிரைகளைப் பழக்க இஸ்லாமிய வீரர்களும் பயிற்சியாளர்களும் விஜயநகரப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கோட்டைக்குள்ளேயே தொழுகைக்குப் பள்ளி வாசல் கட்டிக்கொள்ளவும் அனுமதி தந்திருக்கின்றனர்.

தமிழகத்தில் விஜய நகர அரசும் நாயக்கர் ஆட்சியும்[தொகு]

விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகம் வரும் முன்னும் தமிழகத்தின் பெரும்பகுதிகள்வேறு இரு அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்தன. அவ்வரசுகள் வடபகுதியை ஆண்ட கன்னட ஹொய்சளர்கள் (கி.பி.1225-1343) மற்றும் தென்பகுதியை ஆண்ட மாபார் சுல்தான்கள்(கி.பி.1335-1378). சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் புக்கனின் மகனான குமார கம்பணன் ஆற்காட்டுச் சம்புவராயரை வென்று தமிழகத்தில் விஜயநகரப் பேரரசசை காலுன்ற வைத்தார்.இக்காலத்தே தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் சம்புவராயர் மரபைச் சேர்ந்த இராஜ நாராயணன் (கி.பி.1339-1363) என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் படைவீடு ராச்சியம் என்று பெயர். இராஜ நாராயணனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். சம்புவராயர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில் ஒன்றுமான சிறுபாணாற்றுப்படை ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாட்சிகள் எனப்படும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.   கி.பி.1362 நவம்பர் மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயருடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையைச் சிற்றரசர்களிடமிருந்தும்,மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.இவரது மனைவியான கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் (வீர கம்பராய சரித்திரம்) என்ற சமஸ்கிருதக் காப்பியம் குமார கம்பணனின் தமிழகப் படையெடுப்பை விளக்குகிறது.மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார். குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை. மகா மண்டலேசுவரர்கள் பேரரசரால் இடமாற்றம் செய்யப்படுவர்.

முதலாம் புக்கனுக்குப் பின் ஆட்சிக்கட்டிலேறிய ​​இரண்டாம் ஹரிஹரராயர் (கி.பி.1377-1404) காலத்திலேயே மதுரைப் பகுதிகளிலிருந்து சுல்தான்கள் ஆட்சிமுற்றிலும் துடைக்கப்பட்டது. தமிழகப் பகுதிகளை வேலூர், செஞ்சி, தஞ்சை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை நியமித்தார் ஹரிஹரராயர். இவர்களும் ராயரது அரச மரபினரே.இரண்டாம் ஹரிஹரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களுள்குறிப்பிடத்தக்கவர் ​​​ இரண்டாம் தேவராயர் (கி.பி.1426-1446). கேரளத்தையும் இலங்கையையும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர். இப்போர்களில் இவருக்கு உறுதுணையாயிருந்தவர்கள் பேரரசுக்குப் பணிந்து அப்போது கொற்கையிலிருந்தும் தென்காசியிலிருந்தும் சிற்றரசர்களாக நேர்ந்த பாண்டிய அரச மரபினரே ஆவர். இவர் காலத்துத் தமிழக மண்டலங்களுக்கானமகாமண்டலேசுவரர் (தண்டநாயகர்) இலக்கண்ணராயர்.இந்த இரண்டாம் அரிகரர் காலத்திலேயே தமிழகம் படைவீடு ராஜ்யம் (வேலூர்), சந்திரகிரி ராஜ்யம் (சந்திரகிரி), சோழ ராஜ்யம் (தஞ்சை), மதுரை ராஜ்யம், திருவதிகை ராஜ்யம் (செஞ்சி) என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு, ராய அரசமரபைச் சாராதவர்களும் மண்டலாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவருக்குப் பின் வந்த இச் ​​​ சங்கமப் பரம்பரையினர் திறமையற்றவர்கள்.கி.பி. 1485 இல் சந்திரகிரி ராஜ்ய மண்டலாதிபதியாக இருந்த சாளுவ நரசிம்மன் பேரரசரானார். இவருக்குப்பின் இவர் மகன் இம்மடி நரசிம்மன். இவர்களைச் சாளுவப் பரம்பரையினர் என்பர். இவர்களுக்குப் பின் பேரரசைக் கைப்பற்றியவர் இவர்களிடம் படைத்தலைவராயிருந்த நரச நாயக்கர். இவரே துளுவப் பரம் பரையின் முதல்வர். அப்போது தஞ்சையில் தன்னாட்சி பெற முயன்ற கோனேரி ராஜனையும் தென்காசிப் பாண்டியர்களையும் அடக்கினார் நரசநாயக்கர். அவரது மகனே கிருஷ்ண​ தேவராயர்(கி.பி.1509-1529).

தெலுங்கர் மற்றும் கன்னடர் குடியேற்றம்[தொகு]

விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற 14-15ஆம் நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் தமிழகத்தில்குடியேறினர். கன்னடர்களும் குடியேறினர்.

பலிஜவார், கம்மவார், கம்பளத்தார் உள்ளிட்ட நாயுடு வகையினர், ரெட்டியார், ராஜூ, ஆரியவைசியர், பேரிவைசியர், தேவாங்கர், தெலுங்குப் பிராமணர், கன்னடப் பிராமணர், தொட்டியர், அருந்ததியர், ஒட்டர், சாலியர், தொம்பர், ஒக்கலிகர் எனப் பல்வேறு தெலுங்கு மற்றும் கன்னடச் சாதியினர் தமிழகத்தில் குடியேறினர்.

விஜயநகரப் பேரரசுக்கு முந்திய கன்னடர்களான ஹொய்சளர்களின் தமிழகத்தின் மீதான ஒரு நூறாண்டு கால ஆட்சிக்காலத்திலேயே கன்னடப் பிராமணர்கள், ஒக்கலிகர்கள் தமிழகத்தில் குடியேறியிருந்தனர். ஆட்சியின் துவக்கத்திலேயே ஹொய்சளரை வீழ்த்தி கருநாடகம் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டதாலும் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளைத்தாய்மொழியாகக் கொண்ட பரம்பரைகளும் இருந்ததாலும் இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான தெலுங்கர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் தமிழகத்தில் குடியேறினர்.

இதனால்தான் விஜயநகரப் பேரரசுக் காலம் என்பது தெலுங்கு இலக்கியத்திற்குமட்டுமின்றி கன்னட இலக்கியத்திற்கும், சமஸ்கிருத இலக்கியத்திற்கும்பொற்காலமாகவே இருந்தது.

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி[தொகு]

பார்க்க முதன்மைக் கட்டுரை: தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

மகாமண்டலேசுவரருக்குக் கீழ்ப்பட்டிருந்த இராஜ்யங்கள் எனப்பட்ட பிரிவுகளுக்குப் பதிலாக நாயக்கர் முறை கிருஷ்ண​ தேவராயர் காலம் முதலாகவே தோன்றியது.மகாமண்டலேசுவரர் பதவி மரபுவழிப்பட்டதாக விளங்கவில்லை. ஆனால் நாயக்கர் பதவிமரபு வழிப்பட்டதே. தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன. பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் தலைமையில் செஞ்சியிலும் (கி.பி.1509), கரிகபாடி விசுவநாத நாயக்கர் தலைமையில் மதுரையிலும் (கிபி1529) நாயக்கராட்சிகள்நிறுவப்பட்டன. கிருஷ்ண தேவராயரின் மறைவுக்குப் (கி.பி.1530) பின் கி.பி.1532-லேயே அல்லூரி சேவப்ப நாயக்கர் தலைமையில் தஞ்சையில் நாயக்கராட்சிநிறுவப்பட்டது.அவ்வப்போது தன்னாட்சி பெற விழைந்து பேரரசை எதிர்த்து வந்த,பேரரசின் சார்பில் செஞ்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் ஆட்சி புரிந்த நாயக்கர்கள் தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தித் தத்தம் பகுதிக்குத் தங்களையே முற்றுரிமை பெற்ற மன்னரகளாக முடிசூட்டிக் கொண்டனர்.பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே தமது தோற்றுவாயான ஆந்திர - கருநாடகப் பகுதிகளில் தம் ஆட்சியை இழந்தாலும், தமிழகத்தில் மட்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நாயக்கர்கள் தம் ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டனர் என்பதும்,ஆங்கிலேயர் காலத்திலும் ஜமீன்தார்களாக இருந்து தொடர்ந்து ஆண்டனர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

நாயக்கர் ஆட்சியில் தமிழகமத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள்[தொகு]

விஜயநகரப் பேரரசர்களும் நாயக்க மன்னர்களும் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதிகளிலுள்ள திருக்கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் குறித்தும் பிறவற்றைக் பற்பல நூல்கள் உள்ளன. கி.பி.1300-க்குப் பிறகு வடநாடுகளைப் போலன்றி, முற்றிலும் இசுலாமிய ஆட்சியாளர்களுக்கு ஆட்படாது தென்னகத்தைக் காத்த இந்துப் பேரரசு என்ற வகையில் மட்டுமே வரலாற்றாசிரியர்கள் பலரும் விஜயநகரப் பேரரசை மதிப்பிடுகின்றனர், ஆனால்  இப்பேரரசு தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாகத் தமிழகத்தில் ஏற்படுத்திய அடையாள மாற்றங்களை / எதிர்விளைவுகளை மதிப்பிடுவதில்லை.  

தமிழகத்தின் மீதான விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலம் என்பது குமார கம்பணனால் சம்புவராயர் வெற்றி கொள்ளப்பட்ட கி.பி.1362-லிருந்து நாயக்க அரசுகள் தோற்றம் கொண்ட கி.பி.1529 வரையிலானது. இந்நேரடி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மதுரை, தஞ்சை, சந்திரகிரி, திருவதிகை, படைவீடு முதலான ராச்சியங்கள் மண்டலேசுவரர் / தண்டநாயகர் என்கிற ஆளுநர்களின் (Governor) கண்காணிப்பில் இருந்தது. மைசூருக்குத் தெற்கே விஜயநகரப் ​பேரரசிற்குட்பட்ட இக்கேரி நாயக்க ராச்சியம் இருந்தது. கொங்குப் பகுதி வெகுகாலம் இக்கன்னட ராச்சியத்தில் இருந்தது. நாயக்க அரசு என்பது பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசு. (பேரரசு வலுக்குன்றியதும் இவ்வரசுகள் தன்னரசுகளாயின )

மதுரையில் நாயக்கர் அரசு (கி.பி.1529) ஏற்பட்ட பின்னர், இரண்டாம் தேவராயர் காலத்தில் மதுரை விசுவநாத நாயக்கரது மகன் குமார கிருஷ்ணப்பனால் இலங்கையின் புத்தளம் போரில் கண்டியரசு வெல்லப்பட்டு (கி.பி.1564-65), குமார கிருஷ்ணப்பனின் மைத்துனர் விஜய பூபால நாயக்கர் கண்டி ராச்சியத்தின் ஆளுநராக்கப்பட்டார். பின்னர் இவர் பெளத்தத்தைத் தழுவி சிங்களப் பெயர் பூண்டு விஜயபால நாயகே ஆனார். தெலுங்கு நாயக்க மரபினர் சிங்களத்தில் நாயகே ஆயினர்.

குமார கம்பண உடையார், விரூபாட்சி நாயக்கர், எம்பண நாயக்கர் (கம்பணன் மகன்), பிரகாச நாயக்கர் (எம்பணன் மைத்துனன்), சவண நாயக்கர், லக்கண நாயக்கர், மதன நாயக்கர், சோமண நாயக்கர், துளுவ நரச நாயக்கர், தென்ன நாயக்கர், குரு குரு திம்மப்ப நாயக்கர், கட்டிய காமய்ய நாயக்கர், சின்னப்ப நாயக்கர், வையப்ப நாயக்கர், நாகம நாயக்கர், கேசவப்ப நாயக்கர் முதலானோர் மேற்கண்ட ஒன்றரை நூற்றாண்டுக் காலம் தமிழக ராச்சியங்களுக்கு ஆளுநர்களாக இருந்தவர்கள்.

கருநாடகம் எனும் வழக்கு

விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்த சங்கம மரபும், அடுத்தடுத்து ஆட்சிசெய்த சாளுவ, துளுவ மரபுகளும் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவை விஜயநகரப் பேரரசு  ஆட்சிக் காலத்தவை எனக் கண்டறியப்பட்ட 7000 கல்வெட்டுகள் மற்றும் 300 தாமிரப் பட்டயங்களில் பாதிக்கும் மேலானவை கன்னட மொழியிலானவை என்பது சிந்திக்கத்தக்கது.விஜயநகரப் பேரரசு தம்மை விஜயநகர சாம்ராஜ்யம் என்றும், கருநாடக சாம்ராஜ்யம் என்றும் குறிப்பிட்டுக் கொண்டது. விஜயநகரப் பேரரசர்கள் விரூபாட்சன் எனும் விஜயநகர சிவனையும், வேங்கடாசலபதி எனும் திருப்பதித் திருமாலையும் முதன்மைத் தெய்வங்களாக வணங்கினர். கிருஷ்ண தேவராயர் தனது ஜாம்பவதி கல்யாணம் எனும் சமஸ்கிருத நூலில் விரூபாட்சனைக் "கர்நாடக ராஜ்ய ரக்ஷாமணி " (கருநாடக அரசைக் காக்கும் மாணிக்கம்)எனப் புகழ்கிறார்.

இதனாலேயே,

ஃ    விஜயநகர ஆட்சிக்காலம் முதற்கொண்டு, வடநாட்டு இசுலாமிய அரசுகளும் வெளிநாட்டுப் பயணிகளும் விஜயநகர அரசை மட்டுமின்றி, விஜயநகரப் ​பேரரசர்களாலும் அவர்தம் மரபினராலும் ஆளப்படும் அனைத்துப் பகுதிகளையும் கருநாடகம் என்று அழைக்கும் வழக்கம் தோன்றியது.

ஃ    பின்னாளில் ஆற்காட்டிலிருந்து ஆண்ட நவாபும் கருநாடக நவாப் என்றே அழைக்கப்பட்டார்.

ஃ    அறுநூறாண்டுக் காலம் விஜயநகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த பாளையக்காரர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த (இப்போதும் இருக்கிற) தமிழகத்திற்கும் கருநாடகம் என்ற பெயர் ஏற்பட்டது.

ஃ    தமிழகத்தின் கிழக்குச் சோழமண்டலக் கடற்கரை கருநாடகக் கடற்கரை ஆனது. அரச ஆதரவிற்காக தமிழிசை தெலுங்கு பாட ஆரம்பித்தது. அப்படியே நீடித்தும் விட்டது.(நாயக்கர், அடுத்து மராட்டியர், பின் ஆங்கிலேயர்..) தமிழிசை தெலுங்கு மயமான பின்பும் (குறிப்பாக, தஞ்சையில் இரகுநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில்), அது தெலுங்கிசை என்றோ, ஆந்திர இசை என்றோ அழைக்கப்படாமல் கருநாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஃ    விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் பழமைவாதத்தை சாதியமைப்பைக் கடுமையாகப் பின்பற்றியதாலேயே பழமைவாதத்தை வெகுமக்கள் கருநாடகம் என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது, இன்றும் பழமைவாதியை  "அவர் சுத்தக் கருநாடகம்!"  என்று கூறும் வழக்கம் இருக்கிறது.

தன்னாட்சி அமைப்புகளின் அழிவும் ஆயக்கர் முறையும்[தொகு]

விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உறவுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது.விஜயநகர அரசர்கள் தமிழக நிலங்களளை தமக்கு நம்பிக்கையான படைத்தலைவர்களுக்கு வழங்கினர். இவ்விதம் பெற்றவர்களே அமர நாயக்கர்கள். அமர நாயக்கர் என்பதற்கு ஆயிரம் காலாட்படைத் தலைவர் என்பது பொருள். இவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினை ஆண்டுதோறும் அரசருக்கு வழங்க வேண்டும் இதுவே திறை. மட்டுமின்றி போர்க்காலங்களில் நாயக்கர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள காலாட்படை, குதிரைப்படை, யானைகள் முதலானவற்றை அரசருக்கு அளிக்கவேண்டும். நாயக்கர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை. இவ்வரசுமுறை முற்றிலும் நிலமானிய முறையிலும் இராணுவ ஆட்சி முறையிலும் அமைந்திருந்தது. பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்திலேயே மகாமண்டலேசுவரருக்குப் பதிலாக நாயக்கர் முறையான பாளையக்காரர் முறை தோன்றியது.

தமிழகத்தில் ஊர், நாடு, சபை போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பிற்காலச் சோழர்களின் காலத்தில் தன்னாட்சி (Self-rule) கொண்டிருந்தன. வரி வாங்கவும், பஞ்ச காலங்களில் வரித் தள்ளுபடி செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தன. கோயில்களை மேற்பார்வை செய்தன. அறநிலையப் பொறுப்பேற்றுக் கண்காணித்தன. பொது மக்களிடம் பணம் வாங்கி, வைப்பு நிதியாக்கி, தேவையான காலங்களில் மக்களுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கும் வங்கிகளாகவும் இருந்தன. நிலங்களை விற்கும் உரிமையும், தானியர் முதலான கோவில் அலுவலர்களை நியமிக்கும் அதிகாரமும் இவ்வமைப்புகளுக்கு இருந்தன.

விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலமான கி.பி.15-ஆம் நூற்றாண்டிலேயே - அப் பேரரசின் பகராளிகள் (பிரதிநிதிகள்) மதுரை, தஞ்சை, செஞ்சி முதலான பகுதிகளிலிருந்து அதிகாரம் செலுத்தி வந்த காலத்திலேயே - இச்சிற்றூராட்சி முறை ஒழிக்கப்பட்டு, பன்னிருவர் அடங்கிய ஆயக்கர் முறை (Ayakar System) தோற்றுவிக்கப்பட்டது. எல்லா நிலமும் அரசருடையதே என்றானதால், நிலவுரிமை பெற்றிருந்த தமிழ்க்குலங்கள் பலவும் குத்தகை விவசாயக் குடிகளாயின. ( விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள் என்பதை நினைவில் கொள்க.) படைப்பற்றுகள் என்ற பெயரில் படைவீரர்களுக்கு மானியமாகவும் வழங்கப்பட்டன.

ஆயக்கர் முறையிலுள்ள பன்னிருவரில் மணியம், கர்ணம், தலையாரி ஆகிய மூவரும்அரசால் நியமிக்கப்படுபவர்கள். கிராமத்தின் வரி வருவாய், நிலப் பரப்பு, எல்லைகள், நீர்நிலைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்பவர் கர்ணம். கர்ணத்தின் உதவியுடன் வரி வசூலிப்பவர் மணியம் (மணியக்காரர்). ஊர்க்காவல்பணி செய்பவர் தலையாரி. ஆயக்கர் முறையிலுள்ள மற்ற ஒன்பதின்மர் சிற்றூர் மக்களின் பணிகளுக்குத் தேவையான தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர்ஆகியோர். இவர்கள் அரசால் நியமிக்கப்படுவதில்லை. இவர்களுக்கு மானியமாக நிலம் வழங்கப்பட்டது. அதற்கு ஜோடி (Quit-Rent) என்ற வரி செலுத்தவேண்டியிருந்தது. இந்த ஆயக்கர் முறையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையில் தமிழகத்தில் இருந்தது.

பாளையக்காரர்கள்[தொகு]

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்க அரசாக உருவாக்கினார். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் படை நிலை கொண்டுள்ள ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார். உலகின் பல நாடுகளிலும் இது போன்ற படை மானிய(Fudel) முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க[தொகு]

http://yuvabharathy.blogspot.com/2011/01/1.html

மேற்கோள்கள்[தொகு]

  1. Rice, Benjamin Lewis (1894). Epigraphia Carnatica: Volume IX: Inscriptions in the Bangalore District. Mysore State, British India: Mysore Department of Archaeology. https://archive.org/details/epigraphiacarnat09myso. பார்த்த நாள்: 11 August 2015. 

2.http://yuvabharathy.blogspot.com/2011/01/1.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகரப்_பேரரசு&oldid=2537006" இருந்து மீள்விக்கப்பட்டது