உள்ளடக்கத்துக்குச் செல்

சக்தி பீடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்தி பீடங்கள் (சமக்கிருதம்: शक्ति पीठ, வங்காள மொழி: শক্তিপীঠ, Śakti Pīṭha) என்பவை ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களாகும்.[1] சக்தி பீடம் என்பதற்குச் சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில், கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் மற்றும் ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகியன நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டுமென்பதும் ஒரு நியதியாகும்.

தேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்றும் கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில்தான் 51 சக்தி பீடங்கள் தெளிவாக உள்ளது. அதனால் இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[2]

சக்தி பீடங்கள் பற்றிய புராணத் தகவல்[தொகு]

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. பிறகு தாட்சாயிணி பர்வதராஜன் மகள் பார்வதியாகப் பிறந்து ஈசனை மணந்தாள்.

சனத்குமாரர்கள் (பிரம்மபுத்திரர்கள்) சதச்ருங்க மலையில் சதாசிவனை நோக்கித் தவம் செய்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராகத் தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானத்திலிருந்து சனத்குமாரர்கள் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவர்களை எழுப்ப சிவன் தன் கையிலுள்ள டமருகத்தை (உடுக்கை) வேகமாய் ஆட்டினார். சனத்குமாரர்கள் கண்விழித்துச் சிவனடி பணிந்தனர். இதனைச் சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து "டம்டம்' என்று எழுந்த நாதமே சமஸ்கிருதத்தின் 51 எழுத்துக்களாயின என்றும், இவை பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம் போல் தெறித்து விழுந்தன என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அவையே "அ' முதல் "க்ஷ' வரையிலான 51 எழுத்துக்களாகும். சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் (எழுத்துக்கள்) தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் முக்கியமான உடல் பகுதிகள் விழுந்தன. ஆகவே அவற்றை 51 அட்சர சக்தி பீடங்கள் என்பர். இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் என்னும் நூல் கூறுகிறது.

சக்தி பீடங்களின் எண்ணிக்கையிலும் எது சக்தி பீடம் என்பதிலும் உள்ள குழப்பங்கள்[தொகு]

 1. தேவி பாகவதம், ஸ்கந்த புராணம், பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்மைக்கு 70 முதல் 108 வரை சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
 2. வேதவியாசரின் தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
 3. காளிகா புராணம் நான்கு ஆதி சக்தி பீடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.
 4. மேலும் ஆதி சங்கராச்சாரியாரின் ”அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம்” 18 மஹா சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
 5. தந்திர சூடாமணி என்ற நூல் 51 அட்சர சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. 52 என்று கூறுபவர்களும் உண்டு.
 6. லலிதா ஸகஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் ”பீடங்களும் அங்க தேவதைகளும்” என்ற பகுதியில் சக்தி பீடங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் பஞ்சா சத் பீட ரூபிணீ என்ற வார்த்தை வருகிறது.
 7. மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடற் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
 8. சமஸ்க்ருதத்தின் 51 அட்சரங்களுக்கும் 51 பீடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த 51 அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் என்னும் நூல் கூறுகிறது.
 9. நவ சக்தி பீடங்கள் என்ற ஒன்பது பீடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான நூல் ஆதாரங்கள் ஏதும் அறியப்படவில்லை.
 10. நித்யோத்சவம், வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகின்றன.
 11. இதில் ஒரு வகைப்பாட்டில் வந்த கோவில் மற்றொரு வகைப்பாட்டிலும் வரலாம். வராமலும் போகலாம். உதாரணமாக, அஸ்ஸாமின் காமாக்யா தேவி கோவில் அனைத்து வகைப்பாட்டிலும் வரும். ஆனால் கல்கத்தாவின் காளிகாட் காளி கோவிலானது ஆதி சக்தி பீடங்கள் மற்றும் 51 அட்சர சக்தி பீடங்கள் என்ற இரு வகைப்பாட்டிலும் வரும். ஆனால் மஹா சக்தி பீடங்களில் வராது. மேலும் பாகிஸ்தானின் ஹிங்குளாஜ் மாதா என்ற 51 வது சக்தி பீட கோவிலானது ஆதி சக்தி பீடத்திலும் மஹா சக்தி பீடத்திலும் வராது.
 12. எத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது போலவே எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. உதாரணமாக தந்த்ர சூடாமணியில் இரண்டாவதாகக் கூறப்படும் சர்க்கரரா பீடம் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவிலா அல்லது பாகிஸ்தானின் சிவஹர்கரையிலுள்ள கோவிலா என்ற சந்தேகம் உள்ளது. இரண்டில் ஒன்றை மட்டும் சக்தி பீடமாகக் கொள்ளாமல் இரண்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. சக்தி பீடம் என்பதற்கான பெரும்பான்மை ஆதாரம் கொண்ட கோவிலை முதலாவதாகவும் மிகக் குறைந்த ஆதாரங்களைக் கொண்ட கோவிலைக் கடைசியாகவும் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்படி சர்க்கரரா பீடத்திற்கு கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் முதன்மையானதாகவும் சிவஹர்கரை இரண்டாம் பட்சமாகவும் தரப்பட்டுள்ளது. எந்த சந்தேகமும் இல்லாமல் இது சக்தி பீடம்தான் என்று உறுதியாகக் கூறப்படும் கோவில்கள் மிகச் சிலவே. அவற்றில் முதன்மையானது மற்றும் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் தலம் அஸ்ஸாமின் காமாக்யா கோவிலாகும்.
 13. இந்தக் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கான மூன்று முக்கியக் காரணங்கள் பின்வருமாறு: உள்ளூர் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள சக்தித் தலங்கள் மீது கொண்ட பக்தியும் ஈடுபாடும், நாளடைவில் பெருகிய சக்தித் தலங்களும் கலாச்சார மாற்றங்களும், புராணங்கள் மற்றும் தந்திர சூடாமணியில் உள்ள பழைய புராதனப் பெயர்களுக்கும் தற்போதுள்ள பெயர்களுக்கும் உள்ள மாறுதலும் வேறுபாடுகளும் (உதாரணமாக ப்ரக்ஜோதிஷபுரம் அல்லது காமகிரி என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இடமே தற்போதுள்ள அஸ்ஸாமின் கவுஹாத்தி).

தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்கள்[தொகு]

தேவியின் பெயர் - உடல் பகுதி - பைரவர் - இருப்பிடம் என்ற வரிசையில் தரப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பீடங்களுக்கு செல்வதற்கான வழித்தடங்களும் தரப்பட்டுள்ளன.[3]

1. ஹிங்குளா / சர்ச்சிகா / கோத்தரி / மஹாலக்‌ஷ்மி - ப்ரம்மராந்தரம் (தலையின் ஒரு பகுதி அல்லது உச்சந்தலைப் பகுதி) அல்லது சகஸ்ராரம் (செந்தூரம் வைக்கும் நெற்றிப் பகுதி) - பீமலோசன பைரவர் அல்லது சிவபாரி பைரவர் - பாகிஸ்தான்

பாகிஸ்தான்பலூசிஸ்தான் – லாஸ் பெலா (las bela) அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை - ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்

அட்டைவணை வடிவில் 3.1
தேவியின் பெயர் உடல் பகுதி பைரவர் இருப்பிடம்
ஹிங்குளா / சர்ச்சிகா / கோத்தரி / மஹாலக்‌ஷ்மி ப்ரம்மராந்தரம் (தலையின் ஒரு பகுதி அல்லது உச்சந்தலைப் பகுதி) அல்லது சகஸ்ராரம் (செந்தூரம் வைக்கும் நெற்றிப் பகுதி) பீமலோசன பைரவர் அல்லது சிவபாரி பைரவர் பாகிஸ்தான்பலூசிஸ்தான் – லாஸ் பெலா (las bela) அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை
 • புகழ்பெற்ற ஹிங்குளாஜ் யாத்திரை கராச்சி (260 கி.மீ) இருந்து தொடங்குகிறது. கராச்சிகுவெட்டா (quetta) சாலையில் 120 கி.மீ சென்று ஜீரோ பாய்ண்ட் என்ற இடத்தை அடைந்து மேற்கு நோக்கி லியாரி (lyari) டவுன் வழியாகச் சென்று பௌஜி கேம்ப் (fauji camp) பகுதியை அடைய வேண்டும். இந்தப் பயணத்தின் கடைசி ஸ்டாப் “அஸப்புரா” சரை (asha pura sarai) என்பதாகும்.
 • ஹிங்குளாஜ் யாத்திரை கடினமான பயணமாகும். அகோர் மற்றும் கூங்கி (goongi) என்ற இரு ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
 • இந்த அகோர் ப்ரிட்ஜ் பாலத்திலிருந்து கோவில் 15 கி.மீ தொலைவிலுள்ளது. இந்த அகோர் பாலம் வரை செல்ல கராச்சியில் இருந்து தனியார் வாகனங்கள் உள்ளன. மேலும் கராச்சியின் (Inter-City Bus Terminal, Baldia Town, Karachi) பால்டியா டவுனில் உள்ள இண்டர் சிட்டி பஸ் டெர்மினலில் இருந்து அரசுப் பேருந்துகளும் உள்ளன.
 • இந்த அகோர் ஆறு வரை செல்ல சிறந்த வழி தற்போது அரபிக்கடலை ஒட்டிப் போடப்பட்டுள்ள கோஸ்டல் ஹைவே ஆகும். கராச்சியிலிருந்து இந்த ரோட்டில் சென்றால் 2.5 அல்லது 3 மணி நேரத்தில் அகோர் ஆற்றை அடையலாம்.
 • பிறகு அகோரிலிருந்து நடந்தே கோவிலை அடையலாம். அல்லது அகோர் கிராமத்திலிருந்து இருசக்கர வாகன வசதி உண்டு.
 • ஹிங்குளாஜ் தெற்கு பலூசிஸ்தானில் கவாடருக்கு (gawadar) வடகிழக்கே சில மணி நேரப் பயணத்தொலைவில் உள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்

2. சர்க்கரரா / சர்க்கரா / மஹா லக்‌ஷ்மி / அம்பாபாய் / கரவீர் நிவாசினி – முக்கண்கள் - க்ரோதீஷ பைரவர் - மஹாராஷ்ட்ரா அல்லது பாகிஸ்தான் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்

மஹாராஷ்ட்ராகோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்

அட்டைவணை வடிவில் 3.2
தேவியின் பெயர் உடல் பகுதி பைரவர் இருப்பிடம்
சர்க்கரரா / சர்க்கரா / மஹா லக்‌ஷ்மி / அம்பாபாய் / கரவீர் நிவாசினி முக்கண்கள் க்ரோதீஷ பைரவர் மஹாராஷ்ட்ரா அல்லது பாகிஸ்தான் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்
 • ஸ்ரீ கரவீர்பூர் நிவாஸினி மஹாலக்ஷ்மி மந்திர் என்ற பெயரால் அழைக்கப்படும் தேவியின் திருத்தலம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும் ரயில் நிலையத்திலிருந்தும் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
 • சிலர் சிவஹர்கரை (கரவிபூர்) என்ற நகரில் இக்கோவில் இருப்பதாகக் கூறுகின்றனர். அருகில் பார்க்கை (parkai) என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. சிவன் இங்கு ராகி வடிவில் புகழ்பெற்ற மூர்த்தியாக உள்ளார். இந்த பார்க்கை ரயில் நிலையம் கராச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் லாஸ்பெல்லா மாவட்டத்தில் பார்க்கை பகுதியில் உள்ளது. குஜராத்திலிருந்து கடல் வழியாக படகில் கூட செல்லலாம். இக்கோவில் காமாக்யா தேவி கோவிலென்றும் மஹிசமர்த்தினி கோவிலென்றும் துர்கா மந்திர் என்றும் நானி மந்திர் என்றும் கரவிப்பூர் தேவி மந்திர் என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது. பழைமையான இக்கோவில் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. சிவராத்திரியும் நவராத்திரியும் இங்கு விஷேசமான பண்டிகைகளாகும். ஏப்ரல் மாதத்தில் இங்கு நான்கு நாட்களுக்கு பக்தர்களால் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
 • சிலர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள நைனா தேவி கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கூறுகின்றனர்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. கோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்
 2. சிவஹர்கரை மஹிசமர்த்தினி சக்தி பீடக் கோவில்
 3. நைனா (நயனா) தேவி சக்தி பீடக் கோவில்

3. சுகந்தா / சுனந்தா - மூக்கு அல்லது நாசி - த்ரையம்பக பைரவர் - வங்க தேசம்

வங்க தேசம் – பரிசல் மாவட்டம் (barisal) – கௌர்நடிதனா (gournadi thana) – உத்தர் சிகர்பூர் கிராமம் (uttar shikarpur)

அட்டைவணை வடிவில் 3.3
தேவியின் பெயர் உடல் பகுதி பைரவர் இருப்பிடம்
சுகந்தா / சுனந்தா மூக்கு அல்லது நாசி த்ரையம்பக பைரவர் வங்க தேசம் – பரிசல் மாவட்டம் (barisal) – கௌர்நடிதனா (gournadi thana) – உத்தர் சிகர்பூர் கிராமம் (uttar shikarpur)
 • இங்கு செல்ல நிறைய பஸ்கள் உள்ளன. டாக்கா (dhaka) நகரிலிருந்து பரிசல் (barisal) செல்ல படகு சவாரி நல்லது. உத்தர் சிகர்பூர் (அல்லது சிவஹ்ரி கர்பூர் – shivahri karpur) கிராமமானது பரிசல் நகரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சுனந்தா / சொந்தா (sunanda / sonda) நதிக்கரையிலுள்ளது.
 • தேவியை அப்பகுதி மக்கள் உக்ர தாரா மா என்று அழைக்கின்றனர்.
 • இந்த சுனந்தா தேவியின் பைரவர் த்ரையம்பக் என்ற பெயரில் ஜலகட்டி (jhalakati) ரயில் நிலையம் அருகில் போனபாலியா (ponabalia) என்ற இடத்தில் உள்ளார். சிவராத்திரி விழா இங்கு சிறப்பு.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. உத்தர் சிகர்பூர் உக்ர தாரா மாதா சக்தி பீடக் கோவில்

4. காஷ்மீரா / மஹாமாயா - தொண்டை அல்லது மேல் கழுத்து அல்லது கழுத்து - த்ரைசந்த்யேஸ்வர பைரவர் - ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் – அனந்த் நாக் (anantnag) மாவட்டம் – பகல்கம் (pahalgam) அருகில் – அமர்நாத் சக்தி பீடக் கோவில்

அட்டைவணை வடிவில் 3.4
தேவியின் பெயர் உடல் பகுதி பைரவர் இருப்பிடம்
காஷ்மீரா / மஹாமாயா தொண்டை அல்லது மேல் கழுத்து அல்லது கழுத்து த்ரைசந்த்யேஸ்வர பைரவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் – அனந்த் நாக் (anantnag) மாவட்டம் – பகல்கம் (pahalgam)
 • புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடக்கிறது. சிவலிங்கம் மட்டுமே உள்ளது. இதையே சக்தியாகவும் நினைத்து வழிபடுகிறார்கள். டெல்லி அல்லது ஸ்ரீநகரிலிருந்து செல்லும் யாத்திரைக் குழுவுடன் சேர்ந்து கொள்ளலாம். ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. ஸ்ரீநகரிலிருந்து பகல்கம் வழியாக பஸ்ஸில் 94 கி.மீ சென்று சந்தன்வாரியில் இருந்து 16 கி.மீ நடக்க வேண்டும்.
 • சிலர் மஹாமாயா கோவிலை சக்தி பீடமென்று கூறுகின்றனர். இது ஜம்முவில் இருந்து 5 கி.மீ தொலைவில் பைபாஸ் ரோட்டில் தாவி (tawi) நதிக்கரையில் பஹூ (bahu fort) கோட்டைக்குப் பின்புறத்தில் உள்ளது. இந்த மஹாமாயா கோவில் பேவ் வாளி மாதா சக்தி பீடக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
 • சிலர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள புனித கந்தர்வல் (gandharval) நகரத்தின் மா கீர் பவானி அல்லது மா க்ஷீர் பவானி கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இந்தத் தேவிக்கு க்ஷீர் பவானி யோகமயா என்றும் lபெயருண்டு.
 • சிலர் காஷ்மீர் வைஷ்ணோ தேவி சக்தி பீடக் கோவில் சக்தி பீடமென்பர்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. அமர்நாத் சக்தி பீடக் கோவில்
 2. பேவ் வாளி மாதா சக்தி பீடக் கோவில்
 3. காஷ்மீர் மா க்ஷீர் பவானி சக்தி பீடக் கோவில்
 4. காஷ்மீர் வைஷ்ணோ தேவி சக்தி பீடக் கோவில்

5. ஜ்வாலாமுகீ / ஜ்வாலாஜீ / சித்திதா / அம்பிகா – நாக்கு - உன்மத்த பைரவர் / வடுகேஸ்வர பைரவர் - ஹிமாச்சலப் பிரதேசம்

ஹிமாச்சலப் பிரதேசம்கங்ரா மாவட்டம் – ஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்

அட்டைவணை வடிவில் 3.5
தேவியின் பெயர் உடல் பகுதி பைரவர் இருப்பிடம்
ஜ்வாலாமுகீ / ஜ்வாலாஜீ / சித்திதா / அம்பிகா நாக்கு உன்மத்த பைரவர் / வடுகேஸ்வர பைர ஹிமாச்சலப் பிரதேசம்கங்ரா மாவட்டம்
 • புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகிய ஜ்வாலாமுகீ தர்மசாலாவில் இருந்து 60 கி.மீ தொலைவிலுள்ளது. கங்ரா பள்ளத்தாக்கிலிருந்து 30 கி.மீ தெற்கிலுள்ளது. சிவாலிக் மலையடிவாரத்திலுள்ளது.
 • தர்மசாலா செல்வதற்கு டேராடூன், மணாலி, டெல்லி போன்ற இடங்களிலிருந்து தனியார் பேருந்துகள் உள்ளன.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்

6. திரிபுர மாலினி / திரிபுர நிவாஸினி - இடது மார்பு - பிஷானா பைரவர் / பூதேஸ் பைரவர் - பஞ்சாப் அல்லது குஜராத்

பஞ்சாப்ஜலந்தர்

அட்டைவணை வடிவில் 3.6
தேவியின் பெயர் உடல் பகுதி பைரவர் இருப்பிடம்
திரிபுர மாலினி / திரிபுர நிவாஸினி இடது மார்பு பிஷானா பைரவர் / பூதேஸ் பைரவர் பஞ்சாப் அல்லது குஜராத்
 • தேவி தலாப் மந்திர் (devi talab mandir) என்பது ஜலந்தர் நகரின் சித் சக்தி பீடம். இது ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் நகரின் மையத்திலுள்ளது. இது ஜலந்தர் கண்டோன்மெண்ட் (cantonment – ராணுவ முகாம்) ஸ்டேசன் அருகிலுள்ளது.
 • அம்பாள் இங்கு துர்கா / சிரைன்வலி என்று அழைக்கப்படுகிறாள். இதே கோவில் வளாகத்தில் பழைமையான மா காளி கோவில் உள்ளது. ஆனால் இது சக்தி பீடமல்ல.
 • சிலர் குஜராத்திலுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்பாஜி கோவிலை இதற்குரிய சக்தி பீடமாகக் கூறுகின்றனர். இது அபு மலையில் (mount abu) இருந்து 45 கி.மீ தொலைவிலும், அபு ரோட்டிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் எல்லைப் பகுதியிலுள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. தேவி தலாப் மந்திர் சக்தி பீடக் கோவில்
 2. குஜராத் அம்பாஜி சக்தி பீடக் கோவில்

7. ஜெய துர்கா – இதயம் - வைத்ய நாதா பைரவர் - ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வைத்யநாத் ஜோதிர் லிங்கக் கோவில்

ஜார்கண்ட் – டியோகர் (deogarh) மாவட்டம் – டியோகர் – வைத்யநாதர் கோவில் (பாபா மந்திர்) அல்லது பைத்யநாத் தாம்

 • அருகிலுள்ள ரயில் நிலையம் டியோகர். இந்த ரயில் நிலையம் ஜஸிடிஹ் (jasidih) சந்திப்பிலிருந்து 7 கி.மீ தொலைவிலுள்ளது. இதுவே இறுதி நிறுத்தம்.
 • ஜஸிடிஹ் ரயில் சந்திப்பானது ஹௌரா – டெல்லி முக்கிய வழித்தடத்திலுள்ளது. இங்கிருந்து கிளை வழித்தடத்தில் 7 கி.மீ சென்று டியோகர் என்ற இறுதி நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
 • ஜெயதுர்கா சக்தி பீடமானது வைத்யநாதர் சன்னதிக்கு நேர் எதிரே ஒரே கோவில் வளாகத்திலுள்ளது.
 • இந்தப் பீடத்திற்கான கோவிலாக சிலர் குஜராத்திலுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்பாஜி கோவிலைக் கூறுகின்றனர். இது அபு மலையில் (mount abu) இருந்து 45 கி.மீ தொலைவிலும், அபு ரோட்டிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் எல்லைப் பகுதியிலுள்ளது. ஆனால் இது பொருத்தமற்றது. ஏனெனில் தந்திர சூடாமணியில் வைத்யநாதம்தான் சக்தி பீடம் என்பதற்கான குறிப்பு தெளிவாக உண்டு.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஜெயதுர்கா சக்தி பீடக் கோவில்

8. மஹாமாயா / மஹாஷீரா / குஹ்யேஸ்வரி – முழங்கால்கள் - கபாலி பைரவர் - நேபாளம் காத்மண்டில் உள்ள பசுபதிநாத் கோவில் i நேபாளம்காத்மண்டுபசுபதிநாத் கோவில் அருகில்

 • சிவனுக்குரிய புகழ்பெற்ற பெரிய பசுபதிநாத் கோவில் பாக்மதி நதிக்கரையிலுள்ளது. இந்தக் கோவில் வளாகத்திலேயே உள்ள குஹ்யேஸ்வரி சன்னதியே மஹாமாயா சக்தி பீடமாகும்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. குஹ்யேஸ்வரி சக்தி பீடக் கோவில்

9. மானஸா / தாக்‌ஷாயினி - வலது உள்ளங்கை - அமர பைரவர் / ஹர பைரவர் - திபெத்தில் உள்ள புனித மானசரோவர் ஏரி

திபெத்மானசரோவர் (மானசரோவர் ஏரியில் மானஸா தேவி சக்தி பீடம்)

 • கைலாச மானசரோவர் யாத்திரை இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு செல்ல திடகாத்திரமான உடலும் பணமும் அவசியம். விருப்பமுள்ளவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக யாத்திரை செல்லவும் சில ஏஜென்சிகள் உதவுகின்றன.
 • இங்குள்ள புனித மானசரோவர் ஏரியும் ஏரியின் நீரும் அங்குள்ள கற்களும் சக்தி ரூபமாகும். புனித மானசரோவர் ஏரியே இங்கு சக்தி பீடமாகும்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. மானசரோவர் ஏரியில் மானஸா தேவி சக்தி பீடம்

10. உத்கலா / விமலா / விஜயா / விரஜா / பிரஜா / பிமலா - தொப்புள் கொடி (நாபி) - ஜகந்நாத பைரவர் - பூரி ஜகந்நாதர் கோவில் ஒடிசாபூரி ஜகந்நாதர் கோவில்

 • கிழக்கு நோக்கியுள்ள புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவிலின் தென்மேற்கு மூலையில் விமலா சக்தி பீடம் உள்ளது.
 • சிலர் பூரியில் மார்க்கண்ட் குளத்தருகே உள்ள சப்த மாத்ரிகா கோவிலை சக்தி பீடம் என்கின்றனர். ஆனால் இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால் விமலா தேவி கோவில்தான் சக்தி பீடம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
 • ஒரிசாவின் ஜாஜ்பூர் அருகிலுள்ள பிரஜா தேவி / விரஜா தேவி / கிரிஜா தேவி கோவில் என்பது இதற்கான சக்தி பீடம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது ஆதி சங்கரரின் அஷ்ட தச சக்தி பீடங்களில் வருகிறது. ஜாஜ்பூரிலுள்ள இந்த தேவி உத்கல் தேவி என்றும் அழைக்கப்படுகிறாள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. விமலா தேவி சக்தி பீடக் கோவில்
 2. ஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்

11. கண்டகி சண்டி - வலது கன்னம் - சக்ரபாணி பைரவர் - நேபாளத்தின் முக்திநாத் அல்லது சாளக்கிராமம் (கண்டகி நதிக்கரையில் உள்ளது)

நேபாளம்தவளகிரிமுக்திநாத்

 • முக்திநாத் யாத்திரையானது இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.
 • முதற்கட்டமாக காத்மண்டிலிருந்து ஜம்சம் செல்ல வேண்டும்.
 • இரண்டாம் கட்டமாக ஜம்சம்மிலிருந்து முக்திநாத் செல்ல வேண்டும்.
 • ஜம்சம் வரை விமான வசதி உள்ளது. அங்கிருந்து முக்திநாத் செல்ல ஜீப், குதிரை மற்றும் ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது.
 • இங்கு சக்திபீடமானது கண்டகி நதிக்கரையிலுள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. கண்டகி சண்டி சக்தி பீடக் கோவில்

12. பகுளா - இடது புஜம் - பிருக பைரவர் / திவ்ரக பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – பர்தமான் அல்லது பர்ட்வான் (bardhaman or burdwan) மாவட்டம் – கத்வா அருகில் (katwa) – கேத்துக்ராம் (ketugram) – அஜய் (ajay) நதிக்கரை

 • கத்வா கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ தொலைவிலும் பர்தமானிலிருந்து 56 கி.மீ தொலைவிலும் உள்ளது. கொல்கத்தா – க்ருஷ்ண நகர் – தேபக்ராம் (debagram) – கத்வா என்பதே கத்வா செல்வதற்கான வழித்தடமாகும்.
 • கேத்துக்ராம் கத்வாவிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ளது. கேத்துக்ராமின் முதன்மைத் தெய்வம் பஹுளா தேவி. இங்கு அம்பாள் கார்த்திக் மற்றும் கணேசருடன் எழுந்தருளியுள்ளார்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. கேத்துக்ராம் பஹுளா தேவி சக்தி பீடக் கோவில்

13. மங்கள் சண்டி / ஹர்ஸித்தி – மணிக்கட்டு - கபிலாம்பர பைரவர் - மத்தியப் பிரதேசம் அல்லது மேற்கு வங்கம்

மத்தியப் பிரதேசம்உஜ்ஜைனி – ருத்ரசாகர் அருகில்

 • புகழ்பெற்ற நகரமான உஜ்ஜைனியில் மஹாகாளேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகிலுள்ள ஹர்சித்தி மாதா கோவிலே சக்தி பீடமாகும்.
 • சிலர் மேற்கு வங்க மாநிலம் பர்ட்வான் அல்லது பர்தமான் (bardhaman or burdwan) மாவட்டத்திலுள்ள குஸ்காரா (gushkara) ஸ்டேசனிலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ள உஜானி (ujaani) என்ற இடத்திலுள்ள மங்கள் சண்டி கோவிலை சக்தி பீடமென்கிறார்கள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. உஜ்ஜைனி ஹர்சித்தி மாதா சக்தி பீடக் கோவில்
 2. உஜானி மங்கள் சண்டி சக்தி பீடக் கோவில்

14. சீதா / பவானி (சட்டலா பீடம்) - வலது புஜம் அல்லது வலது கரம் - சந்த்ரசேகர பைரவர் - வங்க தேசம்

வங்க தேசம் – சிட்டகாங் மாவட்டம் – சிட்டகுண்டா ஸ்டேசன் அருகில் – சோட்டோக்ராம் (chottogram) – சந்த்ரநாத் மலை மேல் உள்ள கோவில்

 • டாக்காவிலிருந்து சிட்டகாங் செல்ல ரயில்களும் பஸ்களும் உள்ளன. இது 6 மணிநேரப் பயணமாகும். ஷைல்ஹெட் (sylhet) போன்ற இதர நகரங்களிலிருந்தும் செல்லலாம். ஷைல்ஹெட்டிலிருந்து 6 மணி நேரப் பயணத் தொலைவில் சக்தி பீடம் உள்ளது. ஷைல்ஹெட்டில் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் உள்ளது. டாக்கா மற்றும் கல்கத்தாவிலிருந்து விமானங்களிலும் செல்லலாம்.
 • சதி தேவியின் வலது புஜம் (தோளுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி) விழுந்த இடமானது சம்புநாத் கோவில் அருகில் குறிக்கப்பட்டுள்ளது. சம்புநாத் கோவிலானது சந்த்ரநாத் கோவிலுக்கு சற்று கீழே அதே மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள காளி கோவிலை சக்தி பீடமென்பர்.
 • சந்த்ரநாத் மலைகளில் சக்தி பீடத்திற்கான பைரவர் மட்டுமே உள்ளதென்றும் இது சக்தி பீடத்திற்கான தேவியின் கோவிலைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஒருசாரார் கருதுகின்றனர். ஆகவே சிட்டகாங்கில் உள்ள சிட்டேஸ்வரி கோவிலை சக்தி பீடமென்பர்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. சந்திரநாத் மலை சக்தி பீடக் கோவில்

15. த்ரிபுரா / த்ரிபுர சுந்தரி - வலது கால் - த்ரிபுரேஸ பைரவர் - திரிபுரா

திரிபுரா – உதய்பூர் அருகில் – ராதா கிஷோர்பூர் கிராமம்

 • உதய்பூர் அகர்தலாவிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ளது. உதய்பூர் நகரிலிருந்து 3 கி.மீ தெற்காகச் சென்றால் சக்தி பீடத்தை அடையலாம்.
 • கோவிலானது உள்ளூர்ப் பெயரால் மாதாபரி என்றும் அழைக்கப்படுகிறது. அம்பாள் இங்கு மா காளி என்றும் ஷோரோஷி என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இங்கு மூலவரான திரிபுர சுந்தரி சிலை 5 அடி உயரத்திலுள்ளது. மேலும் சோட்டிமா சிலை 2 அடி உயரத்திலுள்ளது.
 • கோவிலின் பின்புறம் கல்யாணசாகர் என்ற பெரிய ஏரி உள்ளது. இங்கு தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. உதய்பூர் திரிபுரசுந்தரி சக்தி பீடக் கோவில்

16. ப்ரம்மாரி (த்ரிஸ்ரோதா பீடம்) - இடது கால் - அம்பரா பைரவர் / ஈஸ்வர பைரவர் - மேற்கு வங்கம் (ஜல்பாய்குரியின் பரோபாட்டியாவில் போடாகஞ்ச் Bodaganj பகுதியிலுள்ளது)

மேற்கு வங்கம்ஜல்பாய்குரி (jalpaiguri) மாவட்டம் – திஸ்தா (tista) நதிக்கரை

 • ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள ஜல்பேஷ் (jalpesh) கோவிலுக்கு சிறிது தொலைவில் உள்ள ப்ரமாரி தேவி கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் போடா (போடாகன்ஜ்) குக்கிராமத்தில் திஸ்தா அல்லது த்ரிஸ்ரோதா ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது.
 • சிலர் வங்கதேசத்தின் போடா (boda) உபஜில்லா பகுதியில் உள்ள கர்ட்டேஸ்வரி (Garteswari) கோவிலை சக்தி பீடமென்பர். இது வங்க தேசத்தின் ராஜ்சாஹி (rajshahi) டிவிஷனில் பஞ்சகர் (panchagarh) மாவட்டத்தில் உள்ளது. ஆனால் இது இந்திய எல்லைக்கு மிக அருகிலுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் தைகட்டாவிற்கு (Daikhata) அருகில் என்க்ளேவ்ஸ் பகுதியில் உள்ளது. என்க்ளேவ்ஸ் என்பது ஒரு நாட்டினால் சூழப்பட்ட மற்றொரு நாட்டின் பகுதியாகும்.
 • பஞ்சகர் செல்ல ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்து இல்லை. தரைவழியாக டாக்காவிலிருந்து பஞ்சகர் (344 கி.மீ) செல்ல இடைநில்லா தனியார் பேருந்துகள் டாக்காவின் பேருந்து மண்டல எல்லைக்குட்பட்ட கப்டோலி (gabtoli), சிமோலி (shemoly) மற்றும் மிர்பூர் (mirpur) ரோடு போன்ற இடங்களில் உள்ளன. இங்கிருந்து பஞ்சகர் செல்ல ஏறத்தாழ 8 மணி நேரமாகும்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. போடாகன்ஜ் ப்ரம்மாரி தேவி சக்தி பீடக் கோவில்
 2. கர்ட்டேஸ்வரி கோவில்

17. காமாக்யா / காமரூபா / மஹாகாளி / தசமஹா வித்யாக்கள் (இக்கோவில் அனைத்து வகைப்பாட்டிலும் வருகிறது. இது மற்ற அனைத்து சக்தி பீடங்களைக் காட்டிலும் மிக முக்கியமானது) – யோனி - உமாநந்த பைரவர் - அஸ்ஸாம் [4]

அஸ்ஸாம்கவுஹாத்தி அருகில் – நீலாச்சல் மலைகள் – காமாக்யா மந்திர்

 • கவுஹாத்தி அஸ்ஸாமின் முக்கியமான நகரம். இங்கு செல்ல பல வழிகளிலும் வசதி உள்ளது. ஹோட்டல் வசதிகளும் உள்ளது. ரயிலில் சென்றால் நேரடியாக நீலாச்சல் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம். இங்கிருந்து இரு வழிகளில் மலை ஏறலாம். புகழ்பெற்ற காமாக்யா கோவில் மலை மீது அமைந்துள்ளது. 600 படிகள் ஏறியோ அல்லது பேருந்தில் 3 கி.மீ பயணித்தோ மலைக்கோவிலை அடையலாம்.
 • இங்கு இரவு நேரம் தங்குவது புது அனுபவமாக இருக்கும். ஆனால் ரூம் வசதிகள் சுமாராகவே இருக்கும். கோவில் காலை 7:30 மணிக்கு திறந்து இரவு 7:30 மணிக்கு நடை சாத்தப்படும்.
 • மிகவும் இருண்ட கர்ப்பக்ரஹத்தில் தானாக மேலெழும்பும் நீரூற்று வடிவத்தில் அம்பாள் உக்ர தேவதையாக அருளாட்சி நடத்துகிறாள். பக்தர்களுக்கு அந்தப் புனித நீரே தீர்த்தமாக வழங்கப்படுகிறது.
 • அனைத்திற்கும் ஆதாரமாக அனைத்து சக்தி பீடங்களிலும் மிகவும் மேன்மையுடையதாக இருக்கும் சக்தி பீடம் இதுவே. இதுவே சக்தி பீடங்களில் மிக மேன்மையானது. தேவி காமாக்யா இங்கு வரப்பிரசாதியாக இருக்கிறாள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. காமாக்யா கோவில்

18. பூத தாத்ரி / ஜுகத்யா (யுகத்யா பீடம் அல்லது க்ஷீரக்ராமா பீடம்) - வலது கால் கட்டை விரல் - க்‌ஷீர கண்டக பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – பர்தமான் அல்லது பர்ட்வான் (bardhaman or burdwan) மாவட்டம் – மங்கள்கோட் (mangalkot block) – நிகம் (nigam) அருகில் – கிர்க்ராம் (khirgram)

 • பர்ட்வான் – கட்டோவா (katoa) ரயிலில் சென்று நிகம் சென்றடையலாம். இங்கிருந்து கிர்க்ராம் 4 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு வருடந்தோறும் பைஷாக சங்கராந்தியன்று மேளா நடக்கும்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. கிர்க்ராம் யுகத்யா தேவி சக்தி பீடக் கோவில்

19. காளி / மஹாகாளி / தக்‌ஷிண காளி - வலது கால் விரல்கள் (பெருவிரல் தவிர்த்து) அல்லது பாதம் - நகுலீச பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்கொல்கத்தாகாளிகாட் காளி கோவில்

 • இந்தக் கோவில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா காளி கோவில் என்றும் காளிகாட் காளி கோவில் என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற தலமாகும். இங்கு அனைத்து மதத்தவரும் காளியை வழிபடுகிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் ஹௌரா. அருகிலுள்ள மெட்ரோ நிலையம் காளிகாட்.
 • கோவிலுக்குச் செல்ல சிறந்த நேரம் அதிகாலை அல்லது பிற்பகல் நேரமாகும். இங்கு காளி தேவியின் சிலை மிகவும் பெரியது. புதிதாக வருவோர் கோவிலை நன்கு சுற்றிப் பார்க்கக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது நல்லது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. காளிகாட் காளி கோவில்

20. லலிதா / அலோப்பி (ப்ரயாகை பீடம்) - வலது கை விரல்கள் - பவ பைரவர் - உத்திரப் பிரதேசம் (அலகாபாத்)

உத்திரப் பிரதேசம்அலகாபாத் – அக்ஷய்வாட் (akshay vat) அருகில்

 • அலோப்பி தேவி கோவில் அலோப்பிபாக்கில் (alopi bagh) உள்ள அலகாபாத் கோட்டையில் உள்ளது. நகரின் மையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது. இது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்திற்கு (சங்கம் - sangam) மிக அருகிலுள்ளது.
 • இங்கு தேவிக்கு சிலை வடிவம் கிடையாது. பளிங்கு மேடையில் வைக்கப்பட்டுள்ள மரத்தாலான ஜூலா எனப்படும் ஊஞ்சல் வடிவத்திற்கே பூஜை நடக்கிறது.
 • சிலர் அலகாபாத் நகரின் மையத்தில் மீராப்பூரில் உள்ள லலிதா தேவி கோவிலை சக்தி பீடம் என்கின்றனர். இக்கோவிலில் பழைமையான அரசமரம் உள்ளது. அலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் யமுனை நதிக்கரையில் உள்ள மீராப்பூரில் லலிதா தேவியின் இக்கோவில் உள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. அலோப்பி தேவி சக்தி பீடக் கோவில்
 2. மீராப்பூர் லலிதா தேவி சக்தி பீடக் கோவில்

21. ஜெயந்தி - இடது தொடை - க்ரமதீஸ்வர பைரவர் - வங்க தேசம் அல்லது மேகாலயா வங்க தேச எல்லையில் உள்ள ஜெயந்தியா மாவட்டம் அல்லது மேற்கு வங்கம்

வங்க தேசம் – சைல்ஹெட் (sylhet) மாவட்டம் – ஜெயந்தியாபூர் (jaintiapur) அருகில் – கலஜோர் பௌர்பாக் கிராமம் (kalajore bourbagh)

 • மூன்று இடங்களை ஜெயந்தி சக்தி பீடமாகக் கூறுகின்றனர்.

அ.) சைல்ஹெட்டிலிருந்து சில்லாங் (shillong) போகும் சாலையில் சைல்ஹெட்டிற்கு வடக்கே 43 கி.மீ தொலைவில் ஜெயந்தியாபூர் உள்ளது. இது பழைய அரசாங்கத்தின் தலைநகரம். சக்தி பீடமானது பௌர்பாக் காளி கோவில் (bour bhag kali) என்றும் ஃபாலிசுர் காளி பரி (falizur kali bari) கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெயந்தியாபூர் அருகேயுள்ள கலஜோர் பௌர்பாக் (Kalajore Bourbhag village) என்ற கிராமத்தில் உள்ளது. இக்கோவில் போரோ கங் ஆற்றின் வடக்கே உள்ளது. ஜெய்ந்த்யாப்பூர் என்ற ஊரின் தெற்கே உள்ளது. மேலும் N4 ரோட்டின் கிழக்கே உள்ளது.

ஆ.) சில்லாங் மலைகளின் கிழக்கே NH 44 ரோட்டில் 65 கி.மீ தொலைவில் ஜோவாய் (jowai) என்ற நகரம் உள்ளது. இது ஜெயந்தியா மாவட்டத் தலைநகராகும். இங்கிருந்து 24 கி.மீ வடக்கே நார்ட்டியாங் (nartiang) துர்கா அல்லது ஜெயந்தேஸ்வரி கோவில் உள்ளது. சமீபத்தில் நானூறு ஆண்டுகள் பழைமையான கோவிலை இடித்து சிறு மாற்றங்களுடன் கட்டியுள்ளனர். இங்கு துர்கா மற்றும் ஜெயந்தேஸ்வரி (அல்லது மச்யோதரி) இருவரும் அருள்கின்றனர். இந்த அஷ்டதத்து அல்லது அஷ்டதட்டு (astadhatu) சிலைகள் 6 முதல் 8 இன்ச் உயரமானது. அஷ்டதட்டு சிலை என்றால் எட்டு உலோகங்களின் கலவையால் ஆன சிலையாகும். நார்ட்டியாங் மார்க்கெட்டிலிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ தொலைவில் இந்த துர்கா கோவில் உள்ளது.

இ.) மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரி மாவட்டம் பக்ஸா புலிகள் காப்பகம் (buxa tiger reserve) காட்டுப்பகுதியின் குக்கிராமம் ஜெயந்தி (jayanti) என்பதாகும். இந்த கிராமம் ஜெயந்தி நதிக்கரையிலுள்ளது. இங்கு 13 கி.மீ தூரம் கொண்ட பக்ஸா டுவர் – ஜெயந்தி (buxa duar - jayanti) ட்ரக் பயணம் (trek) மிகவும் பிரபலம். இங்குள்ள மஹாகாள் குகையில் (mahakal cave) சக்தி பீடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் ராஜபட்கவா (raja bhat khawa). இது நியூ ஜல்பாய்குரி – நியூ அலிப்பூர் டுவர் (new jalpaiguri – new alipur duar) வழியிலுள்ளது. புலிகள் காப்பகத்தில் நுழைய அனைத்து அனுமதிகளும் இங்கு பெற வேண்டும்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. கலஜோர் பௌர்பாக் காளி தேவி சக்தி பீடக் கோவில்
 2. நார்ட்டியாங் ஜெயந்தேஸ்வரி சக்தி பீடக் கோவில்
 3. பக்ஸா புலிகள் காப்பகத்தின் மஹாகாள் குகை சக்தி பீடக் கோவில்

22. விமலா / கிரீடேஸ்வரி புவனேஸ்வரி (கிரீடா / கிரீட கொனா பீடம்) – கிரீடம் - சம்வர்த்த பைரவர் / சித்தரூப பைரவர் / சன்வர்த்த பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – முஸிராபாத் அல்லது முர்ஸிதாபாத் மாவட்டம் (mushirabad or murshidabad) – லால்பாக் கோர்ட் ரோடு அருகில் (lalbagh court road)

 • கல்கத்தா – க்ருஷ்ண நகர் – ப்ளஸ்ஸே (plassey) – பெர்ஹாம்பூர் (berhampur) வழித்தடத்தில் கொல்கத்தாவில் வடக்கே 200 கி.மீ தொலைவில் பெர்ஹாம்பூர் உள்ளது. கிரீடகொனா கிராமம் (kireetkona) அல்லது வடநகரா (vata nagara) அல்லது பட்நகர் (bat nagar) கங்கைக்கரையிலுள்ளது. கிரீட்கொனா என்ற இந்த ஊர் பெர்ஹாம்பூரின் லால்பாக் கோர்ட் ஸ்டேசன் ரோட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ளது. இதுவே சக்தி பீடம்.
 • வங்க தேசத்தின் கங்கைக்கரையிலுள்ள பட்நகர் (bat nagar) அருகில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட வடநகரா என்ற ஊரும் இங்கு கூறப்பட்ட பட்நகர் என்ற ஊரும் கிட்டத்தட்ட ஒரே உச்சரிப்பைக் கொண்டுள்ளது. மேலும் மேற்கு வங்கமும் வங்க தேசமும் அருகருகே அமைந்துள்ளது. ஆகவே கிரீட்கொனா என்ற இடமே சக்தி பீடமாகும்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. கிரீட்கொனா கிரீடேஸ்வரி சக்தி பீடக் கோவில்

23. விஷாலாக்‌ஷி / மணிகர்ணிகா - கர்ண குண்டலங்கள் (காதணிகள்) - கால பைரவர் - உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம்வாரணாசி (காசி) – அன்னபூரணி கோவில் அருகில்

 • புகழ்பெற்ற வாரணாசியில் விஸ்வநாத், அன்னபூர்ணா, துந்தி கணேஷ், தண்டபாணி ஆகிய கோவில்களோடு விஷாலாக்ஷி ஆலயமும் அமைந்து சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு விஷாலாக்ஷியின் முன் சிறிய கௌரியின் சிலையைக் காணலாம்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. காசி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்

24. சர்வாணி / பத்ரகாளி (கன்யாஸ்ரம பீடம்) – முதுகு - நிமிஷ பைரவர் - வங்க தேசத்தின் குமரிகுண்ட் அல்லது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அல்லது மத்தியப் பிரதேசத்தின் ஓம்காரேஸ்வர்

வங்க தேசம் – சிட்டகாங் (chittagong) மாவட்டம் – குமரி குண்ட் (kumari kund)

 • வங்க தேசத்தின் சிட்டகாங் நகரிலிருந்து 22 கி.மீ தொலைவிலுள்ள குமிரா (kumira) ரயில் நிலையத்தருகே குமரி குண்ட் உள்ளது. இது சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. வரைபடத்தைப் பார்க்கும்போது குமிரா என்ற நதி அல்லது ஓடை வங்கக்கடலில் கலக்குமிடமே சக்தி பீடமாகும். இது சேண்ட் த்வீப் படகுத் துறைக்கு (Sandwip Ship Ghat) அருகில் உள்ளது. இது டாக்கா – சிட்டகாங் ஹைவேயில் (N1) ரஹமத்பூருக்கு மேற்கே உள்ளது. இதுவே குமரி குண்ட்டாக இருக்கலாம். ஆனால் இங்கு கோவில் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை.
 • புகழ்பெற்ற கன்னியாகுமரி தேவி பகவதி அன்னை ஆலயமும் இதற்கான சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. சிலர் இக்கோவிலுக்கு அருகிலுள்ள பத்ரகாளி கோவிலை சக்தி பீடமென்பர்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. சிட்டகாங்கின் குமரி குண்ட் சக்தி பீடம்
 2. கன்னியாகுமரி தேவி பகவதி சக்தி பீடக் கோவில்

25. சாவித்ரி / பத்ரகாளி / ஸ்தணுப் பிரியா (குருக்ஷேத்ரா பீடம்) - வலது கணுக்கால் - ஸ்தணு பைரவர் - ஹரியானா

ஹரியானாகுருக்ஷேத்திரம் அருகில் – தானேசர் (thanesar) – த்விபயான் சரோவர் (dvipayan sarovar) அருகில்

 • தானேஸர் அல்லது ஸ்தானேஸ்வர் அல்லது குருக்ஷேத்ரம் டெல்லியிலிருந்து 160 கி.மீ மற்றும் சண்டிகரிலிருந்து 90 கி.மீ தொலைவிலுள்ளது. NH 1 ரோட்டின் முக்கிய சந்திப்பான பிப்ளியில் (pipli) இருந்து 6 கி.மீ தொலைவிலுள்ளது.
 • பத்ரகாளி கோவில் தானேசரின் சக்தி பீடம். இது குருக்ஷேத்ரா ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும் பிப்ளி பஸ் ஸ்டேண்டிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது. பத்ரகாளியின் துணைவரான ஸ்தணு சிவாவே தானேஸரின் முதன்மைத் தெய்வம்.
 • சக்தி பீடமானது தேவி கூப் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. குருக்ஷேத்ரம் தேவி கூப் மந்திர் சக்தி பீடக் கோவில்

26. காயத்ரி (மணிவேடிகா பீடம்) - வளையல்கள் அல்லது மணிக்கட்டு - சர்வானந்த பைரவர் - ராஜஸ்தானின் புஷ்கர்

ராஜஸ்தான் – அஜ்மீர் அருகில் – புஷ்கர்காயத்ரி மலைக்கோவில்

 • ராஜஸ்தானின் அஜ்மீருக்கு வடமேற்கே 11 கி.மீ தொலைவிலுள்ள புஷ்கரின் காயத்ரி மலைகளே மணிபந்தா சக்தி பீடமாகும். அஜ்மீர் வரை ரயில் மற்றும் பஸ் வசதி உண்டு. பிறகு டாக்ஸி அல்லது ரிக்‌ஷாவில் புஷ்கரை அடையலாம். அருகிலுள்ள விமான நிலையம் ஜெய்ப்பூர். காயத்ரி கோவிலை அடைய சிறந்த வழி பஸ் நிலையத்திலிருந்து காயத்ரி மலைக்கு நடந்து செல்வதாகும். இது சாவித்ரி மலையென்றும் அழைக்கப்படுகிறது.
 • கோவில் மதியம் நடைசாத்தப்படும் என்பதால் காலை நேரத்தில் செல்வது நல்லது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. புஷ்கர் காயத்ரி சக்தி பீடக் கோவில்

27. மஹாலக்ஷ்மி (ஸ்ரீசைலா / ஸ்ரீஹட்டா) - கழுத்து - சம்வரானந்த பைரவர் / சம்பரானந்த பைரவர் - வங்க தேசம்

 • சிலர் வங்க தேசத்தின் சைல்ஹெட் நகருக்கு 3 கி.மீ தொலைவில் உள்ள கோடாடிகர் (gotatikar or gotatikor) அருகில் தக்ஷிண் சுர்மா அல்லது தெற்கு சூர்மா (dakshin surma or south surma) என்ற பகுதியிலுள்ள ஜொய்ன்பூர் அல்லது ஜெய்ன்பூர் (joinpur or jainpur) கிராமத்தில் ஸ்ரீசைல் என்ற இடத்திலுள்ள காளி கோவிலை சக்தி பீடமாகக் கருதுகின்றனர். ஜெய்ன்பூர் காளி கோவிலை சில்லாட் (சைல்ஹெட்) காளி கோவில் என்றும் அழைப்பர். மேலும் இதுவே ஸ்ரீ பீடம் என்றும் ஸ்ரீ ஹட்டா பீடம் என்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மஹாலக்ஷ்மி கரிய பாறை வடிவில் அருள்கிறாள். இங்கிருந்து ஓரிரு கி.மீ தொலைவில் உள்ள குன்றில் இத்தலத்தின் பைரவரான சிவபாரி பைரவர் அருள்கிறார். ஸ்ரீசைலம் + ஹட்டா என்பது ஸ்ரீசைலஹட்டா என்றாயிற்று. அதுவே பின்பு சைல்ஹெட் என்றும் சில்லாட் என்றும் ஆனது. ஆகவே இதுவே சக்தி பீடமாகும்.
 • ஸ்ரீசைல பீடம் என்றதும் பலரும் ஆந்திராவின் ஸ்ரீசைலமே நினைவுக்கு வரும். ஆனால் அந்த ஸ்ரீசைலம் இந்தப் பீடத்தை விட ஸ்ரீபர்வதா பீடத்திற்கே பொருந்தும்.

(பொதுவாகவே ஆந்திராவின் ஸ்ரீசைலமும் வங்கதேசத்தின் ஸ்ரீபீடமும் சக்தி பீடங்களே என்பதில் ஐயமில்லை. ஆனால் இவற்றில் ஒன்று ஸ்ரீசைல பீடத்திற்கும் மற்றொன்று ஸ்ரீபர்வத பீடத்திற்கும் வரும். ஆகவே இவ்விரண்டு கோவில்களுமே சக்தி பீடங்களாகும்)

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஜெய்ன்பூர் காளி சக்தி பீடக் கோவில்

28. காமாக்‌ஷி / தேவகர்பா / வேதகர்பா – கங்கலம் எனும் இடுப்பு எலும்பு - ருரு பைரவர் - தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அல்லது மேற்கு வங்கம்

தமிழ்நாடுகாஞ்சிபுரம்

 • கோவில் நகரமான காஞ்சியில் அனைத்துக் கோவில்களுக்கும் நடுநாயகமாக காமாக்ஷி கோவில் விளங்குகிறது.
 • இப்போதுள்ள பெரிய காமாக்ஷி கோவில் சக்தி பீடமாகக் கருதப்படுவதில்லை. இக்கோவிலின் மிக அருகிலுள்ள ஆதி காமாக்ஷி கோவில் அல்லது ஆதி பீட பரமேஸ்வரி கோவில் அல்லது காளிகாம்பாள் கோவில் அல்லது ஆதி பீடேஸ்வரி கோவில் சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. இக்கோவில் குமரக்கோட்டத்தையும் அருகாமையில் கொண்டது. தந்திர சூடாமணியின்படி தேவியின் பெயர் தேவகர்பா அல்லது கீர்த்திமதி ஆகும். அம்பாள் இங்கு நான்கு கரம் கொண்டு அவற்றில் பாசம், அங்குசம், அபய ஹஸ்தம், கபாலம் கொண்டு அருளாட்சி நடத்துகிறாள். பெரும்பாலானோர் தற்போதுள்ள புகழ்பெற்ற காமாக்ஷி கோவிலையே சக்தி பீடமென்றும் கூறுகிறார்கள். அதனால் இவ்விரண்டு கோவில்களையுமே தரிசிக்க வேண்டும்.
 • சிலர் மேற்கு வங்கத்தின் பிர்பம் (birbhum) மாவட்டம் போல்பூர் (bholpur) ஸ்டேசனிலிருந்து வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ள கோப்பை (kopai) ஆற்றங்கரையில் உள்ள கங்களிதல பீடத்தை இதற்கான சக்தி பீடமாகக் கூறுகின்றனர். இங்கு அம்பிகை காளி அல்லது கங்களேஸ்வரி என்ற பெயரில் அருள்புரிகிறாள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. காஞ்சிபுரம் ஆதி காமாட்சி சக்தி பீடக் கோவில்
 2. காஞ்சிபுரம் காமாக்ஷியம்மன் சக்தி பீடக் கோவில்
 3. கங்களிதல பீடத்தின் கங்களேஸ்வரி சக்தி பீடக் கோவில்

29. காளி (காளமாதவ பீடம்) - இடது நிதம்பம் அல்லது இடது பிருஷ்டம் - அஸிதாங்க பைரவர் - மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டாக் அல்லது அஸ்ஸாமின் காமாக்யா அருகில் அல்லது ஒடிசாவின் ஜாஜ்பூர் அல்லது வாரணாசியில்

அஸ்ஸாம்கவுஹாத்திபசிஷ்ட ஆஸ்ரமம்

 • கால மாதவ பீடத்தைப் பற்றி உறுதியான அத்தாட்சி இல்லாததால் மூன்று இடங்கள் இதற்குரிய சக்தி பீடங்களாகக் கூறப்படுகின்றன.

அ) ஞான நவதந்த்ராவின்படி அஷ்ட மாத்ரிகா பீடங்களில் காமரூபாதான் (கவுஹாத்தி) ப்ராம்மி மற்றும் அஸிதாங்க பைரவரின் இருப்பிடமாகும். எனவே அஸிதாங்க பைரவரின் இருப்பிடமே சக்தி பீடமாகும். இதன்படி காலமாதவ பீடமென்பது காமாக்யா அருகிலுள்ள வசிஷ்ட (basistha or vasishta) ஆஸ்ரமத்தில் உள்ள தாரா பீடமாகும். காளிகா புராணமும் இதை சக்தி பீடமென்கிறது. இக்கோவிலின் பின்புறம் லலிதா, சந்த்யா மற்றும் கண்ட்டா என்ற புனித ஓடைகள் ஓடுகின்றன. இங்கிருந்து 1 கி.மீ தொலைவில் அருந்ததி கோவில் உள்ளது.

ஆ) ஸ்கந்த புராணத்தின்படி காசிக்கண்டம் வாரணாசியின் நவ மாதவங்களைக் கூறுகிறது. அவை, சேஷ மாதவம், சங்க மாதவம், இந்து மாதவம், கண மாதவம், ஸ்வேத மாதவம், ப்ரயாக மாதவம், வைகுண்ட மாதவம், வீர மாதவம் மற்றும் கால மாதவம். தற்போதும் கூட காசியிலுள்ள வ்ருத் காலேஸ்வர் கோவிலில் காளிக்கும் அஸிதாங்க பைரவருக்கும் சன்னதி உள்ளது. அதனால் இதுவே சக்தி பீடமென்று கூறுகிறார்கள்.

இ) சிலர் மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டாக்கின் (amarkantak) நர்மதா குண்ட் அருகிலுள்ள நர்மதா உட்கம் (narmada udgam) கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கருதுகின்றனர். அமர்கண்ட்டாக்கில் ஷோன் ஆற்றங்கரையில் உள்ள மலைக்குகையில் (சண்டிகா குஃபா அல்லது சண்டிகா குகை) இதற்கான கோவில் உள்ளதாகவும் கருதுகிறார்கள். ஆனால் இதே கோவில் அடுத்த பீடத்திற்கும் தரப்பட்டுள்ளது. நர்மதா குண்ட் கோவிலில் துர்கா, சூர்யநாராயணா, ராதா கிருஷ்ணா, கார்த்திகே, சித்தேஸ்வர் மஹாதேவ், அன்னபூர்ணா, பதினோரு ருத்ரர்கள், ராம் ஜானகி, சிவ் பரிவார், குரு கோரக்நாத், நர்மதா குண்ட் சிவா மற்றும் வாங்கேஸ்வர் மஹாதேவ் ஆகியோர்க்கு தனிச்சன்னதிகள் உள்ளன. இன்னும் சிலர் அமர்கண்ட்டாக்கின் அருகிலுள்ள கால்மாதவா தேவி கோவிலை சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவிலும் நர்மதா உட்கம் கோவிலும் ஒரே கோவிலாகவும் இருக்கலாம். அல்லது வேறு கோவிலாகவும் இருக்கலாம். இந்த கால்மாதவா தேவி கோவில் அன்னுப்பூர் (annupur) என்ற இடத்தருகே சித்ரகூட்டிற்கு அருகில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. வசிஷ்ட ஆஸ்ரமத்தின் தாரா தேவி சக்தி பீடக் கோவில்
 2. காசி காலமாதவ பீடத்தின் காளி தேவி கோவில்
 3. அமர்கண்டாக் நர்மதா உட்கம் சக்தி பீடக் கோவில்
 4. அமர்கண்டாக் சண்டிகா குகை சக்தி பீடக் கோவில்
 5. அமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில்

30. நர்மதா / ஷோனா / ஷைலா - வலது நிதம்பம் அல்லது வலது பிருஷ்டம் - பத்ரசேனா பைரவர் - மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம் – சாஹ்டோல் (shahdol) மாவட்டம் – அமர்கண்டாக்

 • கட்னி - பிலாஸ்பூர் (katni - bilaspur) பிரிவில் பேந்த்ரா ரோடு (pendra road) ரயில் நிலையம் உள்ளது. இது தென்கிழக்கு மண்டல ரயில்வேயைச் சார்ந்தது. இதுவே அமர்கண்டாக் அருகிலுள்ள ரயில் நிலையமாகும்.
 • அமர்கண்டாக் செல்ல சாஹ்டோல், உமரியா (umaria), ஜபல்பூர் (jabalpur), ரேவா (rewa), பிலாஸ்பூர், அனுப்பூர் (anuppur) மற்றும் பேந்த்ரா ரோடு போன்ற இடங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பேருந்து வசதியுண்டு.
 • ஜபல்பூர் (228 கி.மீ) மற்றும் ராய்ப்பூர் (230 கி.மீ) ஆகியன அருகிலுள்ள ஏர்போர்ட்கள்.
 • ஷோனாக்ஷி கோவிலானது ஷோன்முடா அருகில் ஷோன் நதிக்கரையிலுள்ளது. இதுவே சக்தி பீடமாகும்.
 • நர்மதை மற்றும் ஷோன் ஆறுகளின் உற்பத்திப் பகுதியான இந்த ஷோண்டேஷ் அமர்கண்டாக் அருகிலுள்ளது. மேலும் முந்தைய பீடத்தில் பார்த்த நர்மதா உட்கம் கோவிலையும் இந்தப் பீடத்திற்குக் கூறுகிறார்கள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. அமர்கண்டாக் ஷோன்முடா ஷோனாக்ஷி சக்தி பீடக் கோவில்
 2. அமர்கண்டாக் நர்மதா உட்கம் சக்தி பீடக் கோவில்

மொத்தமாக அமர்கண்ட்டாக்கில் உள்ள சக்தி பீடமாகக் கருதப்படும் இடங்கள்

 1. நர்மதா உட்கம் கோவில்
 2. சித்ரகூட்டிற்கு மிக அருகிலுள்ள கால் மாதவா தேவி கோவில்
 3. ஷோன்முடா ஷோனாக்ஷி கோவில்
 4. அமர்கண்டாக்கில் ஷோன் ஆற்றங்கரையிலுள்ள மலைக்குகை சக்தி பீடம் (சண்டிகா குகையாக இருக்கலாம்)

31. ஷிவானி (ராமகிரி / ராஜகிரி பீடம்) - வலது மார்பு - சண்ட பைரவர் - உத்திரப் பிரதேசம் அல்லது மத்தியப் பிரதேசத்தின் மைகர்

உத்திரப் பிரதேசம் – சித்ரகூட் (chitrakut) மாவட்டம் – சீதாப்பூர் (sitapur)

 • அருகிலுள்ள ரயில் நிலையம் சித்ரகூட் தாம் (11 கி.மீ). இது ஜான்சி – மாணிக்பூர் முக்கிய வழித்தடத்திலுள்ளது. பண்டா (banda), ஜான்சி, மஹோபா, சித்ரகூட் தாம், ஹர்பால்பூர், சத்னா (satna), சட்டர்பூர் (chattarpur) போன்ற இடங்களிலிருந்து பேருந்து வசதியுண்டு. கஜுராஹோ (175 கி.மீ) அருகிலுள்ள ஏர்போர்ட்.
 • சித்ரகூட்டின் தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள மந்தாகிணி நதிக்கரையில் அமைந்துள்ள ஜானகிசரோவர் அல்லது ஜானகி குண்ட் என்ற குளமே சக்தி பீடமாகும். சிலர் உள்ளூரில் உள்ள லலிதா தேவி கோவிலை சக்தி பீடமென்கின்றனர்.
 • சிலர் பிலாஸ்பூர் ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள ராம்கிரி தேவி கோவில் சக்தி பீடமென்கிறார்கள்.
 • சிலர் ராஜகிரி அல்லது ராஜ்கிர் (rajgir) என்ற பகுதியை சக்தி பீடமென்கின்றனர். க்ரித குடா அல்லது க்ருத்ர குடா அல்லது வல்ச்சர் பீக் (gridhakuta or grdhrakuta or vulture’s peak) என்ற ராஜ்கிர் பகுதியிலுள்ள இடத்தை சக்தி பீடமென்கின்றனர். இது புத்த மதத்தின் சிறப்புப் பெற்ற இடம். இந்த ராஜ்கிர் பகுதியில் லக்ஷ்மி நாராயணா கோவில் உள்ளது. இக்கோவிலில் சீதா தேவிக்கு சக்தி பீட சன்னதி இருந்தாலும் இருக்கலாம். இது முன்பு துறவிகள் மடமாக இருந்தது. இதற்கருகில் நிறைய வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் நீராடுகின்றனர். அதற்கும் கீழே உள்ள படத்தில் க்ருத்ரகூடா மலை காட்டப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இந்த மலையை கித்தைல பஹர் என்கின்றனர். இது மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் ராம்நகர் பகுதியிலுள்ள தேவ்ராஜ் நகர் என்ற கிராமத்தில் உள்ளது.
 • பீகாரில் உள்ள ராஜ்கிர் பகுதிக்கு மிக அருகில் கயா உள்ளது. மேலும் கயாவின் மங்களகௌரி மலை மீதுள்ள கோவில் தேவியின் வலது மார்பு விழுந்த இடமாகப் போற்றப்படுகிறது.
 • சிலர் ஒடிசாவின் தாராதாரிணி கோவில் சக்தி பீடமென்பர். ஏனெனில் இது ராமகிரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. சித்ரகூட் ஜானகி குண்ட் சக்தி பீடம்
 2. ராஜ்கிர் லக்ஷ்மி நாராயணா சக்தி பீடக் கோவில்
 3. கயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்
 4. தாராதாரிணி சக்தி பீடக் கோவில்

32. உமா / காத்யாயினி (ப்ருந்தாவனா பீடம்) - கேஸ ஜலா (தலை முடியில் அணியும் அணிகலன்) அல்லது கேசம் (முடி) - பூதேச பைரவர் / க்ருஷ்ண நாத பைரவர் - உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம்ஆக்ரா அருகில் – வ்ரிந்தாவன்

 • வ்ரிந்தாவன் (vrindavan) ஆக்ராவிலிருந்து 50 கி.மீ மற்றும் டெல்லியிலிருந்து 150 கி.மீ தொலைவிலுள்ளது. 12 கி.மீ தொலைவிலுள்ள மதுரா அருகிலுள்ள ரயில் நிலையமாகும். சக்தி பீடமானது புதிய பஸ் நிலையத்திலிருந்து பூதேஸ்வர் (bhuteshwar) செல்லும் வழியிலுள்ளது. கோவிலின் பெயர் பூதேஸ்வர் மஹாதேவ் கோவில்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. பிருந்தாவனம் காத்யாயினி சக்தி பீடக் கோவில்

33. சுசி / அனலா / நாராயணி (அறம் வளர்த்த நாயகி / முன் உதித்த நங்கை / பகவதி அம்மன்) - மேல் பற்கள் - சம்ஹார பைரவர் / சம்க்ருஹ பைரவர் / சன்ஹார் பைரவர் - தமிழ்நாட்டின் கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

தமிழ்நாடுகன்னியாகுமரி அருகில் – சுசீந்திரம்

 • கன்னியாகுமரி பரசுராம க்ஷேத்ரத்தின் (கேரளாவின்) ஒரு பகுதி. தற்போது தமிழ்நாட்டில் உள்ளது. திருவனந்தபுரம் (87 கி.மீ) அருகிலுள்ள விமான நிலையம். மதுரையிலிருந்து (242 கி.மீ) ரயில்கள் மற்றும் பஸ்கள் உள்ளன.
 • அன்னையின் பெயர் கன்னியாகுமரி அல்லது பகவதி அல்லது அறம் வளர்த்த நாயகி அல்லது முன்னுதித்த நங்கை அல்லது நாராயணி அல்லது சுச்சி என்பதாகும். அதிகாலை பூஜைக்குப் பின் அம்பாள் அலங்கார நாயகியாகக் காட்சியளிக்கிறாள். சம்ஹார பைரவர் சுசீந்திரத்திற்கு அருகில் ஸ்தணு சிவா என்ற பெயரில் அருள்கிறார்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சக்தி பீடக் கோவில்

34. வராஹி (பஞ்சசாகரா பீடம்) - கீழ் பற்கள் - மஹாருத்ர பைரவர் - மஹாராஷ்ட்ரா அல்லது சட்டீஸ்கர் அல்லது உத்திர ப்ரதேசத்தின் வாரணாசி அல்லது உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார்

மஹாராஷ்ட்ரா – சங்ளி (sangli) அருகில் – நரசிம்மவாடி – சக்தி தீர்த்தா

 • நரஸிம்மவாடி அல்லது நர்சோபச்சிவாடி அல்லது நர்சோபவாடி (narasimhawadi or narsobachi wadi or narsobawadi) என்பது புகழ்பெற்ற தத்தாத்ரேயர் அல்லது தத்தா (datta) கோவிலைக் கொண்ட தலமாகும். அருகிலுள்ள ரயில் நிலையங்கள் சங்ளி (23 கி.மீ) மற்றும் கோலாப்பூர் (55 கி.மீ) ஆகும். சங்ளியிலிருந்து ஜீப்கள் மற்றும் பஸ்கள் உள்ளன. நரஸிம்மவாடிக்கு நேர் எதிர்ப்புறம் க்ருஷ்ணா நதிக்கரையில் ஔர்வாட் (awrwad) என்ற அமரேஸ்வர் அல்லது அமர்பூர் (amarpur) என்ற கிராமம் உள்ளது. நரஸிம்மவாடிக்கும் ஔர்வாட்டுக்கும் இடையே க்ருஷ்ணா நதி மீது கிட்டத்தட்ட 1 கி.மீ நீளத்திற்கு பாலம் செல்கிறது. ஔர்வாட்டின் அமரேஸ்வர் கோவிலுக்கருகே உள்ள சக்தி தீர்த் என்பதே சக்தி பீடமாகும். இது பஞ்சகங்காவும் க்ருஷ்ணாவும் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது.
 • சிலர் சட்டீஸ்கர் மாநிலம் சம்பா (champa) மாவட்டத்தின் ஜான்ஜ்கிர் (janjgir) என்ற இடத்திலுள்ள சந்த்ரபூர் அல்லது சந்தர்பூர் (chandrapur) சந்த்ரஹாசினி கோவிலை சக்தி பீடமென்கின்றனர். சந்தர்பூர் என்ற இடம் ராஜ்கர் (rajgarh) மற்றும் சரண்கர் (sarangarh) இடையே உள்ளது. மேலும் இது ஜான்ஜ்கிர்ரிலிருந்து 100 கி.மீ தொலைவிலும் சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 220 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த சந்த்ரபூரானது மஹாநதி, மந்த் நதி, கடாங் நலா, லத் நலா மற்றும் கேலோ நதி ஆகிய ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடமாகும். இங்கு தேவியின் மற்றொரு பெயர் வராஹரூபி. ஈசனின் பெயர் மஹாருத்ரா.
 • சிலர் பஞ்சசாகரா என்பது ஹரித்வாரில் உள்ளது என்கிறார்கள். ஹரித்துவாரில் உள்ள ஐந்து தேவி தலங்களில் ஒன்றாக இருக்கலாம். அதாவது, மானசா தேவி கோவில், சண்டி தேவி கோவில், மாயா தேவி கோவில், தக்ஷேஸ்வர் மஹாதேவ் கோவிலின் பார்வதி சன்னதி மற்றும் பீம்கோடாகுண்ட் அருகே ரயில் பாதையோரம் உள்ள மலைக் குகையில் உள்ள காளி தேவி கோவில் ஆகியவற்றில் ஏதாவதொன்றே சக்தி பீடமாக இருக்க வேண்டும். ஹரித்துவாரில் ஐந்து தீர்த்தங்கள் அமைந்திருப்பதால் இது பஞ்சசாகரா பீடமாக நம்பப்படுகிறது.
 • ஒருசிலர் வாரணாஸியிலுள்ள பாதாள வராஹி (பராஹி) அல்லது பாதாள காளி கோவிலை சக்தி பீடமென்கிறார்கள். ஆலயத்தின் உள்பிராகாரத்தில் உள்ள பாதாள குகையில் எழுந்தருளியுள்ள அம்மன், தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தண்டை, கலப்பை ஆகியவற்றைத் தாங்கி அபயம், வரதம் காட்டி அருள்புரிகிறார். இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, நள்ளிரவில்தான் அன்னையைக் காண முடியும். அதாவது, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. 12 மணி முதல் சூரிய உதயம் வரை கோயில் நடை திறந்திருக்கும். விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் அதாவது சூரிய உதயத்துக்கு முன்பு கோயிலின் நடை சாத்தி விடுவது வழக்கம். காசிதான் பஞ்சசாகரா பீடம் என்பதற்கு ஆதாரமாக கங்கையிலுள்ள பஞ்சகங்கா காட் படித்துறையைக் குறிப்பிடுகிறார்கள். இதில் கங்கை, வருணா, அஸீ, கிரண் மற்றும் தூத்பாபா ஆகிய ஐந்து தீர்த்தங்கள் சங்கமிப்பதாகக் கூறுவர்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. நரசிம்மவாடி சக்தி தீர்த் சக்தி பீடம்
 2. சந்த்ரபூர் சந்த்ரஹாசினி சக்தி பீடக் கோவில்
 3. ஹரித்துவாரின் பஞ்சசாகரா பீடம்
 4. வாரணாஸியிலுள்ள பாதாள வராஹி சக்தி பீடக் கோவில்

35. அபர்ணா (கரதோயததா பீடம்) - இடது கொலுசு - வாமன பைரவர் - வங்க தேசம்

வங்க தேசம்போக்ரா (bogra) மாவட்டம் – ஷேர்பூர்தனா (sherpurthana) – பவானிபூர் அல்லது பபானிப்பூர் கிராமம் (bhavanipur or bhabanipur)

 • பவானிபூர் கிராமமானது கரதோயா நதிக்கரையில் ஷேர்ப்பூர் அல்லது ஷேராப்பூரிலிருந்து (sherpur or serapur) 28 கி.மீ தொலைவிலுள்ளது. டாக்காவிலிருந்து ஜமுனா ப்ரிட்ஜ் (பாலம்) வழியாக பவானிபூர் அல்லது பபானிப்பூர் செல்ல வேண்டும். சிரஜ்கன்ஜ் (sirajganj) மாவட்டம் சண்டைக்கொனாவைத் (chandaikona) தாண்டிய பிறகு கோகா போட் தோலா (goga bot tola) பஸ் ஸ்டாப்பை அடையலாம். அங்கிருந்து பபானிப்பூர் கோவிலுக்கு வேன் அல்லது ஸ்கூட்டரில் செல்லலாம். போக்ராவிற்கு வடக்கிலுள்ள மாவட்டங்களிலிருந்து வருவோர் ஷேர்ப்பூர், மிர்சாப்பூர் மற்றும் போக்ரா மாவட்டத்திலுள்ள கோகா போட் தோலா ஆகிய இடங்களைக் கடந்து வர வேண்டும்.
 • பஞ்சகர் – பங்களாபந்தா ஹைவேயில் (N5) ஷேர்ப்பூர் உள்ளது.
 • பபானிப்பூர் சக்கபுக்குர் என்ற புனித குளம் சக்தி பீடமாக நம்பப்படுகிறது. வங்க தேச ராணுவப் படைகளால் கோவில் இடிக்கப்பட்டது. தற்போது கோவிலைப் புதுப்பிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அபர்ணா சக்திக்குரிய சிலைகள் ஏதும் இல்லை. அதற்குப் பதிலாக காளி மூர்த்தம் வணங்கப்படுகிறது. இந்த சக்தி பீடத்திற்கு செல்வது கொஞ்சம் கடினம். இக்கோவில் பற்றிய தகவல்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் மற்ற இணைய தளங்களிலும் காணக் கிடைக்கின்றன. பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. பபானிப்பூர் அபர்ணா சக்தி பீடக் கோவில்

36. ப்ரம்மராம்பிகா தேவி / சுந்தரி / பாலா த்ரிபுர சுந்தரி / மஹாலக்ஷ்மி (ஸ்ரீபர்வதா பீடம்) - வலது கொலுசு - சுந்தரானந்த பைரவர் / சம்பரானந்த பைரவர் - ஆந்திரப் பிரதேசம்

ஆந்திராஸ்ரீசைலம்

 • நல்லமலா காட்டில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ஹைதராபாத், விஜயவாடாவில் இருந்து ஆந்திர அரசுப் பேருந்துகள் ஏராளமாக உள்ளன. ரயில் வசதி இல்லை.
 • ஜோதிர் லிங்கத் தலமான மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவிலில் சக்தி பீட தேவதையான ப்ரம்மராம்பிகையும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
 • ஆந்திராவின் ப்ரகாசம் மாவட்ட குக்கிராமமே த்ரிபுராந்தகம். இது விஜயவாடாவில் இருந்து 150 கி.மீ தொலைவிலும் ஓங்கோலிலிருந்து 90 கி.மீ தொலைவிலும் ஸ்ரீ சைலத்திலிருந்து 100 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள ரயில்நிலையம் மார்க்கப்பூர் (markapur) (43 கி.மீ) ஆகும். அம்பாளின் பெயர் பாலா த்ரிபுர சுந்தரி அல்லது த்ரிபுராந்தகி. த்ரிபுராந்தகம் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள புனிதக் குளத்தில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. த்ரிபுராந்தகேஸ்வரா கோவில் இதற்கருகே உள்ள சிறிய மலைமீதுள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பிகை சக்தி பீடக் கோவில்
 2. த்ரிபுராந்தகம் பாலா த்ரிபுர சுந்தரி சக்தி பீடக் கோவில்

37. கபாலி / பீம்ரூபா (விபாஸா பீடம்) - இடது கணுக்கால் - சர்வானந்த பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – மேதினிப்பூர் மாவட்டம் – தம்லுக் அல்லது தமோலுக் (tamluk or tamoluk)

 • தம்லுக் அல்லது தமோலுக் என்பது பர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் (purba medinipur) தலைநகரம் ஆகும். கொல்கத்தாவிலிருந்து 90 கி.மீ தொலைவிலுள்ள ரூப்நாராயண் ஆற்றங்கரையில் வங்கக் கடலருகே அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் தம்லுக். இங்கு தேவியானவள் ஸ்ரீ பர்கோ பீமா தேவி என்றும் பீமகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோவிலுக்கருகிலேயே ராம் சாகரா என்ற குளம் உள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. தம்லுக் ஸ்ரீ பர்கோ பீமா தேவி சக்தி பீடக் கோவில்

38. சந்த்ரபாகா (ப்ரபாஸா பீடம்) - வயிறு - வக்ரதுண்ட பைரவர் - குஜராத்தின் சோமநாதம்

குஜராத்சோமநாதம்

 • இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் வெராவல் (veraval) அருகேயுள்ள புகழ்பெற்ற ஜோதிர் லிங்கத்தலம் சோமநாதம். இது ஜுனாகத் மாவட்டத்திலுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் வெராவல் (13 கி.மீ) ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் ஜுனாகத் (95 கி.மீ) மற்றும் டையூ (diu) (90 கி.மீ) ஆகும்.
 • இங்கு சந்த்ரபாகா தேவிக்கு தனியாகக் கோவிலேதும் இல்லை. ஒருவேளை தேவிக்கான கோவில் முன்பு இருந்து பின் அழிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் சோம்நாத் சிவன் கோவில் பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. இங்கு சோமநாதர் சிவனுக்கு நேரே பின்புறம் உள்ள பார்வதி தேவி சிலையே சந்த்ரபாகாவாக வணங்கப்படுகிறது. இங்கு வெராவல் ஸ்டேசனிலிருந்து 4 கி.மீ தொலைவிலுள்ள ப்ரபாஸ் என்ற இடமும் சக்தி பீடமாகக் கருதப்படுகிறது.
 • சிலர் சோம்நாத் அருகில் ஹிரன், கபிலா மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் த்ரிவேணி என்ற இடத்திலுள்ள காளி கோவிலை சக்தி பீடமென்பர்.
 • இன்னும் சிலர் குஜராத்தின் ஜுனாகத் (ஜுனாகர்) மாவட்டம் ப்ரபாஸ் பகுதியில் கிர்னார் மலைகள் மீதுள்ள அம்பா மாதா கோவிலை இதற்குரிய சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் கத்தியவார் அருகே அமைந்துள்ளது. 6000 படிகள் கொண்ட கிர்னார் மலைகளில் அம்பா தேவி, கோரக்ஷநாத், தத்தாத்ரேயர் கோவில்கள் உள்ளன. இதே பகுதியில் காளி குகையும் அமைந்துள்ளது. இவ்விரண்டுமே சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால் இதே கோவிலை 39வது பீடமான பைரவ பர்வதா பீடத்திற்கும் உரிய கோவிலாக சிலர் கருதுகிறார்கள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. சோம்நாத் சந்த்ரபாகா தேவி சக்தி பீடக் கோவில்
 2. சோம்நாத் திரிவேணி காளி கோவில்
 3. குஜராத்தின் ஜுனாகத் அம்பே மாதா சக்தி பீடக் கோவில்

39. அவந்தி / மஹாகாளி (பைரவ பர்வதா பீடம்) - மேல் உதடு - லம்பகர்ண பைரவர் - மத்தியப் பிரதேசம் அல்லது குஜராத்

மத்தியப் பிரதேசம்உஜ்ஜைனிஉஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில்

 • பிரசித்தி பெற்ற மஹாகாளேஸ்வர் ஜோதிர்லிங்கக் கோவிலைக் கொண்டுள்ள உஜ்ஜைனியில் பெருகர் (bherugarh) என்பது பைரவ பர்வதமாகவும் கர்ஹ் காளி மந்திர் சக்தி பீடமாகவும் போற்றப்படுகிறது. இது மஹாகாள் சிவன் கோவிலுக்கு வடக்கே 4 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவில் ஷிப்ரா நதிக்கரையில் பைரவ் மலைகள் மீதுள்ளது.
 • சிலர் குஜராத்தின் ஜுனாகத் (ஜுனாகர்) மாவட்டம் ப்ரபாஸ் பகுதியில் கிர்னார் மலைகள் மீதுள்ள அம்பா மாதா கோவிலை இதற்குரிய சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் கத்தியவார் அருகே அமைந்துள்ளது. 6000 படிகள் கொண்ட கிர்னார் மலைகளில் அம்பா தேவி, கோரக்ஷநாத், தத்தாத்ரேயர் கோவில்கள் உள்ளன. இதே பகுதியில் காளி குகையும் அமைந்துள்ளது. இவ்விரண்டுமே சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால் இதே கோவிலை 38வது பீடமான ப்ரபாசா பீடத்திற்கும் உரிய கோவிலாக சிலர் கருதுகிறார்கள்.
 • மால்வாவிற்கு மேற்கே இந்த பைரவ பர்வதம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. உஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில்
 2. குஜராத்தின் ஜுனாகத் அம்பே மாதா சக்தி பீடக் கோவில்

40. ப்ரம்மாரி / சப்தஷ்ருங்கி (ஜனஸ்தனா பீடம்) - முகவாய் அல்லது தாடை - விக்ரிதாக்‌ஷ பைரவர் - மஹாராஷ்ட்ராவின் நாசிக்

மஹாராஷ்ட்ராநாசிக் – கோதாவரி ஆற்றுப்பள்ளத்தாக்கு (valley)

 • பழைய நாசிக்கின் பத்ரகாளி மந்திர் சக்தி பீடமாகக் கருதப்படுகிறது.
 • சிலர் பஞ்சவடியிலுள்ள (panchavati) கலாராம் (kalaram) கோவிலின் மேற்கு வாயிற்பகுதியில் அமைந்த சீத கும்பா (sita gumpha) கோவில் வளாகத்திலுள்ள சீதா குஃபா (seeta gufaa) சன்னதியை சக்தி பீடமென்கின்றனர்.
 • இந்த சீதா குஃபா என்பது மிகக்குறுகலான பாதையை உடைய குகைக் கோயிலாகும்.
 • இக்குகையிலுள்ள லிங்கம் ஸ்ரீ ராமர், சீதா தேவி மற்றும் லக்ஷ்மணரால் அவர்களின் வனவாசத்தின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு ராமர் கரதுஷணர் மற்றும் 14000 ராட்சஸர்களை ஒற்றைக் கையால் சண்டையிட்டு அழித்ததாகக் கூறப்படுகிறது.
 • சிலர் நாசிக்கிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ளதும் வாணிக்கு (vani) அருகிலுள்ளதுமான சப்தஷ்ருங்கி மாதா கோவிலை சக்தி பீடமென்கின்றனர்.
 • சிலர் நாசிக்கின் சாலிமர் என்ற இடத்திலுள்ள பத்ரகாளி கோவில் சக்தி பீடமென்பர்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. சப்தஷ்ருங்கி மாதா சக்தி பீடக் கோவில்
 2. சீதா குஃபா சக்தி பீடம்
 3. சாலிமர் பத்ரகாளி கோவில்

41. மாணிக்யம்பா / ராகிணி / விஸ்வமாத்ருகா / விஸ்வேஸ்வரி (கோதாவரி தீரா பீடம்) - இடது கன்னம் - தண்டபாணி பைரவர் / வத்ஸநாத பைரவர் - ஆந்திரப் பிரதேசம்

ஆந்திராராஜமுந்த்ரி அருகில் (rajah mundry) – த்ரக்ஷராமம்

 • த்ரக்ஷராமம் விஜயவாடாவிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் ராஜ முந்த்ரியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் காக்கிநாடாவிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது. 50 கி.மீ தொலைவிலுள்ள சமல்கோட் அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும். இவ்விடம் பீமேஸ்வரா ஸ்வாமிக்கும் மாணிக்யம்பா சக்தி பீடத்திற்கும் புகழ்பெற்றது.
 • சிலர் ராஜமுந்த்ரியிலுள்ள கோட்டிலிங்கலரேவு என்ற பகுதியை சக்தி பீடமென்கிறார்கள். இங்கு கோதாவரி ஆற்றங்கரையில் கோடி லிங்கேஸ்வரா கோவில் உள்ளது. இவ்விடத்தின் விஸ்வேஸி அல்லது விஸ்வேஸ்வரி தேவியை சக்தி பீட நாயகியாகக் கருதுகிறார்கள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. த்ரக்ஷராமம் மாணிக்யம்பா சக்தி பீடக் கோவில்
 2. கோட்டிலிங்கலரேவு விஸ்வேஸ்வரி தேவி சக்தி பீடக் கோவில்

42. குமாரி (ரத்னாவளி பீடம்) - வலது தோள் - சிவ பைரவர் அல்லது கால பைரவர் - மேற்கு வங்கம் அல்லது சட்டீஸ்கர் அல்லது சென்னை அல்லது ஹரித்துவாரின் கோடாகுண்ட் குளத்தருகே உள்ள காளி தேவி கோவில்

மேற்கு வங்கம் – ஹூக்ளி மாவட்டம் – கனக்குல் க்ருஷ்ணா நகர் (khanakul Krishna nagar) – ரத்னாகர் நதிக்கரை

 • நான்கு இடங்கள் சக்தி பீடங்களாகக் கருதப்படுகிறது.

அ) கல்கத்தாவிலிருந்து 90 கி.மீ தொலைவில் கனக்குல் (khanakul) அருகே க்ருஷ்ணா நகர் கிராமத்தில் சக்தி பீடம் உள்ளது. கனக்குல் என்பது ஹூக்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். உள்ளூரில் அம்பிகை ஆனந்தமயீ என்று அழைக்கப்படுகிறாள்.

ஆ) சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் – அம்பிகாபூர் ஸ்டேட் ஹைவேயில் ரத்னாப்பூர் உள்ளது. இதன் பழைய பெயர் ரத்னாவளி நகர் அல்லது மத்யதேசத்தின் ரத்னாவளி நகர் (ratnawali nagar of madhyadesh) என்பதாகும். 25 கி.மீ தொலைவிலுள்ள பிலாஸ்பூர் அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் ராய்ப்பூர் (140 கி.மீ). இங்குள்ள மஹாமாயா தேவி கோவில் சக்தி பீடம் என்று சிலர் கருதுகிறார்கள்.

இ) ரத்னாவளி என்பது சென்னைக்கு அருகிலுள்ள சக்தி பீடமென்றும் சொல்கிறார்கள். திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோவிலையும், ஐயர்மலையின் அராளகேசியம்மன்/சுரும்பார்க்குழலம்மை சன்னதியையும் இதற்கான பீடங்களாகக் கூறுகின்றனர்.

ஈ) இன்னும் சிலர் ஹரித்துவாரின் கோடாகுண்ட் குளத்தருகே உள்ள காளி தேவி கோவிலை சக்தி பீடம் என்று சிலர் கருதுகிறார்கள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. கனக்குல் க்ருஷ்ணா நகர் ஆனந்தமயீ சக்தி பீடக் கோவில்
 2. ரத்தன்பூர் மஹாமாயா தேவி சக்தி பீடக் கோவில்
 3. ஹரித்துவாரின் காளி தேவி சக்தி பீடக் கோவில்
 4. திருஈங்கோய்மலை லலிதாம்பிகை சக்தி பீடக் கோவில்
 5. ஐயர்மலையின் அராளகேசியம்மன்/சுரும்பார்க்குழலம்மை சக்தி பீடக் கோவில்

43. உமாதேவி / மஹாதேவி (மிதிலா பீடம்) - இடது தோள் - மஹோதர பைரவர் - நேபாளத்தின் ஜானக்பூர்

நேபாளம் – இந்திய நேபாள எல்லைப் பகுதி – ஜானக்பூர்

 • சீதையின் பிறப்பிடமான ஜானக்பூரில் உள்ள புகழ்பெற்ற ஜானகி மந்திரைப் (janki mandir) பலரும் சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது. சோனா மாய் (sona mai) மந்திரும் பழைமையான சக்தித் தலமாக இங்கு விளங்குகிறது. ஜானக்பூரின் ஜானக் நந்தினி சக்தி பீடம் என்றும் கூறுகிறார்கள். அநேகமாக ஜானக் நந்தினி என்பதும் ஜானக்பூரின் புகழ்பெற்ற ஜானகி மந்திரும் ஒன்றாகவே இருக்கலாம்.
 • சிலர் நேபாளத்தின் ஜானக்பூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் பீகாரின் மதுபானி (madhubani) மாவட்டத்தின் பேனிபட்டி (benipatti) சப் டிவிஷனில் உள்ள உச்சய்த் (uchchaith) என்ற கிராமத்தில் மிதிலாஞ்சல் (mithilanchal) என்ற இடம் உள்ளது. இவ்விடத்தில் உள்ள துர்காஸ்தான் அல்லது தேவி பகவதியை சக்தி பீடம் என்கிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் காம்தௌல் (kamtaul) (24 கி.மீ). இங்கு செல்ல தர்பங்காவிலிருந்து (darbhanga) நிறைய பஸ்கள் உள்ளன. பீகாரின் மதுபானி மாவட்டத்தில் பெனிபட்டி சப் டிவிஷனில் (Benipatti Subdivion) உள்ள ஒரு கிராமம் உச்சய்த்தா (Ucchaitha) ஆகும். இங்கு தேவி பகவதிக்கு பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோயில் அமைந்துள்ளது. இது வடகிழக்கு ரயில்வேயின் காம்தௌல் (Kamtaul) ரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில், வடகிழக்கே உள்ளது. இங்கு செல்ல தர்பங்காவிலிருந்து பஸ் போக்குவரத்து சிறப்பாக உள்ளது. இங்குள்ள தேவியின் சிலை "குப்தர் காலம்' என்று அறியப்படுகிறது. பெரும்புலவர் காளிதாஸ்க்கு இந்த இடத்தில்தான் கல்வியறிவு கிடைத்தது என்று கூறப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஜானக்பூர் ஜானகி மந்திர் சக்தி பீடக் கோவில்
 2. மதுபானியிலுள்ள துர்காஸ்தான் தேவி பகவதி சக்தி பீடக் கோவில்

44. காளி / நலஹட்டீஸ்வரி - மூச்சுக்குழல் - யோகீஸ்வர பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – பிர்பம் (birbhum) மாவட்டம் – நலஹட்டி (nalhati) - நலஹட்டீஸ்வரி சக்தி பீடக் கோவில்

 • இக்கோவில் நலஹட்டி ரயில் நிலையம் அருகிலுள்ளது. இந்த ரயில் நிலையம் ஹௌரா - சாஹிப்கன்ஜ் (sahebganj) ரயில் பாதையிலுள்ளது. மேலும் பெனாகர் – மொரேக்ராம் (panagarh - moregram) சாலையில் இக்கோவிலின் வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு நலஹட்டீஸ்வரி கோவில் சிறிய அழகிய மலையில் அமைந்துள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. நலஹட்டீஸ்வரி சக்தி பீடக் கோவில்

45. சாமுண்டீஸ்வரி தேவி / மூகாம்பிகா தேவி / தாம்ர கௌரி / பத்ரகாளி / பத்ரகர்ணிகா / ஜெயதுர்கா (கர்ணடா பீடம்) - காதுகள் (கர்ணம் என்றால் காதுகள் என்று பொருள்) - அபிரு பைரவர் - கர்நாடகா மாநிலம் மைசூரின் சாமுண்டி மலைகள் அல்லது கோகர்ணம் அல்லது கொல்லூர் மூகாம்பிகை அல்லது ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா

கர்நாடகம்மைசூர்சாமுண்டீஸ்வரி மலைகள்

 • சாமுண்டி மலையில் குடிகொண்ட தேவிக்கு மைசூரில் நடக்கும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சாமுண்டி மலையிலேயே மஹாபலேஸ்வரருக்கும் நாராயணனுக்கும் தனிக் கோவில்கள் உள்ளன.
 • சிலர் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை ஆலயத்தை இதற்குரிய சக்தி பீடமாகக் கூறுகின்றனர்.
 • சிலர் கர்நாடகத்தின் கோகர்ணம் மஹாபலேஸ்வரர் கோவிலில் உள்ள தாம்ர கௌரி மற்றும் கோகர்ணம் பத்ரகாளியை சக்தி பீடமென்கிறார்கள். இந்த பீடத்தைப் பற்றி தேவி பாகவதம் கூறுகிறது. இந்த பத்ரகாளி கோவில் மஹாபலேஸ்வரா கோவிலில் இருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது.
 • சிலர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ராவில் இந்த சக்தி பீடம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அங்கு கோவில்கள் ஏது சக்தி பீடமாக அறியப்படவில்லை.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. மைசூர் சாமுண்டீசுவரி சக்தி பீடக் கோவில்
 2. கொல்லூர் மூகாம்பிகை சக்தி பீடக் கோவில்
 3. கோகர்ணம் தாம்ர கௌரி சக்தி பீடக் கோவில்
 4. கோகர்ணம் பத்ரகாளி சக்தி பீடக் கோவில்

46. மஹிஷ மர்த்தினி (வக்ரேஸ்வரா / பக்ரேஸ்வரா பீடம்) - புருவங்களின் இடையே உள்ள பகுதி (நெற்றிப் பொட்டு) - வக்ரநாத பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – பிர்பம் (birbhum) மாவட்டம் – துப்ராஜ்பூர் (dubrajpur) அருகில் – பம்பரா அல்லது பாபரா (pamphara or paaphara) ஆற்றங்கரை – பக்ரேஸ்வர் கோவில்

 • பிர்பம் மாவட்டத் தலைநகரான சூரிக்குத் (suri) தென்மேற்கே 24 கி.மீ தொலைவிலும் துப்ராஜ்பூர் ரயில் நிலையத்திற்கு 7 கி.மீ தொலைவிலும் பக்ரேஸ்வர் உள்ளது. இங்குள்ள பக்ரநாத் கோவில் வெப்ப நீரூற்றுகளுக்குப் புகழ் பெற்றது. இவை அனைத்தும் பம்பரா அல்லது பாபரா நதியில் கலக்கிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. பக்ரேஸ்வர் மஹிசமர்த்தினி சக்தி பீடக் கோவில்

47. யசோரேஸ்வரி / ஜசோரேஸ்வரி (யசோரா பீடம்) - இடது உள்ளங்கை - சண்ட பைரவர் - வங்க தேசம்

வங்க தேசம் – தௌலத்பூர் (daulatpur) அருகில் – மஹேஸ்வரிபூர்

 • இது வங்க தேசத்தின் சட்கிரா (satkhira) மாவட்டம் ஷ்யாம் நகர் உபஜில்லாவில் உள்ள ஈஸ்வரிப்பூரில் உள்ளது. இது ஜெஸ்ஸோர் மற்றும் குல்னாவில் (jessore and khulna) இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போதுள்ள ஜஸ்ஸோரேஸ்வரி கோவில் பழைய கோவில் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டுள்ளது. தேவியின் பெயர் ஜஸ்ஸோரேஸ்வரி காளி தேவி.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஜஸ்ஸோரேஸ்வரி காளி தேவி சக்தி பீடக் கோவில்

48. புல்லாரா / ஃபுல்லாரா (அட்டஹாசா பீடம்) - கீழ் உதடு - விஸ்வேஸ்வர பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – பிர்பம் (birbhum) மாவட்டம் – அஹமத்பூர் அருகில் – லாப்பூர் (labpur or labhpur)

 • கல்கத்தாவிலிருந்து 220 கி.மீ தொலைவில் பர்தமான் அல்லது பர்ட்வான் (bardhaman or burdwan) மாவட்டத்தில் அஹ்மத்பூர் – கத்வா (katwa) ரயில் பாதையில் லாப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த லாப்பூருக்கு அருகில் உள்ள கிராமமே அட்டஹாஸ். அம்பிகை சிலை 15 முதல் 18 அடி வரை உயரமானதாக உள்ளது. வைரப் (பைரவ்) கோவில் புல்லாரா கோவிலுக்கு அருகிலுள்ளது. புல்லாரா (pullara or fullora) என்பதே சக்தி பீடம்.
 • பர்தமான் மாவட்டத்தில் உள்ள தக்ஷின் டிஹியில் (dakshindihi) உள்ள அட்டஹாஸ் கிராமத்தில் உள்ளது. கத்வா அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. அட்டஹாஸ் புல்லாரா தேவி சக்தி பீடக் கோவில்

49. நந்தினி / நந்திகேஸ்வரி - ஆரம் அல்லது அட்டிகை - நந்திகேஸ்வர பைரவர் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் – பிர்பம் மாவட்டம் – சைந்தியா (sainthia) – நந்திகேஸ்வரி கோவில்

 • மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் சைந்தியா நகரின் ஒரு பகுதியே தொடக்கக் கால நந்திபுரா கிராமம். கொல்கத்தாவிலிருந்து 220 கி.மீ தொலைவிலுள்ள இப்பகுதியே சக்தி பீடம். ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கோவிலில் ஆலமரத்தடியில் நந்திகேஸ்வரி காட்சியளிக்கிறாள்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. நந்திப்பூர் நந்திகேஸ்வரி சக்தி பீடக் கோவில்

50. சங்கரி / இந்த்ராக்‌ஷி / நாகபூஷணி அம்மன் / புவனேஸ்வரி (ஸ்ரீலங்கா பீடம்) - சிலம்புகள் - ராக்ஷஷேஸ்வர பைரவர் / நயனைர் பைரவர் - இலங்கை

இலங்கை – திருகோணமலை (Trincomalee) (திருக்கோணமலை அல்லது திருக்கோணேச்சரம்)

 • இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள திருகோணமலை (Trincomalee) பகுதியிலுள்ள திருக்கோணேச்சரம் (Trikoneshwaram) கோவில் சக்தி பீடமாகும். இங்கு துறைமுகம் மற்றும் விமான நிலையம் உள்ளது.
 • சிலர் நயினாதீவிலுள்ள (Nainativu) நாகபூஷணி அம்மன் கோவிலை சக்தி பீடம் என்கிறார்கள். இங்கு செல்ல முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) குறிகாட்டுவான் (Kurikadduvan) என்ற இடத்திற்கு பேருந்தில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் செல்ல வேண்டும். குறிகாட்டுவான் என்பது புங்குடுத் தீவில் (Punkudutivu) உள்ளது. குறிகாட்டுவானிலிருந்து நயினாதீவு செல்ல நிறைய பேருந்துகள் உள்ளன.
 • நயினாதீவு கோவிலானது இலங்கையின் நல்லூரிலிருந்து (Nallur) 36 கி.மீ தொலைவில் மணிபல்லவத்தில் உள்ளது.
 • போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இலங்கையின் பல கோவில்கள் இடிக்கப்பட்டதால் சக்தி பீடம் எதுவென்று குழப்பம் ஏற்படுகிறது. இதனால் மேலும் சில இடங்களும் இப்பகுதியில் சக்தி பீடங்களாகக் கருதப்படுகின்றன.
 • முன்னேசுவரம் வடிவாம்பிகை கோயில் கூட சக்தி பீடமென்கிறார்கள்.
 • இன்னும் சிலர் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்தான் சக்தி பீடமென்கிறார்கள்.
 • ஆனால் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்தான் சக்தி பீடம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைக்கின்றன. இது மிகப் பழைமையான கோவிலாகும்.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. திருக்கோணேச்சரம்
 2. நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
 3. முன்னேசுவரம்
 4. திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்

51. அம்பிகா (விராடா பீடம்) - இடது கால் விரல்கள் - அம்ரித பைரவர் / அம்ரிதேஸ்வர் - ராஜஸ்தானின் வீரட் (பரத்பூர் அருகில்) அல்லது மேற்கு வங்கம் அல்லது வங்க தேசம்

ராஜஸ்தான்ஜெய்ப்பூர் அருகில் – பைரட் (bairat) - அம்பிகா தேவி சக்தி பீடக் கோவில்

 • புராணங்களில் இரண்டு விராட தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த நாடுகளின் எல்லைகளுக்குட்பட்ட சக்தி பீடங்கள் மொத்தம் மூன்று உள்ளன.

அ) மத்ஸ்ய தேஸா அல்லது விராட தேஸா [அல்வர் (alwar), பரத்பூர் (bharatpur), ஜெய்ப்பூர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதி] இந்த தேசத்தில் ஒரே சக்தி பீடம் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 • ஜெய்ப்பூரிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள வைரட் அல்லது பைரட் அல்லது விரட் நகர் (bhairat or virat nagar) என்ற கிராமம் அந்த சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. இது பரத்பூர் (bharatpur) அருகில் உள்ள விரட் அல்லது பிரட் (virat or birat) என்ற இடமாகும்.

ஆ) நிவ்ரிதி தேஸா அல்லது விராட தேஸா [பர்தன்கோட் (bardhankot), கூச் பீகார், ராங்பூர் அல்லது ரான்ஜ்பூர் (rangpur) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதி] இந்த தேசத்தில் இரு சக்தி பீடங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

 • மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினஜ்பூர் (dakshin dinajpur) மாவட்டத்தின் பைரட்டா (bairatta).
 • வங்க தேசத்தின் ராங்பூர் அல்லது ரான்ஜ்பூர் (rangpur) மாவட்டத்திலுள்ள பீரட் ராஜர் கர் (birat rajar garh) என்ற இடம்.

இவ்வாறு இரண்டு தேசங்களிலும் சேர்த்து மொத்தம் மூன்று சக்தி பீடங்கள் கணக்கிடப்படுகின்றன.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. விரட் அம்பிகா தேவி சக்தி பீடக் கோவில்

52. சர்வானந்தகரீ (மகதா பீடம்) - வலது தொடை - வ்யோமஹேஸ பைரவர் - பீகார் மாநிலம் பாட்னாவின் பாட்னேஸ்வரி கோவில்

பீகார்பாட்னா – மஹாராஜ் கன்ஜ் (maharaj ganj locality) – பரி பாட்டன் தேவி கோவில் (bari patan devi)

 • பாட்னா ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 10 கி,மீ தொலைவில் உள்ள மஹராஜ் கன்ஜ் பகுதியில் சக்தி பீடம் அமைந்துள்ளது. பரி பாட்டன் தேவி (பெரிய பாட்னா தேவி) அல்லது பாட்னேஸ்வரி அல்லது பாடலி புத்ரேஸ்வரி வடக்கு நோக்கியுள்ளாள். கோவிலில் மஹா காளி, மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி ஆகியோர் ஒன்றாக அருள்கின்றனர். மேலும் பைரவரும் அருள்கிறார். மேலும் சோட்டி பாட்டன் தேவியும் (சிறிய பாட்னா தேவி) பாட்னாவில் அருள்கிறாள். இதில் பரி பாட்டன் தேவி கோவில்தான் தேவியின் வலது தொடை விழுந்ததாக தந்திர சூடாமணி கூறும் பீடமாகும். சோட்டி பாட்டன் தேவி கோவிலானது தேவியின் சேலை விழுந்ததாக உப பீடமாக வணங்கப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. பாட்னாவின் பாட்னேஸ்வரி சக்தி பீடக் கோவில்

நவ சக்தி பீடங்கள்[தொகு]

 1. நைனா தேவி கோவில் - இது தேவியின் கண்கள் விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஷிவாலிக் குன்றுகளில் நைனிடாலில் உள்ளது.
 2. சிந்த் பூர்ணி தேவி கோவில் - இது பாதங்களின் சில பாகங்கள் விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் உனா மாவட்டத்தில் உள்ளது.
 3. ஜுவாலாமுகி தேவி கோயில் - இது தேவியின் நாக்கு விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிராவிலிருந்து 20 கி மீ தொலைவில் உள்ளது.
 4. வஜ்ரேஷ்வரி கோவில் - இது தேவியின் மார்பகங்கள் அல்லது வலது மார்பகம் விழுந்த இடம் விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் ராவி பியாஸ் சட்லெஜ் நதிக்கரையில் உள்ளது. அசுரனுடன் போரிட்டதால் ஏற்பட்ட புண்களுக்கு நெய் தடவி வழிபடுவர். (நாகர்கோட் வஜ்ரேஸ்வரி திருக்கோயில், காங்ரா)
 5. வைஷ்ணோ தேவி கோவில் - இது தேவியின் ஒரு புஜம் விழுந்த இடம். இது ஜம்மு காஷ்மீரில் திரிகூட பர்வதத்தில் உள்ளது. இங்கு மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி என்று மூன்று பிண்டி வடிவங்களில் தேவி காட்சியளிக்கிறாள். தேவியின் ஆலயம் ஒரு குகைக்குள் உள்ளது.
 6. சாமுண்டா தேவி கோவில் - இந்தக் கோவிலுக்கான தேவியின் உடல் பகுதி எதுவென அறியப்படவில்லை. இருப்பினும் இதை சக்தி பீடமாக வணங்குகின்றனர். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் பன்காரா கரையில் அமர்ந்துள்ளது (ஜ்வாலாமுகியிலிருந்து 2 மணி நேரப் பயணம்). அன்னை சண்ட, முண்ட அசுரர்களை வதம் செய்த இடம் என்பதால் இரட்டிப்பு சக்தி வாய்ந்த மிகவும் உக்கிரமான தலம்.
 7. மானஸா தேவி கோவில் (ஹரித்துவார் மானசா தேவி கோவில் அல்லது சண்டிகரின் மணிமஜ்ரா மானசா தேவி கோவில்) - இது தேவியின் நெற்றி அல்லது தலை விழுந்த இடம். இது சண்டிகர் அருகில் மணி மஜ்ரா என்ற ஊரில் உள்ள கோயில் (ஹரித்வாரிலும் மானசா தேவிக்குக் கோவில் உள்ளது). வசந்த நவராத்திரி இங்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். மனதில் உள்ளவற்றை நிறைவேற்றுவதால் அவள் மானஸாதேவி.
 8. சாகம்பரி தேவி கோவில் - இது தேவியின் தலை அல்லது நெற்றி விழுந்த இடம். இது உத்திரப் பிரதேசத்தில் சஹரான்பூருக்கு அருகில் ஷிவாலிக் குன்றுகளின் மேல் உள்ளது.
 9. காலிகாஜி கோவில் - இது தேவியின் குழற்கற்றை விழுந்த இடம். இது ஹரியானாவின் பஞ்ச்குலாவில் காள்கா என்ற இடத்தில் உள்ளது. மேலும் தெற்கு டெல்லியில் காள்காஜி என்ற இடத்திலும் ஒரு காள்கா தேவி கோவில் உள்ளது. ஆனால் ஹரியானாவில் உள்ள கோவிலே நவ சக்தி பீடங்களில் வரும். மிகப் புனிதமான மகா சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.

ஆதி சக்தி பீடங்கள்[தொகு]

ஆதி சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் நான்கு கோவில்கள் பற்றி காளிகா புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவை:

மகா சக்தி பீடங்கள்[தொகு]

மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட தோத்திரம் என்று கூறப்படுகிறது.

 1. சங்கரி பீடத்திற்கான கோவில்கள் - திருக்கோணேச்சரம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
 2. காமாட்சி பீடத்திற்கான கோவில்கள் - காஞ்சிபுரம் ஆதி காமாட்சி சக்தி பீடக் கோவில் மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்
 3. ஸ்ருங்கலா தேவி பீடத்திற்கான கோவில்கள் - பன்ஸ்பேரியா ஹன்சேசுவரி காளி கோவில் மற்றும் சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் (இக்கோவில்கள் சக்தி பீடமல்ல. சக்தி பீடத்திற்கான மாற்றுத் தலங்கள்)
 4. சாமுண்டீஸ்வரி தேவி பீடத்திற்கான கோவில்கள் - மைசூர் சாமுண்டீசுவரி சக்தி பீடக் கோவில்
 5. ஜோகுலாம்பா தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஆலம்பூர் ஜோகுலாம்பா தேவி சக்தி பீடக் கோவில்
 6. ப்ரம்மராம்பிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பிகை சக்தி பீடக் கோவில்
 7. மஹாலக்‌ஷ்மி தேவி பீடத்திற்கான கோவில்கள் - கோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்
 8. எகவீரிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் - நாண்டேட் எகவீரிகா மாதா சக்தி பீடக் கோவில் மற்றும் மாஹூர் ரேணுகா சக்தி பீடக் கோவில்
 9. மஹாகாளி தேவி பீடத்திற்கான கோவில்கள் - உஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில் மற்றும் உஜ்ஜைனி ஹர்சித்தி மாதா சக்தி பீடக் கோவில்
 10. புருஹூதிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் - பித்தாப்பூர் புருஹூதிகா தேவி சக்தி பீடக் கோவில்
 11. கிரிஜா தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்
 12. மாணிக்யம்பா தேவி பீடத்திற்கான கோவில்கள் - த்ரக்ஷராமம் மாணிக்யம்பா சக்தி பீடக் கோவில்
 13. காமாக்யா தேவி பீடத்திற்கான கோவில்கள் - காமாக்யா கோவில்
 14. மாதவீஸ்வரி தேவி பீடத்திற்கான கோவில்கள் - அலோப்பி தேவி சக்தி பீடக் கோவில் மற்றும் மீராப்பூர் லலிதா தேவி சக்தி பீடக் கோவில்
 15. ஜ்வாலாமுகீ தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்
 16. சர்வ மங்களா தேவி பீடத்திற்கான கோவில்கள் - கயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்
 17. விஷாலாக்‌ஷி தேவி பீடத்திற்கான கோவில்கள் - காசி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்
 18. சாரதா தேவி பீடத்திற்கான கோவில்கள் - காஷ்மீர் சாரதா சக்தி பீடம்

சப்த சக்தி பீடங்கள்[தொகு]

காளிகா புராணத்தில் சப்த சக்தி பீடங்கள் என்ற ஏழு பீடங்கள் கூறப்படுகின்றன.[5]

1. தேவி கோட்டம் (இப்பீடத்தின் இடிபாடுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது)[5]

பீடத்தின் இடிபாடுகள் உள்ள இடம் – மேற்கு வங்கம் (India > West Bengal > Dakshin Dinajpur district > Near Balur ghat > Bangarh)

தமிழ்நாட்டில் தேவிபட்டினத்திலுள்ள உலகநாயகி கோவிலே சக்தி பீடமென்பர். அதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. பிருஹன் நீல தந்திரத்தில் தேவிகோட்ட பீடத்தின் தேவி அகிலேஸ்வரி என்ற குறிப்பு உண்டு. அகிலம் என்பதே உலகம் என்று அர்த்தம் ஆவதால் உலகநாயகி கோவிலே சக்தி பீடமென்று கருதப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. தேவிபட்டினம் உலகநாயகி அம்மன் கோவில்

2. ஒட்யாண பீடம்[5] (தற்போது இல்லை)

பீடம் இருந்த இடம் – பாகிஸ்தான் (Pakistan > North west frontier > Near Mingaora > Swat) வடமேற்கு இந்தியாவில் ஸ்வேத் நதி பாயுமிடத்தில் இந்த பீடம் உள்ளதெனக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த ஸ்வேத் நதி (Swat) கூட சக்தி பீடமாக இருக்கலாம்.

ஒரு சிலர் ஒரிஸாவின் ஒட்யாண பீடமே இது என்கிறார்கள். இது கட்டாக்கின் கிரிஜா தேவி கோவில் அல்லது பூரி பிமலா தேவி கோவிலைக் குறிக்கும். மேலும் ஆதி சங்கரரின் அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் ஒட்யாணே கிரிஜா தேவி என்ற வரி வருகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. ஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்

3. காமகிரி பீடம் (அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில்)[5]

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. காமாக்யா கோவில்

4. திக்கர பீடம் (திக்கர வாஸினி கோவில் அஸ்ஸாமில் உள்ளது)[5]

அஸ்ஸாமில் கவுஹாத்தி நகரின் மையத்தில் புக்குரி டேங்க்கின் மேற்குப் பகுதியில் உள்ள உக்ரதாரா கோவில் ஒரு முக்கியமான சக்தி ஆலயம் ஆகும். இது தேவியின் தொப்புள் கொடி விழுந்த சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. அஸ்ஸாம் உக்ர தாரா திக்கரவாஸினி சக்தி பீடக் கோவில்

5. ஜலந்தர பீடம்[5] (பஞ்சாப் ஜலந்தரிலுள்ள சண்டி என்ற தேவி தலாப் மந்திர்)

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. தேவி தலாப் மந்திர் சக்தி பீடக் கோவில்

6. பூர்ணகிரி பீடம்[5] (ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி அல்லது உத்தரகாண்டின் பூர்ணகிரி)

ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி - குஜராத்திலிருந்தோ ராஜஸ்தானிலிருந்தோ இங்கு செல்லலாம். மவுண்ட் அபுவிலுள்ள புகழ்பெற்ற கோவில் இதுவாகும். இது ஆதார் தேவி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

உத்தரகாண்டில் உள்ள பூர்ணகிரி - பூர்ணகிரி கோவில் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்து திருவிழாவான "சைத்ர நவராத்திரி" இந்த கோவிலில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது, பல பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருவர். காளி ஆறு இந்த கோவிலுக்கு மிக அருகாமையில் ஓடுகிறது. மட்ட நிலத்தில் இதனை சாரதா ஆறு என்று அழைப்பர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் இங்கிருந்தே பூர்ணகிரி மலை, காளி ஆறு மற்றும் தனக்பூரை கண்டுகளிக்கலாம். 108 சக்தி பீடங்களுள் ஒன்று. சதி தேவியின் நாபி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த தேவி கோயில் உத்தரகாண்ட்டின் பித்தோர்கர் மாவட்டத்தில் தானக்பூரிருந்து 21 கி.மீ தூரத்தில் காளி நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. தானக்பூரிருந்து துன்யாஸ் (Tunyas) அல்லது தன்யாஸ் 17 கி.மீ தூரத்தில் உள்ளது மற்றும் அங்கு இருந்து 3 கி.மீ மலையேறி பூர்ணகிரி கோவிலுக்கு செல்ல வேண்டும். தானக்பூர் லக்னோ, தில்லி, ஆக்ரா, டேராடூன், கான்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் நேரடி பஸ் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. உத்தரகாண்டின் பூர்ணகிரி மாதா சக்தி பீடக் கோவில்
 2. மவுண்ட் அபு அற்புதா தேவி (ஆதார் தேவி) சக்தி பீடக் கோவில்

7. காமரூபாந்த பீடம் (அஸ்ஸாமின் சந்தியாஞ்சல் மலைகளில் உள்ள வசிஷ்ட ஆஸ்ரம பீடம்)[5] - கவுஹாத்தி அருகில் உள்ள பசிஷ்ட ஆஸ்ரமம்

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

 1. வசிஷ்ட ஆஸ்ரமத்தின் தாரா தேவி சக்தி பீடக் கோவில்

சில முக்கியமான உப பீடங்கள்[தொகு]

உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும். அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே காண்போம்.

 1. உக்ரதாரா மா / தாராபீட் - மூன்றாவது கண் அல்லது இடது கண் - சந்த்ரசூர் பைரவர் - மேற்கு வங்கத்தின் ராம்பூர் ஹட் ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ
 2. தண்ட்டேஸ்வரி – பற்கள் - பைரவர் - சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்ட்டேவாடா பாஸ்டர் (சட்டீஸ்கரின் ஜக்தல்பூரிலிருந்து 80 கி.மீ)
 3. அகிலாண்டேஸ்வரி (வராஹி பீடம்) – முகவாய் - பைரவர் - திருச்சியின் திருவானைக்கா[6]
 4. தாக்கேஸ்வரி / டாக்கேஸ்வரி - கழுத்தில் அணியும் ஒரு அணிகலன் - பைரவர் - வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா
 5. சண்டிகா தேவி - இடது கண் - போலே சங்கர் பைரவர் - பீகாரின் முங்கெர் சண்டிகா ஸ்தான்
 6. கனக துர்கா தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஆந்திராவின் விஜயவாடா
 7. பம்லேஸ்வரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகானில் உள்ள டோங்கர்கர்
 8. விந்தியவாஸினி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் மிர்சாப்பூர்
 9. மீனாக்ஷி – மனோன்மணி – பைரவர் - மதுரை
 10. பர்வதவர்த்தினி – சேது பீடம் – பைரவர் - ராமேஸ்வரம்
 11. லிங்கதாரிணி / லலிதா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் நீம்சார் (நைமிசாரண்யம்)
 12. சாந்த துர்கா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - கோவா
 13. ஜெயந்தி / பகவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஹஸ்தினாப்பூரின் கர்ண் மந்திர்
 14. கௌரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் கௌரிஷங்கர் கோவில்
 15. கமலாம்பிகை - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருவாரூர்
 16. ஞானாம்பிகை - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - காளஹஸ்தி
 17. பகவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - கேரளாவின் சோட்டாணிக்கரை
 18. பத்மாவதி / ஹரிலக்ஷ்மி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - கேரளாவின் திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில்
 19. மஹாகாளி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள பவாகத்
 20. மந்தர் தேவி குலபாய் - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - மஹாராஷ்ட்ரா
 21. தாரா சண்டி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - பீகாரின் சஸ்ஸேராம்
 22. சந்த்ரிகா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் லக்னோவுக்கு அருகில்
 23. ருக்மிணி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - துவாரகை
 24. ராதை - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - மதுரா அல்லது அதற்கருகில் உள்ள பர்ஸானா ராதா கோவில்
 25. மஹாலக்ஷ்மி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - பத்ரிநாத்
 26. பார்வதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - கேதார்நாத்
 27. பவானி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - மஹாராஷ்ட்ராவின் துல்ஜாப்பூர் பவானி கோவில்
 28. துர்கா பரமேஸ்வரி / ரக்தேஸ்வரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - கர்நாடகாவின் கட்டீல்
 29. அன்னபூரணி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - வாரணாஸி
 30. நீலாயதாக்ஷி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - நாகப்பட்டினம்
 31. சிவகாமி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - சிதம்பரம்
 32. அபிராமி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருக்கடவூர்
 33. சுந்தரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - வேதாரண்யம் சிவன் கோவில்
 34. லிங்கதாரிணி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஒடிஸாவின் லிங்கராஜா கோவில்
 35. தர்மசம்வர்த்தினி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருவையாறு
 36. பராசக்தி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - குற்றாலம் குற்றாலநாதர் கோவில்
 37. சின்னமஸ்தா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஜ்ரப்பா
 38. பத்மாவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - மத்தியப் பிரதேசத்தின் பன்னா
 39. பத்மாவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருப்பதி
 40. பார்வதி / காளி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கலிஞ்சர். அங்குள்ள நீல்கண்ட் கோவில் குகையில் உள்ள பார்வதி சக்தி பீட தேவியாக வணங்கப்படுகிறாள்.
 41. தாரி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - தாரி தேவி கோவில் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் (Garhwal) பகுதியில் அலக்நந்தா நதிக்கரையில் உள்ளது. ஸ்ரீநகர் - பத்ரிநாத் ஹைவேயில் உள்ள கல்யாசார் (Kalyasaur) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் உத்தரகண்ட் மாநில ஸ்ரீநகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், ருத்ரபிரயாக்கில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 360 கி.மீ தொலைவிலும் உள்ளது.
 42. ராஜராஜேஸ்வரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - தேவல்கர் ராஜராஜேஸ்வரி கோவில் உத்தரகாண்ட்டின் ஸ்ரீநகரிலிருந்து 17 கி.மீ தொலைவில் புகனி – ஸ்ரீநகர் வழித்தடத்தில் உள்ளது.
 43. சூர்க்கண்ட தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - டேராடூனுக்குத் தென்மேற்கே இந்த இடம் உள்ளது. ஆனால் முசோரி மற்றும் லாந்தோரிலிருந்து வரும் பார்வையாளர்களுக்குப் பகல்நேரப் பயணமே நல்லதாகும். இக்கோவில் ஒரு மலை மீது அமைந்துள்ளது. கட்டுக்கல் (Kaddukhal) என்ற கிராமத்தில் இருந்து 1 கி.மீ செங்குத்தான மலையேற்றப் பாதையில் தனல்டி - சம்பா சாலையில் சென்று கோவிலை அடையலாம். முசோரியின் மால் ரோட்டிலிருந்து 34 கி.மீ தொலைவிலும் தேவப்ரயாக்கிலிருந்து 113 கி.மீ தொலைவிலும் உள்ளது.
 44. சந்த்ரபதனி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - சந்திரபதனி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 2,277 மீ) புகழ்பெற்ற சந்த்ரபதனி தேவி கோவில் உள்ளது. இது தேவப்ரயாக் – கீர்த்தி நகர் வழித்தடத்தில் உள்ள கண்டி கல் (Kandi Khal) என்ற இடத்திற்கு வடக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியே நரேந்திர நகரிலிருந்து 109 கி.மீ தொலைவிலும் மற்றும் தேவப்ரயாகையில் இருந்து 31 கி.மீ தொலைவிலும் ஜம்னிகல் (Jamnikhal) உள்ளது. ஜம்னிகலில் இருந்து 7 கி.மீ தொலைவு நடந்து சென்று சந்திரபதனி மலைக்கோவிலை அடைய முடியும்.
 45. காளிதேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - காளிமட் காளி கோவில் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் சுமார் 6000 அடி (1,800 மீ) உயரத்தில் கேதார்நாத் மலைகள் சூழ அமைந்துள்ளது. இக்கோவில் குப்தகாசி மற்றும் உக்கிமட் அருகில் அமைந்துள்ளது.
 46. துர்கா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - குஞ்சாப்புரி கோவில் தெஹ்ரி மாவட்டத்தில் நரேந்திர நகரிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், ரிஷிகேஷில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், தேவப்ரயாகையில் இருந்து 93 கி.மீ. தொலைவிலும் உள்ள 1,676 மீட்டர் உயரமான மலை மேல் அமைந்துள்ளது.
 47. அருணாம்பிகை / உண்ணாமுலையம்மன் - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருவண்ணாமலை
 48. புஷ்டி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்தரகாண்டின் ஜாகேஸ்வர்
 49. காந்திமதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருநெல்வேலி
 50. கோட் ப்ராம்மரி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்தரகாண்டின் குமாயூன் பைஜிநாத்
 51. ஜயா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - நேபாளத்தின் பராஹக்ஷேத்ரா
 52. சீதா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஆந்திராவின் பத்ராச்சலம்
 53. நந்தா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்தரகாண்டின் அல்மோரா பகுதியிலுள்ள நந்தா தேவி கோவில் மற்றும் நந்தா தேவி மலைகள் அல்லது நைனிதால் சுனந்தா தேவி
 54. மாண்டவி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப்பிரதேசத்தின் ப்ரயாகை பகுதியில் மண்டா என்ற இடத்திலுள்ள மாண்டவி தேவி கோவில். இது மண்டாவிற்கு கிழக்கே ஸ்டேட் ஹைவே 102 க்கு அடுத்து உள்ளது. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது மிர்சாப்பூருக்கு மிக அருகிலுள்ளது. அலகாபாத்திலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றிலும் விந்திய மலைகளால் சூழப்பட்டுள்ளது.
 55. . சங்கரன்கோவில் ஸ்ரீ . கோமதி அம்மன் - உப ஷக்தி பீடம் - குண்டலினி எழும்பும் அம்பிகையின் சஹஸ்ராரம் விழுந்த பகுதி. பைரவர் - மஹா சர்ப்ப கால பைரவர் (மேல் இடது கையில் பாம்பு வைத்திருப்பார் ),( இடம் Tirunelveli மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ . சங்கர நாராயண சுவாமி கோயில் - தமிழ்நாடு )

108 மற்றும் 64 சக்தி பீடங்கள்[தொகு]

இப்பீடங்கள் பற்றி தேவி பாகவதம் கூறுகிறது. ஆனால் இந்தப் பீடங்களில் பெரும்பாலானவை எங்கு இருக்கின்றன என்பதை அறியாததால் இங்கு தரப்படவில்லை. 108 மற்றும் 64 சக்தி பீடங்களில் இருப்பிடம் தெரிந்த பீடங்கள் மேலே உள்ள உப பீடங்களிலேயே தரப்பட்டுள்ளது.

சக்தி பீடங்கள் பற்றி வெளிவந்த புத்தகங்கள்[தொகு]

 • ஆங்கிலத்தில் டி.சி.சர்க்கார் - D.C.Sircar (தினேஷ் சந்திர சர்க்கார் - Dinesh Chandra Sircar) என்பார் எழுதிய “த சாக்த பீடாஸ்” (The Sakta Pithas) என்ற புத்தகம். இது மோதிலால் பனார்ஸி தாஸ் (Motilal Banarsi Dass) பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இது சக்தி பீடங்கள் பற்றி வெளிவந்த மிகச்சிறந்த மற்றும் மிக விரிவான ஆராய்ச்சி நூலாகும். இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1948 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. இது மிக அரிதான புத்தகமாகும்.
 • மஞ்சுளா ரமேஷ் எழுதிய “51 சக்தி பீடங்கள்” என்ற புத்தகம். இது ஸ்ரீ பதிப்பகம் வெளியிட்ட நூலாகும். இதில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகளில் உள்ள சக்தி பீடங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
 • ஜபல்பூர் நாகராஜ சர்மா எழுதிய “51 அட்சர சக்தி பீடங்கள்” என்ற புத்தகம். இது விகடன் பிரசுரம் வெளியிட்ட நூலாகும். இது தற்போது வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இதில் 51 அட்சரங்கள் சம்பந்தமான சக்தி பீடங்கள் மற்றும் சக்தியின் உருவங்கள் ஆகியவை தெளிவாக உள்ளன.
 • மேற்கண்ட இரு நூல்களும் தமிழில் வெளிவந்த, சக்தி பீடங்கள் பற்றிய, நடுவு நிலை தவறாத, (ஆராய்ந்து எழுதிய) புத்தகங்களாகும். ஆனால் இவற்றில் காணப்படும் சில குறிப்புகள் மேலே தந்திர சூடாமணியின்படி விளக்கப்பட்டுள்ள சக்தி பீடக் குறிப்புகளுடன் ஆங்காங்கே முரண்படுகிறது. மேலும் தந்திர சூடாமணி கூறும் சில பீடங்கள் இவற்றில் இடம் பெறவில்லை. ஏனெனில் இவ்விரு புத்தகங்களிலும் தந்திர சூடாமணி மட்டுமே பின்பற்றப்படவில்லை. தந்திர சூடாமணியுடன் சேர்ந்து சக்தி பீடங்களைப் பட்டியலிடுகின்ற பல்வேறு தந்திர நூல்கள் மற்றும் புராணங்களும் பின்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இப்புத்தகங்கள் சக்தி பீட யாத்திரைக்குப் பெரிதும் பயனுள்ளதாக விளங்குகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

 1. காமாக்யா கோவில்
 2. ஆதி சக்தி பீடங்கள்
 3. மகா சக்தி பீடங்கள்
 4. 51 அட்சர சக்தி பீடங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. 51 சக்தி பீடங்களின் முழு விவரங்கள்
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-19. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.
 4. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=13370[தொடர்பிழந்த இணைப்பு]
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-20. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
 6. http://temple.dinamalar.com/news_detail.php?id=107
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_பீடங்கள்&oldid=3786989" இலிருந்து மீள்விக்கப்பட்டது