பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாமல்லபுரத்தின் பாறைக் குடைவான பகிரதன் தவம் புடைப்புச் சிற்பம்

பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை (Pallava art and architecture) என்பது ஆரம்ப காலத்திய திராவிட கலை மற்றும் கட்டிடக் கலையைச் சேர்ந்தது, இது சோழப் பேரரசின் காலத்தில் அதன் முழு உச்சத்தை எட்டியது. தென்னிந்தியாவின் முதல் கல் மற்றும் குடைவுக் கோயில்கள் பல்லவர் ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவை அதற்குமுன் கட்டப்பட்டிருந்த செங்கல் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட  கட்டடங்களை முன்மாதிரிகளாகக் கொண்டு அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் குடவரைக் கோயில்களுடனான தொடக்கமாக, பல்லவ சிற்பிகளின் படைப்புகள் அமைந்தன, இவை பிற்காலச்  சோழர்  கோவில்கள் மற்றும் கோபுர கட்டடக்கலைக்கு  உள்ளூக்கமளிப்பதாக அமைந்தன. பல்லவ கலை மற்றும் கட்டிடக்கலைக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் சில; காஞ்சிபுரம்   கைலாசநாதர் கோயில்மாமல்லபுரம்  கடற்கரைக் கோயில் மற்றும் பஞ்சபாண்டவர் இரதங்கள் போன்றவை ஆகும். அவர்கள் காலத்திய மிகச்சிறந்த சிற்பி அக்ஷரா என்பவராவார்.

வரலாறு[தொகு]

பல்லவர் கட்டிடக்கலையை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது அவை குடவரைகள் மற்றும் கட்டப்பட்ட கட்டடம் என்பவை ஆகும். கி.பி. 610 முதல் 668  வரையிலான காலத்தில் குடவரைக் காலகட்டம் நீடித்தது. இதில் மகேந்திரன் கட்டடக் குழு மற்றும் மாமல்லன் கட்டடக் குழு ஆகிய இரண்டு குழுக்கள் இருந்தன. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்  (கி.பி. 610 - 630) காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்களுக்கு மகேந்திரன் கட்டடக் குழு என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இந்த குழுவைச் சேர்ந்த கட்டுமானங்கள், மலையடிவாரங்களில் குடையப்பட்டன.   இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த மண்டபங்கள்  சைன கோயில்களை முன்மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டன. மகேந்திரன் கட்டடக் குழுவுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில், பல்லாவரம் , மாமண்டூர் ஆகியவை உள்ளன.

குடவரைக் கோயில்களின் இரண்டாவது குழுவான மாமல்லன் குழுவானது கி.பி. 630 முதல் 668 வரையிலான காலத்தவை.  இக்கால கட்டத்தில் தனித்த பாறைகளில் வெட்டப்பட்டு  தனியாக நிற்கும் தனிச்சிறப்பு வாய்ந்த இரதங்கள் மண்டபங்களுடன் இணைந்து கட்டப்பட்டன. மாமல்லன் கட்டடக் குழுவுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் சில மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் இரதங்கள் மற்றும் அருச்சுனன் தபசு ஆகும்.

பல்லவ கட்டிடக்கலையின் இரண்டாவது கட்டமாக, கருங்கல்லால் கட்டப்பட்ட தனிக் கோயில்கள் காலகட்டமாகும். இந்தக் கட்டடங்கள் தனித்தனிக் கற்களைக் கொண்டும் குடையப்பட்டும் நிர்மாணம் செய்யப்பட்டன. இந்த இரண்டாவது காலகட்டத்திலும் இரண்டு குழுக்கள் உள்ளன அவை இராஜசிம்மன் குழு (கி. பி. 690 முதல் 800 வரை) மற்றும் நந்திவர்மன் குழு (கி.பி. 800 முதல் 900 வரை) என்பவை ஆகும். பல்லவர்களின் ஆரம்பகால கோயில் கட்டடக்கலையில் ஏராளமான  புதிய பரிசோதனைகளை மேற்கொண்டது ராஜசிம்மன் குழு காலத்திலாகும். இக்காலகட்ட கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக அமைபவை மாமல்லபுரம்  கடற்கரைக் கோயில் மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ஆகும். இவை இரண்டையும் கட்டியவர் இரண்டாம் நரசிம்ம பல்லவன் ஆவார், இவர் இராஜசிம்மன் என்றும் அறியப்படுகிறார். நந்திவர்மன் குழுவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கோயில் காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகும். இந்த காலகட்டத்தில், பல்லவர் கட்டிடக்கலை முழு முதிர்ச்சியை அடைந்து, சோழர்களின் பிரம்மாண்ட கலைப் படைப்புக்களாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பல்வேறு கட்டடக்கலை படைப்புகளைக் கட்ட முன் மாதிரிகளை வழங்கின.