மூகாம்பிகை கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லூர் மூகாம்பிகை சந்நிதி கோயிலின் உட்புற காட்சி

மூகாம்பிகை கோயில் (Mookambika Devi Temple), இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இது ஒரு இந்து கோயிலாகும். இங்கு மூகாம்பிகை தேவி வழிபடப்படுகிறார். உடுப்பி மற்றும் மங்களூருவிலிருந்து கொல்லூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. இசை ஞானி இளையராஜா இக்கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இக்கோவில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது.[1][2][3][4][5]

இக் கோயில், கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் அமைந்துள்ளது. மேலும், இந்த இடமானது கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி)க்கு இடையே அமந்துள்ளது. மூகாம்பிகை கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தல வரலாறு[தொகு]

கொல்லூர் பகுதியில் கம்ஹாசூரன் என்ற அரக்கனின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க, பார்வதி தேவி, அவ்வரக்கனை கொன்று மக்களை காத்தார். பார்வதி தேவியை இங்குள்ள மக்கள் மூகாம்பிகை என்று அழைத்து வழிபடுகின்றனர்.[6] இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார்.[6] இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களான புரட்டாசியில் நவராத்திரி விழாவும், பங்குனி மாதத்தில் தேரோட்டமும் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

புராணக்கதை[தொகு]

சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரர் மூகாம்பிகை தேவியின் தரிசனத்தைக் கண்டதால் இங்கு கோயிலை நிர்மாணித்தார் என்று நம்பப்படுகிறது.

ஒரு நாள், தேவி மூகாம்பிகை ஆதி சங்கரர் முன்பாகத் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணித்தார். அதற்கு ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்து, மக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு, ஒரு கோயில் கட்டி வழிபட விரும்புவதாகக் கூறினார். அதற்கு தேவி ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார். அதனால் ஆதி சங்கரர் முன்னே சென்றார். மூகாம்பிகை தேவி சங்கரரை சோதிக்க விரும்பியதால் தன் காலில் அணிந்த "கொலுசுகளின்" சலங்கை சத்தத்தை கேட்காதவாறு நிறுத்தினார். சலங்கை சத்தம் கேட்காததால் நிபந்தனையை மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். அங்கு தேவி மூகாம்பிகை சிலை வடிவில் உருமாறி விட்டார். அந்த இடமே தற்போதைய "கொல்லூர்" ஆகும். கோயில் கட்டப்பட்ட இடமானது ஆதி சங்கரர் தவமியற்றிய இடமாகும். மற்றும் தேவி மூகாம்பிகை சங்கரருக்கு காட்சியளித்த இடம் கோடாச்சத்ரி மலை உச்சி ஆகும். இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இம் மலையின் உச்சியை கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வெளிப்புறத்திலிருந்து காண முடிகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Kollur Mookambika Temple". timesofindia.indiatimes.com. timesofindia.indiatimes.com.
  2. "Things To Keep In Mind While Travelling to Mookambika Temple". devotionalstore.com. Devotional Store.
  3. "Kollur Mookambika Temple". gotirupati.com. Gotirupati.
  4. "Welcome To Kollur Sri Mookambika Devi Site". kollur.com/. kollur.com. 2011-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-08 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Kollur Mookambika Temple". karnatakaholidays.com. Karnataka Holidays. 2019-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-04 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 "Kollur Mookambika temple". Sri mookambika.com. 26 March 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 13°51′49.6″N 74°48′52.6″E / 13.863778°N 74.814611°E / 13.863778; 74.814611

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூகாம்பிகை_கோயில்&oldid=3667065" இருந்து மீள்விக்கப்பட்டது