பஞ்சாபி இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சாபி இலக்கியம் என்பது, இந்தியாவிலும், பாக்கிசுத்தானிலும் உள்ள பஞ்சாப் பகுதி மக்களாலும், வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த பஞ்சாபியர்களாலும் பஞ்சாபி மொழியில் எழுதப்படும் இலக்கியம் ஆகும். பஞ்சாபி மொழியைப் பல்வேறு எழுத்துக்களில் எழுதுகின்றனர். சாமுகி, குர்முகி ஆகிய எழுத்து முறைகளே மிகப் பொதுவான பயன்பாட்டில் உள்ளன.

மத்திய காலம்[தொகு]

11வது நூற்றாண்டைச் சேர்ந்த நாத் யோகிகளான கோரக்நாத், சார்ப்பத்நாத் ஆகியோர் எழுதித் துண்டு துண்டாகக் கிடைக்கும் ஆன்மீகம் சார்ந்த எழுத்துக்களே மிகப்பழைய பஞ்சாபி இலக்கியம் எனக் கருதப்படுகிறது.[1] ஆனாலும், பஞ்சாபி இலக்கியம் பரீதுதீன் காஞ்சாகர் (1173 - 1266) என்பவருடனேயே பரவலாகத் தொடங்குகிறது என்பதைக் காண முடிகிறது.[2] பரீதுதீனின் சூஃபி கவிதைகள் அவரது இறப்புக்குப் பின்னர் ஆதி கிரந்தம் என்னும் சீக்கிய மத நூலில் சேர்க்கப்பட்டது.

முகலாயர், சீக்கியர் காலப்பகுதிகள்[தொகு]

குரு நானக்கின் (1469-1707) வாழ்க்கை பற்றிய கதைகளையும், அவர் தொடர்பான மரபுவழிக் கதைகளையும் உள்ளடக்கிய சனம்சாக்கிகள் (பிறப்புக் கதைகள்) பஞ்சாபி உரை நடை இலக்கியத்தின் தொடக்ககால எடுத்துக்காட்டுகள். குர்பானி மரபின் தன்மைக்கு ஏற்ப இவ்விலக்கியங்களின் உரைநடையில், சமசுக்கிருதம், அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளினதும், பிற இந்திய மொழிகளினதும் சொற்கள் கலந்துள்ளன. பஞ்சாபி சூஃபி கவிதை சா உசேன் (1538–1599), சுல்தான் பாகு (1628–1691), சா சராஃப் (1640–1724), அலி ஐதர் (1690–1785), சாலே முகம்மத் சபூரி (), பூலே சா (1680–1757) ஆகியோரால் வளர்க்கப்பட்டது. பாரசீகக் கவிஞர்களைப்போல் கவிதை வெளிப்பாட்டுக்கு கசலைப் பயன்படுத்தாமல், பஞ்சாபிக் கவிஞர்கள் காஃபி முறையில் கவிதைகளை எழுதினர்.[3]

பஞ்சாபி சூஃபி கவிதை பிற பஞ்சாபி இலக்கிய மரபுகளிலும், குறிப்பாக பஞ்சாபி கிசா எனப்படும் துன்பியல் காதல் கதை மரபிலும், தாக்கங்களைக் கொண்டிருந்தது. இக்கதைகளும், இந்திய, பாரசீக, குரான் மூலங்களில் இருந்து பெறப்பட்டன. வாரிசு சா (1706–1798) என்பவர் எழுதிய ஹீர் ரஞ்சா என்னும் கிசா மிகவும் பெயர் பெற்ற பஞ்சாபி கிசாக்களில் ஒன்று. பாசல் சாவின் சோனி மகிவால், அபீசு பார்குதாரின் (1658–1707) மிர்சா சாகிபா, ஹாசிம் சாவின் (1735?–1843?) சாசி புன்னம், காதர் யார் (1802–1892) என்பவரின் கிசா புராண் பகத் என்பன பிற புகழ் பெற்ற கதைகளுட் சில.

வார் எனப்படும் வீரம் சார்ந்த கதைப்பாடல் வகை பஞ்சாபி மொழியில் செழுமையான வாய்வழி மரபைக் கொண்டுள்ளது. சாண்டி டி வார் (1666–1708) இலுள்ள குரு கோபிந் சிங்கின் பாடல்கள் வீரம் சார்ந்த அல்லது காப்பியக் கவிதைகளுக்கு முதன்மை எடுத்துக்காட்டுகளாக உள்ளன. கற்பனை கலந்த வரலாறான நசாபத்தின் நாதிர் சா டி வார் இந்தியாவில் 1739 அளவில் இடம்பெற்ற படையெடுப்பை விளக்குகிறது. சங்நாமா அல்லது "போர்க் காலவரிசை" எனப்படும் இலக்கிய வகை முகலாயர் காலத்தில் பஞ்சாபி இலக்கியத்துக்கு அறிமுகமானது. சா மொகம்மத் (1780–1862) என்பவரின் சங்நாமா 1845-46 காலப்பகுதியில் இடம்பெற்ற முதல் ஆங்கில-சீக்கியப் போர் பற்றிக் கூறுகிறது.

பிரித்தானிய இராச்சியக் காலம்[தொகு]

பஞ்சாபில் அறிமுகமான பிரித்தானியக் கல்விமுறையினூடாக, விக்டோரியப் புதினம், எலிசபெத்திய நாடகம், சுதந்திர உரைநடை, நவீனவியம் போன்றவை பஞ்சாபி இலக்கியத்தில் நுழைந்தன. முதலாவது பஞ்சாபி அச்சியந்திரம் கிறித்தவ மிசன் ஒன்றால் 1835ல் லூதியானாவில் நிறுவப்பட்டது. 1854ல் வணக்கத்துக்குரிய ஜே, நியூட்டன் என்பவர் முதல் பஞ்சாபி அகரமுதலியை வெளியிட்டார்.

பஞ்சாபிப் புதினத்தை நானக் சிங் (1897–1971), வீர் சிங் போன்றோர் வளர்த்தனர். வீர் சிங், சிங் சபா இயக்கத்தினூடாக "சுந்தரி", "சத்வந்த் கௌர்", "பாபா நௌத் சிங்" போன்ற வரலாற்றுக் காதல் புதினங்களை எழுதி வெளியிட்டார். அதேவேளை நானக் சிங், புதினத்தை கிசா கதை கூறும் மரபுகளுடனும், வாய்வழி மரபுகளுடனும், சமூக சீர்திருத்த விடயங்களுடனும் இணைப்பதற்கு உதவினார்.

அம்ரிதா பிரீத்தத்தின் (1919–2005) புதினங்களும், சிறுகதைகளும் பிற கருப்பொருள்களுடன், பெண்களின் அனுபவங்கள், இந்தியப் பிரிவினை முதலியவற்றையும் எடுத்தாண்டன. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், புராண் சிங்கின் (1881–1931) ஆக்கங்களூடாக பஞ்சாபி கவிதை இலக்கியம் சாதாரண மக்களினதும், ஏழைகளினதும் அனுபவங்களை வெளிப்படுத்தியது. தானி ராம் சத்ரிக் (1876–1957), திவான் சிங் (1897–1944), உசுத்தாத் தமன் (1911–1984) போன்ற கவிஞர்கள் இந்திய விடுதலை இயக்கக் காலத்திலும் அதன் பின்னரும் தேசியக் கருத்துக்களைத் தமது பாடல்களில் வெளிப்படுத்தினர்.

பேராசிரியர் மோகன் சிங் (1905–78), சரீஃப் குஞ்சாகி ஆகியோர் பஞ்சாபிக் கவிதைகளில் நவீனவியத்தை அறிமுகப்படுத்தினர். இக்காலத்தில் பஞ்சாபி புலம்பெயர் சமூகமும் எழுச்சியுறலாயிற்று. இவர்களும் பிரித்தானியருக்கு எதிரான புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை எழுதினர்.

விடுதலைக்குப் பின்[தொகு]

மேற்குப் பஞ்சாப் (பாகிசுத்தான்)[தொகு]

நசாம் உசேன் சயத், ஃபக்கார் சமன், அஃப்சல் அசான் ரந்தாவா போன்றோர் 1947க்குப் பின் உருவான மேற்குப் பஞ்சாபி இலக்கியம் தொடர்பில் முக்கியமானவர்கள். மேற்குப் பஞ்சாபி அறிஞர்களான சஃபகத் தன்வீர் மிர்சா, அகமத் சலிம், நசாம் உசேன் சயத் ஆகியோரின் முயற்சிகளால் பஞ்சாபியில் இலக்கியத் திறனாய்வும் வளர்ச்சியுறலாயிற்று. சமன், ரந்தாவா ஆகியோரின் ஆக்கங்கள் பெரும்பாலும் 1947க்குப் பிந்திய பாகிசுத்தானில் பஞ்சாபி அடையாளம், பஞ்சாபி மொழி ஆகியவற்றின் மீள்கண்டுபிடிப்பு தொடர்பானவையாக இருந்தன. அலியின் சிறுகதைத் தொகுப்பான ககானி பிராகா எழுத்துக்கான பாகிசுத்தான் அக்கடமியின் 2005 ஆம் ஆண்டுக்கான வாரிஸ் சா நினைவு விருதைப் பெற்றது. மான்சா யாத் என்பவரும் தனது வாக்டா பானி என்னும் தொகுப்புக்காக 1987 இலும், தவான் தவான் தாரா என்னும் புதினத்துக்காக 1998 இலும், தம்கா-இ-இம்தியாஸ் என்னும் புதினத்துக்காக 2004 இலும் வாரிஸ் சா நினைவு விருதைப் பெற்றிருந்தார். அண்மைக் காலத்தில் திறனாய்வு அடிப்படையில் பெரிய அளவு வெற்றிபெற்ற மேற்குப் பஞ்சாபி எழுத்தாளர் மிர் தன்கா யூசுஃபி என்பவர். இவர் மசூத் கத்தார் போசு நம்பிக்கை நிதியத்தின் விருதை நான்கு முறை பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இந்தியப் பகுதி பஞ்சாபி வாசகர்களுக்காக குர்முகி எழுத்துருக்களில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்குப் பஞ்சாப் (இந்தியா)[தொகு]

அம்ரிதா பிரீத்தம் (1919–2005), யசுவந்த் சிங் ராகி (1930–1996), சிவ் குமார் பாத்தல்வி (1936–1973), சுர்சித் பாத்தர் (1944–), பாஷ் (1950–1988) ஆகியோர் கிழக்குப் பஞ்சாபின் முன்னணி கவிஞர்கள், எழுத்தாளர்களுட் சிலர். பிரீத்தத்தின் சினேகே (செய்திகள்) 1982ன் சாகித்திய அக்கடமி விருதைப் பெற்றது. இதில் பிரீத்தம் சமூக ஒழுக்க விதிகள் பெண்கள் மீது கொண்டுள்ள தாக்கங்கள் குறித்துப் பேசுகிறார். குமாரின் காவியம் லூனா 1965ல் சாகித்திய அக்கடமி விருதை வென்றது. அதேவேளை சோசலிசப் புரட்சிக் கருத்துக்கள் பாஷ் போன்றோரி எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்தின. இவரது எழுத்துக்களில் பாப்லோ நெரூடா, ஒக்டாவியோ பாஸ் ஆகியோரின் செல்வாக்கும் காணப்பட்டது.

தற்காலப் பஞ்சாபிக் கதைகள் நவீனத்துவ, பின்நவீனத்துவக் கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன. சீக்கியச் சிந்தனைகளையும், கொள்கைகளையும் பரப்புவதில் இருந்து விலகி முற்போக்கு இயக்கங்களின் கருத்துக்களை நோக்கிப் பஞ்சாபிச் சிறுகதைகளை எடுத்துச் செல்வதில் நானக் சிங், சரண் சிங் சாகீத், சோசுவா பாசல் தீன், ஹீரா சிங் டார்ட் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஆசித் கௌர், தலோப் கௌர் திவானா போன்ற பெண் எழுத்தாளர்கள் ஆண்களின் மேலாண்மை, பெண்கள் ஒடுக்கப்படுதல் என்பவை குறித்துத் தமது எழுத்துக்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். குல்வந்த் சிங் விர்க் (1921-1987) தனது நவ லோக் என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1967க்கான சாகித்திய அக்கடமி விருதைப் பெற்றார். அர்தேவ் கிரெவால் என்பவர் 2012ல் தான் எழுதிய எஹ் குத்குசி நகின் ஜனாப்! கத்ல் ஹே என்னும் புதினத்தின் மூலம், பஞ்சாபி கொலை மர்மம் என்னும் புதிய இலக்கிய வகை ஒன்றைப் பஞ்சாபி இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (citation: Encyclopaedia of Indian Literature)
  2. Encyclopaedia of Indian Literature (Vol. 2), Sahitya Akademi, p. 1263
  3. http://www.apnaorg.com/poetry/bullahn/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_இலக்கியம்&oldid=2092463" இலிருந்து மீள்விக்கப்பட்டது