உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் கன்னட இலக்கியம் ஆகும். முதலாம் நூற்றாண்டில் இருந்தே கன்னட கல்வெட்டுக்கள் உள்ளன எனினும் பொ.ஊ. 9 ம் நூற்றாண்டி இருந்தே இலக்கியங்கள் இன்று கிடைக்கப்படுகின்றன. கன்னட இலக்கியங்கள் கால வரையாக பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:

  • பழங்கால கன்னட இலக்கியம் (பொ.ஊ. 600–1200)
  • இடைக்கால கன்னட இலக்கியம் (1200–1700)
  • தற்கால கன்னட இலக்கியம் (1700–இன்று)

வரலாறு

[தொகு]

பழங்காலம் (600 - 1200)

[தொகு]

கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக பொ.ஊ. 9 ம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.

இடைக்காலம் (1200 - 1700)

[தொகு]

போசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம் விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் கேளடி நாயக்கர்கள் ஆகியோர் கர்நாடகத்தை ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.

தற்காலம் (1700 - இன்று)

[தொகு]

18 ம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இலக்கியம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • வாழ்வியற் களஞ்சியம். தொகுதி பத்து.

வெளி இணைப்புகள்

[தொகு]

கன்னட இலக்கியம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னட_இலக்கியம்&oldid=3783789" இலிருந்து மீள்விக்கப்பட்டது