தந்திவர்மன் கல்வெட்டு (திருவல்லிக்கேணி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்திவர்மன் கல்வெட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கருவறைக்குப் போகும் வாயிலுக்கு அருகில் தரையில் வைத்துக் கட்டப்பெற்றுள்ள கல்லில் செதுக்கியதாகும். "இதனை ரட்சிப்பார் அடியிரண்டும் என் முடிமேலன" என்ற காப்புரை கொண்டது.[1]

கல்வெட்டின் எழுத்துகள்[தொகு]

இக்கல்வெட்டின் எழுத்துகள் தமிழும் வடமொழியும் கலந்து, ஆனால் கிரந்த எழுத்துகளில் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட அரசன்[தொகு]

பல்லவ மன்னன் தந்திவர்மன் இவனது காலம் கி.பி. 777- கி.பி. 830

கல்வெட்டின் காலம்[தொகு]

தந்திவர்மன் அரியணையேறிய 12 ஆம் ஆண்டு அதாவது கி.பி 789 இல் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி[தொகு]

திருவல்லிக்கேணிக் கோயிலுக்கு உரிமையுடைவர்கள் கோயிலுக்குரிய கருமாரச் சேரிப்புலத்தை[2]. ஒற்றிக்கு வைத்துவிட்டனர். அதனால் நாற்பத்தைந்து காடி[3] நெல் வருமானம் குறைந்துபோக, சுவாமிக்குத் திருவமுது தடைபட்டது. புகழ்த்துணை விசையரையன் முப்பதின் காடி நெல்லும் அங்கழஞ்சு பொன்னும் கொடுத்து ஒற்றியை மீட்டுத் தன்னுடையதாக்கு, நாள் ஒன்றுக்கு ஐந்து நாழி நெல்லைக் கொடுத்து, அதை நன்கு குற்றுதலால் உண்டாகும் இரண்டு நாழி தூக்குத்தல்[4] அரிசியைக்கொண்டு, சங்கசர்மனும், சத்திசர்மனும், இளையசத்திசர்மனும் சுவாமிக்கு இரவுப் போனகம்[5] காட்டக் கடவார்கள் எனவும் அப்போனகம் தடைப்படுமாயின், அவிப்புலம், தத்தன்புலம், காரைக்கிழான் புலம் ஆகியவற்றிலிருந்து சுவாமி போகனத்துக்குத் திருவமுது காட்டக் கடவதென்றும், அவர்கள் தவறிவிடுவார்களானால், அரசன் விதிக்கும் தண்டத்திற்குட்பட்டு அவர்கள் நடத்திடக் கடவதென்றும் ஏற்பாடுகளைச் செய்துள்ளான். இவனே பொன்விளக்கு, வட்டில், உலோகத்தால் செய்த பானை ஆகியவற்றையும் கொடுத்துள்ளான்[6]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Epigraphic Indica, vol. VIII., No.29
  2. கருமாரச்சேரி என்ற வயலின் பெயர். கருமாரச்சேரி என்ற ஊரிலுள்ள வயல் என்றும் கொள்ளலாம்
  3. தமிழர்கள் தானியங்களை அளக்கப் பயன்படுத்திய அளவை. இரண்டு பதக்கு கொண்டது ஒரு தூணி அல்லது காடி
  4. நன்கு குற்றப்பட்ட தூய அரிசி
  5. இரவில் இறைவனுக்கு வைத்து படைக்கும் உணவு
  6. வை. சுந்தரேச வாண்டையார், முப்பது கல்வெட்டுகள், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு,2009 பக்.1-3