சென்னகேசவர் கோயில், பேளூர்
சென்னகேசவர் திருக்கோயில், பேளூர் | |
---|---|
பெயர் | |
பெயர்: | சென்னகேசவர் திருக்கோயில், பேளூர் |
அமைவிடம் | |
ஊர்: | பேளூர் |
மாவட்டம்: | ஹசன் |
மாநிலம்: | கர்நாடகா |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கேசவநாராயணன் (விஜயநாராயணா) |
தாயார்: | சௌம்ய நாயகி, ரங்கநாயகி சந்நதிகள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | போசளர் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. 1117 |
அமைத்தவர்: | விட்டுணுவர்தனன் |
விஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேளூரில், யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சென்னகேசவர் என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்திலுள்ள, ஹாசன் நகருக்கு 40 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 220 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேளூர், போசளர் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த பல சிறப்புவாய்ந்த கோயில்களுக்குப் புகழ் பெற்ற இடமாகவும், வைணவர்களின் யாத்திரைக்குரிய இடமாகவும் விளங்குகிறது.
வரலாறு
[தொகு]இக் கோயில் பொ.ஊ. 1117 ஆம் ஆண்டில் ஹோய்சால மன்னனான விஷ்ணுவர்த்தனனால் கட்டுவிக்கப்பட்டது. இம்மன்னர் பஞ்ச நாராயண ஆலயங்கள் அமைத்தவர்.[1]
இது கட்டப்பட்டதன் காரணம் தொடர்பாக வரலாற்றாளர்களிடையே பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. விஷ்ணுவர்தனனின் போர் வெற்றியைக் குறிக்கவே இது கட்டப்பட்டது என்னும் கருத்தே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்தாக உள்ளது. எனினும், ஹோய்சாலர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய சாளுக்கியர்களை வென்ற பின்னர், கட்டிடக்கலையில் அவர்களிலும் மேம்பட்ட திறமையை வெளிப்படுத்துவதற்காகவே இக் கோயில் கட்டப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். இன்னொரு சாரார், சோழருக்கு எதிராக ஹோய்சாலர்கள் நடத்திய தலைக்கோட்டைப் போரில் பெற்ற வெற்றியைக் குறிக்கவே இக்கோயில் கட்டப்பட்டதாக எண்ணுகின்றனர். விஷ்ணுவர்த்தனன் சமணசமயத்தில் இருந்து வைணவத்துக்கு மாறியதைக் குறிக்கவே வைணவக் கோயிலான இது கட்டப்பட்டதாக நம்புவோரும் உள்ளனர்.
தல வரலாறு
[தொகு]பஸ்மாசுரன் பொசுங்கிய தலம் என்பது தல வரலாறு.[1]
கேசவநாராயணன்
[தொகு]மூலவர் கேசவநாராயணன் கல்லால் ஆன பீடத்தின் உயரத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர். சென்னகேசவர் பெண் உருவில் காட்சி தருகின்றார்.[1]
கோயில் வளாகம்
[தொகு]இக் கோயில் வளாகத்தின் தலை வாயிலில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட இராசகோபுரம் அமைந்துள்ளது. இவ் வளாகத்தின் மையப் பகுதியில் சென்னகேசவர் கோயில் கிழக்கு நோக்கியபடி உள்ளது. இதன் இரு மருங்கிலும், வலது பக்கத்தில், காப்பே சான்னிக்கிரயர் கோயிலும், ஒரு சிறிய இலக்குமி கோயிலும், இடது புறத்திலும், பின்புறத்திலும் ஆண்டாள் கோயிலும் அமைந்துள்ளன. இங்கு காணப்படும் இரண்டு தூண்களுள் ஒன்று விஜயநகரக் காலத்தையும் மற்றது போசளப் பேரரசுக் காலத்தையும் சேர்ந்தது. இதுவே முதல் போசளக் கோயிலாக இருந்தபோதும் இதன் கட்டிடக்கலை சாளுக்கியக் கலைப் பாணியைச் சேர்ந்ததாகவே உள்ளது. ஹளபீட்டில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் மற்றும் சோமநாதபுரத்து கேசவர் கோயில் ஆகியவை போன்ற பிற்கால போசளக் கோயில்களைப் போல் அளவுக்கு அதிகமான அலங்கார வேலைப்பாடுகள் இக் கோயிலில் இல்லை.
இக் கோயிலுக்கு மூன்று வாயில்கள் உள்ளன. இவற்றின் கதவுகள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வாயிற்காவலர் சிற்பங்களோடு அமைந்துள்ளன. காப்பே சன்னிக்கிரயர் கோயில் சென்னகேசவர் கோயிலிலும் சிறிதாக இருந்த போதிலும், கட்டிடக்கலை அடிப்படையில் அதேயளவு முக்கியத்துவம் கொண்டது. ஆனாலும், இதில் சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. பிற்காலத்தில் இன்னொரு கர்ப்பக்கிருகம் சேர்க்கப்பட்டதுடன் இது இரட்டைக் கோயிலாக ஆனது. முன்னையது நட்சத்திர வடிவில் அமைந்திருக்கப் பின்னது எளிமையான நாற்பக்க வடிவுடையதாக இருக்கிறது. இரண்டாவது கோயிலிலும் கேசவருடைய சிலையே இருக்கிறது. இது விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலா தேவியினால் கட்டுவிக்கப்பட்டது.
அதிசயத்தூண்
[தொகு]ஆலயத்தின் கட்டட நுணுக்கத்தை வெளிப்படுத்தும் தூணாக இது உள்ளது. நாற்பது அடி உயர கற்கம்பம், பீடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. கற்கம்பத்திற்கும் பீடத்திற்கும் இடையே இடைவெளியுள்ளது. ஒரு பக்கமிருந்து பார்த்தால் மறுபக்கம் தெரியும். ஒரு தாளை மடித்து இடைவெளியில் விட்டு வெளியே அம்மூலையிலும் எடுக்க முடியும். ஆனால் கற்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத விதமாக உள்ளது.[1]
பெருமாளுக்கு செருப்பு காணிக்கை
[தொகு]இத்திருக்கோயிலின் முன்மண்டபத்தில் கண்ணாடி அலமாரியில் பசவபட்டணர், சஸ்லே ஹள்ளி எனும் ஊர் செருப்பு தைப்பவர்கள் காணிக்கையாக வைத்துள்ள செருப்பு உள்ளது. இந்த செருப்பு நாலடி நீளத்தில் இரண்டடி உயர்த்தில் உள்ளது.[1]
இவர்கள் கனவில் பெருமாள் வந்து செருப்பு தேய்ந்து விட்டது வேறு செருப்பு தைத்துத் தர வேண்டும் என்று கூறும் போது கிராம மக்கள் ஊரில் பொது இடத்தில் குங்குமத்தைப் பரப்புவார்கள். அதில் பெருமாளின் பாதம் பதியும் எனவும் அந்த அளவுக்கு செருப்பு தைத்துக் கொணர்ந்து பெருமாளுக்கு காணிக்கையாக வைப்பார்களாம்.[1]
இவ்வாறு அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட செருப்புகள் இன்னமும் உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Sri.Channakeshava Temple[தொடர்பிழந்த இணைப்பு]
- Chennakeshava Temple
- Photo of Gopura – Chennakeshava Temple
- Plan of temple
- detailed Information on complex பரணிடப்பட்டது 2016-03-27 at the வந்தவழி இயந்திரம்
- explanation of temple and its architecture in the order as a person would walk around it