உடையார் அரச குலம்


வாடியார் (Wadiyar) என அழைக்கப்படும் உடையார் அரச மரபை யதுராய உடையார் என்பவர் கி பி 1399-இல் நிறுவினார். உடையார் அரச குலத்தினர் 1399 முதல் 1761 முடியவும், பின்னர் 1799 முதல் 1947 முடிய மைசூர் இராச்சியத்தை ஆண்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் இராச்சியம் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
பொருளடக்கம்
பெயர்க்காரணம்[தொகு]
கன்னட மொழியில் உடையார் என்பதற்கு தலைவர் எனப் பொருளாகும்.
வரலாறு[தொகு]
துவாரகையின் யது குலத்தைச் சேர்ந்த யாதவர்கள் மைசூர் பகுதியில் குடியேறினர்.[1] யாதவர்கள் மைசூரு பகுதியை 600 ஆண்டுகள் ஆண்டனர்.[2] விஜயநகரப் பேரரசின் கீழ், 1399-இல் யதுராயர் என்பவர் மைசூரில் உடையார் வம்சத்தை நிறுவி மைசூர் இராச்சியத்தை 1423 முடிய ஆண்டார். யதுராயருக்குப் பின்வந்த உடையார் வம்ச மன்னர்கள் 1565-ஆண்டில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடையும் வரை, விஜயநகரப் பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக மைசூரை ஆண்டனர். 1565-க்குப் பின்னர் மைசூர் உடையார் மன்னர்கள் தன்னாட்சி உரிமையுடன் மைசூர் இராச்சியத்தை 1799 வரை ஆண்டனர்.
விரிவாக்கம்[தொகு]
1565-இல் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாம் இராச உடையார் (1578-1617) மைசூர் இராச்சியத்தின் எல்லைகளை விரிவுப் படுத்தினார். 1610-இல் இராச்சியத்தின் தலைநகரை மைசூரிலிருந்து பாதுகாப்பு காரணங்களால் காவேரி ஆற்றுத் தீவுப் பகுதியான ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றினார். முதலாம் நரசராச உடையார் (1638-1659) ஆட்சிக் காலத்தில் மைசூர் இராச்சியம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி வரை விரிவு படுத்தப்பட்டது. சிக்க தேவராச உடையார் (1673-1704) ஆட்சிக் காலத்தில் மைசூர் இராச்சியம் உச்ச கட்டத்தை அடைந்தது. சிக்க தேவராச உடையார் ஆட்சிக் காலத்தில் நாட்டின் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். நாட்டின் நிர்வாகம் 18 துறைகளின் கீழ் கொண்டு வந்தார். பொருத்தமான வரி விதிப்பு முறைகள் கொண்டு வரப்பட்டது.
1760 முதல் 1799 முடிய மைசூர் இராச்சியத்தின் அரசாட்சி, தலைமைப் படைத்தலைவராக இருந்த ஐதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் கையில் சென்றது. இவர்கள் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசை எதிர்த்தனர். 1799-இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில், பிரித்தானியர்கள் திப்பு சுல்தானைக் கொன்று, உடையார் வம்ச மன்னர்களிடம் மைசூர் இராச்சியம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
பிரித்தானிய இந்திய ஆட்சியில்[தொகு]
மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1796-1868) காலத்தில், உடையார்களின் மைசூர் இராச்சியம், துணைப்படைத் திட்டத்தின் படி, பிரித்தானியா இந்தியப் பேரரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் நாடாக மாறியது.
இந்திய விடுதலைக்குப் பின்னர்[தொகு]
மைசூர் மன்னர் ஜெயச்சாமராஜா உடையார் (1940-1950) ஆட்சிக் காலத்தில், 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், உடையார்களின் மைசூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போதிலும், 1956 முடிய மைசூர் உடையார் வம்ச மன்னர்களை மைசூர் மகாராஜா என்றே இந்திய அரசால் அழைக்கப்பட்டனர். 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழி வாரி மாநிலங்களாகப் [3] பிரிக்கப்பட்ட போது, மைசூர் இராச்சியம் கர்நாடகா மாநிலத்தின் பகுதியாக இணைக்கப்பட்டது.
1956 முதல் 1964 முடிய உடையார் வம்ச மன்னர்கள் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர்களாக செயல்பட்டனர். பிற சுதேச சமஸ்தான மன்னர்களைப் போன்று உடையார் வம்ச மன்னர்களும் இந்திய நடுவண் அரசிடமிருந்து மன்னர் மானியம் பெற்றனர். 1971-இல் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்புச் சட்டப்படி, அனைத்து 560 சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு மன்னர் மானியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. [4]
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பல்லாண்டு பதவி வகித்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப் (1974-2013) பின்னர் 2015-ஆம் ஆண்டு முதல் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் மைசூர் மன்னராக பட்டம் வகித்து வருகிறார்.
தசரா விழாவில்[தொகு]
மைசூரு தசரா பண்டிகையின் போது, மைசூர் அரண்மனையை அலங்கரித்து, மன்னர் தர்பாரில் அமர்ந்து மக்களுக்கு காட்சியளிப்பார்கள்.
படத்தொகுப்பு[தொகு]
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
தனது குழந்தைகளுடன் பத்தாம் சாமராச உடையார்
பேரன் ஜெயச்சாமராஜா உடையாருடன் மகராணி வாணி விலாசம்
பத்தாம் சாமராச உடையாருடன் அவரது இரு இளவரசர்கள்
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ H S Gururaja Rao (2014). My Life, My Profession. Lulu Press, Inc. ISBN 9781483410654. https://books.google.co.in/books?id=lURcCAAAQBAJ&pg=PT10&dq=Wadiyar+yadava&hl=en&sa=X&ei=oQZHVZjMMYKxuQT_oYH4CQ&ved=0CBwQ6AEwAA#v=onepage&q=Wadiyar%20yadava&f=false.
- ↑ Vikram Sampath. SPLENDOURS OF ROYAL MYSORE (PB). Rupa Publications. பக். Introd. I. ISBN 9788129115355. https://books.google.co.in/books?id=3aFmtr4MdLQC&pg=PT592&dq=Wadiyar+yadava&hl=en&sa=X&ei=oQZHVZjMMYKxuQT_oYH4CQ&ved=0CDAQ6AEwBA#v=onepage&q=yadava&f=false.
- ↑ மொழி வாரி மாநிலங்கள் உருவாகி 60 ஆண்டுகள் பூர்த்தி
- ↑ THE CONSTITUTION (TWENTY-SIXTH AMENDMENT) ACT, 1971
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் Wadiyar dynasty என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |